Sunday, February 18, 2018

.

நித்திரை அழகியின் நிஷாகந்திப்பூ!… ( நாவல் ) …. } சிவ,கணேசன்… திருச்சி.

நித்திரை அழகியின் நிஷாகந்திப்பூ!… ( நாவல் ) …. } சிவ,கணேசன்… திருச்சி.

1. மலையின் மீது ரதியுலாவும் நேரமே…

அதோ அந்த மலைக்கு இடது பக்கம் பாரு, உனக்கு ஸ்லீப்பிங் ப்யூட்டி தெரியறாளா?”

அது ஒரு மழை நாள். பச்சை போர்த்தியிருந்த மலைகளின் மடியிலெல்லாம் மேகம் வந்து சூழ்ந்து சிறிய சிறிய கூடாரங்களின் தலைப்பகுதிகள் போல மலைகளின் முனைகள் மட்டும் தெரிந்து கொண்டிருந்தது.

“புரியலண்ணா, எல்லாமே சாதாரண மலையாதானே தெரியுது”.

மகேஷ் அண்ணா தோள்களில் கைபோட்டுக்கொண்டான். என் முகத்துக்கு மிக அருகில் அவன் முகத்தை வைத்துக்கொண்டு இடதுகையை மலையை நோக்கி நீட்டினான்.

”நேரா என்னோட கையப்பாரு, அந்த இடதுபக்க மிஸ்ட் கூட்டத்துக்கு மேல இருக்குற மலையை மட்டும் பாரு. அதுதான் அவளோட முகம். மத்த மலையை பாக்காத, மிஸ்ட்டை பாக்காத, ஒரே ஒரு ஆங்கிள்தான், நல்லா பாரு.”

தெரிந்தது – சிலிர்த்தது. வயிற்றுக்கு அருகில் ஒரு சிறிய மின்னல் பூ மலர்ந்தது. எச்சில் விழுங்க முயன்று அது தொண்டைக்குக்கீழே செல்லாமல் சட்டென இருமல் வந்தது. தலையைத் தட்டிக்கொண்டேன் சில நாட்களாக கேள்விப்படிருந்த ஸ்லீப்பிங் ப்யூட்டி எனும் மலை – பெண் உருவில் ஒரு மலை – தலை முடியை விரித்துப்போட்டுக்கொண்டு, கண்மூடிப் படித்திருக்கும் ஒரு பெண்ணின் உருவம். மேடான நெற்றி, நேரான மூக்கு, சிறிய உதடு, வளைந்த மோவாய், கழுத்து, நேரான மார்பு, குழைந்த வயிறு என பார்த்த முதல் நொடியில் அச்சமும் பார்க்கப்பார்க்க பரவசமும் தோன்றும் தூங்கும் அழகி என்னும் மலை. அவ்வளவு குளிரிலும் லேசாக வியர்த்தது.

கால்கள் லேசாகத் தளர்ந்ததை உணர முடிந்தது. ஈரம் இல்லாத ஒரு பாறையில் காலிரண்டையும் தொங்கப்போட்டுக்கொண்டு அமர்ந்து கொண்டேன். ஒரு மில்லிசெகண்ட் கூட என்னால் பார்வையை நகர்த்த முடியவில்லை. ஸ்வெட்டரைத் தாண்டி உடலுக்குள் ஊசி குத்தும் குளிர் உரைக்கவில்லை, தலையைக் கலைத்து, உடையை உலுக்கும் காற்றைப் பொருட்படுத்தவில்லை, பறித்து வைத்திருந்த ஒரு பிளாஸ்டிக் பை நிறைய பிளம்ஸ் பழங்கள் கீழே விழுந்ததைப் பார்க்கவில்லை, மழை வந்தால் எப்படி மேடேறி கேம்ப்புக்குச் செல்வது என்ற எந்தக்கவலையும் தோன்றவில்லை.

கண்கள் நிலை குத்திப்போயின – இடமும் வலமுமாக ஏராளமான முறை அம்மலையை என் விழிகளுக்குள் உருக்கி ஊற்றிக்கொள்ள நினைத்தேனா தெரியவில்லை – அந்தக்காட்சியில் அமிழ்ந்து போயிருந்தேன். ஏன் இந்த குறிப்பிட்ட ஒரு மலைக்கு மட்டும் இப்படி ஒரு அதிசயமான வடிவம். கேள்விகள், ஆச்சர்யங்கள், சந்தோஷங்கள் என ஏகப்பட்ட கலவையான உணர்வுகள் அழுத்த அழுத்த அந்த அழகில் உறைந்து போயிருந்தேன்.

“என்னடா போலாமா?” மகேஷ் அண்ணாவின் குரல் கேட்டுத் திரும்பினேன்.

”அந்த மிஸ்ட் மூடற வரைக்கும் பார்த்துட்டுப்போலாண்ணா” என்றேன்.

கீழே விழுந்த பிளம்ஸ்களை மெதுவாக பொறுக்கிக்கொண்டே கேட்டான்.

“இத்தனை நாளா இவளைப்பார்த்ததில்லையா?”

இல்லையென்பதாக தலையசைத்தேன். எனக்கு வார்த்தைகள் வரவில்லையா, அல்லது பேசும்போது அந்த மலை தியானம் கலைந்துவிடும் என்று நினைத்தேனா தெரியவில்லை.

பிளம்ஸ் கவரை மரத்தோரமாக வைத்துவிட்டு, பாறைக்குமேல் ஏறி உட்கார்ந்து கொண்டான்.

”ஏண்ணா இந்த மலை மட்டும் இப்படி இருக்கு? இல்லை இதே மாதிரி வேற எங்கயாவதும் இதே மாதிரி இருக்கா?”

அவனிடம் ஒரு நீண்ட அமைதி. ஒரு பெருமூச்சு. பிறகு சொன்னான்.

”அவ மலையில்ல சிவராமா. அவ ஒரு வன யட்சி – இந்த மலைங்களுக்கெல்லாம் தேவதை.”

என்ன சொல்றண்ணா? அவளுக்கு உயிர் இருக்குன்றியா?”

”உயிரா? உயிர்னா என்ன?”

அவன் புருவங்கள் எப்போதுமே நெரிந்தவண்ணமேதான் இருக்கும். இன்று மேலும் நெரிந்து என் கண்களை நோக்கின.

“உயிர்னா, நடமாடறது. மூச்சு விடறது..மனுஷங்க, மிருகங்க மாதிரி…..”

உண்மையில் எனக்கு நேரடியான விடை தெரியவில்லை. எனக்குத் தோதான வார்த்தைகளை ஒவ்வொன்றாக கோர்த்துச்சொன்னேன்.

”அவ்ளோதானா?”

”சொல்லத்தெரியலண்ணா. ஆனா நீ என்ன சொன்ன? அவள தேவதைன்னா? யட்சின்னா? அப்படின்னா அவ நடமாடுவாளா? பேசுவாளா?”

என்னிடமிருந்து பார்வையை விலக்கி, தூங்கும் அழகியை ஆழமாகப்பார்த்தான். அந்த நொடியில் அவன் கண்களுக்குள் ஏதோ ஊடுருவும் ஒரு ஒளி இருந்தது. ஏக்கம் இருந்தது. கழுத்தை இடது பின்புறமாகச்சாய்த்து, இரண்டு உதடுகளையும் வாய்க்குள் குவித்து,மூச்சை இழுத்து கண்களை மூடிக்கொண்டான்.

பாறையிலிருந்து குதித்தான். சட்டையை இழுத்துவிட்டு தோள்பையை மாட்டினான். கீழே கிடந்த பிளம்ஸ் பாக்கெட்டை எடுத்துக்கொண்டான்.

தீர்க்கமாக என்னைப்பார்த்துச்சொன்னான்.

”எந்தப்பெளர்ணமியன்னிக்கு நிஷாகந்திப்பூ பூக்குதோ அவ எழுந்து வருவா. ”

சொன்ன வினாடியில் விடுவிடுவென்று கிளம்பி திரும்பிப்பார்க்காமல் சென்றான்.

என்னுள் அட்ரீனலீன் அளவு கடந்து பாய்ந்ததது. சில்லென்று ஒரு மெல்லிய மின்னல், வயிறிலிருந்து கிளம்பி தொண்டை வரை தாக்கியது. என் முன்னே கிடந்து உறங்கும் இந்த மலை ஒரு பெரிய யட்சி என்று உணர்ந்த கணத்தில் இந்த பூமி சுற்றத்தொடங்கியிருந்தது. தளர்ந்த கால்களை சமன் செய்து கொண்டு அவன் பின்னால் ஓடத்தொடங்கினேன்.

2. காணாத ஒன்றைத்தேடுதே…

நீலகிரி மாவட்டத்தின் தெற்குக்கோடியில் இருக்கிறது இந்த ஊர். குந்தா நீர் மின் திட்டம் என்கிறார்கள். முழு நேரமும் மேகம் வந்து மலைகளை முத்தமிட்டுக்கொண்டே இருக்கும் குளிர் தேசம். அப்பாவிற்கு இங்கு உள்ள நீர் மின் திட்ட அலுவலகத்தில் உத்தியோக மாற்றலுக்காக வந்திருக்கிறோம். வந்து சேர்ந்த நாள் முதலாய் கடந்த ஒரு வருடமாக ஊரைச்சுற்றியும் அங்கிங்கெனாதபடி விரிந்திருக்கும் காடுகளையும், பூக்களையும், அருவிகளையும் அனுபவிப்பதே முழு நேர வேலயாயிருக்கிறது. குந்தா அப்பர் கேம்ப்பிலிருந்து 10 கிலோமீட்டர் தள்ளியிருக்கும் இந்த பெனிஸ்டாக்குக்கு இன்றுதான் வந்தேன் , இந்த மலை தரிசனத்தை மகேஷ் அண்ணாவின் வழிகாட்டுதலில் கண்டுகொண்டேன். இதோ கால்கள் துவளத் துவள மகேஷ் அண்ணாவை தொடர்ந்து கொண்டிருக்கிறேன்.

அவ்வளவு நேரம் தொடர்ந்து பேசியவன் அந்த கடைசி வாக்கியத்திற்கு பிறகு வாயைத் திறக்காமலே நடந்து வந்தான். அது அவன் சுபாவம். அவனுக்குத் தோன்றினால்தான் பேசுவான். அதை உணர்ந்து அவன் அமைதியை குலைக்காமலிருப்பது என் சுபாவம். இதனாலேயே எங்கள் நட்பு நீடித்திருந்தது.

பெரும்பாலும் அவன் யாரிடமும் பேசுவதில்லை. மிகக் குறைவான பேரிடம் மட்டும்தான் அவனுக்கு பழக்கம். ஒருமாதிரி தன்னைத் தனிமைப்படுத்திக்கொண்டுதான் இருந்தான். பல நாட்கள் உர்றென்றுதான் இருப்பான். முகத்தைப்பார்த்து அன்றைய அவன் குணத்தின் மெனுவை நானாகத் தெரிந்து கொள்வேன். ஆனால் பேசும் நாட்களிலெல்லாம் என் ஆர்வத்திற்கு தகுந்தவாறு பல இடங்களுக்கு கூட்டிச்சென்றிருக்கிறான். பல கேள்விகளை சந்தேகங்களை தீர்த்து வைத்திருக்கிறான். அப்படித்தான் இன்று பிளம்ஸ் பறிக்க இந்த கெத்தை பென்ஸ்டாக் மலைக்கு வந்தோம்.

’நிஷாகந்தி’ என்று ஒரு மலர் இருப்பதை அன்றுதான் தெரிந்துகொண்டேன் என்றாலும் பெளர்ணமியன்று பூக்கும் நிஷாகந்திக்கும், ஸ்லீப்பிங் பியூட்டிக்கும் என்ன சம்பந்தம் என்று புரியவில்லை. எங்கே இருக்கிறது இந்த நிஷாகந்திச்செடி என்றும் தெரியவில்லை. அந்த மலையைப்பார்த்த வியப்பே இன்னும் மறையவில்லை. ஆனால் ”மலை எழுந்து நடக்கும்” என்ற முதல் விஷயமே எனக்கு பெரும் அவநம்பிக்கையாக இருந்தது. இதில் கோர்வையாக நிஷாகந்திப்பூவையும், ஸ்லீப்பிங் பியூட்டியையும் இணைத்து அவன் சொன்னது வேறு தலையை சுற்றியது.

ஒரு விஷயம் சொல்லவேண்டும். இரண்டு வருடங்களாக அவன் சொன்னது எதுவும் புரட்டு இல்லை. ஆதாரங்கள் இல்லாமல் அவன் பேசியதே கிடையாது. எனக்கு மிகவும் பிடித்த சப்ஜெக்டான நீலகிரியின் பூக்கள் மற்றும் பறவைகள் (flora & fauna) குறித்து

ஏராளமான விஷயங்கள் அவனிடம் கொட்டிக் கிடந்தன. நாகணவாய்ப்ப்புள் என்றால் நாங்கள் தினமும் கடந்து செல்லும் மைனாதான் என்று முதலில் அவன்தான் சொன்னான். ’செங்காந்தள்’ என்பது ஒரு கப்ஸா என்று சொன்னபோது பவர்ஹவுஸ் வரைக்கும் அழைத்துச்சென்று அசையாத தீ போல நின்றுகொண்டிருந்த கார்த்திகைப்பூவைக் காட்டினான்.

இப்போது இதனையும் அவன் வெறும் பேச்சுக்காக சொல்லியிருக்கமாட்டான் என்ற ஒரே ஒரு எண்ணம் மட்டும்தான் ஓடிக்கொண்டிருந்தது.

கேம்ப் வந்ததும், காமராசர் பூங்காவைத்தாண்டி போகும் முன்னதாக சொன்னான்,

“அடுத்த சனிக்கிழமை பெளர்ணமி. உனக்கு நம்பிக்கை வந்துட்டா நாம நிஷாகந்திச் செடியைப்பார்க்கப்போலாம்” என்றான்.

நம்பிக்கை மட்டும் முழுதாக வரவில்லை. ஆர்வமும், குறுகுறுப்பும் மட்டும்தான். அதைப்போய் அவனிடம் சொன்னால், கண்டிப்பாக அழைத்துச்செல்ல மாட்டான். அதனால் வாயை மூடிக்கொண்டுதான் இருக்கவேண்டும்.

“கண்டிப்பா வரேண்ணா, போலாம்” என்றேன்.

அதே சுவாரசியமற்ற முகத்துடன் என் தோளில் தட்டிவிட்டு, லோயர் கேம்ப் செல்லும் சாலையில் சென்றுவிட்டான். என் நினைவுகள் முழுதும் அவனைச்சுற்றியும், தூங்கும் அழகியையும், நிஷாகந்திப்பூ பற்றிய கற்பனைகளிலும் சுற்றிக்கொண்டிருந்தது

ஓரு வாரம் அவ்வளவு நீளமானதாக இருக்கும் என்று நினைத்துக்கூட பார்க்கவில்லை. ’நிஷாகந்தி’ என்ற பெயரை ஒரு ஆயிரம் தடவையாவது உச்சரித்திருப்பேன். அந்தப்பெயரிலேயே ஏதோ ஒரு வசீகரம் இருந்தது. பெளர்ணமி இரவு, நடக்கும் மலை – நடக்கும்

ஸ்லீப்பிங் பியூட்டி – நிஷாகந்தி என்ற ஒரு புதிய பூ என எல்லாவற்றையும் சேர்த்து நினைவுகளை விஸ்தரித்துக்கொண்டே இருந்தேன். மனம் எல்லைகளில்லா கற்பனைகளில் அலைவதன் போதையினை அனுபவித்தவண்ணம் காத்திருந்தேன்.

மகேஷ் அண்ணா அப்பர் கேம்ப் அல்ல – லோயர் கேம்ப்பும் அல்ல. குந்தா பாலத்தில் எல்லை மாரியம்மன் கோவிலையொட்டி இருக்கும் ஹாஸ்பிடல் குவாட்டர்ஸில் இருந்தான். அவனுக்கென்று தனியாக நண்பர் குழாம் கிடையாது. சிறிய வயதில் அவன் அம்மா தற்கொலை செய்துகொண்டதாகவும், சித்தியின் வளர்ப்பில் இருந்ததால் அவன் சற்று இயல்புக்கு மாறாக இருப்பதாக ஒரு எண்ணமும் குந்தாவாசிகளிடம் இருப்பதை கவனித்திருக்கிறேன். இயல்புக்கு மாறானவன் என்றால் அவன் யாரிடமும் பேசமாட்டான், சில நேரம் கேட்கும் கேள்விகளுக்குக்கூட பதில் வராது. ஒரு மாதிரியாக தனிமைப்படுத்திக்கொண்டுதான் திரிந்துகொண்டிருப்பான்.

அடுத்த ஒரு வாரமும் அவனை எங்கேயுமே பார்க்கமுடியவில்லை. அது பிரச்சனையில்லை. வாக்கு தவறமாட்டான். எப்படியாவது வந்து என்னை அழைத்துப்போவான். ஆனால் இரவில் வீட்டை விட்டு எப்படி வெளியே போவது என்று தெரியவில்லை. 8 மணிக்கெல்லாம் ஊர் அடங்கிவிடும். அதற்குபிறகு பெரியவர்களே வெளியில் வருவதில்லை. குளிர் முதற்காரணம். சுற்றிலும் காடுகள் இருந்ததால், மிருகங்கள் நடமாட்டம் இருக்கும் என்ற பயம் இரண்டாவது காரணம். இதைவிட சுவாரசியமான மூன்றாவது காரணம், இரவில் காடுகளில் யட்சி நடமாட்டம் இருக்கும் என்பதுதான்.

இதில் நான் போய் நடு இரவில் ’ஸ்லீப்பிங் பியூட்டியை’ ப்பார்க்கப்போகிறேன் என்று சொன்னால் கட்டுச்சாதம் கொடுத்தா வழியனுப்பப்போகிறார்கள்? வேறு ஏதேனும் யோசிக்க வேண்டும்.

இதற்கு முன்பு வீட்டை விட்டு இரவு வெளியில் தங்கியிருக்கிறேனா என்று யோசித்தேன். இருந்தது. என் நண்பன் கார்த்தி அப்பா அம்மா ஊருக்குப்போனபோது அவன் வீட்டில் போய் தங்கியிருக்கிறேன்.

கார்த்தி என் உற்ற நண்பன் – இன்று வரையிலும். எப்படி நல்ல குணங்களைக்கொண்டாடுவானோ அதைப்போலவே என் கிறுக்குத்தனங்களையும் சகித்துக்கொள்வான். அவனிடம் பேசி அந்த இரவை எனக்கு வழங்க முடிவுசெய்துகொண்டேன்.

”எங்க போறேன்னு கேக்காத, நாளைக்கு நைட் நான் உங்க வீட்ல தங்கப்போறதா சொல்லப்போறேன். அப்பா- அம்மா கேட்டா ஆமான்னு மட்டும் சொல்லு”

”நைட்டா, முழு நைட்டும் எனக்குத்தெரியாம உனக்கு என்னடா வேல?

”அதெல்லாம் கேக்காத, போய்ட்டு வந்து சொல்றேன்.”

”இப்போ நீ சொல்ல்லேன்னா, நானே உங்க வீட்டுக்கு வந்து நீ எங்கயோ போறேன்னு சொல்லிடுவேன்’

”சரி சரி யார்கிட்டயும் சொல்லாத, நான் மகேஷ் அண்ணாவோட பெனிஸ்டாக் போறேன். ஒரு முக்கியமான விஷயம்” என்றேன்.

யாரு மகேஷ் கூடயா? அவன்கூட எல்லாம் ஏண்டா வெளில போற?

அவன் சட்டென்று மகேஷ் அண்ணாவை ஒருமையில் பேசியது எனக்கு சற்றும் பிடிக்கவில்லை.

”மகேஷப்பத்தி உனக்கு ஒண்ணும் தெரியாதுடா. அவன் ஒரு செமி, ராத்திரியெல்லாம் அவன் காட்டுக்குள்ள தனியா அலையறதால அவனுக்குள்ள பேய் புடிச்சுருக்குடா. அவன் நம்மள மாதிரி

சின்னப்பசங்கள மயக்கி கூட்டிட்டு போயி ஏதாவது பண்ணுவான்னு சொல்லுறாங்கடா” என்றான்

எச்சிலை விழுங்கிக்கொண்டேன்.

“உனக்கு யார்டா சொன்னா?”

”நீதான் புதுசா வந்துருக்க, நான் இந்த ஊர்லயே சின்ன வயசுலேர்ந்து இருக்கேன், எனக்குத் தெரியாதா? அவங்க தாத்தா, மாமா, சித்தப்பா எல்லாரும் இப்படி மெண்ட்டலா இருந்து டேம்ல குதிச்சு செத்து போனவங்கதானாமா” என்றான்

என் கால்கள் வெலவெலத்துப்போயின.

3. என்ன சத்தம் இந்த நேரம்

”பெளர்ணமின்றது ஒரு மாசம் மொத்தத்துக்கும் சேத்து வச்ச சந்தோஷங்களை வானம் வெளிப்படுத்துற பெரிய சிரிப்புதான் இல்லையாடா” என்றான் மகேஷ் அண்ணா.

ஒன்றும் சொல்லவில்லை சிரித்தேன்.

அந்த சனிக்கிழமை இரவில் அவனே என்னை தேடிக்கொண்டு வந்தான். அவனை சந்திக்கும்போதெல்லாம் அவன் பேசும் முதல் வாக்கியம் அவன் மனநிலையைச் சொல்லிவிடும். அன்று படு உற்சாகமாக இருக்கிறான் என்பதைப் புரிந்துகொண்டேன்.

கார்த்தி சொன்னதை பல முறை யோசித்துப்பார்த்தேன், அவன் ஒரு பயந்தாங்கொள்ளி. பகலிலேயே காட்டருவிக்கு வர மாட்டான். பிச்சீஸ் பறிக்க கெத்தைக் காடுகளுக்கு போகலாமென்றால் அம்மா திட்டுவா என்பான். அவனுக்கும் எனக்கும் இருக்கும் ஒவ்வாமைகளையும், மகேஷ் அண்ணாவுக்கும் எனக்கும் இருக்கும் ஒற்றுமையையும் நினைத்துப்பார்த்தேன். அவன் எச்சரிக்கையை எனக்குள் இருந்த குறுகுறுப்பு வென்றது. இந்த இரவை அதற்கு பரிசளித்தேன்.

”நாம பெனிஸ்டாக் போலயாண்ணா?”

”எதுக்கு?”

“அங்கதான ஸ்லீப்பிங் பியூட்டி இருக்கு?”

”ஆமாம், ஆனா இன்னைக்கு அவளை முழுக்க மேகம் மூடிருக்கும். அங்க போனா அவளைப்பார்க்க முடியாது. அவளோட மேக நண்பர்களை தினமும் தொடவிடுவா, ஆனா இன்னைக்கு மட்டும்தான் சம்போகம். முழுசா அவளை விட்டு விலகமாட்டாங்க ராத்திரி முழுக்க ”

கண் சிமிட்டினான். எனக்கு பாதி புரிந்தது. அந்த மலையை அவன் முற்றிலும் பெண்ணாகவே வர்ணிப்பது எனக்கு ஏனோ ஒருவித சந்தோஷத்தைக்கொடுத்தது.

”நான் சொன்னேன்ல, நிஷாகந்தி பூக்கறப்ப அவ வருவான்னு. அவ நிஷாகந்தி இருக்குற இடத்துக்கு வருவா. நாம அங்கதான் போறோம். வா” என்றான்.

மலைஇறங்கி குந்தா பாலம் கடந்து லோயர் கேம்ப் ஏறுவதற்கு முன்பாக ஒரு சிவன்கோவில் இருக்கிறது. அதற்கு பின்புறம் சற்றுதூரம் நடந்து சென்று வலது புறம் திரும்பி சற்று உள்நோக்கி சென்றுகொண்டிருக்கும்போது சட்டென்று ஒரு அருவி தெரியும். அருவி என்றால் மேலிருந்து கொட்டும் பிரம்மாண்டமானது அல்ல. உள்ளதிலேயே சற்று மேடான இடத்திலிருந்து பாயும் நீர்ச்சுனை. அங்கே ஏற்கனவே பகலில் சிலமுறை வந்திருக்கிறேன். ஆனால் இரவில் அந்த இடத்தின் ஒப்பனையே மாறியிருக்கிறது.

இரவில் நிலவொளிவெள்ளத்தில் அந்த நீர்ச்சத்தம் மிகச்சிறந்த இசையாக ஒலித்துக்கொண்டிருந்தது. ’சுந்தரி கண்ணால் ஒரு சேதி’ பாடல் ஆரம்பிப்பதற்கு முன்னால் 2-3 நொடிகளில் வரும் அந்த வயலின் முனகல்களைக் கேட்டிருக்கிறீர்களா – அப்படியே அதை பிரதிபலிப்பது போல வண்டுகளின் முனகல்கள் உச்சஸ்தாயியில் கேட்டுக்கொண்டிருந்தது அந்த நேரத்தில்.

அந்த நீர்ச்சுனையைத் தாண்டி காட்டுக்குள் செல்லும் பாதையில் நிறைய மரங்களுக்கு இடையில் சிறிய தூண்கள் போல இரண்டு

குத்துப்பாறைகள் இருந்தன. பாதி இருளில், நிலவொளியில் அவை நின்று கொண்டிருக்கும் இரண்டு ஒட்டகச்சிவிங்கிகள் போல இருந்தன.

அந்த ஒரு குத்துப்பாறையின் கீழேதான் அந்தச்செடி இருந்தது.

“இதுதான் நிஷாகந்திச்செடி”

நீண்ட இலைகள் கொண்ட சிறிய செடி, கடினம் குறைவான ஒரு கள்ளிச்செடி போலதான் இருந்தது. சுற்று மற்றும் பார்த்தும் பூ இல்லை.

“ஆனா பூ பூக்கலையே”

திரும்பிப்பார்த்து. “பூக்கும். காத்திருப்போம்” என்றான்

சற்று தூரம் மேடேறி நடந்து போய் ஒரு பாறையில் உட்கார்ந்துகொண்டான்.

“மகேஷ்ணா, அங்க போவோம், அங்கதான பூ பூக்கும்”

“உனக்கு பரீட்சை எழுதும்போது வாத்தியார் பக்கத்துலேர்ந்து பாத்துட்டே இருந்தா ஒழுங்கா எழுதமுடியுமா? அப்படிதான் அது பக்கத்துல போய் நின்னா அதுக்கு புடிக்காது… இங்கயே இருப்போம்” நான் ஒன்றும் சொல்லவில்லை. எனக்கு ஒருமாதிரி ஏமாற்றமாக இருந்தது..

ஒருவேளை இவன் முற்றிலுமாக என்னிடம் பொய் சொல்லி இருப்பானோ என்ற எண்ணம் சட்டென்று தோன்றியது. யட்சி நிஷாகந்திபூ பூக்கும்போது வருவாள் என்பதெல்லாம் கட்டுக்கதையாக இருக்குமோ என்ற யோசனை மிகப்பலமாக என்னைத் தாக்கியது.

முதலில் இந்த நிகழ்வுகளின் துல்லியங்களை ஆராய்ந்திருக்க வேண்டும். மலை நடக்குமென்றாலும், பெளர்ணமியில் நிஷாகந்தி பூக்கும் என்றபோதும் அப்படியே நம்பி கிளம்பி வந்திருக்கக்கூடாது என்று நினைத்துக்கொண்டேன். இப்போது ஏதோ ஒரு கள்ளிச்செடியைக்காட்டி நிஷாகந்திச்செடி என்கிறான். அதில் பூவும் இல்லை ஒரு மண்ணும் இல்லை. கடும் அயர்ச்சியாக இருந்தது.

என்னிடம் இன்றுவரை தொடரும் ஒரு கெட்டபழக்கம் இருக்கிறது. ஏதேனும் பிடிக்கவில்லை – மன்ஸ்தாபம் என்றால் ஆனது ஆச்சென்று முகத்திற்கு நேரே சண்டை போட்டு வெட்டிவிட்டு வர மாட்டேன். சற்று நேரம் பொறுத்து நிதானமான பொறுமையான முடிவுகள்தான். (சற்று வழவழா கொழகொழா என்றும் பாடம்) ”பகைவனுக்கருள்வாய் நன்னெஞ்சே” என்பதை தவறாக புரிந்துகொண்டிருக்கிறேனோ என்னவோ?

இந்த முறையும் மகேஷ் அண்ணா தவறான தகவல்கள் சொல்கிறான் என்ற எண்ணம் வந்தவுடன் சட்டென விட்டுவந்திருக்க வேண்டும். வரவில்லை.

இன்னொன்றும் சொல்லவேண்டும். அந்த சூழல். அவ்வளவு அழகு. இரவில் காட்டின் இசையென்பது எல்லையில்லாதது. தண்ணீர், வண்டுகளின் ரீங்காரம், மிதக்கும் நிலவொளியில் அந்த காட்டின் அழகு என மனத்தை வசப்படுத்தும் எல்லா அம்சங்களும் நிறைந்திருந்தன.

”பூவைப்பார்க்கலேன்னு அப்செட்டாகிட்டியா சிவராமா?”

நான் பதில் சொல்லவில்லை. என் பார்வை ஒரு வெள்ளி மின்னல் போல பாய்ந்துகொண்டிருக்கும் அந்த ஓடை நீரின் மேலிருந்தது.

“இன்னைக்கும் பூக்கலைன்னா இதோட நாலு வருஷம் முடிஞ்சுடும், நான் மாசா மாசம் பெளர்ணமிக்கு நிஷாகந்தி

பூக்கறதைப்பாக்க ஆசையா பார்க்க வந்து ஏமாந்து திரும்பிப்போறது”

”அதான் பூக்கலையே?”

“இல்லை பூக்கும். ராத்திரி எட்டு மணிலேர்ந்து பத்து மணிக்குள்ளதான் மொட்டு விடும். மொட்டு விட்டுட்டா பன்னெண்டு மணிக்குள்ள மலர்ந்துடும். காலையில பொழுது விடியும்போது அதோட தடமே இருக்காது. பெளர்ணமின்னா அது பூக்கறதோட வாய்ப்புகள் 100 சதவீதம் இருக்கு.”

நான் பதில் சொல்லவில்லை. ஆனால் அவன் கண்கள் ஏதோ சொல்லிக்கொண்டிருந்தன. கார்த்தியின் எச்சரிக்கைகள் காதோரமாக ஒலிக்கத்தொடங்கியிருந்தன. இதயத்துடிப்பின் ஓசை என் காதருகே கேட்டது. மெதுவாக காலடிகளை என் இடது புறமாக நகர்த்தத் தொடங்கினேன். என் தோளை இறுக்கமாகப்பற்றின மகேஷ் அண்ணாவின் கைகள்.

4. எவரும் சொல்லாமலே பூக்களும் வாசம் வீசுது…

“இந்த உலகத்துல மூணு லேயர் இருக்கு சிவராமா. ஒண்ணு நாம வாழற பூமி. அடி லேயர். டாப் லேயர்தான் அறிவியலுக்கு கேலக்ஸி – ஆத்திகர்களுக்கு சொர்க்கம்/ நரகம் எல்லாம் கலந்துகட்டி இருக்குற மேலுலகம். ஆனா இதுக்கு இடைப்பட்ட இன்னொரு லேயரும் இருக்கு. அது சூட்சுமலோகம்.”

என் பயத்தைப்போக்க நினைத்தானா அல்லது மேலும் கதைவிடுகிறானா என்று தெரியவில்லை. ஆனால் அவன் குரலின் இளகிய தன்மை அவன் பேச்சைக் கேட்கத்தூண்டியது.

”அங்கதான் தேவைதைகள் வசிக்கிறாங்க. யட்சிகள் வசிக்கிறாங்க. அங்கதான் அதிசுந்தரம் இருக்கு. அங்கதான் அட்மோஸ்ட் சந்தோஷம் இருக்கு. அந்த லேயர்ல வசிக்கிற மக்களெல்லாம் பூமிக்கு வர்றதுக்கு ஏதாவது ஒரு காரணம் இருக்கும்னா அது இந்த மண்ணோட பறவைகளும், பூக்குற பூக்களும்தான்.

பூக்கள்தான் இந்த பூமியோட ரகசியத்தை அடுத்த லேயர்களுக்கு கடத்தற காரணிகள். பூக்கள் மட்டும்தான் இந்த பூமியோட பெரும் சந்தோஷம். அது ஒண்ணுக்காக மட்டும்தான் அவங்க இங்க இறங்கி வருவாங்க.

அதுவும் இந்த நிஷாகந்திப்பூ யட்சிங்களுக்கு மிகப்பிரியமான பூ. இல்லேன்னா ராத்திரி மட்டுமே பூத்து விடியற்காலைல வாடுற பூ ஒண்ணு எதுக்கு பூமில உண்டாகணும்னு யோசிச்சுப்பாரு. அது அவங்களுக்கான பூ. அதும் நம்ம ஸ்லீப்பிங் பியூட்டிக்கு பிடிச்ச பூ.

அவ இந்த பூ பூக்குற பெளர்ணமி ராத்திரி வருவான்றது இந்த ஊருக்கு வேணா அர்த்தமில்லாத புரட்டு மாதிரி தோணலாம். ஆனா அவ கண்டிப்பா வருவா. இன்னைக்கு இல்லேன்னாலும், அடுத்த பெளர்ணமிக்கு. இல்லேனா எப்பவாவது ஒரு நாள். என் ஆழ்ந்த நம்பிக்கை அது. 50-60 வருஷங்களுக்கு முன்னாடி இந்த டேம், கேம்ப், வீடுங்க, அப்பர் கேம்ப், லோயர்கேம்ப், மக்கள்னு யாரும் இல்லாம இருந்த பிரதேசத்துல அவங்களோட வருகை தினம் தினம் நிகழ்ந்துச்சாம்..

என் தாத்தா பலசமயம் அவளைப் பார்த்திருக்காரு. இதே குத்துப்பாறைக்கிட்ட பெளர்ணமி ராத்திரி மீன்பிடிக்கக் காத்திருந்த அவர்கிட்ட இரண்டொரு முறை பேசக்கூட செஞ்சிருக்கா. அவரோட தலைமுறையச்சேர்ந்த என்னையும் அவ அடையாளம் கண்டுக்குவா, கண்டிப்பா வருவா. அதுவரைக்கும் என் தேடல் முடியாது.”

அவன் மட்டும்தான் பேசினான். எப்படியாவது என் அவநம்பிக்கையை போக்க முயற்சிக்கிறானோ என்று தோன்றியது. அவன் தாத்தாவைப்பற்றிப்பேசியபோது கார்த்தியின் ஞாபகம் வந்தது.

”உங்க தாத்தா எங்கண்ணா? அவர நான் பாத்த்தே இல்லையே?”

என்னை தீர்க்கமாகப்பார்த்தான். அப்போது அவன் கண்களின் இருந்த உணர்ச்சியைப்படிக்க முயன்றேன்.

”அவர் இப்போ இல்ல” என்று ஒரு பெருமூச்சோடு நிறுத்திக்கொண்டான்.

“நீ அவதாரம் சினிமால வர்ற தென்றல் வந்து தீண்டும்போது பாட்டு கேட்ருக்கியா?”

”ம் வாராவாரம் பிலிப்ஸ் சூப்பர் 10 ல போடுறானே. நிறைய தடவை பார்த்திருக்கேன்.

”அதுல என்ன சொல்ல வர்றாங்கன்னு புரியுதா?”

“ம்.புரிஞ்சது. கண்ணு தெரியாத ஒரு பொண்ணு. அவளுக்கு கலர்னா என்னன்னு அவ காதலன் பாட்டுல சொல்றான்”

”அவ்ளோதானா? நீ சொல்றது அந்த டைரக்டரோட பார்வை மட்டும்தான் – அந்த பாட்டை அவர் அப்படி எடுத்துட்டாரு? ஆனா இளையாராஜாங்குற ஒரு ஜீனியஸ் இந்த அற்புதமான பாட்டை இந்தமாதிரி ஒரு சிச்சுவேஷனுக்கு போட்ருப்பாருன்னு நான் நினைக்கவே இல்லை. அவர் அந்த பாட்டை ஏற்கனவே வேற ஒரு சிச்சுவேஷனுக்கு போட்ருக்கணும். இந்த சிச்சுவேஷனுக்கு ஓரளவுகு சூட் ஆகறதால இதுக்கு கொடுத்துருப்பாருன்னுதான் நான் நினைக்கிறேன்.”

இவ்வளவு அதிகப்பிரசங்கித்தனமாகவெல்லாம் அவன் பேசி நான் கேட்டதேயில்லை. அவன் வாக்கியங்கள் எப்போதும் முழுமையடாது. தீர்மானமான அபிப்ராயங்களெல்லாம் அவனுக்கு எந்த விஷயத்திலுமே கிடையாது. அவன் இவ்வளவு தீர்மானமாக இந்த பாட்டைப் பற்றி பேசுவதை கவனிக்க ஆரம்பித்தேன்.

”அடுத்த தடவை அந்த பாட்டை கேக்கும்போது நல்லா கவனிச்சுப்பாரு. அதுல உள்ள வாத்திய இசையெல்லாம் எப்படி வித்தியாசமா / புதுமையா ஒலிக்குதுன்னு கேட்டுப்பாரு.”

அது உண்மைதான். இளையராஜாவின் பாடல்களின் பேட்டர்னிலிருந்து முற்றிலும் மாறுபட்டு ஒலிக்கும் இந்த பாட்டு. அவரின் பெரும்பாலான மெலடி பாட்டுகளில் வரும் வயலின் மழை இதில் இருக்காது. ஒரு மெல்லிய நதி போல புல்லாங்குழல் ஓடிக்கொண்டிருக்காது. வார்த்தைகளை – வாக்கியங்களைக்கோர்க்க கிதார் சங்கிலிகள் இருக்காது, தபேலா இல்லை, மிருதங்கம் இல்லை,

ஆனால் சிறிய டிரம்ஸ் ஒலிகள் இருக்கும். எல்லா இசைக்கருவிகளும் ஏதோ அடியாழத்திலிருந்து ஒலிப்பது போலவே இருக்கும். வயலின்களில் இளையராஜா சாயலே இல்லாமல் மெல்லிய ஒலியுடன் வரும். புல்லாங்குழல் அவரின் வழக்கமான பாணியிலில்லாமல் குரலோடு சேர்ந்து இழைந்து வரும். அதுவரை அவர் போட்ட பாடல்களின் வாத்திய இசைகளிலிருந்து இது மாறுபட்டிருக்கிறது என்பது உண்மைதான்.

“உண்மையிலேயே அவர் அந்த பாட்ட தேவதைகளுக்கும், யட்சிகளுக்கும்தான் போட்ருக்காரு. அவங்களைப் பொறுத்தவரைக்கும் இந்த இரவு மட்டும்தான் உண்மை. பகலெல்லாம் நமக்குதான். அவங்க ஒரு சந்தோஷமான இரவை இந்த பூமியில் வந்து கடக்கறதுக்கான மொழிதான் அந்த பாட்டு.

அவங்களுக்கு தென்றல் வந்து தீண்டும்போதும், திங்கள் வந்து காயும்போதும் எந்த வண்ணமும் கிடையாது. அவங்களுக்கு வண்ணம்னாலே கருப்பும், வெள்ளையும் தாண்டி வேறு எதுவுமே கிடையாது. இரவுக்கு ஏது வேற வண்ணம். சுத்தி முத்திப்பாரு உனக்கு வேற கலர் ஏதாவது தெரியுதா? எல்லாமே கருப்பும் வெள்ளையும்தான்.”

முற்றிலும் உண்மை. வேறு வண்ணங்கள் எதுவும் இல்லையென்றாலும், எவ்வளவு ஏகாந்தம் – அழகு இந்த பெளர்ணமி இரவு. அருவியும், நீரும் லேசான வெள்ளை, மற்ற யாவுமே

கருப்புதான். ஆனாலும் பகலின் அழகை விட பன்மடங்கு பெருக்கிக்காட்டும் இரவு.

”அப்புறம் ஏன் அவங்க வண்ணங்களைப் பத்தி பேசுறாங்கன்னா அது எல்லாமே புற வண்ணங்கள் இல்லை மனசோட வண்ணங்கள். மகிழ்ச்சி, நேசம், சந்தோஷம், உற்சாகம், நிறைஞ்சிருக்கிற நிலை – உறவுபேதங்கள் இல்லாத, பொருள்தேடிப்போக வேண்டிய அவசியம் இல்லாத மனநிலை – எதுக்கும் அதிகாரி இல்லை – அதிகாரம் இல்லை. எல்லாருமே அந்நாட்டு மன்னர்கள்தான். பூக்கள், பறவைகள், மலைகள், அருவிகள் எல்லாம் அவங்க சந்தோஷத்தைக்கடத்துற காரணிங்க – எந்த உலகியில் துன்பத்துக்கும் ஆகாத இனிப்பா இனிக்கிற மனசு படைச்சவங்க. காலம் எப்படி ஓடினாலும், அவங்களுக்கு எந்த கவலையும் இல்லை – சந்தோஷமா பறக்க முடியும் –

உண்மையான நேசமும் அன்பும் இந்த உலகத்துல பொருள் / இயல்பு / குணம் சார்ந்தது. ஆனா அந்த உலகத்தில அப்படி எந்த காரணியும் கிடையாது. எல்லாரையும் அன்போட நேசத்தோட அணைச்சுக்குற சந்தோஷமான உலகம் அது.”

மீண்டும் அந்தப்பாட்டை மனசுக்குள் ஓட்டிப்பார்த்தேன். அவன் சொன்ன காரணிகளின் வீச்சு அந்தப்பாட்டெங்கும் ஜீவித்திருந்தது.

”அந்த பாட்டு சொல்ல வர்ற வண்ணம் அதுதான். அது அந்த கண்ணு தெரியாத பொண்ணோட வண்ணம் பத்தின கேள்வின்னா, இதை வேற பாணியில அணுகிருப்பாரு. ஆனா இது முற்றிலும் யட்சிகளுக்கான ஒரு ஆன்மிகப்பாட்டு. ஒருவேளை யட்சிகள் உலகில ரசிக்கிற பாட்டுன்னு ஏதாவது ஒண்ணுனு இருக்கும்னா அது இளையராஜாவோட இந்தப்பாட்டா மட்டும்தான் இருக்கும். . “எதுவும் இல்லாமலே மனசெல்லாம் இனிப்பா இனிக்குது” ன்னு இந்த பூமில உள்ள மனுஷங்களால ஒருநாளும் பாடமுடியாது. அப்படியே பாடினாலும் அது நிரந்தரமானதா இருக்காது.

அந்த தென்றல்வந்துதீண்டும்போது பாட்டின் மலைப்பிரசங்கம் எனக்குப்பிடித்திருந்ததுதான். ஆனால் அவநம்பிக்கை என்னை விட்டபாடில்லை

”நாம பூ பூத்திருக்கான்னு பார்த்துட்டு வந்துடுவோமா?” என் காரியத்தில் கண்ணாக இருந்தேன்.

என் முகத்தைப்பார்ப்பதை இப்போது தவிர்த்திருந்தான்.

“போய் பார்க்கல்லாம் வேணா சிவராமா. அது பூத்தா இந்த ஊர் மொத்தமும் மணக்கும். ஒரு கிலோமீட்டர் தாண்டி வாசனை வருமாம்”

“பூ பூக்கலைன்னா, அப்ப நாம போலாமா?” ஏமாற்றத்தின் சுவடுகள் பதிந்திருந்த அந்த இரவின் இறுதி வார்த்தையாக அதைச்சொன்னேன்.

பேசாமல் எழுந்தான். அந்த குத்துப்பாறைகளின் கீழே இருந்த செடிகளை இரண்டு நிமிடம் பார்த்துக்கொண்டிருந்தான். என் தோளின் மீது கைபோட்டுக்கொண்டு

“வா போலாம்” என்றான்

குந்தாபாலம் தாண்டி அவன் வீட்டுக்கு போவான் என்றுதான் நினைத்தேன். ஆனால் அவனும் அப்பர் கேம்ப்புக்கு செல்லும் படிகளில் ஏறிவந்தான்.

“நான் போய்க்கிறேண்ணா, நீ வீட்டுக்கு போ”

”நான் மேலதான் வரணும். போலாம் வா”

அடுத்த 15 நிமிடங்கள் எதுவும் பேசிக்கொள்ளவில்லை. அவன் தோளில் போட்டிருந்த கையை எடுக்கவுமில்லை. கையை அழுத்தமாக என் தோள்மீது வைத்திருந்தான். அது என்னவோ ஒரு

புரியாத பாஷையில் சில சங்கதிகளை என் மனதுக்கு சொல்லிக்கொண்டிருந்தது. எனக்குதான் புரியவில்லை. கிரவுண்டுக்கு மேலுள்ள மேட்டில் உள்ள சேரில் உட்கார்ந்துகொண்டான். நான் கிளம்பத் தயாரானேன்.

“நாம கண்ணால பார்க்குற எல்லாமே உண்மையில்லை. அதே மாதிரி கண்ணுக்கு தெரியாததால சில விஷயங்களை பொய்னு தள்ளிட்டு போய்ட முடியாது. இந்த விஷயம் உனக்குப் புரியும்னு நினைச்சுதான் உங்கிட்ட சொன்னேன். உனக்கு என் மேல கோவம் இருக்கும். ஆனா இது மொத்தமும் உண்மை. வேற யார்கிட்டயும் இதைப்பத்தி நான் பேசறதில்லை. எதைப்பத்தியும் பேசறதில்லை. அவங்க புரிஞ்சுக்குவாங்களான்னும் தெரியாது. ஆனா உனக்கு மட்டும்தான் சொன்னேன். என்னைக்காவது ஒருநாள் இது உனக்கு புரியும்.

உடனே எழுந்து விடுவிடுவென போய்விட்டான்.

5. யாரந்த நிலவு, ஏனிந்த கனவு…

அந்த பின்னரவில் எனக்கு கடும் ஜீரம் பிடித்தது. அந்த இரவின் விடையில்லாத அமானுஷ்யக்கேள்விகளா, அந்த முழு இரவின் குளிரில் அலைந்ததா என்று தெரியவில்லை, கண்களைத்திறக்க முடியாத அளவுக்கு காய்ச்சல். ஞாயிறு, திங்கள் இருநாள் மருந்து சாப்பிட்டு செவ்வாய்க்கிழமை பள்ளிக்குப் போகலாம் என்று ராஜீ டாக்டர் சொன்னார். ஆனால் அடுத்த இரண்டு செவ்வாய்க்கிழமைகள் வரையிலும் பள்ளிக்குப்போக முடியாமல் படுக்கப்போட்டது அந்த விஷ ஜீரம். அத்தை மாரியம்மன் கோவிலுக்கு கூட்டிச்சென்று மந்திரித்துவிட்டு வந்தாள். எல்லா மருத்துவங்களும் பார்க்கப்பட்டன.

15 நாட்கள் படுத்து எழுந்து பள்ளிக்குப்போன முதல் நாளே லேப் (Lab) பில்டிங் போய் ”தாவரவியல் பெட்ட்கத்தில்” நிஷாகந்தி என்று ஒரு பூ இருக்கிறதா என்று தேடினேன்.

N என்று ஆரம்பிக்கும் அனைத்து பூக்கள், தாவரங்கள் மற்றும் அனைத்து தாவரவியல் பெயர்களையும் தேடிப்பார்த்துவிட்டேன். முற்றிலுமாக அந்தப்பெயரில் எந்தப்பூவும் இல்லை. குழப்பமாக இருந்தது. ஜீரத்துக்கு முன் நிகழ்ந்ததெல்லாம் ஒரு கனவு போல ஆயிற்று அந்தக்கணத்தில் . ”ஸ்லீப்பிங் ப்யூட்டி மலை” உண்மைதான். அதற்கு பெனிஸ்டாக் எல்லாம் போகவேண்டியிருக்கவில்லை.

மஞ்சூர் கோகுல் தியேட்டர் பக்கத்தில் இருக்கும் மேட்டில் ஏறிச்சென்று பார்த்தாலே முழுமலையும் தெரியாவிட்டாலும் மலையின் வடிவினை தெரிந்துகொள்ளலாம். ஆனால் ”அவள் நிஷாகந்தி பூக்கும் ஒரு பெளர்ணமி இரவில் இறங்கி வருவாள்” என்ற வாக்கியத்தை ஒருமுறை மனதில் சொல்லிப்பார்த்தபோதே வாயும் மனதும் கசந்தது. ஏனோ ஒரு பெரிய சுழலில் மாட்டிக்கொண்டது போல இருந்தது.

அதைப்பற்றி நினைப்பதை தவிர்த்தேன்.

இருக்கவே இருக்கின்றன ’இண்டெக்ரல் கால்குலஸ்’ கவலைகள். ஜீர விடுமுறையில் விட்டுப்போன வகுப்புப்பாடங்களை எழுதவே அடுத்த 10 நாட்கள் சரியாய்ப்போயிற்று. ஒரு கணக்கைக்கூட சரியாகச்செய்ய இயலவில்லை. ’ஆர்கானிக் கெமிஸ்ட்ரி’ யின் சமன்பாட்டுக்கணக்குகள் கூடுதல் அழுத்தங்கள். இப்போதைக்கு இவற்றை சரிசெய்துகொண்டால் போதுமென்று நினைத்துக்கொண்டேன். காட்டிற்கும் அருவிக்கும் போவதைப்பற்றி வீட்டில் தொடர்ந்து கண்காணிக்கவும் ஆரம்பித்தனர். அந்த 15 நாள் ஜீரத்திற்குப் பின்னால் ஏதோ ஒரு கைமீறிய சக்தி இருப்பதாக அவர்கள் ஆழமாக நம்பினர். அவை எல்லாவற்றையும் சற்றே மறந்து என் லெளகீகச் சுழலில் மூழ்கினேன். .”யாதனின் யாதனின் நீங்கியான் நோதல் அதனின் அதனின் இலன்” என்பதை ஸ்லீப்பிங் ப்யூட்டிக்கும் ஜீரத்துக்கும் ஏவப்பட்ட உவமை உருவகங்களாகக் கருதி ஒரு கட்டத்தில் நமெக்கென்ன போயிற்று என்ற மனநிலைக்கு வந்துவிட்டேன்.

கிட்டத்தட்ட ஒருமாதம் போயிருக்கலாம். குருநாதன் மாமா என்னைத்தேடிக்கொண்டு டியூஷனுக்கு வந்தார். குருநாதன் மாமா அப்பர்கேம்ப்பில் டிரைவர். ஒருவகையில் மகேஷ் அண்ணாவுக்கு தூரத்து சொந்தம்.

”சிவராமு, மகேஷை எங்கயாச்சும் இந்த வாரம் பாத்தியா கண்ணு” என்றார்.

“இல்ல மாமா, ஏன்?”

”மூணு வாரத்துக்கு மேல வீட்டுக்குப்போகலப்பா. எப்படியும் சில நாள் வெளில இருந்துட்டு வீட்டுக்கு வந்துடுவான். ஆனா இந்ததடவை வரவே இல்லை. கேம்ப்ல சில பேர்ட்ட மட்டும்தான் பேசுவான். அவங்ககிட்ட எல்லாம் கேட்டேன். அதான் உங்கிட்டயும் கேக்கலான்னு வந்தேன்”

பெளர்ணமி இரவில் வெளியே போனதை இவரிடம் சொல்லலாமா தெரியவில்லை. அது அநாவசியக்குழப்பங்களை விளைவிக்கும்.

“நானும் பார்த்து மூணு வாரத்துக்கு மேல இருக்கும் மாமா. கடைசியா பெனிஸ்டாக் போனோம். அதுக்கப்புறம் பார்க்கல”

“சரி கண்ணு, பார்த்தா நான் கேட்டேன்னு சொல்லு.”

போய்விட்டார். அவனைத்தேடுவதென்பது காற்றைத்தேடுவதைப்போல, கடலில் விழுந்த நீர்த்துளியைத் தேடுவதைப்போல. 20-30 கிலோமீட்டர் சுற்றளவில் உள்ள எல்லாக்காடுகளுக்குள்ளும் அவனுக்கு வழி தெரியும். தங்குமிடங்கள் தெரியும். இங்குதான் இருப்பான் என்ற திசையைக்கூட கண்டறியமுடியாது. மூன்று வாரங்களாக வீட்டுக்குப்போகவில்லையென்றால், அந்த பெளர்ணமி இரவுக்குப் பிறகு போகவே இல்லையோ? எங்கே போயிருப்பான்? குறைந்தபட்சம் என்னிடம் “பெளர்ணமி இரவில் அவன் நிஷாகந்திப்பூவைத் தெடிச்செல்வான்” என்ற ஒரு தகவல் மட்டும் இருந்ததே. அதைச்சொல்லியிருக்கலாமோ என்று யோசித்தேன். வேண்டாம், அது என் முதலுக்கே மோசமாகியிருக்கும் என தவிர்த்தேன்.

அதேகணத்தில் ஆழ்மனதில் இருந்த ஒரு விஷயம் திடீரென நினைவுக்கு வந்தது. போஜன் என்கி|ற தாவரவியல் ஆசிரியரின் நினைவு. மஞ்சூர் பள்ளியில் வேலை பார்த்து – தஞ்சாவூரில் ஏதோ பள்ளியில் தலைமையாசிரியராய் ஓய்வு பெற்று இப்போது மீண்டும் திரும்பி வந்திருக்கிறார். அப்பாவின் நண்பராதலால் என் தாவரங்கள் மலர்கள் பற்றிய கேள்விகளை பலமுறை கேட்டு விடை பெற்றிருக்கிறேன். அவரிடன் சென்றால் இந்த நிஷாகந்திக்கு விடை கிடைக்கலாமோ என்று எண்ணினேன். டியூஷன் விட்டவுடன் அவர் வீட்டுக்குப்போனேன்.

”வாடா சிவராமகிருஷ்ணா” என்றார்.

வெற்றிலை போட்டு குதப்பிய உதடுகள், வெளீரென்ற திருநீற்றுப்பட்டை – நடுவில் குங்குமப்பொட்டு. படுக மொழி ஆசிரியர்களிலேயே அவருக்கு மட்டும் வித்தியாசமான தோற்றம் – மொழி உண்டு. தமிழ் அக்ஷர சுத்தமாக இருக்கும். எப்போதும் வாயில் சங்கீதம் உருளும். ஜாலியான மனிதர்.

”எங்கடா இவ்ளோ தூரம். எல்லா சிலபசையும் முடிச்சுட்டியா”

“இல்லை சார். படிக்கிறேன்.

“பத்தாவது மாதிரி 401, 501 ன்னு மொய் வைக்கற மாதிரில்லாம் மார்க் வாங்கக்கூடாது. நல்லா படி”

“சரி சார் ஒரு டவுட் கேக்கணும். நிஷாகந்தி அப்படின்னு ஏதாச்சும் பூ இருக்கா சார். நான் பொட்டானிகல் டைரக்ட்ரில போய் தேடிப்பார்த்தேன். அப்படி எதுவும் இல்லை. அதான் உங்ககிட்ட கேக்கலாம்னு வந்தேன்”

“நிஷாகந்தி நீ யத்ர தன்யே….” என்று ஏதோ ஒரு சம்ஸ்கிருத செய்யுளைப் பாடினார். பிறகு சொன்னார்.

”நிஷாகந்தின்னு தேடினா எப்படி இருக்கும். அது மலையாளப்பேருன்னா. அதோட பேரு “டச்மேன்’ஸ் பைப்” (Dutchman’s pipe) பொட்டானிகல் நேம் – எபிஃபைலம் ஆக்ஸிபெட்டலம் (Ephiphyllum Oxypetalum)” என்றார். (ஆக்ஸிபெட்டலம் என்பதை கடலப்பொட்டலம் என்பதுபோலதான் உச்சரிப்பார்).

சற்றே தள்ளியிருந்த ஒரு மேசையில் இழுப்பறையைத் திறந்து அaந்த பெரிய புத்தகத்தின் பொருளடக்கத்தில் தேடி ஒரு பக்கத்தைத் திறந்து காட்டினார். அதே கடினம் குறைந்த கள்ளிச்செடியின் இலைகள். இலைகளிலிருந்தே வளர்ந்திருந்த பூ. வெள்ளை நிறம். மூன்றடுக்குகள். செம்பருத்தி பூ போல நடுவிலிருந்து நீட்டிக்கொண்டிருக்கும் மெல்லிய தண்டு.

”இதைப்பார்த்தீன்னா இலைலேர்ந்து மொட்டு விட்டு நீண்டு – இந்த தண்டு வளைஞ்சு பூ பூக்கும். இது ஒரு மாதிரி பெருமாள் படுத்துருக்குற மாதிரி இருக்கறாதால ’அனந்த சயனப்பூ’ ன்னும் சொல்லுவா. சரியான மணம் இருக்கும். பூத்துச்சுன்னா சும்மா சுத்துவட்டாரத்துல ஒரு பயலும் தூங்க முடியாது. என்ன மணம்னு தேட வச்சுரும்.”

மகேஷ் அண்ணா பொய் சொல்லவில்லை என்று மனதுக்குள் சொல்லிக்கொண்டேன். இன்னொரு தகவலையும் உறுதிப்படுத்திக்கொள்ளவேண்டும்

”இது ராத்திரிமட்டுந்தான் பூக்குமா சார்?”

“ஆமா. ராத்திரி மட்டும்தான். நடுராத்திரி பூத்து காலைல வாடிடும். அதுவுமில்லாம தினமும் பூக்காது. அதுக்கு தோணுறப்ப பூக்கும். வருஷத்துக்கு ஒரு தடவை ரெண்டு தடவை பூத்துட்டா பெரிய விஷயம்”

அவரிடம் விடைபெற்றுவரும் நேரம் முழுக்க மனது பாரமாக இருந்தது. மிகப்பெரிய வெறுமை தோன்றியது. மகேஷ் அண்ணா என்னிடம் என்ன சொல்ல எத்தனித்தான் என்று தெரியவில்லை. அந்த இரவுக்குப் பிறகு தவறான தகவல்கள் சொல்லி என்னை ஏமாற்றிவிட்டான் என்ற முடிவுக்கே வந்திருந்தேன். இப்போது இதனை தெரிந்துகொண்ட மனது சற்று பாரமாகத்தான் போய்விட்டது. ஆனால் ஒன்றும் செய்யமுடியாது. அவனாகத் திரும்பி வரும்போதுதான் பேசமுடியும். கண்டிப்பாக வருவான் என்று நினைத்துக்கொண்டேன். அவனைப்பார்க்க வேண்டுமென்ற உந்துதல் முன்னைவிட இப்போது அதிகமாயிற்று. ஆனால் சொன்னேனல்லவா. அவன் காற்றைப்போன்றவன் – பிடிக்க இயலாது. ஆனால் திரும்பவும் அவனை சந்திக்கும் நாளை எண்ணிக்காத்திருக்க ஆரம்பித்தேன்.

6. எழுதிச்செல்லும் விதியின் கைகள்…

அதன்பின்னர், இரண்டு நாட்கள் கூட முடியவில்லை. மறுநாள் நள்ளிரவில் குருநாதன் மாமா வீட்டிற்கு வந்திருந்தார். நள்ளிரவில் கதவு தட்டப்படும் எந்த வீட்டிலும் நல்ல செய்தி சொல்லப்பட்டதில்லை.

“அப்பா இருக்காரா கண்ணு?”

இருக்காரு மாமா.

அப்பாவை வெளியில் கூட்டிச்சென்று 10 நிமிடங்கள் ஏதோ பேசினார். திரும்பி வந்த அப்பா ”நாம கொஞ்சம் வெளில போயிட்டு வந்துரலாம்ப்பா” என்றார்.

“எங்கப்பா போறோம்?”

“சொல்றேம்ப்பா”

கண்டிப்பாக நல்லவிஷயம் இல்லை. அடிவயிற்றில் அதற்கான சமிஞ்சைகள் தொடங்கியிருந்தன. அந்தக்குளிரவில் கதவை ஏற்றிவிட்டும் அந்த ஜீப்பிற்குள் கூதற்காற்று அடித்துக்கொண்டிருந்தது. 2 அல்லது 3 மணி ஆகியிருக்கலாம். யாரும்

வாட்ச் கட்டிக்கொள்ளவில்லை. ஜீப் கண்ணாடி வழியாகப்பார்த்தபோதுதான் அன்று பெளர்ணமி என்று தெரிந்தது. கடந்த பெளர்ணமியின் ஞாபகம் பலமாகத்தாக்கியது

குந்தாபாலம் அருகே, மூன்று ஜீப், ஒரு ஆம்புலன்ஸ், ஹெட்லைட் மிஸ்ட்லைட் ஆன் செய்யப்பட்டு நிறுத்தப்பட்டிருந்தது. சிவன் கோவில் இதற்குமுன் அவ்வளவு ஒளி வெள்ளத்தில் மிதந்தது அதன் கும்பாபிஷேக சமயத்தில்தான். குருநாதன் மாமா பாலத்தின் நடுவிலேயே வண்டியை நிறுத்தினார். மப்ளரை இறுக்கமாக தலையைச்சுற்றி கட்டியபடி போலீஸ்காரகள் நின்றிருந்தார்கள். என்கையை இறுக்கமாகப் பற்றிக்கொண்டார் குருநாதன் மாமா.

”ஹரிதாஸு, அந்த நோட்டைக்கொடு” என்றார்

போலீஸ் யூனிபார்மில் இருந்த ஹரிதாஸ் மாமா, “கிட்டப்போகவேணாம், தூர நின்னுப்பாத்தாலே போதும் என்றார். குருநாதன் மாமா கையில் அந்த நோட்டைக்கொடுத்தார்.

அப்பா என் இட்து தோளையும் , குருநாதன் மாமா வலது கையை அழுத்தமாக பிடித்துக்கொண்டிருந்தனர். மெதுவாக நாங்கள் சிவன்கோவில் நோக்கி நடந்துகொண்டிருந்தோம்

“என்னப்பா ஆச்சு”

”நம்ம மகேஷ் தண்ணில விழுந்துட்டானாம்ப்பா” என்று மெதுவாக ஆரம்பித்தார்.

என் கையின் இறுக்கத்தை அதிகப்படுத்தி “மகேஷ் இனிமே இல்லப்பா” என்று கம்மிய குரலில் குருநாதன் மாமா சொன்னார்.

என் காதுகளின் கீழே வெப்பம் பாய்ந்து கழுத்து வழி தோள்களில் இறங்கி, உடலை உலுக்கியது. அந்த ஹெட்லைட் வெளிச்சத்தில் மகேஷ் அண்ணாவை நீரிலிருந்து இறக்கி ஒரு ஸ்ட்ரெச்சரில்

போர்த்தி வைத்திருந்தனர், கால்கள் மடங்கியிருந்தது. கண்கள் மூடியிருந்தது.

“என்னாச்சு” என்ற என் குரல் தொண்டையிலிருந்து கூட வெளியே வரவில்லை. என் கண்ணின் அத்தனை கண்ணீரும் வெளியிலிருந்து வந்துவிட்டதோ என்று எண்ணுமளவு வழிந்துகொண்டிருந்தது

சென்ற பெளர்ணமியன்று என் தோளில் மேல் அவன் வைத்திருந்த கையின் சூடும், அழுத்தமும், இப்போது வரை உணரமுடிகிறது. கன்னடம் சேர்ந்து ஒலிக்கும் அவன் தமிழ் வார்த்தைகள் இப்போது வரை காதில் கேட்கிறது. ஆனால் அவன் இல்லை. கிட்ட நெருங்கிப்போக முயன்றேன். குருநாதன் மாமா அழுத்தமாக என் தோள்களைப்பிடித்துக்கொண்டார். ”இது போதும் கண்ணு.”

விடியறதுக்கு முன்னாடி புதைச்சுறலாம்னு இருக்கோம். போறதுக்கு முன்னாடி அவன் உன்னைப் பார்க்கணும்னு சொல்லிருக்கான். அதான் கூட்டிட்டு வந்தேன்.

ஜீப்பின் உள்ளொளிக்குக்கொண்டுபோய் அந்த நோட்டைப் பிரித்தார். நிறைய கிறுக்கல்கள். சிறிய சிறிய பூ படங்கள், விதவிதமான கட்டங்கள் என் அந்த நோட்டில் எழுத்துகளை விட வடிவங்களே அதிகம் தெரிந்தன. கடைசி பக்கத்தில் திருப்பினார். இரண்டு வரிகள் எழுத்தப்பட்டிருந்தது. அதன் கீழே நான்கு பெயர்கள். கண்களை நன்றாக கசக்கிக்கொண்டு படிக்க ஆரம்பித்தேன்.

வெய்யில்வரும் முன் என்னைப்புதைத்துவிடவும்.

புதைக்கும்முன் நான்குபேர் என்னை பார்க்கவேண்டும்.

1.அப்பா 2. குருநாதன்மாமா 3. தேனாடுஅத்தை 4.சிவராமன்

மற்ற மூன்று பேரும் அவனுக்கு நெருக்கமான உறவினர்கள். என்னை ஏன் சேர்த்தான் என்று தெரியவில்லை. அவ்வளவு நெருக்கமாகவா என்னை வைத்திருந்தான்? எதையும் நினைத்துப்பார்க்கத் தோன்றவில்லை. முடியவில்லை. கடும் அயற்சியாக இருந்தது. என்ன சொல்லியும் கண்ணீரைக்கட்டுப்படுத்தமுடியவில்லை. ஜீப்பிற்குள் வந்து அமர்ந்தேன்.

ஒரு மருத்துவமனைப்பணியாளர் பெயர் தெரியாத கான்ஸ்டபிளிடம் பேசிக்கொண்டிருந்தார்.

“தண்ணிலேர்ந்து எடுக்கும்போது சம்மணம் போட்டு உக்கார்ந்துருந்த பொசிஷன்லயே செத்துருந்தான் சார்”

”அவன் ஒரு செமி. அவனாதான் தற்கொலை பண்ணிட்டான்னு” அவங்க அப்பா சொல்றாரு., ஆனா உக்கார்ந்த பொசிஷன்லயே செத்துருக்கறதால யாரோ தண்ணிக்குள்ள அமுத்துன மாதிரியும் இருக்குது. கேஸ் போட்டு போஸ்ட்மார்ட்டம் பண்ணலாம்னு நினைச்சோம். ஆனா அவங்க போஸ்ட்மார்ட்டம் எல்லாம் வேணாம், கேஸை முடிச்சிருங்கன்னுட்டாங்க. அதுனால கேஸ் எழுதல. பாடியை வாங்கிகிட்டாங்க.”

எந்த உணர்வும் தோன்றவில்லை. அந்த உரையாடலே யாரோ பேசுவது போல கேட்டுக்கொண்டிருந்தது

அப்போதுதான் அதை உணர்ந்தேன். என் சட்டை மேல் கமழ்ந்த மணம். மல்லிகை மணம். இல்லை அது மல்லிகையல்ல, அன்னாசி? அல்ல. ஊதுபத்தி அல்ல, தண்ணீர்ப்பாசி அல்ல, சந்திரிகா சோப் அல்ல வேறு ஏதோ ஒன்று இவையெல்லாம் கலந்த ஒன்று. என் சட்டையில் மட்டுமல்ல, என்னைச்சுற்றிலும் இருக்கிறது – என்னைச்சுற்றி மட்டுமல்ல, இந்த ஜீப்பில் இருக்கிறது. ஜீப்பில் மட்டுமல்ல

குந்தாபாலத்திலிருந்தே என்னைத்தொடர்கிறது. அடிவயிற்றில் உடனே எழுந்தது அந்த ஆரவாரப்பந்து. ஜிப்பிலிருந்து வெளியேறிக்குதிதோடினேன்.

இருளில் நிற்கும் ஒட்டகச்சிவிங்கிகள் போன்ற குத்துப்பாறைகளை நோக்கி – அதன் கால்களில் ஒரு பெரிய விளக்குப்போட்டது போல பூத்திருந்தது ஒரு கையகல நிஷாகந்திப்பூ.

நான் பூவைப்பார்த்த அதே கணத்தில் காற்றைக்கிழித்துக்கொண்டு கேட்டது தேனாடு அத்தையின் அழுகுரல் “அந்தப்பாவி யட்சி உன்னையும் கொண்டுட்டாளே மகேசு ………..”.

 

 

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *