Friday, February 23, 2018

.
Breaking News

கோலாலம்பூரில் கொண்டாடிய பொங்கல்.! … } .. v சோ.சுப்புராஜ் ….சென்னை.

கோலாலம்பூரில் கொண்டாடிய பொங்கல்.! … } .. v சோ.சுப்புராஜ் ….சென்னை.

1996ம் வருஷம் ஆர்ப்பாட்டமில்லாமல் தொடங்கியிருந்தது. சுப்ரமணியன் அப்போது மலேசியாவில் வேலையிலிருந்தான்.

சில நாட்களுக்கு முன்னால் தான் மனைவியையும் ஸ்பௌஸ் விசாவில் கோலாலம்பூருக்கு வரவழைத்து இருவரும் தேஜா பெட்டாலிங்கில் ஒரு அபார்ட்மெண்ட்டில் தங்கியிருந்தார்கள்.

அன்றைக்கு சுப்ரமணியனுக்கு மிகுந்த எரிச்சலும் சுய பச்சாதாபமும் மேலிட்டது. வழக்கம் போல் மனைவியுடனான சண்டை. “உங்களையெல்லாம் இந்த ஜென்மத்துல திருத்தவே முடியாது….” என்கிற முத்தாய்ப்புடன் படுக்கையில் போய் விழுந்து அழத் தொடங்கி விட்டாள்.

மறுநாள் தைப்பொங்கல். காலையில் சுப்ரமணியன் வேலைக்குக் கிளம்பும் போதே சாயங்காலம் வேலை முடிந்து வரும்போது மறக்காமல் சர்க்கரைப் பொங்கல் சமைப்பதற்காக நாட்டுச் சர்க்கரை வாங்கி வரச் சொல்லியிருந்தாள்.

வேலை மும்முரத்தில் அவன் மறந்தாலும் மறந்து விடுவான் என்று சுப்ரமணியன் அலுவலகத்தில் இருந்த போதும் ஒருமுறை அவனுக்குப் போன் பண்ணி ஞாபகப் படுத்தியிருந்தாள்.

அலுவலகத்தில் அவனுடன் வேலை பார்க்கும் மலேசியத் தமிழர் கனகுவிடம் நாட்டுச் சர்க்கரை எங்கே கிடைக்கும்? என்று விசாரித்து அது கோலாலம்பூரில் லெபோ அம்பாங்கில் உள்ள ஒரு தமிழர் நடத்தும் பலசரக்குக் கடையில் கிடைக்கும் என்பதையும் தெரிந்து வைத்திருந்தான்.

ஆனால் அவர்களின் எம்.டி. லியோசிங் இந்தியர்களுக்கு மட்டும் நாளைக்கு விடுமுறை என்று அறிவித்து அவர்களுக்கெல்லாம் ஒரு பார்ட்டி கொடுக்க வேண்டுமென்று எல்லோரையும் விசேஷமான லன்ச்சுக்கு ரொம்ப தூரத்திலிருந்த ரெஸ்டாரெண்டுக்கு அழைத்துப் போயிருந்தார்.

இரண்டு மணிக்கு மேல் தான் கிளம்பினார்கள். அப்புறமும் பொங்கல் பண்டிகை பற்றியும் அதன் முக்கியத்துவம் பற்றியும் அது எப்படிக் கொண்டாடப் படுகிறது என்பது பற்றியும் ஆளாளுக்கு வரிந்து கட்டிக் கொண்டு அவருக்கு விவரித்துக் கொண்டிருந்ததில் லன்ச் முடிந்து அலுவலகத்திற்குத் திரும்பி, முடிக்க வேண்டிய அவசரவேலைகள் சிலவற்றையும் முடித்துக் கிளம்பியதில் மிகவும் காலதாமதமாகி விட்டது.

இவ்வளவு நேரத்திற்கப்புறம் நாட்டுச் சர்க்கரை வாங்குவதற்காக அவ்வளவு தூரம் போக வேண்டுமா என்கிற அலுப்பில் பக்கத்திலிருந்த சூப்பர் மார்க்கெட்டிற்குள் போய் விசாரித்து, அங்கிருந்த சேல்ஸ்மேன் ’மலாக்கா சர்க்கரை’ என்று கட்டிக் கொடுத்ததை வாங்கிக் கொண்டு வந்து விட்டான்.

சுப்ரமணியன் வீட்டிற்குள் நுழைந்ததுமே ”சர்க்கரை வாங்கியாந்தீங்களா, இல்லை மறந்துட்டீங்களா?”என்று தான் விசாரித்தாள் மனைவி. சுப்ரமணியன் வெற்றிக் களிப்புடன் அவன் வாங்கிப் போயிருந்த பொட்டலத்தை எடுத்துக் கொடுக்கவும் அவளும் ஆர்வமாகப் பிரித்துப் பார்த்தாள்.

தலையில் அடித்துக்கொண்டு ”நாட்டுச் சர்க்கரை வாங்கியாறச் சொன்னா கருப்பட்டிய வாங்கீட்டு வந்துருக்கீங்களே! உங்களையெல்லாம் என்னத்தப் பண்ணித் தொலைக்கிறது? நாளும் கெழமையுமா வீட்டுல நல்லது ஏதாவது பண்ணனும்னு நெனைச்சா, இப்படி என் நெனைப்புல மண்ண

அள்ளிப் போட்டுட்டு நிக்கிறீங்களே….!” என்று பொரியத் தொடங்கினாள் மனைவி.

”ஏன் இதை வச்சுப் பொங்கல் பண்ணுனா இனிக்காதா? இல்ல பொங்கல் தான் பொங்காதா? வேணுமின்னா கருப்பட்டிய தூளா உடைச்சுப் போட்டுக்க. வெளிநாட்டுல பொழைக்க வந்த இடத்துல நாட்டுச் சர்க்கரைய நான் எங்க போய்த் தேடி வாங்குறது? கிடைக்கிறத வச்சுத்தான் சமாளிச்சுக்கனும்….” சுப்ரமணியனும் பதிலுக்குக் கத்தத் தொடங்கவும் மனைவி ஆங்காரமாகி பொங்கலை விடவும் அதீதமாகப் பொங்கினாள்.

”சொன்ன பொருளை சரியா விசாரிச்சு வாங்கிட்டு வரத் துப்பில்ல; இதுல கோபம் மட்டும் குறைச்சலில்லாம வந்துடுது உங்களுக்கு! எத்தனை வருஷமா பொங்கல் தின்னுறீங்க. கருப்பட்டியில யாராச்சும் பொங்கல் பண்ணுவாங்களா? தெரியாதுன்னு சொல்லித் தொலைச்சிருந்தா நானாவது கோலாலம்பூருக்குப் போய் விசாரிச்சு வாங்கியாந்திருப்பேன். எனக்குன்னு வந்து வாச்சிருக்கீங்களே…..” சொல்லிக் கொண்டிருக்கும் போதே அவளின் கண்களிலிருந்து தாரைதாரையாக கண்ணீர் கொட்டத் தொடங்கி விட்டது. எப்போதுமே அவள் அப்படித் தான். சின்ன விஷயத்திற்கும் பொசுக்கென்று அழுது விடுவாள். கண்ணீரை கண் இமைகளுக்குள்ளேயே தேக்கி வைத்திருப்பாளோ என்னவோ!

நாளைய பொங்கலை வரவேற்பதற்கான எளிமையான ஆயுத்தங்கள் வீட்டில் தெரிந்தன. வீடு கழுவி விடப்பட்டு பொருட்கள் எல்லாம் சுத்தமாக துடைத்து அதனதன் இடத்தில் அடுக்கி வைக்கப் பட்டிருந்தன. நடுஹாலில் வெள்ளையும் சிவப்பும் கலந்து பெரிதாய் கோலம் போட்டிருந்தாள். அதன்மீது வைத்துத் தான் நாளைக்கு எலக்ட்ரிக் ஸ்டவ்வில் பொங்கல் வைப்பாளாக இருக்கும்.

பொங்கல் சமைப்பதற்காக புதுப்பானை இல்லாவிட்டாலும் இருப்பதிலேயே அதிகம் பயன்படுத்தியிராத பித்தளைப் பாத்திரம் பளபளவென்று விளக்கி வைக்கப்பட்டிருந்தது. ஊரிலிருந்து போதுமான புதிய பச்சரிசியையும் கொண்டு வந்திருந்தாள். பிளாஸ்டிக் மாவிலைகள் கூட தோரணம் கட்டப்படுவதற்கு தயாராய் காத்திருந்தன.

டிசம்பர் முதல் வாரத்தில் தான் மனைவி ஊரிலிருந்து மலேசியாவிற்குக் கிளம்பி வந்திருந்தாள் என்பதால் சில நாட்களில் வரப் போகிற தைப்பொங்கலை மலேசியாவில் கொண்டாடுவதற்கு அவள் தயாராகவே வந்திருந்தாள். எல்லாவற்றையும் ஊரிலிருந்து கொண்டு வந்தவள், கொஞ்சம் நாட்டுச் சர்க்கரையையும் அங்கிருந்தே கொண்டு வந்திருக்கலாம். ஆனால் ஏனோ அதை மட்டும் எடுத்து வர மறந்து போய் விட்டிருந்தாள். அது வீட்டில் பிரச்னையாக வெடித்துக் கொண்டிருக்கிறது.

சுப்ரமணியனுக்கு மனைவியின் மீது இலேசான இரக்கம் சுரந்தது. கொஞ்சம் சிரமம் பார்க்காமல் அவள் சொன்னபடி நாட்டுச் சர்க்கரையையே தேடிப்போய் வாங்கி வந்திருக்கலாம் என்று அவனுக்கு தன் மேலேயே கோபம் வந்தது. பிழைக்க வந்த இடத்தில் பண்டிகைகளை முழு வீச்சில் கொண்டாட முடியவில்லை என்றாலும் ஓரளவிற்காவது கொண்டாடலாமே….!

மனைவியின் ஆசையைக் கெடுக்க விரும்பவில்லை. சுப்ரமணியன் மணி பார்த்தான். இரவு எட்டு மணி கூட ஆகியிருக்கவில்லை. கோலாலம்பூருக்குப் போய் லெபோ அபாங்கில் எப்படியாவது நாட்டுச் சர்க்கரையைத் தேடி வாங்கி வந்து விடுவதென்று தீர்மானித்து கிளம்பினான்.

மனைவியிடம் சொன்னபோது கண்ணீரைத் துடைத்துக் கொண்டு “நாட்டுச் சர்க்கரை மஞ்சள் கலருல கட்டிகட்டியா இருக்கும். ஒருவேளை அது கிடைக்கலைன்னா பனங்கற்கண்டு கிடைச்சாலும் வாங்கிட்டு வாங்க. அது ப்ரௌன் கலர்ல மணல் மாதிரி உதிரி உதிரியா இருக்கும்….”என்று அங்க அடையாளங்கள் எல்லாம் சொல்லி சந்தோஷமாக அனுப்பி வைத்தாள்.

பஸ்ஸுக்காகக் காத்திருந்த போது சுப்ரமணியனுக்கு அவனுடைய சின்னவயதுப் பொங்கல் பண்டிகைகள் ஞாபகத்திற்கு வந்தன. கிராமத்தில் எல்லாம் பண்டிகை தினங்களில் மட்டுமே பலகாரங்களும்

அரிசிச்சோறும் கிடைக்கும்.

போகிப் பண்டிகை இரவில் அங்கங்கே தீ மூட்டி கிராமத்தினர் பழசுகளையும் உபயோயமற்ற பொருட்களையும் அதில் போட்டு எரித்துக் கொண்டிருக்க, எரிப்பதற்கு ஏதுமில்லாதவர்கள் தீயைச் சுற்றி உட்கார்ந்து கொண்டு அவர்களை வேடிக்கை பார்ப்பதோடு மார்கழி மாதத்தில் அதீதமாகக் குளிரும் என்பதால் அந்த வெப்பத்தில் குளிர் காய்ந்தும் கொண்டிருப்பார்கள்.

சுப்ரமணி சேக்காளிகளுடன் கபடியோ கள்ளன் போலீசோ விளையாடுவான். விளையாட்டு வேடிக்கைகளெல்லாம் ஓய்ந்து நீண்ட நேரத்திற்கப்புறம் தான் வீட்டிற்குப் போய் படுத்துக் கொள்வான். ஆனாலும் அடுத்தநாள் அதிகாலையில் அம்மா தோசைக்குக் கல்லில் மாவு ஊற்றுகிற சுரீர் சத்தத்தில் விழித்துக் கொள்வான். அம்மா சுடுகிற முதல் தோசை இவனுடைய பாய்க்குத் தான் வரும்.

பல் விளக்காமல் பாதித் தூக்கத்தில் சுடச்சுட தோசைகளைப் பிட்டுத் தின்பது அவ்வளவு சந்தோஷமாக இருக்கும். சாப்பிட்டு முடித்ததும், தனித்தனியாகப் பிரித்து முடி போட்டு அம்மா தருகிற காப்புகளை வாங்கிக் கொண்டு காளி கோயில், பிள்ளையார் கோயில், முனியாண்டி கோயில் என்று ஒவ்வொரு கோயிலாகப் போய்க் கட்டிவிட்டு வருவான்.

அப்புறம் சோளத்தட்டையின் நுனிமடக்கிக் காரோட்டியபடி – தன்னுடைய சோளத்தட்டை காருக்கும் குட்டியூண்டு குஞ்சம் வைத்தது போல் காப்புக்கட்டிக் கொள்வான் – கழனிகளுக்கும் மாட்டுத் தொழுவத்திற்கும் போய்க் காப்புக்கட்டிவிட்டு, கண்மாயில் விழுந்து குளித்துவிட்டு வீட்டிற்குப் போவான்.

மொடமொடவென்ற புதுத்துணிகளை அணிந்து கொண்டு மீண்டும் தோசை, பணியாரம் என்று பலகாரங்களைச் சாப்பிட்டு, நீளக் கரும்பு ஒன்றைக் கையிலேந்தி கடித்தபடி விளையாடப் போவான்.

ஒவ்வொரு வீட்டிற்கு முன்னும் தெருவை அடைத்து வண்ண வண்ணப் பொடிகளால் கோலமிட்டு அதன் மையத்தில் சாணி உருண்டைகளில் பூசணிப் பூக்களைச் சொருகி வைத்திருப்பதைப் பார்க்கப் பார்க்க பரவசமாக இருக்கும்.

சுப்ரமணி கூட அம்மா போடுகிற கோலத்திற்குக் கீழே வண்ணப் பொடிகளால் பலதடவைகள் பொங்கல் வாழ்த்துகள் என்று எழுதி இருக்கிறான். பெரிய பையனாக வளர்ந்துவிட்ட பருவத்தில் ‘தை மகளே வருக; தனமும் செல்வமும் தாராளமாகத் தருக….’ என்றும் எழுதி இருக்கிறான்.

அதைப் படித்துவிட்டு பக்கத்து வீட்டு முனியாண்டி மாமா கூட ஒருமுறை “என்ன மாப்ள, தனலட்சுமி பேரத்தான சுருக்கமா தனமின்னு எழுதி இருக்குற….” என்று கிண்டல் பண்ணியிருக்கிறார்.

மறுநாள் மாட்டுப் பொங்கல். இன்னும் சந்தோஷமாக இருக்கும். அன்றைக்கு மட்டும் மாடுகளைக் குளிப்பாட்டுகிற சாக்கில் எத்தனை தடவை கண்மாயில் குதியாலம் போட்டாலும் அம்மா கண்டு கொள்ள மாட்டாள். கொம்புகளில் வர்ணம் பூசிக்கொண்டு நெற்றியில் குங்குமமும், அங்கங்கே சந்தனத் தெறிப்புகளுடன் உடைத்துத் தருகிற கரும்பை கழுத்துச் சலங்கை ஒலி குலுங்க தலைகளை ஆட்டியபடி அசை போடுகிற மாடுகளைப் பார்க்கப் பார்க்க ரொம்பவும் அழகாக இருக்கும்.

வீட்டிற்கு முன்னால் கோலமிட்டு அதன்மீது அடுப்பு மூட்டி அம்மா பொங்கல் வைப்பாள். தேங்காய் உடைத்து மாடுகளுக்கு தீப ஆராதனை காட்டி, பொங்கலும் வாழைப்பழங்களும் மாடுகளுக்குத் தர அது சாப்பிடுவதைப் பார்க்கும் போது மனசெல்லாம் சந்தோஷம் பொங்கி வழியும்.

பண்டிகை நாட்கள் எப்போது வருமென்று ஏங்கிக் கிடந்து, கடந்து போனதும் அதற்குள் முடிந்து போய் விட்டதே என்று மனம் வருந்தி அடுத்த பண்டிகை தினத்தை ஆவலோடு எதிர்நோக்குவதெல்லாம் சிறுவயதிற்கே உரிய சீதனங்கள் போலும். வயது ஏறஏற பண்டிகைகளின் மீதுள்ள ஈர்ப்பும் கவர்ச்சியும் லயிப்பும் குறைந்து மனசுக்குள்ளேயே அமுங்கிப் போய்விட்டதாய் சுப்ரமணியனுக்குத் தோன்றியது.

ஒன்பது மணிக்கு மேலாகியும் பஸ் எதுவும் வந்தபாடில்லை. டாக்ஸியில் போய் விடுவதென்று தீர்மானித்து கடந்து போன டாக்ஸிக்குக் கைகாட்டி ஏறிக் கொண்டான் சுப்ரமணியன். டாக்ஸி டிரைவர் மீட்டர் கட்டணத்திற்கு மேல் இரண்டு வெள்ளி அதிகம் தரவேண்டுமென்று நிபந்தனை விதித்தான். மீட்டருக்கு மேல் அதிகம் காசு கேட்கிற கலாச்சாரம் மட்டும் எல்லா தேசங்களுக்கும் பொது போலிருக்கிறது.

கோலாலம்பூரின் மிகப்பெரிய அவலம் டிராபிக் ஜாம். தடுக்கி விழுந்தால் சிக்னல்கள். அப்படியிருந்தும் பெருகிவரும் வாகனப் பெருக்கங்களைச் சமாளிக்கவே முடியவில்லை. வாகனங்கள் யாவும் எறும்பு போல் ஊர்ந்து சுப்ரமணியன் கோலாலம்பூருக்குப் போய்ச் சேரவே இரவு பத்து மணிக்கு மேலாகி விட்டது. சுப்ரமணியனின் துரதிர்ஷ்டம் அவன் தேடிப்போன கடையும் மூடப் பட்டிருந்தது.

அந்தக் கடை மட்டுமல்லாது பெரும்பாலான கடைகள் மூடப்பட்டிருந்தன. செண்ட்ரல் மார்க்கெட்டைக் கடந்து கிளாங் பஸ் ஸ்டாண்டிற்குப் போகிற வழியில் ஒரு பலசரக்குக் கடை திறந்திருந்தது. உள்ளே போய்த் தேடியபோது பனங்கற்கண்டு இருந்தது.

மிகவும் நாள்பட்ட சரக்கு போலும். பெரும்பகுதி மாவாகவும் மணல் அளவிலான சிறுசிறு துகள்கள் மிகவும் குறைவாகவும் இருந்தது. வேறு வழியில்லை. இதை விட்டால் இந்த இரவில் நாட்டுச் சர்க்கரையை எங்குபோய்த் தேடுவது என்று அதில் அரைக்கிலோ பொட்டலம் கட்டி வாங்கிக் கொண்டு கடைக்காரர் கேட்ட பணத்தைக் கொடுத்துவிட்டு வெளியே வந்தான்.

சாலையின் ஓரத்தில் நின்று கொண்டு டாக்ஸிக்காகக் காத்திருந்தான். நேரங்கெட்ட வேளை என்பதால் டாக்ஸிகளின் நடமாட்டம் அதிகமில்லை. ஓடிய ஒன்றிரண்டு டாக்ஸிகளிலும் ஏற்கெனவே ஆட்களிருந்தார்கள். ஆட்களிருக்கும் டாக்ஸிகளுக்கும் கைகாட்டிக் கொண்டிருந்தான்.

ஒருசில டாக்ஸி டிரைவர்கள் ஏற்றிக் கொள்வார்கள். இவன் போக வேண்டிய இடம் உள்ளே இருப்பவர்கள் போகிற வழியிலோ அல்லது அதைக் கடந்தோ இருந்தால், அவர்களை இறக்கி விட்டுவிட்டு இவனுடைய இடத்திற்குக் கொண்டுபோய் விடுவார்கள். அப்போது அந்த வழியே பைக்கில் வந்த போலீஸ்காரர் ஒருவர் பைக்கை நிறுத்தி அவனிடம் ஏதோ கேட்டார்.

அவர் மலாய் மொழியில் பேசியதால் சுப்ரமணியனுக்கு எதுவும் புரியாமல் விழிக்க, அவர் தடுமாறிய ஆங்கிலத்தில் ”நீ எந்த நாட்டைச் சேர்ந்தவன்?” என்று கேட்டார். சுப்ரமணியன் “இந்தியா…” என்று சொல்லவும், பாஸ்போர்ட்டைக் காண்பிக்கச் சொன்ன போது தான் திக்கென்றது அவனுக்கு. வேலை முடிந்து வீட்டிற்குப் போனவன் மேல்சட்டையைக் களைந்து விட்டு டிசர்ட் அணிந்து கொண்டு கோலாலம்பூருக்குக் கிளம்பியபோது பர்ஸை மட்டுமே எடுத்துக் கொண்டது உறைத்தது.

இமிக்ரேசன் ஆபிஸில் அவனுக்குக் கொடுத்திருந்த அடையாள அட்டை எப்போதுமே மேல்ச்சட்டைப் பையில் இருக்கும். அல்லது அலுவலகத்திற்கு அவன் எடுத்துப் போகிற பேக்கில் இருக்கும். சுப்ரமணியன் சொல்ல முனைந்த எந்த விளக்கத்தையும் அவர் கேட்கத் தயாராய் இல்லை.

ஒரு கேஸ் கிடைத்துவிட்ட சந்தோஷம் அவரின் முகத்தில் பட்டவர்த்தனமாய்த் தெரிந்தது. யாருடனோ அவருடைய ஹேண்ட்போனில் பேசியபடி சுப்ரமணியனைத் தன்னுடையமோட்டார் பைக்கில் உட்கார வைத்து விர்ரென்று கிளம்பினார்.

கைத்தொலைபேசி என்கிற மொபைல்போன்கள் அப்போது அதிகம் புழக்கத்தில் வந்திருக்கவில்லை. போலீஸ்காரர்கள், கம்பெனி முதலாளிகள் மற்றும் வசதியானவர்கள் மட்டுமே பாவிக்கத் தொடங்கி இருந்தார்கள்.

போலீஸ் ஸ்டேஷனிலும் இன்னொரு போலீஸ்காரர் இவனிடம் வந்து சுப்ரமணியன் பற்றிய விவரங்களைக் கேட்டுக் குறித்துக் கொண்டு போனார். அவரிடமும் எவ்வளவோ கெஞ்சினான். தன்னிடம் பாஸ்போர்ட், விசா, இந்த நாட்டில் வேலை செய்வதற்கான அனுமதி எல்லாம் பத்திரமாய் வீட்டில்

இருக்கிறதென்றும், தனக்கொரு வாய்ப்பளித்தால் அவற்றைக் கொண்டு வந்து காண்பிக்க முடியுமென்றும் மன்றாடினான்.

ஆனால் அங்கிருந்தவர்கள் யாருமே அவன் சொன்னது எதையும் காதில் போட்டுக் கொள்ளவே இல்லை. முதலில் அவன் சொன்னது அவர்களுக்குப் புரிந்ததா என்றே தெரியவில்லை.

ஒரு போலீஸ்காரர் அவன் கையிலிருந்த பொட்டலத்தைக் காட்டி என்னவென்று கேட்க, படபடப்பிலும் பதற்றத்திலும் என்ன சொல்கிறோம் என்பதை யோசிக்காமலேயே அவசரமாய் பனங்கற்கண்டிற்கு சரியான ஆங்கில வார்த்தை தெரியாமல் அது ப்ரௌன் கலரில் இருக்கும் இனிப்பு என்பதால் ‘ப்ரௌன் சுகர்’ என்று சொல்லி விட்டான்.

அங்கிருந்த போலீஸ்காரர்கள் அத்தணைபேரும் கலவரமாகி கோபத்துடன் பொட்டலத்தை அவனிடமிருந்து பிடுங்கிய போது தான் அவன் சொன்னதின் முழு அர்த்தமும் மூளைக்குள் உறைத்து, “நோ…. நோ…. திஸ் இஸ் கண்ட்ரி சுகர். ப்ரௌன் இன் கலர். யூஸ்டு டு பிரிபேர் சுவீட் பொங்கல்….” என்றெல்லாம் சுப்ரமணியன் பதறியதைப் பற்றி அவர்கள் அலட்டிக் கொள்ளாமல் பொட்டலத்தை பத்திரப்படுத்தி விட்டு மேலதிகாரிக்கு போனிலேயே தகவல் கொடுத்தார்கள்.

பக்கத்து அறையில் போய் படுத்துக் கொள்ளும்படி அவன் பணிக்கப்பட, சுப்ரமணியன் அங்கு போனபோது ஏற்கெனவே அங்கு இன்னும் சிலர் உட்கார்ந்திருந்தார்கள். இவனைப் பார்த்ததும் ஒருவருக்கொருவர் பேசிக் கொண்டு இவனிடம் ஏதோ கேட்க இவனுக்கு எதுவும் விளங்கவில்லை. கொஞ்ச நேரத்திலேயே எல்லோரும் அப்படி அப்படியே சுருண்டு படுத்துக் கொண்டார்கள்.

அறை ஓரளவிற்கு சுத்தமாகவே இருந்தது. கிர்கிர்ரென்று ஃபேன் சுற்றுகிற சத்தம் இரவின் நிசப்தத்தில் நாராசமாய்க் கேட்டுக் கொண்டிருந்தது. கொசுக்கள் முழு வேகத்துடன் அறையை முற்றுகையிட்டிருந்தன. சுப்ரமணியனும் சுவற்றை ஒட்டி கைகளைத் தலைக்குக் கொடுத்து படுத்துக் கொண்டான். அவனுக்கு மனைவியின் ஞாபகம் வந்தது.

இப்போது அவள் இவனை எதிபார்த்து எப்படி துடித்துக் கொண்டிருப்பாளோ? தகவல் சொல்வதற்குக் கூட வீட்டில் போன் வைத்திருக்கவில்லை. போன் வைத்துக் கொள்ளலாம் என்று எடிஸ்லாட் ஆபிஸில் விசாரித்தபோது வெளிநாட்டினர் என்றால் 1000 ரிங்கட் முன்பணம் கட்ட வேண்டுமென்றார்கள். இந்திய மதிப்பில் அது அப்போது சுமார் பன்னிரண்டாயிரம் ரூபாய். அவ்வளவு பணம் செலவழித்து போன் வாங்க வேண்டிய தில்லை என்று மனைவியே சொல்லி விட்டாள்.

சுப்ரமணியனுக்கு அவனுடன் வேலை பார்க்கும் நண்பர்களின் வீட்டு டெலிபோன் நம்பர்கள் கூட எதுவுமே ஞாபகத்தில் இல்லை. ஒரு சின்ன கையடக்கமான நோட்டில் எல்லாவற்றையும் குறித்து வைத்திருக்கிறான். ஆனால் அது அவனுடைய அலுவலக அறையில் அல்லவா பத்திரமாகத் தூங்கிக் கொண்டிருக்கிறது. சுப்ரமணியனுக்கு அழுகை வரும் போலிருந்தது.

சுப்ரமணியனுக்கு அவன் இந்தியாவில் போலீஸுடன் ஊடாடிய சம்பவம் ஒன்று ஞாபகத்திற்கு வந்தது. அம்மாவுடன் ஒருமுறை மதுரை கண் ஆஸ்பத்திருக்குப் போய்விட்டுத் திரும்பும் போது, கிராமத்திற்குப் போவதற்கான கடைசி பஸ்ஸை தவறவிட்டதால் விருதுநகர் பஸ் ஸ்டாண்டிலேயே இரவைக் கழிக்க நேர்ந்தது. அப்போது அவன் ஒன்பதாவதோ பத்தாவதோ படித்துக் கொண்டிருந்தான்.

அம்மா பயணிகளுக்கான அறையில் பெண்களுடன் படுத்திருக்க, இவன் வெளியில் போடப்பட்டிருந்த சிமெண்ட் பெஞ்சில் படுத்திருந்தான். எப்போது உறங்கினான் என்பது தெரியவில்லை.

காலில் யாரோ கம்பால் தட்டுவது போல் உணர்ந்து, திடுக்கிட்டுக் கண் விழித்துப் பார்த்தபோது இரண்டு போலீஸ்காரர்கள் அவனுக்கருகில் நின்று கொண்டிருந்தார்கள்.

அவர்கள் சுப்ரமணியனிடம் ஏதோ விசாரிக்க, அவனும் தூக்கக் கலக்கத்தில் ஏதோ

உளறினான். “சரி சரி; ஜீப்புல ஏறு. ஸ்டேசன்ல போய்த் தூங்கிக்கலாம்….” என்று சொன்ன ஒரு போலீஸ்காரர் அவனை ஜீப்பை நோக்கித் தள்ளிக் கொண்டு போனார்.

அந்த வயதில் அவர் அப்படிச் சொன்னதின் அர்த்தம் ஏதும் உறைக்காமல், அவனும், “எங்க அம்மாட்ட சொல்லீட்டு வந்துடுறேன்; அப்புறம் அவங்க என்னைத் தேடுவாங்களே….” என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே, பதட்டமும் அழுகையுமாக ஜீப்பை நோக்கி ஓடி வந்தாள் அம்மா.

போலீஸ்காரர் அம்மாவிடம் ஏதோ கேட்க, அவள் சொன்ன பதிலில் அவர்கள் திருப்தி அடைந்து சுப்ரமணியனை பஸ் ஸ்டாண்டிலேயே விட்டு விட்டுப் போய் விட்டார்கள். தூக்கக் கலக்கம் முற்றிலும் கலைந்த பின்பு, போலீஸ் ஸ்டேசனுக்கு மட்டும் கொண்டு போயிருந்தால் அவன் மீது ஏதாவது பொய் கேஸ் ஜோடித்து என்ன பாடெல்லாம் படுத்தியிருப்பார்களோ என்று அம்மா சொன்ன போது தான் நடக்கவிருந்த விபரீதம் உறைத்து திகீலென்றிருந்தது.

உள்நாட்டு லாக்கப்பில் தங்க நேர்ந்ததிலிருந்து தப்பித்து இப்போது வெளிநாட்டு லாக்கப்பில் இரவைக் கழிக்க வேண்டுமென்பது விதி போல என்று நினைத்துக் கொண்டான் சுப்ரமணியன். நாளைக்கு விசாரிததும் விட்டு விடுவார்களா என்றும் தெரியவில்லை.

சுப்ரமணியனின் வாயில் சனிதான் இருந்திருக்கிறது. இல்லையென்றால் பனங்கற்கண்டைப் போய் ப்ரௌன் சுகர் என்று மொழி பெயர்த்து புதிய சிக்கலில் மாட்டிக் கொண்டிருப்பானா அவன்? ப்ரௌன் சுகர் என்பது ஒரு போதைப் பொருள்.

மலேசியாவில் அதை வைத்திருப்பதும் பாவிப்பதும் மரண தண்டனைக்கு இட்டுச் செல்லக்கூடிய தீவிரமான குற்றம். எப்படி அப்படி ஒரு பெயர் சட்டென்று தன்னுடைய வாயிலிருந்து வந்தது என்று தன்னைத் தானே கடிந்து கொண்டான் அவன்.

மறுநாள் ஆபிஸர் மாதிரி தோரணையிலிருந்த ஒரு புது போலீஸ்காரரின் முன் சுப்ரமணியனும் லாக்கப்பில் இருந்த மற்றவர்களும் நிறுத்தப் பட்டிருந்தார்கள். அவர் ஒவ்வொருவராக அழைத்து விசாரித்து குறிப்புகள் எடுத்துக் கொண்டிருந்தார்.

அப்போது அவரைப் பார்ப்பதற்காக ஒரு சீனப்பெண் வந்தாள். சுப்ரமணிக்கு அவளை எங்கேயோ பார்த்த ஞாபகம் இருந்தது. கொஞ்சம் யோசித்ததிலேயே பளிச்சென்று ஞாபகம் வந்து விட்டது. இமிக்ரேசன் ஆபீசில் அவளை சுப்ரமணியன் சந்தித்திருக்கிறான்.

அவனுடைய மனைவிக்கு ஸ்பௌஸ் விசாவிற்கு விண்ணப்பித்து அதற்கான விசாரணைக்கு அவன் அழைக்கப் பட்டிருந்த போது இவள் தான் கீழ்மட்ட அதிகாரியாக இவனிடம் விசாரணை நடத்தினாள். ”ஸ்பௌஸ் விசாவிற்கான விண்ணப்பத்துடன் உங்களின் திருமண சான்றிதழ் இணைக்கப் படவில்லையே….” என்றாள் அவள்.

”எங்களிடம் திருமண சான்றிதழ் எதுவும் இல்லையே…..” என்றான் சுப்ரமணியன் சாதாரணமாக. ”அதெப்படி, நீங்கள் திருமணம் செய்யும் போது அதை ஊர்ஜிதப்படுத்தி சான்றிதழ் எதுவும் தரவில்லையா…? ஸ்பௌஸ் விசாவிற்கு அது மிகவும் அவசியமான சான்றிதழாயிற்றே! யாரும் உனக்குச் சொல்லவில்லையா…..?” என்றாள் அவள்.

”இந்தியாவில் திருமணத்தை பதிவு பண்ண வேண்டியது கட்டாயமில்லை…..” என்றான் அவன். “அப்படியென்றால் இங்கே நீ அழைத்து வர ஆசைப்படுகிற பெண் உன்னுடைய மனைவி தான் என்பதற்கு என்ன தான் அத்தாட்சி….?” என்று அவள் கேட்டபின்பு தான் அவனுக்கே உறைத்தது. ”மனைவி தவிர்த்த வேறொரு பெண்ணை நான் எதற்கு அவ்வளவு செலவளித்து இங்கு அழைத்து வர வேண்டும்…?” என்றான் அவன்.

“எதற்காக வேண்டுமானாலும் இருக்கலாம்…..” என்று சொல்லி சிரித்தாள் அவள்.

இந்தியாவில் மனைவிக்கு பாஸ்போர்ட் எடுக்கும் போதும் இந்தப் பிரச்னை வந்தது. அங்கும் திருமண சான்றிதழ் கேட்டார்கள். இல்லை என்று சொல்லவும் பாஸ்போர்ட் ஆபிசரே அங்கிருந்த ஒரு புரோக்கரைக் காண்பித்து “அவரிடம் போய்ப் பேசுங்கள்; அவர் தேவையான ஏற்பாடுகள் பண்ணுவார்….” என்று சொல்லி அனுப்பி வைத்தார்.

புரோக்கர் சுப்ரமணியனிடம் ஐநூறு ரூபாயும் ஒரு காகிதத்தில் அவர்களைப் பற்றிய விவரங்களையும் எழுதித்தரச் சொல்லி வாங்கிக் கொண்டு போனார். என்ன செய்வார்கள் என்று ஏதும் விளங்கவில்லை. ஒருவேளை பணத்தை ஏமாற்றி விடுவாரோ என்றும் பயந்து கொண்டிருந்தான்.

ஆனால் அவர் போய் அரைமணி நேரத்திலேயே ஒரு சர்ட்டிபிகேட்டுடன் திரும்பி வந்தார். அவனுடைய மனைவியின் பெயரில் ஒரு அபிடெபிட். நோட்டரி பப்ளிக்காக சான்று பெற்றிருக்கும் சீனியர் வக்கீல் ஒருத்தர் கையெழுத்துப் போட்டுக் கொடுத்திருந்தார்.

சுப்ரமணியனுக்கு ஆச்சர்யமாக இருந்தது. ”மேரேஜ் சர்ட்டிபிகேட் வாங்குவது இவ்வளவு சுலபமானதா? அப்படி யென்றால் யாரும் யாரை வேண்டுமானாலும் கணவன் / மனைவி என்று போட்டு சர்ட்டிபிகேட் பெற்று பாஸ்போர்ட் எடுத்துக் கொள்ளலாமே….” என்று அப்பாவியாய்க் கேட்டான் அவரிடம். “யெஸ். எடுத்துக்கலாமே….”என்று சிரித்தபடி சான்றிதழைக் கொடுத்து விட்டுப் போய்விட்டார் அவர்.

அந்த அபிடெபிட்டை கொண்டு வந்திருந்தால் அதை மலேசியாவில் ஏற்றுக் கொள்வார்களா என்று தெரியவில்லை. ஆனால் அதை அவன் நகல் கூட எடுத்து வைத்துக் கொண்டிருக்கவில்லை. அப்படியே பாஸ்போர்ட் அலுவலகத்தில் கொடுத்து, சில நாட்களிலேயே மனைவிக்கு பாஸ்போர்ட்டும் அவன் தான் கணவன் என்கிற பதிவுடன் வீட்டிற்கு வந்து விட்டது.

விசா தர முடியாது என்று அவள் சொல்லப் போகிறாள் என்பது சுப்ரமணியனுக்கு நிச்சயமாகத் தெரிந்தது. எதற்கும் சொல்லிப் பார்க்கலாம் என்று இருவரின் பாஸ்போர்ட்டிலும் ஸ்பௌஸ் என்பதற்கு அருகில் மனைவியின் பாஸ்போர்ட்டில் அவனுடைய பெயரும் அவனுடைய பாஸ்போர்ட்டில் மனைவியின் பெயரும் இருப்பதாகச் சொல்லி அந்தப் பக்கங்களையும் பிரித்துக் காட்டினான்.

”இதை அத்தாட்சியாக எடுத்துக் கொள்ளக் கூடாதா….?” என்று கேட்டான் மிகவும் தணிந்த குரலில். “பொதுவாக ஏற்றுக் கொள்வதில்லை. ஆனாலும் உனக்காக என்னுடைய ஆபீசரிடம் பேசிப் பார்க்கிறேன். நாளைக்கு வந்து என்னைப் பார்…..”என்று சொல்லி அனுப்பி வைத்தாள்.

கொஞ்சமும் நம்பிக்கை இல்லாமல் தான் அடுத்தநாள் போனான். அவள் பெயரைக் கூட அறிந்து வைத்திருக்கவில்லையே, இன்று வேறு யாராவது வந்து விசா விண்ணப்பத்தை நிராகரித்து விட்டதாகச் சொல்லி பாஸ்போர்ட்டை அவனிடமே திருப்பித் தந்தால் என்ன செய்வது என்கிற குழப்பத்துடன் காத்திருந்தான்.

ஆனால் இவன் பெயர் அழைக்கப் பட்டதும் அவளே தான் வந்தாள். விசா முத்திரையிட்ட பாஸ்போர்ட்டை அவனிடம் கொடுத்து, “வாழ்த்துக்கள். ஆனால் உனக்காக என்னுடைய அதிகாரியிடம் மிகவும் வாதாடினேன் தெரியுமா…!”என்றாள். சுப்ரமணியன் நெகிழ்ந்து போய் இரண்டு நூறு ரிங்கட் நோட்டை எடுத்து அவளிடம் தரப்போகவும் அவள் பதறிப் போனாள்.

”என்ன காரியம் செய்கிறாய்? பாவம் பார்த்து உதவி பண்ணினால் நீ என்னுடைய வேலைக்கே உலை வைத்து விடுவாய் போலிருக்கிறது. முதலில் வெளியே போ….” என்று கடுமையான முகபாவத்துடன் சத்தம் போட்டாள். அவளை அத்தனை கோபமாய் அவன் பார்த்ததே இல்லை.

சுப்ரமணியன் ”என்னுடைய இந்திய புத்தி அப்படி நடந்து கொள்ள வைத்து விட்டது. ப்ளீஸ். ப்ளீஸ். என்னை மன்னித்துக் கொள்ளுங்கள்…” என்று மன்றாடி வருத்தம் தெரிவிக்கவும் சமாதானமாகி “ஓ.கே. இனிமேல் மலேசியாவின் எந்த அரசு அலுவலகத்திலும் இப்படி நடந்து கொள்ளாதே….” என்று

சொல்லி அவனை அனுப்பி வைத்தாள்.

அப்போது தவிர்க்கவே முடியாமல் இந்திய அரசு அதிகாரிகளின் கடுகடுத்த முகங்கள் அவனின் மனத்திரையில் காட்சியாகி மறைந்தன. இந்திய அரசு அலுவலகங்களில் அதிகாரிகள் எல்லோரும் குறுநில மன்னர்கள் போலவும் அவர்களை அணுகும் பிரஜைகள் யாவரும் அவர்களிடம் யாசகம் கேடக வந்திருக்கும் பிச்சைக்காரர்கள் போலவும் தான் நடத்தப்படுகிறார்கள். இதில் தலை விரித்தாடும் இலஞ்சம் வேறு. காசின்றி கடுகும் நகராது அங்கு.

சுப்ரமணியன் அந்த சீனப்பெண்ணை நோக்கி மேடம் என்று குரல் கொடுக்கவும், அவளும் அவனை நோக்கி வேகமாகத் திரும்பினாள். ஆச்சர்யமாக அவளுக்கும் சுப்ரமணியனை ஞாபகமிருந்தது.

”ஹாய், யூ ஆர்….”சோலைமலை சுப்ரமணியன் என்கிற அவனின் முழுப்பெயரைத் தப்பும் தவறுமாக உச்சரித்தவள், “இங்கு என்ன செய்து கொண்டிருக்கிறாய் நண்பனே….” என்றாள்.

புது போலீஸ் அதிகாரி அவளிடம், “இவனை உனக்கு ஏற்கெனவே தெரியுமா? நேற்று அகால வேளையில் கிளாங் பஸ் ஸ்டாண்டிற்கு அருகில் சந்தேகத்திற்கு இடமளிக்கும் விதத்தில் நின்று கொண்டிருந்திருக்கிறான். அடையாள அட்டையோ பாஸ்போர்ட்டோ எதுவும் அவனிடம் இல்லை. மேலும் கையில் ஒரு பொட்டலம் வைத்திருந்திருக்கிறான். என்னவென்று விசாரித்தால் ப்ரௌன் சுகர் என்று கொஞ்சமும் பயமில்லாமல் தெனாவெட்டாகச் சொல்லியிருக்கிறான்…..” என்றார் அவளிடம்.

”நிஜமாகவா….” என்றவள் ஆச்சர்யப்படவும் போலீஸ் அதிகாரி அங்கிருந்த போலீஸ்காரரிடம் அவனிடமிருந்து கைப்பற்றிய பொட்டலத்தை எடுத்து வரும்படி கண் ஜாடை காட்ட அவரும் எடுத்து வந்து அதிகாரியிடம் கொடுத்தார்.

அவர் பொட்டலத்தைப் பிரித்து வாசனை பார்த்தார். அப்புறம் சில துகள்களை எடுத்து வாயில் போட்டுக் கொண்டு, “எந்தக் கம்பெனியில் வேலை பார்க்கிறாய்?” என்று விசாரித்தார். சுப்ரமணியன் கம்பெனியின் பெயரைச் சொல்லவும் ”லியோசிங்கின் கம்பெனியிலா வேலை பார்க்கிறாய்? என்னவாக வேலை பார்க்கிறாய்?” என்றார்.

அவன் “டிசைன் என்ஜினியர்….” என்று சொல்லவும், “ஓ… மை குட்னஸ்….” என்றவர் அவருடைய ஹேண்ட்போனை அவனிடம் கொடுத்து, “எங்கே அவரிடம் தொடர்பு கொண்டு பேசு பார்க்கலாம்….” என்றார்.

சுப்ரமணியன் தயங்கி அவருடைய ஹேண்ட்போன் நம்பரோ வீட்டு நம்பரோ தனக்குத் தெரியாது என்று சொல்லவும், ஆபிசருக்குக் கோபம் வந்து விட்டது.

“அடையாள அட்டையை வைத்துக் கொள்ள மாட்டாய்; கம்பெனி முதலாளியின் போன் நம்பரையும் ஞாபகம் வைத்திருக்க மாட்டாய். ஆனால் மலேசியாவின் வீதிகளில் மட்டும் அதுவும் இராத்திரி வேளைகளில் இஷ்டத்திற்கு அலைந்து கொண்டிருப்பாயா?”என்று சீறினார்.

அந்த சீனப்பெண் தான் அவரிடம் பக்குவமாகப் பேசி அவருடைய கோபத்தைத் தணிக்கச் செய்து இவனையும் இவனுடைய கம்பெனியின் எம்.டி.யையும் தனக்குத் தெரியுமென்று சொல்லி ஹேண்ட்போனை வாங்கி அவரின் நம்பரை அழுத்தி சுப்ரமணியனிடம் கொடுத்துப் பேசச் சொன்னாள்.

எதிர்முனையில் ரிங் போய்க் கொண்டே இருந்தது. யாரும் எடுக்கவே இல்லை. கட்டாகப் போகும் சமயத்தில் போன் உயிர் பெற்று எதிர்முனையில் ‘ஹலோ….’ என்கிற குரல் கேட்டது. சுப்ரமணியன் பதட்டமும் அழுகையுமாய் தன்னை அறிமுகப் படுத்திக் கொண்டு தன்னை காவல்நிலையத்தில் பிடித்து வைத்திருக்கும் கதையை சுருக்கமாகச் சொன்னான்.

”பூவர் மேன். பொங்கல் கொண்டாடச் சொல்லி உனக்கு விடுமுறை அளித்தால் நீ போலீஸ் ஸ்டேசனில் போய்ப் படுத்துக் கொண்டிருக்கிறாயா?” என்று பெரிய நகைச்சுவையை சொல்லி விட்டது

போல் சிரித்தார். அப்புறம் “யாராவது அதிகாரி இருந்தால் கொடு; நான் பேசுகிறேன்…..” என்றார்.

சுப்ரமணியன் போலீஸ் அதிகாரியிடம் போனைக் கொடுக்க அவர்கள் சீன மொழியில் நிறைய நேரம் பேசினார்கள். அவர்கள் பேசியதின் சாரம் ஒரு அட்சரமும் புரியவில்லை. எனினும் அவர்கள் பேசிக் கொண்ட விதத்தில் இருந்து தன்னை விடுவித்து விடுவார்கள் என்கிற நம்பிக்கை வரக் கொஞ்சம் ஆசுவாசமாக உணர்ந்தான் அவன்.

பேசி முடித்ததும் “நீ போகலாம்; ஆனால் இங்கு ஒவ்வொருவருக்கும் தங்களுடைய அடையாளத்தை நிரூபிக்கிற டாக்குமெண்ட் முக்கியம். அதை எப்போதும் சுமந்து கொண்டே தான் அலைய வேண்டும். இந்த நாட்டுப் பிரஜைகளுக்கே அதுதான் விதி. புரிகிறதா?

இன்னொருமுறை இப்படி ஏடாகூடமாக மாட்டாமலிருக்க முயற்சி செய். அப்படியே மாட்டிக் கொண்டாலும், ப்ரௌன் சுகரையெல்லாம் கையில் வைத்துக் கொண்டு மாட்டிக் கொள்ளாதே….” என்று சிரித்து அனுப்பி வைத்தார்.

அவருக்கும் சீனப்பெண்ணிற்கும் நன்றி கூறி விடைபெற்று வீட்டிற்கு வந்த போது சுப்ரமணியனின் மனைவி பிரமை பிடித்தது போல் உட்கார்ந்திருந்தாள். அவளைச் சுற்றிலும் ஒரு சிறு கூட்டம் சூழ்ந்து கொண்டு அவளுக்குப் புரியாத மொழியில் ஆறுதல் சொல்லிக் கொண்டிருந்தது. இவனைக் கண்டதும் ஓடி வந்து கட்டிக் கொண்டு கதறி அழத் தொடங்கினாள்.

அழுது ஓய்ந்து இவன் சொன்னக் கதைகளைக் கேட்டவள் “அதெல்லாம் சரி. வாங்குன சர்க்கரையை எங்கே?” என்று அவள் கேட்டபின்பு தான் பொட்டலத்தை போலீஸ் ஸ்டேசனிலேயே விட்டுவிட்டு வந்தது அவனுடைய ஞாபகத்திற்கு வந்தது.

”சரிவிடு. இந்தவருஷம் கருப்பட்டியில் பொங்கல் பண்ணிக் கொண்டாடலாம்….” என்றபடி அதற்கான ஆயுத்தங்களில் இறங்கினாள் மனைவி.

Ø முற்றும்

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *