Saturday, February 24, 2018

.
Breaking News

பெண்குலம் காக்கும் தேவதைகள்! … } -சங்கர சுப்பிரமணியன்.

பெண்குலம் காக்கும் தேவதைகள்! … } -சங்கர சுப்பிரமணியன்.

அவளோ அவனுக்கு ஊருமில்லை உறவுமில்லை

பள்ளியிலோ கல்லூரியிலோ உடன் படித்த தோழியில்லை
பயணத்தில் எங்கும் உடன்வந்த துணையுமில்லை
அலுவலகத்தில் அவனுடனே பணிபுரிந்தவளும் அல்ல
வாலிப முறுக்கேறி அவனும் வலம் வந்தகாலமதில்
வாடா போய் வரலாம் ஓரிடமும் என்று
அவன் நண்பன் அழைத்திடவே
வார்த்தை ஏதும் பேசிடாது அவன் அழைப்பிற்கு இசைந்து போனான்
விளையாடச் சென்றாலும் உடன் செல்வான்
வெள்ளித்திரை படம்காண உடன்போவான்
வீதியிலே நின்று வீண்கதை பேசிடவும்  உடன் இருப்பான்
ஆதலினால் சென்றுவிட்டான் அவன் அழைத்ததும் மறுக்கவில்லை
அங்கே சென்ற பின்னே அவனறிந்தான் அதுவேறுலகென
பட்டாம் பூச்சிகளாய் பலவிதமாய் பாவையர்கள்
கிட்டவந்து நின்று கிலுகிலுப்பை ஊட்டினாலும்
எட்டி எட்டிச்சென்றான் இயல்பான கூச்சத்தினால்
தூரவே சென்றாலும் துரத்தியே அவளும் வந்தாள்
வந்தவளும் அங்கொரு தனி அறைக்கு இழுத்துச் சென்றாள்
திரும்ப வந்தவனோ தெளிவுடனே
நண்பனிடமும் சொன்னான்
அங்கு வர அந்நங்கையர்க்கு காரணங்கள் பல இருந்தாலும்
அங்கு வருபவர்கள் அவர்களை என்ன பெயரிட்டு அழைத்தாலும்
இங்கே வந்தபின் ஒன்றை நான் உணர்ந்து விட்டேன்
சமுதாயச் சந்தையிலே தறிகெட்டு அலையும் ஆண்கள் சிலரால்
அச்சமுதாயப் பெருங்கடலில் உலவிவரும் பெண்களில் சிலரையேனும்
சீரழிவின் விளிம்பிற்கு செல்லாது காத்துநிற்கும்
சீர்மிக்க கவசம் என்று சொல்லவும் நான் தயங்கமாட்டேன் என்றான்
புத்தருக்கோ போதிமரம்
நண்பனுக்கோ இந்த இடம்
தந்ததுவே ஞானம் என்பதால்
பெண்களை தெய்வம் என்று பெரிதாய் போற்றும் நாட்டினிலே
பெரிய பெரிய கடவுளரெலாம்
பெருகி நிற்கும் இந்நாட்டினிலே
சிறிது சிறிதாய் கிராம தேவதையரும் இருப்பதைப்போல்
இங்கே இப்பெண்டிரும் ஒருவகையில் தேவதைகளே என
சொல்லிச் சொல்லி மாய்ந்து போனான்
இப்படியொரு இடம் இங்கே இருக்கையிலே
ஏன் இங்கே மாந்தருமே ஏற்கத்தகா
செயல்கள் செய்கின்றாரென்றான்
மற்றவர் அவர்களை எப்பெயர் சொல்லி அழைத்தாலும்
ஆண்களுக்கு வேண்டுவதை அவர்கள்
காணிக்கை பெற்று கொடுத்தாலும்
காணிக்கை  எதுவும் பெறாது
மறைமுகமாய் பெண்களை காக்கும் அவர்கள் என்றுமே இனி எங்கும்
பெண்குலம் காக்கும் தேவதைகளே என்றான்!
– சங்கர சுப்பிரமணியன்.

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *