Thursday, January 18, 2018

.
Breaking News

யதார்த்தம்!… ( நாவல் ) …. } ப.சதீஸ்வரன்.— யாழ்ப்பாணம்.

யதார்த்தம்!…  ( நாவல் ) …. } ப.சதீஸ்வரன்.—  யாழ்ப்பாணம்.

வேலையால் வந்த நான் வீட்டு ஹொலிங் பெல்லை அடித்தேன்.

கதவைத்திறந்த மனைவி, நமட்டுச்சிரிப்புடன் செட்டிகுளத்தில் இருந்து கணேசலிங்கம் அங்கிள் வந்துள்ளார் எனறாள்.

இவர் சும்மாவே பிரச்சனையான ஆள் இப்ப ஏன் வந்தவர் என்று யோசித்தபடி உள்ளே வந்து சப்பத்துகளை கழற்றினேன்.

வெளியே மழை பெய்யத்தொடங்கியது, கொழும்பில் பெய்யும் மழையை விட செட்டிகுளத்தில் பெரிய பெரிய மழைத்துளிகளாக விழும். படிக்கும் காலத்தில் சைக்கிள் ஓடும் போது முகத்தில் விழும் மழைத்துளிகள் நோகும்.. செட்டிகுளத்தை விட்டு கொழும்புக்கு வந்து இப்ப ஆறு வருடங்கள் கடந்து விட்டது

வாங்கோ தம்பி வேலையள் எப்படி என்றார்.கணேசலிங்கம் மாமா

பிரச்சனையில்லை,உடுப்பை மாத்திப்போட்டு வாறேன் என்றபடி உள்ளே செல்லவும்,பின்னால் வந்த மனைவி உங்களுக்கு எப்படி சொல்லுறதோ தெரியாது மாமா திருமணம் செய்துவிட்டராம் என்றாள்

ஆர்ற்றை மாமா என்று கேட்டபடி நான் திரும்பவும், மகனை போல அவசரப்பட்டுவிட்டார் போல என்று மாமி சிரிக்கவும் உங்கடை அப்பாதான் என்றாள் மனைவி;.

வந்த கோபத்துக்கு என்னடி கதைக்கிறாய் என்று கன்னத்தில் ஒரு அறைவிட்டேன்.

தம்பியின்ரை கோபம் நியாயம்தான், ஆனால் இது காலம் செய்த கோலம் தமபி. மொரட்டுவவுக்கு ஒரு அலுவலாக போகவேணும் நான் வாறேன் என்றபடி கணேசலங்கத்தார் நடையைகட்டினார்..

நான் அறைக்கு வந்து அப்படியே கட்டிலில் படுத்துவிட்டேன்.

தேநீரையையும் ஒரு போடடோபிரதியையும் மேசையில் வைத்த மனைவி,எனக்கு அடிக்கிறதிலை உண்மையை மறைக்கமுடியாது இதைப்பாருங்கோ என்று சொல்லிவிட்டு சென்றாள்.

அப்பாவின் திருமண பதிவுச்சான்றிதழ்பிரதி மணப்பெண்ணின் பெயருக்கு நேரே தமிழ்நிலவன் வானதி விதவை என இருந்தது.

அட எங்கடை செட்டிகுளத்தில் அப்பா இருக்கிற குவாட்டஸ்சுக்கு முன் குடிசைவீட்டில் இருக்கிறவா, அப்பா எந்த விடயங்களையும் நியாயமாக செய்பவர் இதை எப்படி செய்தாhர். இவளவை கதைக்க நல்ல கதை கிடைத்துவிட்டது. ஆனால் அப்பாவும் பத்துநாட்களக்கு முன் நடந்தவிடயததை ஏன் எனக்கு இதுவரை சொல்லவில்லை.யோசித்தபடி கட்டிலில் படுத்திருந்தேன்.

மொபைல் ஒலித்தது

அக்கா கனடாவில் இருந்து, என்ன அக்கா என்றேன் சுரத்தில்லாமல்

என்னடா அப்பா திருமணம் செய்ததற்கு இவ்வளவு அட்டகாசம் இஞசையெல்லாம் இது ஒரு விசயமே இல்லை.அப்பாவும் தனிய இருக்கிறவர். இதுக்கு போய் ஓரு பொம்பிளையை கையை நீட்டி அடிச்சிருக்கிறாய் என்றார்.

இல்லை அக்கா என்னைப்போல அவசரப்பட்டு என்று தொடங்கிவிட்டு அப்பா அப்படி செய்யமாட்டார் அக்கா என்றேன்.

நான் வைபரில் எல்லாம் பார்த்தனான்.நீ சும்மா பிரச்சனையெடுக்கவேண்டாம்,அப்படியொரு விடயம் நடந்தால் சந்தோசம்,கடைசிக்காலத்தில் அப்பாவுக்கு ஒரு துணையாக இருக்குமடா என்றார்.

ம் என்றேன்.

2

1995 வரை யாழ்பாணத்தில் மானிப்பாயில் வசித்தோம்.

எனக்கு பத்து வயது.பாடசாலைகள் நடந்ததும் குறைவு.ஆறுமாதம் தொடர்ந்து ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும்.பிறகு இரண்டாம் மாதம் எடுக்கப்பட்ட கேவியு இன்று முதல் போடப்படுகின்றதுஎன்று வானொலியில் அறிவிப்பார்கள்.தொடர் லீவு என்பதால் எங்களுக்கு கிளித்தட்டு கிட்டிபுல் பேணிபந்து ஒரேகொண்டாட்டம், சுற்றிவர சொந்தக்காரர்கள் வீடுகள்.பொழுதுபோவதே தெரியாது. ஹெலியை கண்டால் யாருடையவீடு என்றாலும் வீட்டுக்கள் ஓடி பின்னர் வெளியே வருவோம்..அம்மா அண்ணா அக்கா நான் வீட்டில் இருக்கும்போது காட்ஸ் விளையாடுவோம்.காட்ஸ்ல் கழுதை விளையாடினால் என்னை கழுதையாக்கி போடுவார்கள். முன்னூற்றிநாலு விளையாடும் போது நானும் அம்மாவும் ஒருபக்கம் அண்ணாவும் அக்காவும் ஒருபக்கம் எனக்கு துரும்பு எண்ணி விளையாடத்தெரியாது.இப்படித்தான ஒருநாள்

குட்டியன் எனக்கு நல்லதாள் நீ கவனமாக விளையாடு என்றார். அம்மா

நான் துரும்பை எண்ணாமல் சும்மா யோசித்துவிட்டு ஆடித்தன் மணலை இறக்குவோம் என்று யோசிக்க

அம்மா உங்களுக்கு தோல்வி என்று அண்ணா சிரித்தான். நான் அம்மாவை பார்த்தேன்.

சாய்மனைக்கதிரையில் படுத்திருந்த அப்பா குட்டியன் மூன்றாவது தாளை இறக்கடா குட்டியன் என்றார்.

இறக்கதாள் சரி நீ கவனமாக காட்ஸை கழித்து விளையாடு என்றார். அம்மாவை பார்த்து

அண்ணாவையும் அக்காவையும் வென்றபின் உங்களுக்க காட்ஸ் விளையாடத் தெரியமா அப்;பா என்றேன்.ஒருநாளும் அப்பர் காட்ஸ் விளையாடினதை நான் காணவில்லை. அன்று அப்பா துரும்பு எண்ணும் முறையையும் கழித்து விளையாடுவதையும் சொல்லித்தந்தார்.அதன் பின் நானும் நன்றாக விளையாடினேன்.

இப்படியே காட்ஸ் விளையாடிக்கொண்டிருக்கும் ஒருநாளில் வீதியில் ஒலிபெருக்கியில் அறிவிப்பு கேட்டது.

அன்பான யாழ் குடாநாட்டு மக்களே எதிரியுடன் பாரிய சண்டை ஒன்று நடைபெறவுள்ளதால் அனைத்து மக்களும் இன்றிரவுக்குள் தென்மராட்சிக்கு இடம்பெயருமாறு கேட்டுக்கொள்கின்றோம். நாங்களும் விளையாட்டை அப்படியே விட்டுவிட்டு எல்லோரும் வீதிக்கு சென்று விடுப்புப்பார்த்தோம்

மக்கள் சாரைசாரையாக சென்றுகொண்டிருந்தார்கள். வீதியில் நின்ற எங்கள் சுற்றுவட்டரா ஆக்கள் எல்லோரும் கூடிக்கதைத்தனர்.

நாளைக்கு நாங்கள் பார்த்துபோவோம்.இந்த மழைக்குள் எங்கே போவது, சாவகச்சேரியில் யாரையும் தெரியாது என்றனர். இப்படியே கதைத்துக்கொண்டிருக்கும்போது

.இன்டைக்கு இரவு பன்னிரண்டு மணிக்கு பிறகு நாவற்குழிப்பாலம் உடைக்கபோறாங்களாம் என்று அப்பாவுடன் வேலைசெய்யும் நண்பர் ஒருவர் தனது வயதுபோன தாயை சைக்கிள் பின் கரியரில் எற்றியபடி செல்லும்போது சொன்னார்.

நாங்கள் வீட்டை போனபோது அம்மா அன்று சங்கடையில் வாங்கிய நிவாரண கடலைப்பருப்பில் வடை சுட்டுக்கொண்டிருந்தார்.

உடனடியாக ஒவ்வொரு சைக்கிள்களிலும் ஏற்றகூடிய பொருட்கள் கட்டப்பட்டது.சொந்தகாரர்கள்; எல்லோரும் ஒன்றாக செல்வதாக கதைத்தனர்.ஆனால் அவ்வாறு மானிப்பாயில் இருந்து யாழ்பாணம் செல்வதற்குள் எல்லோரும் பிரிந்துவிட்டனர் அவ்வளவு சனத்திரள்கூட்டம் மருதடி திருவிழா சனக்கூட்டமே அதிகம் என்று நினைத்த எனக்கு வியப்பாக இருந்தது.நல்லூரில் இருந்து முத்திரைசந்திக்கு நகர்வதற்கு இரவு ஒன்பது மணியாகிவிட்டது.மழையும் தூறத் தொடங்கியது

ஒரு கடைக்குள் ஓதுங்கிவிட்டு செல்வோம் என்றார் அம்மா

ஒம் அம்மா எனக்கும் நித்திரை வருது என்றேன்.

வீதியில் இருந்த வீட்டின் முற்றத்தில் இருந்து கொண்டு வந்த கடலைவடைகளை சாப்பிட்டுவிட்டு விறாந்தையில் படுத்தோம். வ.Pட்டுகாரர்கள் முதலே வெளிக்கிட்டு விட்டார்கள் வீட்டுநாய் மாத்திரம் ஊளையிட்டுக் கொண்டிருந்தது.

எப்படி நித்திரையானோமோ தெரியாது

வீடியற்காலையில் அப்பா எங்களை எழும்புங்கோ எழும்புங்கோ என்றார்.

மழை தூறிக்கொண்டிருந்தது நாங்களும் காலையில் சென்று வரிசையில் இணைந்தோம்.

செம்மணி வீதியெங்கும் ஒரே மக்கள்கூட்டம். எமக்கருகில் நின்ற குடும்பத்தினரில் தண்ணி விடாய்க்குது என்ற கேட்ட ஒரு சிறுமிக்கு அவரது தாயார் ஒருவர் குடையில் மழைநீரை பிடித்துக்கொடுத்தார். நாங்கள் நீண்டநேரம் காத்திருந்துவிட்டு செம்மணிவயல்வெளி சுடலை ஊடாக நடக்கதொடங்கினோம்.அன்று பின்னேரம் கைதடி அடைந்து பிள்ளையார் கோவிலில் தங்கினோம்.

எங்களுக்கு இங்கு தங்க யாரையும் தெரியாது என்ன செய்வோம் என்று அம்மா கேட்டார்.

நாங்கள் கிளிநொச்சி போவோமா என்றான் அண்ணா.

நானும் அப்படித்தான் யோசிக்கின்றேன். என்றார் அப்பா எங்கடை செட்டிமாமா வீட்டுக்கோ போறோம் என்று கேட்டேன்

ஓம் என்றார். எனக்கு சரியான சந்தோசம்.மச்சான்கள் மாச்சாள்களுடன் ஓரே கும்மாளம்தான் என்று நினைத்தேன்.

இரவினை கைதடி பிள்ளையார் கோவிலின் வெளிவீதியில் தங்கிவிட்டு அடுத்தநாள் கிளாலி நோக்கி பிரயாணம் செய்து கரையை அடைந்தோம். இரவு கிளாலி படகுதுறையில் ஒருபடகில் சைக்கிள்கள் உடுப்பு பைகளை ஏற்றினார்கள்.இன்னொரு படகில் எங்களை ஏற்றினார்கள்

குருவிபோட்டுகள் போகும், நேவி வரலாம் ஆனால் யாரும் எழும்பக்கூடாது.அப்படியே இருக்கவேணும்.. யாரும் எழும்பினால் வள்ளம் கவுண்டு கூண்டோடு கைலாசம்தான். என்றான் வள்ளம் ஓட்டி.

நாங்கள் வரிசையாக ஒருபக்கம் இருந்தோம்.கடல்கூதலுடன் வள்ளத்தில் பிரயாணம் செய்தோம்.

தீடிரென கடலில் சண்டை தொடங்கியது. ஓரே வெளிச்ச சிதறல்கள் எனக்கு நடுங்கதொடங்கியதுஅப்பாவை கட்டிப்பிடித்தபடி இருந்தேன். திடிரென ஜயோஅம்மா என்ற சத்தத்துடன் அம்மா கடலுக்கள் விழுந்தார். இரத்த கறைகள் எங்களிலும்பட்டது எல்லோரும் ஜயோ ஜயோ என்று கத்ததொடங்கினர்.அம்மாவை மேலே வரவில்லை. அருகில் படகில் வந்த புலிகள் நீங்கள் போங்கோ நாங்கள் தேடுகிறோம் மிச்சபேரையும் காப்பாற்றவேணும் என்றனர் நாங்கள் வைத்தகண் வாங்காமல் கடலை பார்த்தபடியிருந்தோம். படகு போய்ககொண்டிருந்தது.அம்மா மேலே வரவில்லை பூநகரி நல்லூரில் அம்மாவுக்காக காத்திருந்தோம் ஆனால் அன்று பகல் முழுவதும் அம்மாவை பற்றி எந்த தகவலும் கிடைக்க வில்லை

.மாலையில் வந்த பொறுப்பாளர் நீங்கள் எங்குபோகவேணும் என்று கேட்டார்.

கிளிநொச்சி கனகபுரம் என்றோம்

வாகனம் ஒழுங்கு செய்கிறோம் போங்கோ ஏதும் தகவல் கிடைத்தால் அறிவிக்கிறோம் என்றார்.

நாங்கள் அப்பாவை பார்த்தோம்

நான் நிண்டுபாhர்க்கிறேன். கிளிநொச்சி நீதிமன்ற முன்ஒழுங்கையில் உள்ளே சென்றால் முதலாம் பண்ணையில் வீடு.நீங்கள் போங்கோ என்றார்.

பிரச்சனையில்லை,நீங்கள் கூட்டிக்கொண்டுபோய் விட்டுவிட்டு அந்த வாகனத்தில் திரும்பி வாங்கோ என்றார்.

எங்களை கிளிநொச்சிக்கு கொண்டுபோய் விட்டுவிட்டு அப்பாவும் இன்னொரு உறவினருமாக திரும்பி பூநகரி சென்றனர்

அடுத்தநாள் பின்னேரம் எவ்வித தகவலுமின்றி திரும்பி வந்தனர்.

ஒரு விபரமும் கிடைக்கவில்லை. அப்படியே ஏதும் விபரம் கிடைத்தால் அறியத்ருவதாக தெரிவித்தனர் நாங்கள் வந்தவிட்டோம் என்று உறவினர் தெரிவித்தார்.அப்பா எதுவும் கதைக்காது மௌனமாக இருந்தார்.

அங்கு இருந்த பெரியவர் ஒருவர் செத்தவீட்டை ஜயரைக்கொண்டு செய்வோம் என்றார்.அப்பா அதற்கு சம்மதிக்கவில்லை.இன்னும் கொஞசநாள் பார்ப்போம்.அதைவிட எல்லா சனங்களும் அல்லோகல்லோபடடேக்கை ஒண்டும்வேண்டாம் என்றார்.

அடுத்தநாள் கச்சேரிக்கு அப்பா போனார்.அரசாங்க அதிபரிடமும் தகவல் ஏதாவது கிடைத்ததா என விசாரித்தார்.எந்தவித முன்னேற்றமும் இல்லை.

அடு;த சில நாட்களில் புலிகள் பாஸ் நடைமுறையை தளர்த்தினர் வவுனியாவிற்கு போக விரும்பியவர்களை அனுப்பினார்கள். அப்பா எங்களையும் அழைத்துக்கொண்டு வவுனியா வந்தார்.

வவுனியா வேப்பங்குளம் நலன்பரி முகாமில் வந்தவர்களையும் எங்களையும் தங்க வைத்தனர்.

நான் நாளைக்கு வவுனியா கச்சேரிக்கு போட்டு வாறேன் என்றார் அப்பா

ஏன் என்று அண்ணா கேட்டார்.

எப்படி எங்களை விடுவாங்கள் என்று கேட்டேன்.

முன்று மணித்தியால பாஸ் தருவாங்கள் போய் சந்தித்து இங்கு வேலையை மாற்றமுடியுமா என பார்ப்போம் அல்லது யாழ்ப்பாணம் செல்வதற்கு கப்பலுக்கு பதிவோம் என்றார்.

யாழ்ப்பாணத்துக்கு போவதற்கு பயமில்லையா என்று அக்கா கேட்டடர்

இடமாற்றம் சரிவரும் என்றால் இங்கு தங்குவோம் இல்லாவிட்டால் என்ன செய்வது, இந்த முகாம்களில் தங்கி சீரழிய முடியாது என்றார்.

அப்பா சென்ற பின்னர் மூன்று மணித்தியாலத்தில் மீள திரும்பி வருவதற்காக காத்திருந்தோம்

அப்பாவை காணவில்லை.

மூன்று மணித்தியாலத்துக்குள் திரும்பி வராவிடின் அடுத்த ஒரு கிழமைக்கு பாஸ் பொலிஸ்நிலையத்தில் எடுக்கமுடியாது என எமக்கு பக்கத்தில் இருந்த ஒருவர் தெரிவித்தார்.

அப்பாவுக்கு நேரத்துக்கு வரவேண்டும் என்று தெரியுமென்றார் அண்ணா.

அப்போது அங்கு வந்த கிராம சேவையாளர் ஒருவர் அப்பா பெயரைக் கேட்டுவிட்டு கச்சேரியில் நிற்கிறார்.லேற்றாகும் வர என்றார்.

இங்கு முன்று மணித்தியாலத்தில் வராவிடின் பிரச்சனையில்லையோ என்று கேட்டோம்.

இல்லையென்றார்..அவர் கச்சேரியில் நிற்பதால் பிரச்சனையில்லை.நான் பொலீஸ்க்கு தகவல் சொல்வேன் என்றார்.

மாலையில் அப்பா அரச வாகனம் ஒன்றில் வந்திறங்கினார். முன்சீற்றில் இருந்து இறங்கிய அரச அதிகாரி அப்பாவையும் கூட்டிக்கொண்டு பொலீஸ் பிரிவில் சென்று கதைத்தனர். பின்னர் அப்பா எங்களிடம் வந்து உடுப்பு பைகள் ஏனையவற்றையும் எடுக்குமாறு கூறினார்.

ஏன் அப்பா என்று அண்ணா கேட்டான்.

நாங்கள் செட்டிகுளம் போவோம் என்றார்.

அப்ப பொலீஸ் விசாரணைகள் இல்லையோ என்றாள் அக்கா.

இல்லை .யாழ்ப்பாணத்தில் ஏ.ஜீ.ஏ கடமையாற்றியவர் இங்கு அரசஅதிபராக கடமையாற்றுகின்றார். செட்டிகுளம் பிரதேச செயலகத்துக்கு இடமாற்றத்தினை பகஸ் இல் எடுத்து தந்ததுடன் வவுனியா சிரேஸ்ட பொலீஸ் அதிகாரியுடன் தொடர்பு கொண்டு முகாமில் இருந்து வெளியேறவும், பேர்மனன்ற் பாஸ்க்கும் ஒழுங்கு செய்துள்ளார் என்றார்.

செட்டிகுளம் கொஞ்சம் பயமென்றார் பக்கத்தில் இருந்தவர்.

குவாட்டர்ஸ்ம் இருக்கு போட்டு பிறகு பார்ப்போம் என்றார் அப்பா

3

நித்திரையால் எழும்பி வெளியெ பார்க்கிறேன்.இரவு மழை பெய்தது கூட தெரியவில்லை அப்படி நித்திரை கொண்டிருக்கிறேன.;.காலைச் சாப்பாட்டுன் ஒருவர் வந்திருந்தார்.

ஏ.ஜிஏ சாப்பாட்டினை உங்களிடகொடுக்கட்டாம் என்றார்.தம்பி உங்களுக்கேன் கரைச்சல் நாங்கள் பாண் வாங்கியிருப்போம் என்றார் அப்பா. இங்கு மாலைநேரத்தில் மட்டுமதான் பாண் மாங்குளத்தில் இருந்து வரும் என்றார்.

மாங்குளமோ என்றான் அண்ணா

நீங்கள் நினைக்கிற அந்த மாங்குளம் இல்லை இது செட்டீகுளத்திற்கு அருகில் உள்ள ஊர் என்றார்.நான் பிரதேச செயலகத்தில் பீயோனாக இருக்கிறேன் என்று கதைத்துக்கொண்டிருக்கும் போது பிரதேச செயலாளரின் வாகனம் வந்தது

இனி நாங்கள் சமைப்போம் சேர்.சாப்பாடு ஒன்றும் அனுப்பவேண்டாம் என்றார் அப்பா

உங்களுக்கு இவ்வளவு ஒழுங்கையும் செய்யச்சொல்லி அரசாங்கஅதிபர் நேற்று எனக்கு ரெலிபோனில் சொன்னவர்.இல்லாட்டியும் எங்களுக்கு வாற எ.ஒ உங்களுக்கு செய்தால் என்ன, இரவு தான் உங்கடைய மனைவி இழப்பு தொடர்பில் தெரியும,; என்னடைய கவலைகளையும் தெரிவிக்கிறேன் என்றார்.அப்பா விரக்தியாக சிரித்தார்.உங்களுக்கு என்னை அறிமுகப்படுத்த வில்லை நான் முஸமில் பிரதேச செயலாளர் இப்ப இடம்பெயர்ந்து இருக்கிறது புத்தளம் முதல் மன்னாரில் இருந்தேன் என்றார்.

நீங்கள் முஸ்லீமோ என்று கேட்டார்.அப்பா சிரித்தபடி ஆம் என்றார். பின் அவர்கள் அலுவலக கதைகளில் ஈடுபட்டனர்.எனக்கு இன்றைக்கு ஒருநாள் லீவு வேணுமென்றார்.

ஒரு பிரச்சனையும் இல்லை நீங்கள் குவாட்டர்ஜையும் ஒழுங்குபடுத்திப்போட்டு ஆறதலாக வேலைக்கு வரலாம் என்றார்.

செட்டிகுளம் காடுகளால் சூழப்பட்ட ஊர், ஒவ்வொரு கிராமத்துக்கும் குளங்களால் வைக்கப்பட்ட பெயர்கள். தடக்கி வழுந்தால் ஒரு குளத்தில்தான் விழவேணும் அப்;படி குளங்களால் நிறைந்த ஊர் குரங்குகள் மான்கள் யானைகள் மயில்களை அடிக்கடி காணலாம்

ஏ.எல.; கணிதம் படித்த அக்கா தான் தொடர்ந்து படிக்கமர்ட்டேன் என்றாள். கணிதபாடம் செட்டிகுள பாடசாலையில் இல்லை. இனி வவுனியாவுக்கு சென்றும தொடர்ந்து படிக்கவும் சம்மதிக்கவில்லை.

ஏன் என்றார் அப்பா.

கொப்பிகள் புத்தகங்கள்எல்லாம் விட்டுவிட்டு வந்து விட்டோம் இனி எப்படி படிக்கிறது.தம்பியவை படிக்கட்டும் என்றாள். அப்பா எவ்வளவு சொல்லியும் அக்கா கேட்கவில்லை.

அண்ணாவையும் என்னையும் செட்டிகுளம் பாடசாலையில் சேர்த்தார்.காலப்போக்கில் நகர வாழ்கையில் இருந்து கிராம வாழ்ககைக்கு மாறத்தொடங்கினோம்.மான் இறைச்சி மலிவாக கிடைத்தது.தேன் பால் எல்லாம் விரும்பியளவு சாப்பிட்டோம். கனடாவில் இருந்த மச்சானுக்கு அக்காவை சமபந்தம் பேசி அனுப்பினார்.யுத்த சூழ்நிலையால் அண்ணாவும் படிப்பை இடையில் நிறுத்திவிட்டு லண்டனுக்கு சென்றுவிட்டான்.நானும் அப்பாவும் தொடர்நது செட்டிகுளத்தில் இருந்தோம்.நான் ஏ.எல் வர்த்தகம் படித்து 2005ல் யாழ் பல்கலைகழகம் கிடைத்து அப்போது யாழ்ப்பாணத்தில் பிரச்சனைகள் கடுமையாக இருந்ததனாலும்,கப்பல் பிரயாணம் என்பதனாலும் யாழ்ப்பாணத்துக்கு மீள குடியேற யோசிக்கவிலலை. செட்டிகுளம் ஒரளவு வசதியாக இருந்தது.அத்துடன் யாழ்பாணத்தில் சொந்தங்களும் பெரிதாக மீளகுடியேறவில்லை.

4

வவுனியாவில் இருந்து திருகோணமலைக்கு செல்வதற்கிடையில் பதினைந்து செக் பொயின்றில் இறங்கி ஏறவேண்டும்.நண்பர்களுடன் செல்வதால் அலுப்பு தெரியாது,பம்பலாக் கதைத்துக்கொண்டு செல்வோம். இப்படித்தான் சிற்றி ஒவ் றிங்கோ கப்பலில் யாழ் செல்வதற்காக ஏறியிருந்தோம் இரவுதான் கப்பல் வெளிக்கிடும்.ஆனால் கப்பலில் மத்தியானமே ஏற்றிப்போடுவார்கள் இரவுவரை காத்திருக்கவேண்டும். அந்த நேரத்தில் போக்க எல்லோரும் கும்பலாக இருந்து சிரித்து கதைத்துக் கொண்டிருந்தோம்.புதுக்குடியிருப்பில் இருந்து வந்த நண்பன் சங்கர் தான் எங்களுக்கு புலிகளின் உத்தியோகபூர்வ பேச்சாளர்.நக்கல் நையாண்டி கதைகாறன்.

இந்த கிழமைக்குள் கடலில் சண்டை நடக்குமென்றான்

டேய் நாங்களும் போறோம் எண்டு தெரியுமா

சங்கர் போறதெண்டபடியால் எங்கடை கப்பலுக்கு அடிக்கமாட்டான் என்றான் . இன்னொருவன்

அடிக்கவந்தாங்கள் என்டால் இவனை தூக்கி கடலுக்கை போடுவோம் விட்டு விட்டு போய்விடுவாங்கள் என்றாள்;.பெண்கள் அணியில் ஒருத்தி

இன்று காலை நடந்த சங்கரின் புதினம் தெரியுமொ என்றேன்.

என்;ன கதை சொல்லடா.இரவு குடித்த பியரை சத்தியெடுத்துவிட்டானோ என்றனர்.

இல்லை விடிய நாலுமணிக்கு சங்கர் என்னை எழுப்பி பாத்துர்றுமில் தண்ணியில்லை,நான் தொட்டிககுள் கிடந்த கொஞ்ச தண்ணியில் முகம் கழுவிப்போட்டேன்.நீயும் கழுவடா என்றான்

நான் முகம் கழுவபோய் பார்த்தால் கொமோட்டை காட்டுறானடா என்றேன்.

ஜயோ எனக்கு சத்தி வருது என்றபடி எழுந்துநின்று சிரித்தாள். ஒருத்தி

ஆனால் சங்கரோ,அசராது உங்களில் ஆர் ஆர் கர்ப்பம் என்று இரவுக்குள் தெரியுமென்றான்.

ஏன் நீ என்ன மாட்டு டாக்குத்தரோ எங்கடை ஊரில் அவர்தான் மாட்டை பார்த்து எத்தனை மாதம் என்று சொல்வார் என்றாள்.ஒருத்தி

சத்தி வருகுது என்று எழும்பியவளை காட்டி இவள் கர்ப்பம் மிச்சபேரை இரவுக்குள் தெரியுமென்றாள்.

எல்லா பெண்களும் யோசிக்க

எடி இவன் சத்தியெடுக்கிறதை சொல்லுறானடி,அப்ப எல்லாருக்கும் கப்பல் ஒனரோ புருசன் என்று ஒருத்தி கேட்டாள்..

எல்லாரும் சிரித்தபடியிருக்க திவியா என்னை பார்ப்பது தெரிந்தது.அதுதான் எமது முதலாவது தொடர்பாக அமைந்தது.தொடர்நது பல்கலை காதலராக நாம் பதிவு செய்யப்படும் அளவுக்கு எமது காதல் எல்லோருக்கும் தெரிந்திருந்தது.

உப்படி திரிந்தால் கெதியாக குடும்பகாட் போடவேண்டும் என்று சங்கர் எப்போதும் நக்கலடிப்பான்.ஒரு மாதிரி பல்கலைகழக படிப்பு முடிந்து வீடு திரும்பினோம்.

5

2009 யூனில் படிப்பு முடிந்து செட்டிகுளம் நான் வந்து அப்பாவுடன் குவாட்டஸில் இருந்தேன்.யுத்தத்தினை முள்ளிவாயக்காலில் முடித்து, முழுமக்களையும் செட்டிகுளம் மெனிக்பாம்முகாமுக்கு கொண்டு வந்தனர். நானும் அப்பாவுடன் முகாம் வேலைகளுக்கு சென்றுவந்தேன்.ஒரு மாதத்தில் திவியா ரெலிபோன் எடுத்து தனக்கு மாத சுகவீனம் வரவில்லை என்றாள்.நான் அப்படியே பொத்தென்று இருந்துவிட்டேன்.எல்லாம் கடைசியாக வரமுன்னர் நடந்த கூத்து

அன்று பகல் முழுவதும் சாப்பிடாது கட்டிலில் படுத்திருந்தேன்.எப்படி அப்பாவிடம் சொல்வது,என்ன நினைப்பார் என்னை பற்றி என யோசித்தேன். மூன்றுமணிபோல வந்த அப்பா

ஏன் சாப்பிடவி;ல்லை

ஓரே தலையிடி அப்பா பிறகு சாப்பிடுகின்றேன் என்றார்.

காயச்சலும் காயுதோ, முகாம் வேலை என்று ஓரே அலைச்சல்தானே பெவயில் வெக்கையும் அதுதான் ஒத்துக்கொள்ளவில்லை போலும்.

இரவும் சாப்பிடாது படுத்திருந்தேன்.இந்த கதைகளை எப்படிச் சொல்வது அப்பாவிடம்,என்ன நினைப்பார் என்று யோசித்தேன். இதைவிட சாகலாம். யோசிக்க யோசிக்க வெக்கமாகவிருந்தது

நேரத்தை பாhத்தேன். இரவு பதினொரு மணி

என்ன பிரச்சனை முகம் உப்படி வெளிறிக்கிடக்குது என்றபடி அப்பா நின்றார்.

கதைகளைக் கேட்ட அப்பா நீ இந்கை கூட்டிவா பதிவுத் திருமணம் செய்வோம் என்றார்.பிறகு யோசித்துவிட்டு ரெலிபோன் நம்பர் வீட்டு விலாசத்தை தா நான் நாளைக்கு ஒருக்கா கதைக்கிறேன் என்றார்.

6

வாகனத்தின் ஹோன் ஒலி தொடர்நது கேட்டது. நேரத்தை பார்ததேன் பகல் பத்துமணி, இவ்வளவு நேரமும் நித்திரை கொண்டிருக்கிறேன். வெளியே எட்டிப்பாhத்தேன்

பிரதேச செயலாளரின் வாகனம் நின்றது

கதவைத்திறந்து நான் கேற்றடிக்கு சென்றேன்

என்ன பிரச்சனை, ஏன் அப்பா வவுனியா போறார். என்று பிரதேச செயலாளர் கேட்டார்.தலையை சொறிந்தபடி நின்றேன்.

விடிய ஒவ்விஸ்க்கு வந்து லீவை போட்டுவிட்டு கனகசபை ஜீ.எஸ் உடன் மோட்டார் சைக்கிளில் ஏன் வவுனியா போறார்.அவ்வளவு அவசரமென்றால் மற்ற வாகனத்தை கொண்டு போயிருக்கலாம் என்றார்.நான் சிரித்தபடி நிற்க வாகனத்தின் பின்னால் இருந்தவர்

ஜி.எஸ்க்கு ஏதும் பிரச்சனை போல அதுதான் ஏ.ஓவை கூட்டிக்கொணடுபோறார் என்று நினைக்கிறேன் சேர் என்றார்.

அப்பா வந்தால் காணி பைல்களை கேட்டான் என்று சொல்லுங்கோ என்றுவிட்டு சென்றுவிட்டார்.

பதினொரு மணிபோல திவியா ரெலிபோனில்

அப்பாவும் இன்னொருவரும் வந்தவர்கள் அப்பாவுடன் கதைத்தனர். அடுத்த முகூர்த்ததில் சிம்பிளாக திருமணம் செய்வது என்று தீர்மானித்துள்ளனர் எங்கடைஅப்பா சீதனங்கள் பற்றி கேட்க சிரித்தபடி திருமணத்தை செய்வோம் என்றவர் என்றாள்.

அப்படியே வேலைக்கு போட்டு பின்னேரம் வந்தவர்,வாற இருபத்தொராம் திகதி நல்லநாள் கோயிலில் ஒரு தாலிகட்டும் வீட்டில் சாப்பாடும் என்றார். நான் இப்படி திருமணம் செய்து உங்களை அவமானப்படுததிப்;போட்டேனா அப்பா என்றேன்.

அந்த கதையளைவிட்டுட்டு கலியாண அலுவல்களை பார் என்றார்.

அடுத்த ஆறுமாதத்தில் குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் பரீட்சை எழுதி கஸ்ரம்ஒவ்விசர் (சுங்க அலுவலர்)வேலைகிடைத்து குடும்பத்துடன் கொழும்பு வந்து இந்த வருடத்துடன் ஆறு வருடங்கள் கடந்துவிட்டது.அம்மாவின் திவசத்துக்கும் நீண்டகால விடுமுறைக்கும் செட்டீகுளத்துக்கு செல்வேன்.ஒவ்வொருகிழமையும் அப்பாவுடன் ரெலிபோனில் கதைப்பேன்.ஆனால் இப்படியொரு விடயத்ததை அப்பா போன ஞாயிற்றுக்கிழமையும் கதைக்கும் போதும் சொல்ல வில்லை.நானும் கேட்கவில்லை.

மாமி நக்கல்மாதிரிதானோ, .ஏன் அப்பா சொல்லவில்லை என்று யோசித்தேன் ஆனால் அப்பாவை என்னைப்போல யோசிக்க என்னால் முடியவில்லை.

|போன் ஒலித்தது. நம்பரை பாhத்த மனைவி மாமா எடுக்கிறார் என்றாள்.

புதன்கிழமை எனக்கு லீவு.ஆனால் அப்பாவுக்கு பிரதேசசெயலகத்தில் அமளிதுமளியான நாள்.என்ன இன்றைக்கு எடுக்கிறார் என்று யோசித்தபடி சொல்லுங்கோ அப்பா என்றேன்.

நாளைக்கு கொழும்பு வாறேன். நாளை இரவு வீட்டை வருவேன்.உன்னுடனும் சிலவிடயங்கள் கதைக்கவேண்டும் என்றார்.

வாங்கோ அப்பா என்றேன்.

ஏன் இன்டைக்கு ஓவ்வோ என்றார்.

நேற்று இரவும் டியுட்டி செய்தனான்,அதுதான் என்றேன்.

சரி என்று வைத்துவிட்டார்.

பாhத்துக்கொண்டிருந்த மனைவியிடம் அப்பா நாளைக்கு இரவு வாறார் என்றேன்.அன்றைய சண்டையால் மனைவி வேறு ஏதுவும் கேட்கவில்லை.இல்லாவிடின் தனியாகவா குடும்பமா என்று கேட்டிருப்பாள்

.அப்பா இரவு எட்டுமணிக்கு வீட்டை வந்தார்.

பிரதேசசெயலாளருடன் அமைச்சு கூட்டத்துக்கு வந்ததனான் நாளையுக்கும் சுகாதார கூட்டம் இருக்கு என்றார்.பின் முகம் கழுவி உடுப்பை மாத்திவிட்டு மகனுக்கு வீட்டுபாடம் செய்;ய உதவி செய்தார்.

தாத்தா உங்களுக்கு அப்பாவை விட நல்ல மூளை வடிவாய் சொல்லித் தாறீங்கள் என்னோடை இருந்கோ என்றார். பென்சன் எடுத்துவிட்டு பிள்ளையோடைதான் இருப்பேன் என்றார்.மாமி நமட்டுசிரிப்புடன் செல்வது தெரிந்தது.

மனைவி ஒன்பதுமணிபோல மாமா சாப்பிடவாங்கோ என்று அழைத்தாள்.எல்லோரும் ஒன்றாக சாப்பிடுவோம் என்றார் அப்பா.சாப்பிடும்போது எனக்கும் டிசம்பருடன் பென்சன் அதற்கு பிறகு உன்னோடைதான் இருக்கப்போறேன் என்றார்.

எங்களுக்கு நல்லசந்தோசம். மாமா என்றாள் மனைவி

அதைவிட முன்வீட்டு வானதியை பதிவுத்திருமணம் செய்துபோட்டேன்.எல்லோரும் ஒரே நேரத்தில் அப்பாவை திரும்பி பார்க்க

போராட்ட காலத்திலும் எதுவும் செய்யவில்லை.கடைசி போராட்டத்துக்கு விலைகொடுத்த ஒரு குடும்பத்துக்கு என்னால் செய்யகூடிய உதவி. அந்த குடும்பம் வாழ என்ரை பென்சனை கொடுத்துப்போட்டேன்.இனி நீ எனக்கு செலவுக்கு காசு தரவேண்டும் என்றார்

மனைவி மாமி வாயடைத்து பாhத்தபடி நிற்க எனக்கு அப்பா வானளாவ வளர்வது போல தெரிந்தது.அந்த உயரத்துக்கு இடியப்பத்தை எறிந்து வாயால் பிடிக்கவேண்டும் போல மகிழ்ச்சி மனதில் தோன்றியது.மிகச் சத்தமாகவும் சந்தோசமாகவும் ஒம் அப்பா என்றேன்.

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *