Saturday, February 24, 2018

.
Breaking News

கிரகப்போர் 10 } காசியரின் பேரன்.

கிரகப்போர் 10 } காசியரின் பேரன்.

நண்டு முகமுடைய மனிதர்கள் தமது கிரகத்தில் உள்ளவற்றைக் காட்டுவதற்காக அழைத்துச் செல்கிறார்கள்.

பெரும் கூடாரம் போன்று இருந்த அந்த இடத்தை விட்டு சாமியையும் சந்தரியையும் வெளியே அழைத்து வந்த இரண்டு நண்டு மனிதர்கள் ஒரு வாகனத்தில் ஏற்றினர்.

வாகனத்துக்கு சில்லுகளோ வாகனம் போவதற்கான வீதியோ இல்லை. அவர்கள் ஏறி அமர்ந்தும் தரையயை விட்டு அரை மீற்றர் உயரத்திற்கு மேலே எழுந்த வாகனம் மெதுவாகப் போகத் தொடங்கியது.

நீங்கள் இந்தக் கிரகத்தில் உள்ள சில இடங்களைப் பார்க்கப் போகிறீர்கள். வேகமாகப் போனால் நீங்கள் போகும் பாதையில் உள்ள நாற்புற இடங்களையும் உங்கள் கண்களால் உள்வாங்க முடியாது. இன்னமும் நீங்கள் இருவரும் பூமியில் உள்ள மனித உடலுக்குரிய நிலையிலேயே இருக்கின்றீர்கள் வெகுவிரைவில் நீங்ககள் போகவிருக்கின்ற கிரகங்களின் சூழ்நிலைக்கேற்ப உங்கள் உடலில் மாற்றங்களை ஏற்படுத்துவோம் என்றனர்.

சாமியும் சுந்தரியும் அண்ணாந்து பார்த்தார்கள் மஞ்சள் நிறத்திலேயே மேகக்கூட்டங்கள் இருந்தன. சில இடங்களில் மேகக்கூட்டங்கள் வானத்தில் நிலைகுத்தி நின்றன. சில மேகக்கூட்டங்கள் நகர்ந்து கொண்டிருந்தன. சில மேகங்கள் தரைக்கு அண்மையில் இருந்தன.

அவர்கள் பயணம் செய்து கொண்டிருக்கும் இருபுறமும் உள்ள தரையின் பெரும்பகுதி பொன்னிறத்தில் இருந்தது. சில இடங்களில் மட்டும் பூமியில் உள்ளது போல செம்மண்ணும் வெள்ளித்தூள்கள் கலந்தது போன்ற தரையும் இருந்தது.

பெரிய மரங்களைக் காணமுடியவில்லை. இரண்டு மீற்றர் உயரமான மரங்களே இருந்தன.இலைகள் யாவும் மஞ்சள் நிறத்தில் இருந்தன. போகும் போது மழை பெய்தது. ஆனால் பெய்ததற்கான அடையாளத்தை தரையில் காண முடியவில்லை. வேகமாக மழைத் தண்ணீரை தரை இழுத்துக் கொண்டதால் காய்ந்த நிலம் போலிருந்தது.பொன்னிறமாக இருந்த தரையைக் காட்டி இந்தத் தரை தங்கத்தால் ஆனது. பூமியில் பெறுமதியாகவிருக்கும் தங்கம் இங்கு தரையாகவே இருக்கின்றது என்றார் நண்டு மனிதர்களில் ஒருவர்.

போகும் வழியெங்கும் வீடுகளையே காண முடியவில்லை. ஆனால் வட்டவடிவமான கூடாரம் போன்ற கட்டடிடங்களையே காண முடிந்தது.

அவர்கள் சென்ற வாகனம் ஒரு வட்டவடிவமான கட்டிடத்தின் முன்னால் நின்றது. கதவுகள் மெதுவாகத் திறந்தது. நண்டு மனிதர்கள் சாமியையும் சந்தரியையும் அழைத்துக் கொண்டு உள்ளே நுழைந்தார்கள்.மிகவும் சுகந்தமான காற்று வீசிக் கொண்டிருந்தது.

அங்கும் நண்டு மனிதர்கள் இருந்தார்கள்.அவர்கள் அனிந்திருந்த உடைகள் வித்தியாசமாக இருந்தன.

பூமியில் மனிதர்கள் ஆண் பெண் என இரு பிரிவாக இருக்கின்றனர். மாங்கதிர் கிரகத்திலும் பூமியில் உள்ளவர்கள் போலவே ஆண் பெண் இரு பிரிவினர் மட்டமல்ல கிட்டத்தட்ட பூமியில் உள்ளவர்கள் போலவே உடையும் உடுத்துகிறார்கள் தமிழையும் பேசுகிறார்கள்.

ஆனால் யானை முகம் கொண்ட மனிதர்கள் வசிக்கும் அங்கினக்கா கிரகத்திலும் நண்டு முக மனிதர்கள் வசிக்கும் நண்டுசா கிரகத்திலும் ஆண் பெண் வித்தியாசத்தைக் காண முடியவில்லை.

இவர்கள் ஆண்களா பெண்களா என சாமியாலும் சுந்தரியாலும் அறிய முடியவில்லை.

பூமியில் உள்ளது போல அங்கினக்கா கிரகத்திலும் இங்கும் ஆண் பெண் என்ற இரு பிரிவுகள் இல்லை.எமக்கு இறப்பு என்பது இல்லை.ஆனால் பிறப்பு உண்டு. எமது உடலிலிருந்து பிறப்பு தொடர்வதில்லை. இக்கிரகத்தில் ஒரு மலை போன்ற ஒரு இடம் இருக்கின்றது. அங்கு ஒரு குகை உண்டு. அக்குகை;குள் எமக்கெல்லாம் ஒரு தலைமை நண்டு மனிதர் இருக்கிறார்.அவர் எமக்கு அரசன் போன்றவர்.அவர் உடம்பிலிருந்து ஒருவகையான திரவகம் நூறு ஆண்டுக்கொருமுறை வெளிப்படும்.

அத்திரவகத்தை ஒரு பானையில் இட்டு அக்குகையுள்ள சஞ்சீவி மூலிகைச் செடி இலைகளின் சாறுகளைப் பிழிந்து விட்டு விடுவார்கள்.இரண்டு நாட்களில் இத்திரவகத்திலிருந்து நூறு நண்டு மனிதர்கள் பிறப்பார்கள்.

இத்திரவகந்தான் பூமியில் உள்ள ஆண்களுக்கு விந்தணுவாகவும் பெண்களுக்கு சினை முட்டையாகவும் உருவாக்கப்பட்டுள்ளது என நண்டு மனிதர்களின் ஒருவன் விளக்கினான்.

பூமியில் மனிதர்கள் தானாக உருவாகவில்லை. நீங்கள் முதன்முதலாக வந்து இறங்கிய மாங்கதிர் கிரக மனிதர்கள், அடுத்து நீங்கள் சென்ற பார்த்த அங்கினக்கா கிரக யானை முக மனிதர்கள் நாங்கள் அனைவரும் இணைந்து எமது சக்தியினாலேயே இங்கு மனிதர்களை உருவாக்கி பூமியில் கொண்டு போய்ச் சேர்த்தோம்.

பூமியில் மனிதர்கள் மகிழ்ச்சியாக வாழ வேண்டிய அத்தனை வசதிகளையும் உருவாக்கிக் கொடுத்தோம். அங்குள்ளவர்கள் விஞ்ஞானம் என்ற பெயரில் தேவையற்ற பல ஆபத்தான கண்டுபிடிப்புகளைச் செய்கிறார்கள். இவற்றையெல்லாம் தமது மூளைத்திறன் கொண்டு செய்வதாக அவர்கள் நினைக்கிறார்கள். அப்படி எதுவும் இல்லை. இந்த மூன்று கிரகங்களிலிருந்தும் கண்டுபிடிப்புளை காந்த அலைகளாக அங்குள்ள விஞ்ஞானிகளின் மூளைக்குள் செலுத்திவிடுகிறோம் அவர்கள் தாங்களே அதற்கு உரிமை கொண்டாடுகிறார்கள்.

பூமியிலுள்ள அத்தனை மனிதர்களின் விபரங்களும் இக்கட்டிடத்திலிருக்கின்றது. உங்களுடைய விபரமும் இங்குண்டு. மூன்று கிரகங்களிலும் அனைத்து விபரமும் உண்டு.உங்களை நாங்கள் தேர்வு செய்து

அழைத்தற்குக் காரணம் உண்டு.அங்குள்ளவர்களில் நீங்கள் இருவரும் நல்லவர்களாக இருந்தீர்கள் அதுதான் காரணம் என்று சொன்ன நண்டு மனிதன் ஒரு கருவியின் முன்னால் உட்கார்ந்து அதில் கையை வைத்தான். ஒரு திரை உருவாகியது . அதில் சாமியும் சுந்தரியும் பிறந்ததிலிருந்து இங்கு வரும் வரை நடந்த சம்பவங்கள் அனைத்தும் காட்சிகளாக விரிந்தன.

அவர்கள் இருவரும் ஏற்கனவே தேர்வு செய்யப்பட்ட உயிர்கள் என்பதை சாமியின் தந்தை தாயின் உடலுக்குள்ளும் சுந்தரியின் தந்தை தாய் உடலுக்னுகுள்ளும் கோடு போன்ற ஒளிக்கதிர் பாயச்சப்படுவதும் அத்திரையில் தெரிந்தது.

பூமியில் காணாமல் போவோரை எங்கு தேடியும் கிடைக்காமல் போவதுண்டு அவர்கள் மாங்கதிர் கிரகத்தின் கட்டுப்பாhட்டில் இருக்கும் 15,000 கிரகங்களிலும் இருக்கிறார்கள் என நண்டு மனிதன் சொன்னான்.

அந்த வட்ட வடிவமான கட்டிடத்தின் உள்ளே பல நண்டு மனிதர்கள் அமைதியாக ஒரு இடத்தில் தரையில் உட்கார்ந்திருந்தார்கள். அவர்கள் உணவு உண்ணும் நேரம் இது.ஆனால் உணவு எதுவுமே அவர்கள் முன்னால் இல்லை. தாங்கள் உணவை எவ்வாறு பெறுகிறோம் என நண்டு மனிதன் விளக்கத் தொடங்கினான்.

(தொடரும்)

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *