Thursday, January 18, 2018

.
Breaking News

கிரகப் போர் (பகுதி:1) … } „காசியரின் பேரன்.

கிரகப் போர்     (பகுதி:1) … } „காசியரின் பேரன்.
„விடிஞ்சு பத்து மணியாச்சு இந்த மனுசன் படுத்துக் கிடக்கு, இஞ்சருங்கோ எழும்பி தேத்தண்ணி குடிச்சிட்டு போய் சந்தையிலை மரக்கறியும் மீனும் வாங்கிக் கொண்டு வாங்கோ காலைமையிலையிருந்து நாயாய்ப் பேயாய் கத்திறன் காதிலை விழுந்தால்தானே’ கணவன் பரமசாமிக்கு இடியப்பமும் சொதியும் சமைத்து வைத்துவிட்டு கிழிந்த சட்டையை தைத்தபடியே கணவன் படுத்திருந்த அறையை நோக்கி குரல் கொடுத்து எழுப்பிக் கொண்டிருந்தாள் கனகசுந்தரி. மனைவி சத்தம் போட்டுக் கொண்டிருப்பதைக் கேட்டுக் கொண்டே மறுபக்கம் திரும்பிப் படுத்த பரமசாமி „இந்த மனுசியாலை பெரிய கரைச்சல் சனி ஞாயிறுகளிலாவது நிம்மதியாக நித்திரை கொள்ள விடுதே எப்ப பார்த்தாலும் பழஞ்சீலை கிழிஞ்ச மாதிரி யொஞ்யு….யொஞ்யு என்று’ மனைவிக்கு கேட்காதவாறு முணுமுணுத்தபடி „இஞ்சரப்பா இப்ப ஏன் சத்தம் போடுறாய் கொஞ்சம் நித்திரை கொள்ள விடு’ என்றன்.
தெருவில் பெரும் ஆராவராமாகவிருக்கின்றது. தெருவில் அங்குமிங்குமாக நடந்தபடியும் சைக்கிளிலும் கார்களிலும் போவோராலும் வருவோராலும் தெரு சந்தடியாகின்றது. யன்னலால் எட்டிப் பார்த்த கனகசுந்தரி தைத்த சட்டையை அப்படியே போட்டுவிட்டு கணவனை கட்டிலிலிருந்து தள்ளிவிழுத்தாத குறையாக உசுப்பி எழுப்புகிறாள்’ இஞ்சரப்பா எழும்பிப் போய் தெருவிலை என்ன நடக்குது என்று பாருங்கோ….. ஒரு கைத்தொலைபேசியாவது இருந்திருந்தால் சாராதாவிற்காவது ரெலிபோன் பண்ணி என்ன ஆரவாரம் என்று கேட்கலாம். உங்களுக்கு வாழ்க்கைப்பட்டு என்னத்தைக் கண்டன் ஒரு ரிவி இருக்கா, வீட்டுத் தொலைபேசி இருக்கா இல்லை கைத்தொலைபேசிதான் இருக்கா, கலியாணம் செய்து இரண்டு வருசமாச்சு இதிலை எதையாவது வாங்கியிருக்கியளா’ என்ற சுந்தரியை இடைமறித்து நான் „இஞ்சை எப்ப பார்த்தாலும் கல்லுப் போட்டு குலுக்கிய குடமாகக் லொடுக்கு லொடுக்கு என்று கத்தாதை என்று ‘ நான் சொல்ல „ஓகோ இப்ப நான் கல்லுப் போட்ட குடம் மாதிரிப் போனனாக்கும் கலியாணம் செய்த புதுசிலை நான் குத்துவிளக்கு நிறைகுடம் இப்ப கல்லுப் போட்ட குடமாகிப் போனன்  எல்லாம் என்ரை தலைவிதி’ சுந்தரி சொன்னதை காதில் விழுத்தாமல் எழுந்து போய் குளித்துவிட்டு சாப்பிட்டுவிட்டு என்ன நடக்குது தெருவிலை என்று யோசித்தவாறு வெளிச் சுவரோடு சாத்தி வைச்சிருந்த சைக்கிளை எடுத்த நான்  தெருவோர வீடுகளின் முன் படலையடியில் நின்றவாறு எல்லோரும் கைத்ததொலைபேசி எண்களை விரல்களால் அமத்தியவாறு வானத்தை அண்ணாந்து தீராத கவலை முகத்துடன் பாரத்துக் கொண்டிருப்பதைப் பார்த்ததும் ஏதோ பாரதூராமாக நடந்திருக்கு போல என்று நானும் வானத்தை நல்லாத் தலையைச் சுற்றி சுற்றி அண்ணாந்து பார்த்தேன். மேகம் எதையுமே வானத்தில் காணவில்லை. பளிச்சென்று நீலநிறமாக இருந்தது.
எனக்கு பரமசாமி என்று பெயரென்றாலும் ஊருக்குள்ளை எனக்கு பிபிசி, சிஎன்என், சாமிசன்னதம் என்ற செல்லப் பெயர்கள் உண்டு. என்னுடைய கொள்ளுப்பேரன் ஓடிய றலி சைக்கிளை இவ்வளவு காலமும் கவனமாக நான் பாதுகாத்து இங்கும் அதிலைதான் ஓடிக் கொண்டிருக்கிறன்.ஊரிலிருந்து இங்கை அந்தச் சைக்கிளை நான் பார்சலில் எடுக்கப்பட்டபாடு ஒரு சைக்கிள் கடையையே வைச்சுக்கக்கூடிய  பாடு.
சைக்கிள் செயினுக்கு எண்ணைவிட்டால் வீண் செலவென்று எண்ணையும் விடுறதில்லை.அதாலை என்ரை சைக்கிள் தெருவிலை இறங்கிவிட்டதென்றால் செயினின் கர்ர்ர்ர்றாபுர்ர்ர்றாச்  சத்தத்தால் ஊருக்கே  தெரிந்துவிடும் சாமி புறப்பட்டுவிட்டார் என்று. வாலைச்சுருட்டிக் கொண்டு தன்பாட்டிற்கு படுத்திருக்கும் நாய்கள் என்ரை வாகனச் சத்தத்தால் மிரண்டு ஏதோ தங்களுக்கு பிரச்சினை வரப் போகுதுதெண்டு என்னைத் துரத்த என்ரை சைக்கிள் ஓடினால்தானே நான் வேகமாக ஓட. ஐசக்கிளை இறங்கி நாய்களை திரத்திப் போட்டு நான் போக எனக்கு கேட்காது என்ற நினைப்பில் சாமி சைக்கிளில் சன்னதமாட வெளிக்கிட்டடிட்டு என்று சிலரும் அங்கை பார் பிபிசி வருது என்று சொன்னவனும் சிஎன்என் வருது என்று சொன்னவனும்  அவர்களுக்கு கிட்டப் போனதும் வணக்கம் பரமண்ணை எப்படி இருக்கிறியள் என்று பிபிசி என்று சொன்னவனும் சாமியண்னை „இப்பத்தான் உங்களை நினைச்சம் நீங்கள் வந்திட்டியள்’ என்று சொல்ல நானும் எழுச்சிமலையானே எல்லாம் உன்ரை திருவிளையாடல் என்றபடி சைக்கிளை உருட்டிக் கொண்டு நடக்கிறன்.
எல்லாற்றை கையிலும் கைத்தொலைபேசி இருக்கு ஆனால் எல்லாற்றை முகத்திலையும் ஒரே சோகம்.சிலர் இலக்கங்களை அமத்துவதும் மேலே அண்ணாந்து வானத்தைப் பார்த்தபடி இருக்க எனக்கு மனம் கேட்கவில்லை, ஒரு ஆளுக்கு கிட்டப் போய்’ ஏன் எல்லாரும் சோகமயமாய் இருக்கிறியள் ஒருத்தற்றை முகத்திலையும் சிரிப்பைக் காணலை, யாராவது முக்கிய தலைவர் போயிட்டாரோ இல்லாட்டி யாராவது நடிகர் நடிகைகள் அவுட்டோ’ என்று கேட்டன். அந்தாள் என்னை முறைச்சுப் பார்த்திட்டு „தலைவர் கிலைவர் செத்தால் எங்களுக்கென்ன நடிகர் கிடிகர் நடிகை கிடிகை செத்தால் எங்களுக்கென்ன அதைவிடப் பாரதூரமான பிரச்சினை அதுதான் கவலை’என அந்தாள் சொல்ல,’ தம்பி அப்பிடி என்னப்பு பிரச்சினை என்றேன்’ அவரோ „அதெல்லாம் உங்களுக்குப் புரியாது இது இன்ரநெற் சமாச்சாரம் „ எனச் சொல்ல,’வெறும்புளி தனைத் திண்று வீணாக நாக்கெரிந்து வரும் பயன் எதுவும் இல்லை’என்று அப்பர் சொன்னது நினைவுக்கு வர அவரிட்டை கேட்டு நடக்கப் போகிற காரியம் எதுவும் இல்லை என்றபடி சைக்கிளை உருட்டிக் கொண்டு சந்திக்கு போனன்.
சந்தியிலை ஒரே சனம். கோப்பிக்கடைக்கு உள்ளேயும் வெளியேயும் ஒரே சனம். இன்ரநெற் கடைக்கு உள்ளேயும் வெளியேயும் சனம். ஆள் மாறி ஆள் „என்னவாம் ஏதாவது தகவல் கிடைச்சுதா’ எனக் கேட்க’ ச்சா ஒன்றுமில்லையடா மச்சான்’ என்று பொடியள் சொல்ல’ என்ன வாழ்க்கையடா இது இன்ரநெற் வேலை செய்யுதில்லை பேஸ்புக்கில்லை ருவிற்றர் இல்லை நிம்மதியே போய்விட்டுது எங்கையாவது ஆத்திலை குளத்திலை விழுந்தோ இல்லாட்டி எக்ஸ்பிரஸ் றெயினிலை விழுந்தோ செத்துப் போகலாம்’ என்று பொடியள் சோகமாகச் சொல்ல நான் உண்மையிலை திகைச்சுப் போயிட்டன். தற்கொலை செய்யுமளவிற்கு இன்ரநெற் அப்பிடி ஒரு பிரச்சினையோ என்று நினைச்சபடி பொடியளை ஒரு நோட்டம் விட்டன் பெரும்பாலும் எல்லாற்றை விரலிலும் சிகரட். ஊதித்தள்ளிக் கொண்டேயிருந்தார்கள். அடிக்கொரு தரம் „என்ன வாழ்க்கையடா இது தண்ணி சாப்பாடு வீடில்லாமல் கூட இருக்கலாம்……என்ன வாழ்க்கை இது’ என்று புலம்பிக் கொண்டேயிருந்தார்கள். இந்தச் சோகத்திலையும் பொடியளுக்குள் யாரோ ஒருத்தன் „அண்ணை பிபிசி அண்ணை இன்றைக்கு சாமி சன்னதமாடலையோ’ எனச் சொன்னது கேட்டுது குரல் வந்த திசையைப் பார்த்தேன் யாரென்று தெரியேலை.
கோப்பிக் கடைக்குள் நுழைஞ்சன். கோப்பி குடிச்ச சிலரும் மேசையில் தலையை வைச்சு அழுதபடி பலரும் இருந்தனர். வழமையாக அந்தக் கோப்பிக் கடை கலகலவென்று ஒரே கொண்டடாட்டமாக இருக்கும். பொம்பிளைப் பிள்ளையள் அடிக்கடி மூக்கையும் கண்ணையும் துடைச்சபடி இருந்தனர். மேசையில் கைத்தொலைபேசிகள்  சத்தம் போடாமல் செத்துப் போய்க் கிடந்தன. எனக்கு இந்தப் பிள்ளைகள் அழுதுபடி இருந்தது பொறுக்கேலை கிட்டப் போய ஒரு ஒரு பிள்ளையிட்டை,
„பிள்ளை ஏனம்மா அழுறாய்’ என்றன், அந்தப் பிள்ளை தலையைத் தூக்கிப் பார்த்திட்டு திரும்பி மேசையிலை தலையை வச்சி படுத்திட்டு எனக்கோ மனம் பொறுக்கவில்லை. எல்லாரையும் சுற்றுமுற்றும் பாரத்தன் எல்லாரும் கோப்பி கோப்பியாய்க் குடிச்சபடி மேலே பார்த்தபடி இருந்தனர். எனக்கு மனம் பொறுக்கேலை அந்தப் பிள்ளையிட்டை „இஞ்சரம்மா அழாமல் என்ன நடந்தது எண்டு சொல்லன் ஆரெண்டாலும் பொடியள் கிடியள் சேட்டை கீட்டை விட்டவையோ’ என்று கேட்க அந்தப் பிள்ளை „அப்படி நடந்தாலும்கூட பரவாயில்லை அங்கிள் அதைவிட இது பெரிய கொடுமை’ என்று சொன்ன அந்தப்பிள்ளை „அங்கிள் உங்கடை வீட்டிலை றேடியா ரிவி ரெலிபோன் மொபைல் ஏதாவது இருக்கா’ என்று கேட்க நான் ஒன்றுமே இல்லையென்றேன் „இவையெல்லாம் இல்லாமல் ஒரு வாழ்க்கையா’ என்று என்னைப் பார்த்துச் சொல்ல „நான் தலைசுத்தாத குறையா திகைச்சுப் போய் பக்கத்து கதிரையில் தில்லையில் கூத்தனே தெண்பாண்டி நாட்டானே இந்தப் பூமிக்கு என்னு வந்தது’ என்றபடி உட்கார்ந்தேன்.
கோப்பிக்கடைக்கு எதிரே கொஞ்சம் வடக்குப் பக்கமாகத்தான் என்ரை மனுசியின்ரை பள்ளித் தோழி சாராதாவின் வீடிருக்கு. இண்டைக்கு மனுசிக்கு சொல்ல நல்ல புதினம் கிடைச்சிட்டுது என்று நினைச்சுக் கொண்டு கோப்பிக்கடையை விட்டு வெளியே வந்தன் திடீரென்று சாராதாவின் வீட்டிலிருந்து’ஐயையோ ஐயையோ நான் இனி என்ன செய்வேன் என் வாழ்க்கையே முடிஞ்சு போச்சுது. கண்கெட்ட கடவுளுக்கு கண்ணே இல்லையா „என்று அலறல் சாராதாவின் வீட்டிலிருந்து வர சாராதாவின் வீட்டுக்கு நான் ஓட என்னோடு பொடியள் சிலரும் ஓடிவந்தனர். வீட்டுக்குள் போன நான் அங்கை கண்ட காட்சியைப் பார்த்து திகைச்சுப் போட்டன்.(தொடரும்)
காசியரின் பேரன் எழுதும் „கிரகப் போர்’
பகுதி 2
மின்விளக்கு கொழுவியிருந்த கொழுக்கயில் சாரதா சேலையை முறுக்கி அழுதபடி கட்டிக் கொண்டிருந்தாள். அவளின் தந்தை கதிரேசன் அழுதபடி அதைப் பார்த்துக் கொண்டிருந்தார். அவருக்கு கிட்டத்தட்ட நூறு வயதிருக்கும். மேசையில் கணிணி இருண்டு போய் அழுதபடி இருந்து. சிறய மேசையில் லப்ரொப், ஐபொன, ஐபாட் எல்லாம் செயலிழந்து போய்க கிடந்தன. தனது ஐபொன் இயங்காததால் கதிரேசன் தனது ஐ போனை நிலத்தில் வீசியெறிந்திருக்க வேண்டும். சுக்குநூறாகி தரையெங்கும் ஐபோன் தரையெங்கும் பரந்து கிடந்தது. அது தரையில் கிடந்த விதம் „பாரத்தீர்களா என்னுடைய நிலைமையை இண்டர்நெட் வேலைசெய்யவில்லை, முகநூல் பார்க்க முடியவில்லை என்பதற்காக என்னைப் போட்டு உடைத்துவிட்டார்களே அண்ணாச்சி மனிதர்களின் நன்றிகெட்ட தனத்தை பாரத்தீர்களா என்று சொல்வது போன் என்னைப் பார்த்து சிதறிய உடைசல் பரிதாபமாக விழித்தன.
நானும் என்னோடு வந்தவர்களும் ஓடிப்போய் கொழுக்கியில் கட்டியிருந்த சேலை முறுக்கலை அவிழ்த்து கீழே போட்டோம். சாரதா „எதற்னகாக அதை அவிழ்க்கிறியள் என்னைச் சாகவிடுங்கள். இண்டர்நெட் இல்லை, முகநூல் இல்லை இனி வாழ்ந்தென்ன விட்டென்ன குழறிக் குழறி அழ சாராதாவின் அப்பா „இவள் செத்த பிறகு நானும் சாகத்தான் இருந்தேன்.முகநூலில் இருபத்தேழு வயதில் எடுத்த போட்டோவைப் போட்டு ஒரு பெண்ணுடன் கதைத்துக் கொண்டிருந்தேன். இப்ப எல்லாமே போச்சு „ சொல்லிய போது அவரின் கட்டுப் பல்லு பொலுக்கென்று வெளியே வர அதை வாய்க்குள் தள்ளியபடி தரையில் சுவரோடு சாய்ந்தபடி அழுது கொண்டிருந்தார். சாரதாவின் வீடே சோகமயமாகவிருந்தது.
அவர்கள் இரண்டு பேரையும் பார்க்கப் பார்க்க எனக்கு விசர் விசராக வந்தது. விசரோடை கோபமும் வர „நீங்களென்ன முட்டாள்களா இண்ரநெட் இல்லாவிட்டால் என்ன முகநூல் இல்லாவிட்டால் என்ன வாழ்க்கை என்ன முழுகியா போகப் போகின்றது. சாப்பாடு இல்லாவிட்டால்தான கவலைப்பட வேண்டும்’ என்றேன். சோர்ந்து போய் உட்கார்ந்திருந்த கதிரேசனும், துள்ளி எழும்பி நிற்க தெம்பு இல்லாவி;டாலும் சுவரோடு பிடிச்சுக் கொண்டு நின்றபடியே „என்ன பைத்தியக்காரன் மாதிரி உளறுறாய்’ உன்ரை வீட்டிலை தொலைக்காட்சிப் பெட்டி இருக்கா …இல்லை, தொலைபேசி இருக்கா…இல்லை, கைத்தொலைபேசி ….இருக்கா…இல்லை, ஒரு ஐ போனாவது இருக்கா…. இல்லையே. இனி நான் உயிரோடு இருந்தென்ன வி;ட்டென்ன’என்றபடி அழத் தொடங்கிவிட்டார்.
„கடவுளே இதென்ன கொடுமை….இப்படியுமா ஒரு வெறித்தனமாக இருப்பார்கள் „என்று நினைக்கும் போதே வெளியே ஆரவாரமாக இருந்தது.
இன்ரநெற் கடைக்கு எதிரே ஒரே சனநெரிசல் . திடீரென்று இன்ரநெற் கடையிலிருந்த கணிணி வேலை செய்யத் தொடங்கியதும் அங்கிருந்த அச்சடிக்கும் இயங்திரத்திலிருந்து அச்சடித்த தாள்கள் விழுந்து கொண்டிருந்தன.
சட்லைட்டுகள் வேலை செய்யத் தொடங்கிவிட்டனவோ என்ற மகிழ்ச்சயில் எல்லோரும் தங்கள் தங்கள் கைத்தொலைபேசியை அழுத்தினார்கள். ஆனால் எந்த இயக்கமுமே இல்லாமல் இருண்டு போய் கிடந்தன கைத்தொலைபேசிகள்.இருண்ட கைத்தொலைபேசிகளைவிட அதை வைத்திருந்தவர்களின் முகங்கள் பிரபஞ்ச இருட்டில் கிடந்தன.
அச்சடித்த தாள்களில் இருந்த எழுத்துக்களை வாசிக்கவே முடியவில்லை. சிறுசிறு கோடுகளாகவும் குற்றுகளாகவும் இருந்தன. ஒவ்வொருவர் கையிலும் அந்த தாள்கள் இருந்தன. அதைப் பார்த்து எல்லோரும் திருதிருவென விழித்துப் பார்த்துக் கொண்டிருந்தனர்.
தமிழர், தெலுங்கர், கர்நாடகக்காரர், மலையாளிகள்,இந்திக்கார், ஆங்கிலம் பேசுவோர்   என எல்லோர் கையிலும் புரியாத எழுத்துக்களில் இருந்த தாள்களை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தனர்.’யாரே விசமத்தனமாக இப்படி அனுப்பியிருக்கிறான்’ எனச் சிலர் பேசிக் கொண்டனர்.
சாராதா தூக்கிலை தொங்கப் போன கொடுமையைவிட இது பெருங்கொடுமையாகவிருந்தது. அங்கு நின்ற வௌ;வேறு மொழிக்காரரகள்; தங்கள் தங்கள் மொழியில் கண்படி திட்டிக் கொண்டிருந்தனர். ஒரே ஒரு இன்ரநெற் நிலையம் இயங்குவதாகவும் அச்சு இயந்திரத்திலிருந்து புரியாத மொழியில் அச்சடிக்கப்பட்ட தாள்கள் வந்து கொண்ருப்பதாகவும் செய்தி காட்டுத் தீ போல் பரவ அந்தப் பகுதியை நோக்கி மக்கள் வரத் தொடங்கினர். வீதிப் போக்குவரத்து தடைப்பட்டது.  சன நெரிசலைக் கட்டுப்படுத்த காவல்துறையினர் குவிக்கப்பட்டனர்.
அச்சடிக்கும் இயந்திரத்திற்குள் தாள்னகளை வைக்க வைக்க அது அடித்துக் கொண்டேயிருந்தது. மை முடிந்த பிறகும் அச்சடித்துக் கொண்டேயிருந்தது. மை இல்லாமல் தாள்கள் அச்சடித்து வருகிறதே என பயந்து போன இன்ரநெற் உரிமையாளன் நடுங்கத் தொடங்கினான். „ஐயொ கடைக்குள் பேய் வந்திட்டுது, இது பேயின்ரை வேலைதான்’ என உரிமையாளன் நாக்குழற எல்லோரும் திகைத்துப் போய் நின்றார்கள்.
ஒவ்வொரு மொழிக்காரரும் அதே மொழியைப் பேசும் இன்னொருவரிடம் பேசிக் கொள்ள அவரவர் வைத்திருந்த தாளில் உள்ள எழுத்துக்கள் எந்த மொழிக்கார் அதனை வைத்திருந்தாரோ அந்த மொழியாக மாறியது. தமிழ், தெலுங்கு, கர்நாடகம், மலையாளம், இந்தி, ஆங்கிலம் என குறியீடுகள் மாறத் தொடங்கின.
திகைப்பிற்கு மேல் திகைப்பு. „இதுவும் பேயின் வேலைதான் இந்தப் பேய் எல்லா மொழிகளையும் படிச்சு வைச்சிருக்குது’ எனச் சிலர் பேசிக் கொண்டனர். சிலர் நல்ல குளிரில் நடுங்குவது வெடவெடவென நடுங்கிக் கொண்டிருந்தனர். தாளில் இருந்த செய்தியை வாசித்தவர்கள் அதிர்ச்சியடைந்து பயந்து தரையில் உட்கார்ந்தே விட்டார்கள். செய்தி இதுதான்,:’
50,000 கிரகங்களின் தலைமைக் கிரகமான „மாங்கதிர்’ கிரகத்தின் உயிரின உற்பத்தி நிர்வாகம் மனித உயிரினத்திற்கு விடுக்கும் இறுதி எச்சரிக்கை என்ற தலைப்பிற்கு கீழ் செய்தி ஒன்று இருந்தது.
1.ஒவ்வொரு 50,000 கிரகங்களுக்கும் ஒரு தலைமைக் கிரகம் உண்டு. மனித உயிரினம் ஆகிய உங்கள் கிரகம் எங்கள் „மாங்கதிர்’கிரகத்தின் கட்டுப்பாட்டிலேயே இருக்கின்றது.
2.உங்கள் கிரகத்தில் உள்ள எல்லா மொழிகளும் எமது மொழியியல் உளவாளிகள் மூலம் அறிந்து வைத்திருக்கின்றோம். அந்த மொழிகளை உருவாக்கியவர்கள் நாங்களே.
3. அவர்கள் மூலம் உங்களது அடவாடித்தனமான ஆணவமான செயல்களை நாங்கள் அறிவோம். பலமுறை உங்களை மன்னித்தும் நீங்கள் திருந்துவதாக இல்லை.
4.உங்கள் மீது போர் தொடுத்து உங்களை அழிக்கும் திட்டத்திற்கு எமது தலைமையகம் அங்கீகாரம் அளித்துவிட்டது. உங்களை இனி மன்னிப்பதாக இல்லை. உங்களுக்கான காலக்கெடு இன்னும் ஐம்பது வருடங்களேயாகும். எங்களுக்கு அது ஒரு விநாடி.
5. அதன் இறுதி எச்சரிக்கையாகவே உங்களால் ஏவிவிடப்பட்ட அத்தனை சட்லைட்டுகளையும் அழித்தோம். இப்பொழுது உங்களிடமிருக்கும் தாள்களை வெளிக்கொணர்ந்த கணிணியையும்  அச்சு இயந்திரத்தையும் இங்கிருந்து நாங்களே இயக்கினோம்.உங்களுக்கு ஒன்றை ஞாபகப்படுத்துகின்றோம். டைனசோர் என்ற உயிரினத்தின் அடவாடித்தனம் பொறுக்க முடியாமலே அவற்றை அழித்தோம். அவற்றை அழித்துவிட்டு ஆறறிவுடன் உங்களைப் படைத்தோம். ஆனால் நீங்கள் விலங்குகளைவிட கேவலமாக இருக்கிறீர்கள்.
7.நீங்கள் என்னென்ன தகாதவை செய்திருக்கிறீர்கள் என்ற விபரப்பட்டியல் பலமொhழிகளிலும்  நாளைக்கு இரண்டு கிலோ மீற்றர் தூரத்திலிருக்கும் மைதானத்தில் எங்களால் அனுப்பி வைக்பப்பட்டு வந்திறங்கும்.
வாசித்து முடித்த எல்லோரும் வாயடைத்துப் போய் நின்றனர். „இது உண்மையா பொய்யா எனத் தீர்மானிக்க முடியாமல் தடுமாறி நின்றனர். அப்படியென்றால் நாங்களெல்லாம் அநியாயக்காரர்களா இது என்ன கொடுமை. இன்னும் ஐம்பது வருடங்களுக்கு பின் பூமி அழிந்து விடுமோ’பயத்தில் எல்லாருக்கும் வியர்க்கத் தொடங்கியது.காலையில் வீட்டைவிட்டு வெளிக்கிட்ட நான் இரவு பத்துமணிக்குத்தான் திரும்ப வீட்டிற்குப் போனேன். சுந்தரி யன்னலடியில் நின்றவாறு தெருவைப் பார்த்துக் கொண்டேயிருந்தாள். வீட்டிற்குள் போன என்னை „எங்கை காய்கறி’ என்றாள். காய்கறி வாங்கப் போன நான் அதை மறந்து போனதற்கான காரணத்தைச் சொன்னதும் என்ரை சுந்தரி  காய்கறியை மறந்து „பிறகு…பிறகு…ஆ..பிறகு என்று ஆர்வத்துடன் கேட்டாள். அவளும் பயந்துவிட்டாள்,பிறகு „இஞ்சருங்கோ கமலக்கா இங்கை வந்தவா முகம் முழுக்க எண்ணைக் காயம்’என்றவள் கமலத்திற்கு நடந்ததைச் சொன்னாள். நான் ஆர்வத்துடன் கேட்க அவள் சொன்னாள்,: „கமலக்கா மீன் பொரிக்க எண்ணையைக் கொதிக்க வைக்க கமலக்காவின்ரை புருசன் கைத்தொலைபேசி வேலை செய்யவில்லையே என்று அதை நோண்டிக் கொண்டிருக்க கமலக்கா எரிச்சலில் வேலை செய்யாத அதையேன் நோண்டிக் கொண்டிருக்கியள் எனக்கு உதவியாக இந்த சட்டிபானைiயாவது கழுவலாந்தானே எனச் சொல்ல, கமலாக்காவின் புருசன் இந்தா இதையும் பொரி என கைத்தொலைபேசியை கொதிக்கிற எண்ணையிலை எறிய எண்ணை தெறிச்சு கமலாக்காவின்ரை முகம் முழுக்க புண்ணாயப் போச்சுது. கமலாக்கா „இந்த மனுசனை எப்பதான் கடவுள் தண்டிக்கப் போகிறாரோ’ என்று அழுதவாறு மருந்து வாங்கிக் கொண்டு போனா எனச் சொல்லி முடித்தாள்.
எனக்கும் நித்திரை வரவில்லை, சுந்தரிக்கும் நித்திரை வரவில்லை. „அந்தத் தாளிலை என்ன வந்திறங்கும் என்றிருந்தது’ என தொண தொணத்துக் கொண்டேயிருந்தாள். அரைகுறை நித்திரையுடன் அடுத்த நாள் விடியத் தொடங்கியது.
திடீரென்று சுந்தரி „யையோ யையோ இங்கை வந்து பாருங்கோ’ என்றாள். அடிச்சுப் பிடிச்சு எழும்பி வீட்டுக் கதவை வெளியே போனேன். அங்கே ஆகாயத்தில்……..
(தொடரும்)

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *