Thursday, January 18, 2018

.
Breaking News

முகமுடிக்கு பின்னே…! (சிறுகதை) .. } -எஸ்.செல்வசுந்தரி… திருச்சி-

முகமுடிக்கு பின்னே…! (சிறுகதை) .. } -எஸ்.செல்வசுந்தரி… திருச்சி-

முன்பு போல சிகப்பு கலர் அடித்து பாக்கவே பயமா இருக்கிற மாதிரி இப்ப போலிஸ் ஸ்டேசன் இல்லை. எல்லாமே காலத்துக்கு தகுந்த மாதிரி போலிஸ் ஸ்டேசனும் இப்ப மாறிட்டுது. அழகான சின்ன பங்களா போன்ற தோற்றத்தில் இருக்கிறது.

என் வீட்டு பாதையிலே பக்கத்து வீட்டுக்காரன் வந்து ஒண்ணுக்கு இருந்து வைக்கிறான், பாதை மறிச்சிக்கிட்டு நடமாட விடமாட்டேங்கிறான். சீட்டு நடத்திட்டு பணம் தாராம ஏமாத்திட்டுப் போயிட்டான், இரவல் வாங்கிட்டுப் போன நகையை வித்துப்புட்டா, காதலை ஏத்துக்கிடாட்டா கொலைப் பண்ணிருவேன்னு கூடப்படிக்கிற பையன் மிரட்டுறான், எம்பொண்டாட்டியை அடுத்த தெருக்காரன் இழுத்துட்டுப்போயிட்டாங்கிற மாதிரி ஏகப்பட்ட பிரச்சனைகளுக்காக பிராது குடுக்க அங்கே வந்து குழுமியயுருந்த மக்களில் பாதிபேர் காம்பவுண்டுக்கு உள்ளேயும், பாதி பேர் காம்பவுண்டுக்கு வெளியேயும் கூட்டம் கூட்டமாக நின்னுக்கிட்டு அவுங்களுக்குள் “என்ன பண்ணலாம்…? எது பண்ணலாம்…?” என தீவிரமாக விவாதித்துக் கொண்டிருந்தார்கள். சிலர் தங்களுக்குத் தொணையாக வக்கீலையும் கூட்டிக் கொண்டு வந்திருந்தார்கள்.

இன்ஸ்பெக்டர் ஏதோ சட்ட ஒழுங்கு பிரச்சனை என்று கிளம்பிப் போயிருக்க, சப்-இன்ஸ்பெக்டர் மட்டும் உக்காந்து எதையோ எழுதிக் கொண்டிருந்தார். அவருக்கு எதிரே போடப்பட்டிருந்த பெஞ்சில் உக்காந்திருந்தார்கள் புனிதா மற்றும் புவனேஷ்.

சிங்கள ராணுவத்திடம் மாட்டிக்கொண்ட தமிழக மீனவனைப் போல நடுங்கிக் கொண்டிருந்தார்கள் அவர்கள் இருவரும்.

கையில் ஏற்படும் நடுக்கத்தை மறைப்பதற்காக அருகில் இருந்த புவனேசின் கைகளை மெல்ல பிடித்தாள் புவனா.

அவளது கைகளின் நடுக்கத்தை உணர்ந்துக் கொண்டவனாக, பயப்படாதே உனக்கு நானிருக்கிறேன் என்பதை உணர்த்தும் வண்ணம் அவளது கைகளை தனது இரு கைகளுக்கு நடுவில் வைத்து மெல்ல அழுத்தினான்.

தாய் மார்போடு சேத்து அணைக்கும் போது, அந்த கதகதப்பில் பாதுகாப்பை உணரும் குழந்தையைப் போல, அவனது கைகளுக்குள் தனது கை இருக்கும் போது, தனது கை மட்டுமல்ல தானே பாதுகாப்பாக இருப்பதாக உணர்ந்தாள் புனிதா.

புனிதா அப்பா அந்த ஊரின் நாட்டாமை. அதே ஊரில் காலனிப் பகுதியைச் சேர்ந்தவன் புவனேஷ்.

எதையும் பார்க்காமல் வருவதுதானே காதல். மாடத்தில் சீதை நின்று வேடிக்கைப் பார்க்கும் போது, சாலையில் எத்தனையோ பேர் பயணம்

செய்திருப்பார்கள். அவர்களில் ராமனையும் விஞ்சக்கூடிய அழகர்கள்; நிச்சயம் இருந்திருப்பார்கள். ஆனால் அவர்கள் யாரும் சீதையின் கவனத்தை கவர வில்லையே…!

ஏன் ராமன் மட்டும் தனியாகவா போனான்…? அவனுடன் லட்சுமணன் மற்றும் விசுவாமித்திரரும் சேர்ந்து தானே போனார்கள்.

மறுநாள் போட்டியில் வில்லை உடைக்கப் போகிறவன் இந்த ராமன்தான் என்பது ராமனைப் பாத்த கணம் சீதைக்கு நிச்சயம் தெரியாது. ஆனாலும் ராமனைப் பார்த்தவுடனேயே சீதையின் மனம் அவன்பால் செல்லவில்லையா? அவன்மீது காதல் கொள்ளவில்லையா…? அதற்கு என்ன காரணம் என்று கேட்டால் அதற்கு சீதையிடமும் பதிலிருக்காது. ராமனிடமும் பதிலிருக்காது. ஏன் யாரிடமும் பதிலிருக்காது… அதுதான் காதலின் மாயாஜாலம்.

அதே போன்றுதான் புவனேசின் மீது காதல் வந்ததற்கான காரணம் புவனாவிடம் இல்லை. அவர்களது காதலால் ஏற்படப்போகும் பின்விளைவுகளைப் பற்றி இருவருக்கும் நன்றாகவே தெரியும்.

அம்பிகாபதி, அமராவதியின் காலத்திலேயே காதலுக்கு எதிர்பு ஆரம்பித்தது விட்டதே…! அப்போது மட்டுமல்;ல மனித இனம் தோன்றி, காதல் என்று ஒரு உணர்வு தோன்றிய காலம் முதலே காதலுக்கும் எதிர்ப்பு இருந்திருக்க வேண்டும் என்றுதான் புனிதாவிற்கு தோன்றியது. அவளும் நிறைய கதைகள் படித்திருக்கிறாள். நிறைய சினிமா பாத்திருக்கிறாள். எதிலுமே பிள்ளைகளின் காதலை பெற்றோர்கள் ஏற்றுக் கொண்டதாக சரித்திரமேயில்லை.

பெற்றோர்கள் காதலித்து கல்யாணம் செய்ஞ்சவங்களா இருந்தாக்கூட தங்களின் பிள்ளைகளின் காதலுக்கு பச்சைக் கொடி காட்டுவது இல்லை.

இன்று எனது காதலுக்கு என்னுடைய அப்பா சம்மதிக்க வேண்டும் என்று ஆசைப்படுகிற நானும், நாளை என்னுடைய பிள்ளைகள் காதல், கத்திரிக்கா என்று வந்தால் அதை எதிர்க்கதான் செய்வோமோ…? புனிதாவின் சிந்தனை பல்வேறு திசைகளில் பயணப்பட்டுக் கொண்டிருக்க,

சப்-இன்ஸ்பெக்டரின் போன் ஒலிக்க, அதை எடுத்து காதில் வைத்தவர்,

“ஆமாங்க… சப்-இன்ஸ்பெக்டர் லெட்சமணன்தான் பேசுறேன்.”

“ஓ…! அப்படியா…? சரிங்க சொல்லி விடுதேன்” என்றவர், போனில் உள்ள அழைப்பை துண்டித்துவிட்டு,

“புனிதா உனக்கு லெஷ்மிங்கிற பேருல அத்தை இருக்காங்களா…? அவுங்க உன்னைப் பாக்க வர்றாங்களாம்.. உன்னைப் பயப்டாம இருக்கச் சொன்னாங்க” என்று புனிதாவைப் பார்த்து சொல்லவும், அதுவரை புனிதாவின் மனதில் முகாம் இட்டிருந்த பயம் காணாமல் போய் விட்டது.

லெஷ்மி அத்தை அவளது தாய்மாமா ஆறுமுகத்தின் மனைவி. அத்தை டவுனில் உள்ள ஸ்கூலில் டீச்சரா வேலைப் பாத்துட்டு இருக்குறா. மாமாவும்

அரசாங்க ஆஸ்பத்திரியில் மருந்தாளுனராக இருப்பதால், டவுனிலேயே வீடு வாங்கி அங்கேயே குடியிருக்கிறாங்க.

புனிதா ஹாஸ்டலில் தங்கிப் படித்தாலும், விடுமுறை நாளில் வீட்டுக் போக போரடித்தால் தனது மாமாவின் வீட்டிற்கு போய் விடுவாள். அதற்கு காரணம் லஷ்மி அத்தையின் கலகலப்பான சுபாவம்தான்.

புனிதா கிராமத்திலே வளர்ந்த பெண் என்பதால், அவளால் சும்மா சோம்பி கெடக்க முடியாது.

புனிதாவின் வீட்டுக்குப் போனால் வீட்டை ஓட்டடை அடிப்பது. துணியை எல்லாம் வாஷிங் மிசினில் போட்டு எடுப்பது, காய்ந்;த துணிகளை மடிச்சு வைப்பது, பிள்ளைகளை குளிப்பாட்டி, அவர்களுக்கு டிரஸ் பண்ணி ஸ்கூலுக்கு அனுப்புவது என ஏதாவது வேலைப் பார்த்துக் கொண்டேயிருப்பாள். புனிதா வந்தால், லெஷ்மிக்கு வேலைப்பளு குறைந்து விடும். தனது கணவன் ஆறுமுகத்தை வம்புக்கு இழுத்துக் கொண்டே இருப்பாள்.

“ஏங்க புனிதாவுக்கு நீங்ககூட மொறை மாப்பிளைதானே… பேசாம நீங்களே அவளைக் கட்டிக்கோங்க… எங்களுக்குள் சக்களத்தி சண்டையெல்லாம் வாராது. வடக்கே ஏதோ ஒரு ஊருல… ரொம்ப தண்ணிப் பஞ்சமமாம். அதனாலே அங்கே ஒவ்வொருத்தனும் ரெண்டு, மூணு பேரைக் கல்யாணம் பண்ணிக்குவானாம்.

ஒருத்தி வீட்டுவேலையைப் பாக்குறதுக்காம். இன்னொருத்தி தண்ணி எடுக்கிறதுக்காம். மூணாவது ஆளு அவனோட வயக்காட்டு வேலையைப் பாக்கப்போணுமாம்.

அந்த மாதிரி நானும் வேலைக்குப் போயிட்டு ரொம்ப அசதியா வர்றேன். புனிதாவைக் கட்டிக்கிட்டா அவ வீட்டைப் பாத்துக்குவா… நாம்பட்டுக்கு நிம்மதியா வேலைக்குப் போயிட்டு வருவேன்.” என்று சொல்ல,

“அத்தை என்ன எங்க மாமாவை என்ன சாதாரணமா நெனைச்சுக்கிட்டீங்க…? அரைக்காசு வாங்கினாலும் அரசாங்க வேலையா இருக்கணும்னு சொல்லுவாங்க… ஆனா எங்க மாமா அரைக்காசு இல்லே அரை லட்சம் சம்பளம் வாங்குறாங்க… நீங்க என்னடான்னா? எங்கப்பா, அம்மாவுக்கு செலவே வைக்காம ஓசியிலேயே என்னை எங்க மாமாவுக்கு கட்டி வச்சிருவீங்க போலிலுருக்கு… எங்க மாமாவை நான் கல்யாணம் பண்ணனும்னா எவ்வளவு ரொக்கம் கொடுக்கணும்..? எவ்வளவு நகை போடணும்னு சொல்லுங்க.. எங்கப்பம்மாக்கிட்ட பேசி எல்லாம் பண்ணச் சொல்லிருதேன்.

அப்புறம் இன்னொரு முக்கியமான விசயம், இந்த மாதிரி எங்க மாமனுக்கு ரெண்டாவது கல்யாணம் பண்ணனுங்கிற ஆச உங்க மனசுக்குள்ளே இருக்குன்னு வெளியே யாருக்கிட்டேயும் சொல்லிடாதீங்க.. அப்புறம் எங்க மாமன் இருக்கிற அழகுக்கு நீ நான்னு போட்டிப்போட்டுக்கிட்டு பொண்ணுங்க

வந்து குமிச்சிருவாங்க…” என்று லஷ்மிக்கு தான் கொஞ்சம் கூட சளைத்தவள் இல்லை என்று புனிதாவும், ஆறுமுகத்தை வம்புக்கு இழுப்பாள்.

அதை நினைத்தப்பொழுது அவளது இதழ்கள் விரிந்து அவள் சிரிப்பதை புவனேசுக்கு உணர்த்தியது.

“யேய் புனிதா என்ன நீயே தன்னாடி சிரிச்சிக்கிட்டு இருக்கிறே…?” என்று புவனேஷ் அவளது காதில் கிசுகிசுப்பாக கேட்க,

“ஒண்ணுமில்லே எங்க அத்தையை நெனைச்சேன். சிரிப்பு வருது” என்று அவளும் அவனது காதருகில் தனது முகத்தைக் கொண்டு சென்று கிசுகிசுப்பாக பதில் சொன்னாள். அதுவரை அவர்களிடமிருந்த இறுக்கம் கொஞ்சம் விலக ஆரம்பித்தது. மறுபடியும் அத்தையின் நினைவு அவளை ஆக்கிரமிக்க ஆரம்பித்தது.

ஒரு தடவ தன்கிட்ட படிக்கிற பையன் வேலைக் கெடைச்சிருச்சின்னு அவளுக்கு ஸ்வீட் கொடுக்க வந்தான்.

அப்போ… இரவு டிபனுக்காக அடை சுட்டுக்கிட்டு இருந்தா லஷ்மி. லஷ்மி சுடுற அடை டேஸ்டாக இருக்கும் என்பது மற்றவர்களின் கருத்து. அவள் வீட்டிற்கு வருகிறவர்கள் அவளை அடைச் சுட்டுத் தரச்சொல்லி சாப்பிடுவார்கள். அதனால் தான் சுடும் அடைமீது அவளுக்கு ரொம்பவே பெருமை. அடை சுட்டுக்கிட்டு இருக்கிறப்ப அவன் வந்ததால், ஒரு தட்டில் இரண்டு அடையைப் போட்டு தொட்டுக்க பொடித்த சர்க்கரையை வைத்து, அதில் உருக்கிய நெய்யை ஊற்றிக்கொண்டு அவனிடம் கொடுத்தாள். அவனும் அடையை ருசிச்சி சாப்பிட்டு விட்டு கிளம்பினான்.

அவன் போகும்வரை காத்திருந்த புனிதாவின், அம்மாயி அதாவது லஷ்மியின் மாமியார்,

“ஏய் லெச்சுமி படிச்சிக்கியே தவிர உனக்கு கொஞ்சம் கூட புத்தியேpல்லே. இப்ப வந்தப் பையனைப் பாத்தா கொறஞ்ச ஜாதிக்காரன் மாரி தெரியுது. அவன நடு வீட்டுல உக்கார வச்சி நாம சாப்பிடுத தட்டுல அடையை வச்சி சாப்பிட கொடுக்குதே… கர்மம் அவன் சாப்பிட்ட தட்டுல நாம சாப்பிடணுமா…? அந்த தட்டத் தூக்கி தனியா வை… இனிமே அதுல எனக்கு சோறு வச்சி தந்திடாதே?” என்று கடுகடுவென பேச,

“அத்தை இங்கே பாருங்க உங்க ஜாதி பழக்கவழக்கமெல்லாம் உங்க ஊரோட வச்சிக்கோங்க… இங்கல்லாம் ஜாதியாவது மண்ணாவது… உங்க பையனுக்கு ஹெர்னியா ஆபரேசன் நடக்கிறப்ப இந்தப் பையன்தான் ரத்தம் கொடுத்தான். அந்தப்பையன் சாப்பிட்ட தட்ட தனியா வைக்கணும்னா, அவனோட ரத்தம் ஓடுத உங்கப் பையனையும் கிராமங்கல்ல வீட்டுக்கு விலக்கான பொண்ணை தனியா வீட்டுக்கு வெளியே உக்கார வைப்பாங்கல்ல. அந்த மாதிரி அவரையும் தனியாத்தான் வீட்டுக்கு வெளியே உக்கார

வைக்கணும். எப்படி தனியா வச்சிரலாமா..?”ன்னு நக்கலா கேக்க, பதில் சொல்ல முடியாம அம்மாயி அமைதியாயிட்டா…

ஊரே எதுத்து நின்னாலும், நம்ம அத்தை நமக்கு ஆதரவாதான் இருப்பா… எப்படியும் நாம புவனேசைக் கல்யாணம் பண்ணி சந்தோஷமா இருக்கலாம் என்ற எண்ணம் வந்ததால், அவளது முகத்தில் இருந்;த அச்சமும் படபடப்பும் விலகிப் போய், அமைதி குடிபெயர ஆரம்பிச்சது.

அப்போது ஸ்டேசன் முழுக்க பரபரப்பு. எதையோ உக்காந்து எழதிக்கொண்டிருந்த இன்ஸ்பெக்டர் கூட பரபரப்புடன் காணப்பட்டார்.

வெளியே நின்றுக் கொண்டிருந்த கூட்டத்தில் யாரோ ஒருவர் சத்தமாக இன்னொருவரிடமி சொல்லிக் கொண்டிருந்தது, இவர்கள் காதிலும் விழத்தான் செய்தது.

“பெத்த அப்பனேதான் போட்டு தள்ளிட்டானானம். பையன் ஸ்பாட் அவுட் போலிருக்கு… பொண்ணை ஆஸ்பத்திரிக்கு தூக்கிட்டு போயிருக்காங்களாம். பொழக்கிறது கஷ்டமின்னுதான் பேசிக்கிட்டு இருக்காங்க.

என்னப் பண்ண வயசுக்கோளாருல காதல் கத்திரிக்கான்னு யாரோ, யாரையோ இழுத்துட்டு ஓடிருதாங்க. அதுகள பெத்தவங்க வெளியே தலைகாட்ட முடியாம, சொந்தபந்தம், சத்தியிருக்கவங்க கிட்ட அவமானப்படுதாங்க… பூஞ்ச மனசு உள்ளவங்க அவமானம் தாங்காம தற்கொலை பண்ணிருதாங்க. நெஞ்சழுத்தம் உள்ளவங்கன்னா… தான் பெத்த பிள்ளை செத்தாலும் பரவாயில்லை. தன்னோட மானம் மருவாதைதான் பெரிசுன்னு நெனைச்சு பிள்ளைங்கள கொன்னுறுதாங்க…

அந்தப் பிள்ளையோட அப்பா ஊருல பெரிய தலப் போலிருக்கு. பொண்ணு காதலிச்சவன் கூட ஓடிப்போனாதாலே… எல்லாரும் அவர கிண்டல் பண்ண ஆரம்பிச்சிட்டாங்க போல… இதுவரைக்கு மத்தவங்க முன்னாடி தலை நிமிந்து நடந்த மனுசனுக்கு பொண்ணால தலைக்குனிவு ஆயிட்டேன்னு தாங்க முடியல.. அதான் போட்டு தள்ளிட்டான்.” என்ற குரல்கள் காதில் வந்து மோத மோத இதுரை இருந்த அமைதி மறைந்துப் போயி மனதில் மறுபடியும் பயம் உருவாக ஆரம்பத்திருந்தது. அவளது முகத்தில் உருவான பயத்தினை தெரிந்துக் கொண்ட புவனேஷ்,

“என்ன புனிதா உனக்கு பயமா இருக்கா…?” என்று அவளது தலையை மெதுவாக தடவியப்படி கேட்க,

ஆமா என்பதுப் போல தலையை மேலும், கீழும் ஆட்டினாள் புனிதா.

“உனக்கு இது புதுசு புனிதா… ஆனா… எனக்கு பழகிப் போயிருச்சி.. எங்க பெரியப்பா பையன் எம்.எஸ்ஸி கோல்டு மெடலிஸ்ட். செம டேலண்ட். இன்னொரு அப்துல்கலாமாகவோ, இன்னொரு மயில்சாமி அண்ணாத்துரையாகவோ வந்திருக்க வேண்டியவன். ஆனா இன்னைக்கு ரோட்டுல பைத்தியமாக திரியுறான்.”

“ஏன் என்னாச்சி..?” என்று பார்வையாலே கேட்க,

“என்ன அவன் பண்ணுன ஓரே தப்பு ஆதிக்க ஜாதியைச் சேர்ந்தப் பொண்ணைக் காதலிச்சதுதான். அவங்க காதல் தெரிஞ்சுவுடனே அவனைக் கம்பத்துல கட்டி வச்சி, மலத்தை கரைச்சு ஊத்தி அபிஷேகம் பண்ணினாங்க. அதோட விட்டாங்களா? அவன் விரும்புன பொண்ணை குடும்ப கவுரம்ங்கிற பேர்ல தூக்குல தொங்க விட்டாங்க… அந்த அதிர்சியினாலே இன்னைக்கு பைத்தியக்காரனா பஸ்-ஸாண்டுல அலைஞ்சுக்கிட்டு இருக்கான்.

அது மட்டுமில்லே எங்க ஊருலேயே உங்க இனத்தை சேர்ந்த ராஜேஸ்வரியை எங்க தெருப் பையன் சரவணன் விரும்பினது மட்டும் இல்லே கோயில்ல வச்சி தாலி கட்டி பெண்டாட்டியாக்கிட்டான்னு அவனையும், அந்த ராஜேஸ்வரியையும், துடிக்க துடிக்க பெட்ரோல் ஊத்திக் கொளுத்தினாங்க.

இதுல என்ன ஒரு கொடுமைன்னா ஒரு பையன் போயிட்டாலும், மத்த பிள்ளைங்களாவது பொழச்சிக் கிடக்கணும்னு அந்தப் பையனோட அப்பா போலிஸ்கிட்ட செத்தது எம்பையனே கிடையாது. எம்பையன் பொழக்க வெளிநாட்டுக்கு போயிட்டான்னு பொய்யச் சொன்னதுதுhன்.” என்று முகத்தில் ஆவேசத்துடன் புவனேஷ் சொல்லிக் கொண்டு இருக்க, புனிதாவின் முகத்தில் கலவரத்தின் சதவீதம் அதிகமாக ஆரம்பித்தது. அவள் சிலைப்போல உக்காந்திருந்த நிலையே அவளது மனதின் உள்ளக்கிடங்கை தெளிவாக காட்டியது.

“இதெல்லாம் பாத்து பயந்துட்டியா புனிதா? அந்த கால மதுரைவீரன், காத்தவரான்ல ஆரம்பிச்சி இன்னைகக்கு நம்ம காதல்வரைக்கும் இந்த சமுதாயம்; காதலை எதுத்துக்கிட்டுதான் இருக்கு. மதுரைவீரனுக்கு மாறுகால், மாறுகை வாங்கின மாதிரி, காத்தவராயன கழுவுலு எத்துன மாதிரி காதலிச்சவங்களுக்கு தண்டனைக் கொடுத்துக்கிட்டுதான் இருக்கு… ஏன் அனார்கலியை உயிரோடு சமாதி வைக்கதானே செஞ்சது. ஆனா அதப் பாத்து பயந்து யாரும் காதலிக்கிறத விட்டுட்டாங்களா…? இல்லையே….! இன்னைக்கு வரைக்கும் காதலும் தொடருது… கவுரக் கொலைகளும் தொடருது… ஏன்னா ஜாதி, மதம், பொருளாதாரம் பாத்து வந்தா அதுப்பேரு காதல் கிடையாது. வியாபாரம்.

உனக்கு பயமா இருந்தா சொல்லி விடு. இப்பவே உன்னை விட்டு விலக நான் ரெடி. ஆனா மத்தவங்க மாதிரி உன்னை பிளாக்மெயில் பண்ணுவேன்னோ, முகத்திலே ஆஸிட் அடிப்பேன்னோ பயப்பட வேண்டாம்.

உண்மையிலே காதலிக்கிறவங்க அந்த மாதிரி எல்லாம் பண்ண மாட்டோங்க… காதல்ங்கிறத என்னன்னு புரிஞ்சுக்காதவங்கதான் காதலியை பிளாக் மெயில் பண்ணுவதும், முகத்திலே ஆஸிட் வீசுற மாதிரி

வேலையெல்லாம் பண்ணுவாங்க.. உனக்கு பயமாயிருந்தா சொல்லிடு” என்று மறுபடியும் தலையைக் கோதியப்படி சொல்ல, வெளியே நடந்த சலசலப்பினால் சப்-இன்ஸ்பெக்டர்; எழுந்து போயிருந்ததால், இவர்களால் ஒரளவுக்கு மனசு விட்டு பேச முடிந்தது. அந்த இறுக்கமான சூழ்நிலைக்கு அந்தப் பேச்சு புனிதாவிற்கு மழைக்காலத்தில் குடிக்கும் தேநீர் போல இதமாக இருந்தது. அந்த இதமான சுகத்தை அனுபவித்தப்படியே,

“ஏய் என்ன ஆனாலும் சரி… நீதாண்டா என்னோட புருஷன். என்ன இந்த தமிழ்நாடு மட்டும்தான் உலகமா? இதத்தாண்டியும் ஒலகம் இருக்கு. எங்கேயாவது போய் பொழச்சுக்கலாம். இப்ப எங்க அத்தை வர்றாங்க… அவங்க கண்டிப்பா நமக்கு சப்போர்ட் பண்ணுவாங்க… அவங்களுக்கு இந்த ஜாதிப் பாத்து பழகுற கொணமெல்லாம் கெடையாது. எப்படியும் நம்ம கல்யாணம் நடக்கும்.” என்று அவனது கையை அழுத்தியவாறு புனிதா சொல்லிக் கொண்டிருக்கும் போதே, அவளது அத்தை சில ஆட்களோடு உள்ளே வந்தாள்.

“ஏய் புனிதா என்ன நீ இப்படிப் பண்ணிட்டே… நீ இந்த தம்பியை விரும்புறதே என்கிட்ட இதுவரைக்கும் சொன்னதேயில்லையே…! நம்ம குடும்பத்துக்குன்னு ஒரு மரியாதை இருக்குல்லே… இப்படியா யாருக்கும் தெரியமா ஓடி வந்து போலிஸ் ஸ்டேசன்ல வந்து உக்காருவே…? எங்கிட்ட ஒரு வார்த்த சொல்லியிருந்தேன்னா… வீட்டுல பெரியவங்க கிட்ட சொல்லி கல்யாணம் பண்ண ஏற்பாடு பண்ணியிருப்பேன்லா…

இப்ப ஒண்ணும் கெட்டுப் போகல… இப்ப எங்க வீட்டுக்கு வா… எல்லாரையும் நம்ம வீட்டுக்கு வரச்சொல்லியிருக்கேன். எல்லார்கிட்டேயும் பேசி, பத்திரிக்கை அடிச்சி ஊர் மெச்ச கல்யாணம் பண்ணலாம். அத விட்டுட்டு, இப்படி ஓடி வரது நல்லாவா இருக்கு…? கௌம்பு புனிதா.. வாசல்லே கார் ரெடியா இருக்கு” என்று புனிதா சிந்திக்க நேரம் கொடுக்காமல் அவசரப் படுத்தினாள்.

அவள் புவனேசைப் பார்க்க,

“அங்கே என்னப் பார்வை? ஏன் தம்பி நீங்க சொன்னதான் எம்மருமவ கேப்பாப் போலிருக்கு… நீங்களும் வீட்டுக்குப் போங்க… நான் இவளைக்கூட்டிட்டுப் போயி பெரியவங்க கிட்ட பேசுறேன். அப்புறம் மொறைப்படி நீங்க வீட்டுப் பெரியவங்களோட பொண்ணு கேக்க வாங்க. அப்புறம் ஊர் மெச்ச கல்யாணம் பண்ணலாம். என்ன தம்பி நான் சொல்றது சரியா…?” என்று அவள் கேட்க,

மனசுக்குள்; தயக்கம் இருந்தாலும், அவளது வாயில் அடிக்கடி ஒலித்த தம்பி என்ற அந்த வார்த்தை அவனது தயக்கத்தைப் போக்கத்தான் செய்தது.

“போ புனிதா… உங்க அத்தைதான் இம்பூட்டு சொல்றாங்கள்லே…! நீதான் அடிக்கடி உங்க அத்தையைப் பத்தி சொல்லி இருக்கியே… அப்புறம் என்ன…?

நிம்மதியாப் போ… எல்லாமே நல்லப்படியா நடக்கும்” என்று சொல்ல, அத்தையை பின்தொடர்ந்தாள் புனிதா.

காரில் ஏறியவுடன்,

“ஏய் புனிதா… என்னைப் பத்தி தெரிஞ்சும் நீ ஏன்; இப்படிப் பண்ணினே… நீப்பண்ணுன காரியத்தாலே உங்கப்பா வெளியே தலைக்காட்ட முடியாம இருக்கார் தெரியுமா? ஒரு வார்த்தை எங்கிட்ட சொல்லியிருக்கலாம்லா”

“அது வந்து…. அத்தை அப்பாவை நெனைச்சி பயமாக இருந்துச்சு… எங்கே எங்க காதலுக்கு தடை சொல்லிடுவரோன்னு பயமா இருந்துச்சு. அதுதான் இப்படிப் பண்ணிட்டேன்.”

“சரி எந்த அளவுக்க்க்க்……கு அவனோட பழக்கம்…?” என்ற லஷ்மி இரண்டாவது கேள்வியின் அர்த்தம் நன்றாகவே புரிந்தது.

“அத்தே அவர் ரொம்ப நல்லவர். அதனாலே நீங்க நெனைக்கிற மாதிரி பழக்கமெல்லாம் கெடையாது”

அவளது அத்தை நிம்மதியாக மூச்சு விட்டது அவளுக்கு தெளிவாகவே தெரிந்தது. அதன் பிறகு அவளிடமிருந்து எந்தவிதமான பேச்சும் இல்லை. காரில் ஏஸி ஓடினாலும், ஒருவித புழுக்கமான உணர்வையே உணர்ந்தாள் புனிதா. ஆனாலும் அத்தை நம்மை எப்படியும் சேர்த்து வைத்து விடுவாள் என்கிற நம்பிக்கை மட்டும் குறையவேயில்லை. ஆனால் லஷ்மி அத்தையின் முகத்தைப் பார்த்தால் ஒருவித இறுக்கத்தில் இருப்பதுப் போல தோன்றியது.

“அத்தையும் ஒருவேளை நம்ம காதலுக்கு பச்சக்கொடி காட்ட விரும்பலையோ… அதான் இப்படி உம்னு இருக்காளோ…! சேச்சே… லஷ்மி அத்தையை அப்படி நெனைக்கக்கூடாது. அவ எல்லார்கிட்டேயுயம் எவ்வளவு பிரியமா பழகுறா…? அவதான் ஜாதிபேதமே பாக்குறதில்லையே… அவ சொன்னமாதிரி நாம அவக்கிட்டேயாவது புவனேசை விரும்புற விசயத்தை சொல்லியிருக்கணும்… இப்படி சொல்லாம கொள்ளாம நாம வீட்டை வீட்டு ஓடுனது தப்பு… அதான் அத்தை இவ்வளவு கோவமா இருக்கா” என்று தன்னைத் தானே சாமாதானப்படுத்திக் கொண்டாள்.

வீட்டிற்குள் நுழையவும் என்ன நடக்குதென்று உணரும் முன்பே முகத்தி;ல் ‘தப் தப்’ என்று அடிகள் விழ ஆரம்பித்தது.

“ஏண்டி நாயே காலேஜூக்கு படிக்க அனுப்பி வைச்சா, கண்ட நாயோட ஊர் மேஞ்சுக்கிட்டு இருக்கியா? அவ்வளவு தினவெடுத்து போச்சா உம் ஒடம்புக்கு…? உன்னையெல்லாம் கண்டத்துண்டமா வெட்டிப் போட்டாக்கூட தப்பில்லே… நம்ம குடும்;ப கவுரம் என்ன…? மருவாதை என்ன? அத நெனைச்சுப் பாக்கம ஏதோ கீழ்ஜாதி நாயோட ஓடிப்போயிருக்கே… உனக்கு எவ்வளவு நெஞ்சழுத்தம் இருந்தா இப்படிப் பண்ணியிருப்பே… உங்கப்பாவாலே ஊருல தலைநிமிந்து நடக்க முடியுமா? படுபாதகி… குடும்ப கவுரவத்தை குழித்தோண்டிப்

பொதைக்க வந்த நாசக்கார நாயி… குடிகெடுத்த கருங்காலி சனியன்… உன்னைக் கொன்னாத்தான் என் ஆத்திரம் தீரும்.” என்று மறுபடியும் அவள்மீது விளக்கு மாற்றால் தொடர்ந்து விழுந்தது அடிகள். அடித்தது வேறு யாருமல்ல அவளது நம்பிக்கை நட்;சத்திரமான லஷ்மி அத்தை.

கொஞ்சம் சுதாரிச்சுகிட்டு நிமிர்ந்துப் பார்த்தாள், எதிரே இதுவரை அவள் பார்க்காத லஷ்மி அத்தை.

“அத்தே…!”

“ஏன்னடி அத்த சொத்தன்னுட்டு… உங்கப்பன் உனக்கு மாப்பிளைப் பாத்து வச்சிட்டாரு… நீ ஓடிப்போனது தெரிஞ்சும்… நம்ம குடும்ப கவுரம் பாதிக்ககூடாதுன்னு எங்க சித்தப்பா பையனே உன்னை கட்டிக்க ரெடியா இருக்கான். அவன் கட்டுற தாலியை வாங்கிக்கிட்டு, ஒழுங்கா குடித்தனம் நடத்துற வழியைப் பாரு.”

“அத்தை நீயா இப்படி…? உங்க சித்தப்பா பையனைப் பத்தி ஏற்கனவே நீ சொல்லியிருக்கியே… தண்ணி வண்டி, பொம்பிளை ஷோக்கு உண்டுன்னு… அவனுக்கா என்னை நீ கட்;டி வைக்கப்போறே…?”

“ஏய் கேடுகேட்ட ஓடுகாலி நாயே… ஓடிப்போன உனக்கு அவனுக்கு பத்தி பேச என்ன யோக்கியத இருக்கு…? என்னதான் குடிகாரனா இருந்தாலும், கூத்தியா வச்சிருந்தாலும் அவன் நம்ம ஜாதிடி… அதுக்கு மேலே ஓடிப்போன உன்னை இனி எவன் கட்டுவான்…? ஏதோ பெரிய மனசுப் பண்ணி எங்க சித்தப்பா பையன் உன்னை கட்டிக்க சம்மதிச்சிருக்கான்… அதுக்கே அவனுக்கு நீ கோயில் கட்டி கும்பிடணும்… அதவிட்டுட்டு பேச வந்துட்டா… பேச்சி… வாயைப் பொத்திக்கிட்டு நாங்க சொல்ற பேச்ச கேட்டுட்டு ஒழுங்கா மரியாதையா இருக்கிறதா இருந்தா உன்னை உயிரோடு விட்டு வச்சிருப்போம் இல்லாட்டி காலேசுக்கு போய் காதல், கீதல்னு கீழ் ஜாதிப்பையனோட ஓடிப்போக திட்டம் போட்டு, எங்கப் பேச்சக் கேக்காம விரும்புன பையனத்தான் கல்யாணம் பண்ணுவேன்னு பிடிவாதமா இருந்தாளே… உங்க பெரியாத்தா மவ பொன்னழகு… அவளுக்கு நேர்ந்த கதிதான் உனக்கும் நடக்கும்”

இவளது பெரியம்மா மக பொன்னழகு காலேசுக்குப் போனவ திரும்பி வரல. அதுக்கப்புறம் அவக்கிட்டேயிருந்து லெட்டர் மட்டும் தான் வந்துச்சு. விரும்புனவன கல்யாணம் பண்ணிட்டு, வெளியூர் போயிட்டேன். என்னை தேட வேண்டாம்னு. அதுக்கப்புறம் அவக்கிட்டேயிருந்து எந்த தகவலும் வரல… சரி எங்கேயோ நல்லாயிருக்கான்னுதான் இன்னைக்குவரைக்குகம் நெனைச்சுக்கிட்டு இருக்கா… ஆனா லஷ்மி அத்தை என்னவோ புதுக்கதை சொல்லுறாளேன்னு அவள நிமிந்துப் பாத்தாள்.

“என்ன பாக்குறே…? அவ எங்கேயோ ஓடிப்போயிட்டான்னு நெனைச்சுக்கிட்டு இருக்கியா…? அவ கொன்னு செங்கல்சூளையிலே வச்சி

எரிச்சிட்டோம். நீயும் பிடிவாதம் பிடிச்சா உனக்கு அதே கதிதான்.” என்று சொல்ல, அதிர்ச்சியுடன்,

“அத்தே…! நீ ஜாதியே பாக்கமாட்டேன்னு அம்மாச்சிக்கிட்ட சொல்லுவே…! ஆனா… இப்போ… இப்படி சொல்லுதே…!”

“ஆமாட்டி…! நான் ஒரு டீச்சரா ஜாதியில்லைன்னுதான் சொல்லிக் கொடுப்பேன்.. டவுனைப் பொறுத்தவரைக்கும் நான் ஒரு டீச்சர்… அங்கே எல்லார்கிட்டேயும் ஜாதிமத பேதம் பாக்கமாத்தான் பழகுவேன். அவுங்கள வீட்டுக்கு கூட்டிட்டு வந்து சாப்பிடச் சொல்லுவேன். அவுங்க கொண்டு வர சாப்பாட்டை சாப்பிடுவேன். அதெல்லாம் அங்கே…. இங்கே வந்துட்டா நானொரு சாராசரி கிராமத்துப் பொண்ணு. எனக்கு என்னோட சொந்த பந்தம், சாதி சனம்தான் பெரிசு… என்னோட ஜாதிக்கோ, என்னோட சனத்து மக்களுக்கோ எந்த வித இழுக்கும் வரவிடமாட்டேன். அதுக்காக ஒரு உயிரை எடுக்கணும்னா எடுக்கவும் தயங்க மாட்டேன்” என்று சொல்லவும், இதுவரை காலடியில் சுருண்டுக்கிடக்கும் அமைதியான பூனைக்குட்டியாக தான் நினைத்த லஷ்மி அத்தை, இப்போது, வாயில் ரத்தம் வழிய, வேட்டையாடக் காத்திருக்கும் கொலைவெறி பிடித்த புலியாக காட்சியளித்தாள். இதுவரை அவள் அணிந்திருந்த முகமுடி களையப்பட்டு தெரிந்து உண்மையான முகத்தைப் பார்த்த புனிதாவிற்கு இதுவரை இல்லாத பயம் மனதில் உருவாக ஆரம்பித்தது…

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *