Thursday, January 18, 2018

.
Breaking News

ஏன் பெண்ணென்று… 2 ( நாவல் ) …. } கே.எஸ்.சுதாகர்.

ஏன் பெண்ணென்று… 2 ( நாவல் ) …. } கே.எஸ்.சுதாகர்.

பத்மினி படுக்கையில் இருந்து சீறி எழுந்தாள். பாம்பானாள். ஆடிப் படமெடுத்து எல்லாவற்றையும் தட்டி விழுத்தி நொருக்கினாள். தலையணையால் ஆத்திரம் தீரும் வரைக்கும் சந்திரமோகனை விளாசினாள். தீனமான குரலில் கத்திக் கொண்டே அறையை விட்டு வெளியேறினாள்.

The gopuram (tower) of Hindu temple Venayagar Kovil, Batticaloa, Sri Lanka

மாப்பிள்ளை இதை எதிர்பார்த்திருக்கவில்லை. கதவைச் சாத்திவிட்டு அடங்கி ஒடுங்கி நின்றார். இதை அவன் மாத்திரமல்ல, வீட்டில் இருந்த எவருமே எதிர்பார்த்திருக்கவில்லை.

இந்தத் திடீர் சச்சரவினால் வீடு அதிர்ந்தது. பத்மினி தன் பெற்றோரின் படுக்கை அறைக்குள் அழுதபடியே நுழைந்தாள். தகப்பனார் எழுந்து, படுக்கையின் ஓரத்தில் சாந்தமே உருவமாக அமர்ந்தார். தன் மகளின் தலைவிரி கோலத்தைப் பார்த்த பதட்டத்தில் அவரின் கைகள் நடுங்கின. வந்த வேகத்தில் தாயின் முகத்தருகே தன்முகத்தை நீட்டியபடி முழங்காலில் குத்திட்டு விழுந்தாள் பத்மினி.

”மினிக்குஞ்சு என்னம்மா நடந்தது?” அவளின் தலைமயிரைக் கோதியபடியே கவலையுடன் கேட்டார் தாயார். அவரால் திடீரென்று படுக்கையை விட்டு எழுந்திருக்க முடியாது.

இப்படியான வேளைகளில் பத்மினியால் கதைக்க முடிவதில்லை. சொற்கள் உடைந்து பிசுறுகளாக, வாய் கோணி ஆஸ்மா

வந்தவர்களைப் போல மூசினாள். தாயார் மறுபடியும் அவளைத் தொந்தரவு செய்தவாறு இருந்தார். ‘என்ன நடந்தது?’

“நீர் கொஞ்சம் சும்மா இரும்” அதட்டினார் கணபதிப்பிள்ளை.

பத்மினியின் அக்காவும் அத்தானும் அவர்களுக்கிடையே சமசரம் செய்து வைக்கும் முயற்சியில் கதைத்தார்கள். பத்மினி ஒன்றிற்கும் இடம் கொடுக்கவில்லை.

“அவள் சொல்லும்போது சொல்லட்டும். அவளை அவள் பாட்டில் விடுங்கோ” என்றார் தகப்பனார்.

காலையில் பார்த்துக் கொள்ளலாம் என முடிவெடுத்து எல்லாரும் படுக்கைக்குச் சென்றனர்.

சிறிது நேரம் தாயாருக்குப் பக்கத்தில் இருந்தவள், மீண்டும் சந்திரமோகனின் அறைக்குச் சென்று தன்னுடைய கூறைச்சேலை, உடுப்புகள் எல்லாவற்றையும் அள்ளிக்கொண்டு கதவை அடித்துச் சார்த்திவிட்டு வந்தாள் பத்மினி. அப்போது தூங்குபவன்போல நடித்துக் கொண்டிருந்த சந்திரமோகன் திரும்பி அவளை ஒரு பார்வை பார்த்துவிட்டு மீண்டும் படுத்துக் கொண்டான்.

“உன்னுடைய வீடு. நீயே அடித்து நொருக்கு” என்பது போல அந்தப் பார்வை இருந்தது.

சந்திரமோகனால் இரவு உறங்க முடியவில்லை. அன்னிய இடம், எதிர்பாராத சம்பவம் இவற்றினால் மனம் அலைக்கழிந்தது. இப்படியான வேளைகளாகப் பார்த்து கடந்தகாலச் சம்பவங்களும்

மல்லுக்கட்ட வந்துவிடும். தன் கடந்தகால வாழ்க்கைக்குள் இழுத்துச் செல்லப்பட்டு அல்லாடினான்.

சந்திரமோகனால் மாத்திரமல்ல, அந்த வீட்டில் இருந்த அனைவராலுமே அன்று உறங்கமுடியவில்லை.

விடிகின்றது.

பத்மினியின் தாயார் எழுந்து இடுப்பில் கை ஊன்றியபடி தனது இருப்பிடம் நோக்கிச் செல்கின்றார். படுக்கை அறையிலிருந்து போர்டிக்கோவை அடைய அவருக்கு பத்துப்பதினைந்து நிமிடங்கள் வேண்டும். வீட்டின் நடுப்பக்கத்தில் அமைந்துள்ள கதவினூடாக வெளியே வந்தால் போர்டிக்கோவை அடையலாம். வாசலுக்கு எதிர்த்தாற்போல அவரின் சாய்வனைக்கதிரை இருக்கின்றது. அதில் இருந்து பார்த்தால் அப்படியே வீட்டின் படலை தெரியும். தெருவில் போவோர் வருவோரையும் பார்க்கலாம். இனி அவர் படுக்கைக்குத் திரும்பும்வரைக்கும் அதுவே அவரின் இருப்பிடம். அதன்பிறகு அவரின் வாழ்வில் அன்றும் என்றும் நடைபெறும் நிகழ்ச்சிகள் ஒன்றுதான்.

காலைத் தேநீர் / காலை ஆகாரம் / பத்திரிகை படித்தல் / வீட்டு வேலைக்கு என்று யாராவது வந்தால் அவர்களைக் கட்டிமேய்த்தல், நாட்டாமை செய்தல். வளவிற்குள் கள் இறக்க, தேங்காய் புடுங்க, கிடுகு பின்ன என்று வருபவர்களிடம் சிறிது நேரம் கதை பேச்சு / குட்டித் தூக்கம் / மதியச் சாப்பாடு / அடுத்துவரும் மூன்று நான்கு மணித்தியாலங்களுக்கு யாராவது ஊர்ப்புதின்ங்கள் சொல்ல வந்துவிடுவார்கள். அவர்களுடன் வம்பழத்தல், இடையிடையே பிள்ளைகள் கணவருடன் உரையாடுதல், மற்றும் வரவு செலவுக்கணக்கு, கோயில் கணக்கு / அதில் இருந்தபடியே

இயற்கையை ரசித்தல், மீண்டும் ஒரு குட்டித்தூக்கம் / இரவு ஆகாரம் / படுக்கை.

அப்படித்தான் அன்றும் சாய்வனைக்கதிரையில் சாய்ந்தபடியே வீதியைப் பார்த்தபடி இருந்தார் அவர்.

ஒரு வெள்ளித்தாம்பாளத்தில் கொழுக்கட்டைகளை அழகாக அடுக்கிவைத்து, வெள்ளைத்துணியினால் போர்த்தி கைகளிலே தாங்கியவண்ணம் பஸ்சினில் இருந்து இறங்கினாள் தங்கம்மா. இரவு நடந்த கலாட்டா அவளுக்குத் தெரிந்திருக்கவில்லை. காலை ஏழுமணியளவில் வீட்டின் முன்கதவைத் தட்டினாள். அசுமாத்தம் இல்லை. தலையைக் குனிந்து போர்ட்டிக்கோவைப் பார்த்தாள். நேசம் சாய்வனைக்கதிரையில் இருப்பது தெரிகின்றது. நேராக அவரிடம் சென்றார்.

“எப்படி இருக்கின்றீர்கள்?”

பதில் இல்லை. பேப்பரால் முகத்தை மூடியபடி இருந்தார் அவர். தங்கம்மா மீண்டும் தொடர்ந்தார்.

“உங்களைத்தான். எப்படி இருக்கிறியள்?”

அவர் பத்திரகாளியாகினார். எகிறிப் பாய்ந்து தங்கம்மாவின் கையிலிருந்த தாம்பாளத்தைத் தட்டிவிட்டார். தாம்பாளம் நிலத்தில் விழுந்து நாதமெழுப்பியது. கொழுக்கட்டைகள் சிதறி விழுந்தன. சற்றுத்தூரத்தில் மேய்ந்துகொண்டு நின்ற கோழிகள் ‘கொக் கொக்’ என்று விரைந்து வந்து அவற்றை கொத்தி விழுங்கின.

“வந்திட்டான்கள் தூக்கிப் புடிச்சுக் கொண்டு. உதைக் கொண்டுபோய் உன்ரை கொழுக்கட்டைவாயனுக்குத் தீத்து.”

தங்கம்மாக்கிழவி பயத்தினால் வெலவெலத்து படலையடிக்கு ஓடினாள். செய்வதறியாது சிறிது நேரம் நின்றுவிட்டு வந்தவழியே திரும்பி நடக்கலானாள்.

சந்திரமோகனுக்கு பகற்பொழுது நரகவேதனையாகக் கழிந்தது.

இருவருமே பிரச்சினை என்னவென்று சொல்லாதவிடத்து அவர்களுக்கிடையே சமரசம் செய்து வைப்பது கடினமாக இருந்தது.

பத்மினி காலை பத்து மணியளவில் தனது சைக்கிளை எடுத்துக் கொண்டு சினேகிதிகளின் வீடுகளிற்குப் போய்விட்டாள். மூத்த மருமகன் சிவா உணவு தேநீர் எல்லாம் சந்திரமோகனுக்கு அவனது அறைக்குள்ளே எடுத்துச் சென்று கொடுத்து வந்தான். மாலை மூன்றுமணிவரையும் அவன் அறைக்குள் அடைந்து கிடந்தான். அதன்பின்னர் குளித்து, ஆடைகளைத் தோய்த்து முற்றத்தில் கிடந்த கயிற்றில் உலரவிட்டான்.

மாலைக் கருக்கலில் சந்திரமோகனின் அண்ணா அண்ணி இன்னும் சிலர் காரில் வந்து இறங்கினார்கள். பத்மினி அப்பொழுதும் வீடு திரும்பவில்லை. அவள் தன் சிநேகிதிகளுடன் யாழ்ப்பாண ரவுண் முழுவதும் சுற்றி, சினிமா பார்த்துவர ஏழுமணியாகிவிட்டது. சமரசமுயற்சிகள் தோல்விகண்ட நிலையில் இரவு வந்தவர்கள் வீடு திரும்பினார்கள்.

வீட்டிற்குப் போகும் தருணத்தில், அன்று காலை தங்கம்மாவிற்கு நடந்தவற்றை சந்திரமோகனுக்கு சொல்லிவிட்டுச் சென்றான்

அண்ணன். சந்திரமோகன் கடுப்பாகிப் போனான். இருப்பினும் மெளனம் காத்தான்.

அடுத்தநாள் காலை கணபதிப்பிள்ளை சந்திரமோகனை தான் கட்டிக்கொண்டிருக்கும் கோவிலிற்குக் கூட்டிப் போவதாகச் சொன்னார். ஊரில் உள்ளவர்களின் உதவியுடன் முருகன் கோவில் கட்டும் முயற்சியில் ஈடுபட்டிருந்தார் அவர். பாதி வேலைகள் முடிவடைந்துவிட்டன.

குளித்து முடித்து கயிற்றினிலே உடுப்பை மாட்டுவதற்காகச் சென்றபோது நேசம் யாரோ ஒரு பெண்மணியுடன் கதைத்துக் கொண்டிருந்தார். சந்திரமோகனைக் கண்டதும் அவரிடமிருந்து கர்ணகடூரமாக வார்த்தைகள் வந்தன.

“ஒரேயொரு கோவணத்தை தோச்சுப் போட்டுக் கொண்டு வீட்டுக்கை வீட்டுக்கை அடைஞ்சு கிடக்கிறான் புத்தி கெட்டபயல்.”

தாயிற்கு அவமானம் வந்தபோது மெளனம் காத்த சந்திரமோகன், ஒரு கோவணத்தால் வெகுண்டெழுந்தான். விறுக்குவிறுக்கெண்டு தன்னுடைய அறைக்குள் புகுந்துகொண்டான்.

கணபதிப்பிள்ளை பாராயணம் முடித்துக்கொண்டு சுவாமி அறைக்குள்ளிருந்து வெளியே வந்தார். வேட்டி அங்கவஸ்திரம் சகிதம் சந்திரமோகனின் வரவிற்காக ஹோலிற்குள் காத்திருந்தார். நேரம் செல்ல பொறுமை இழந்த அவர் சந்திரமோகனின் அறையை எட்டிப் பார்த்தார்.

பத்மினி முதலிரவில் எடுத்த முடிவை, சந்திரமோகன் மூன்றாள்நாள் காலை எடுத்திருந்தான்.

அவனை அங்கே காணவில்லை.

… தொடரும்

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *