Friday, February 23, 2018

.
Breaking News

சிவப்பு!… ( குறுநாவல் ) … } தி. வேல்முருகன். …கடலூர் மாவட்டம்.

சிவப்பு!… ( குறுநாவல் ) … }  தி. வேல்முருகன். …கடலூர் மாவட்டம்.

ம்மா…

என் அடிவயிற்றிலிருந்து எழுப்பிய குரல் யாருக்கும் கேட்க வில்லை?

ம்மா…

எனக்கு பழைய நினைப்பு வந்தது?

என்னாது? வரன் வரன் பறக்காத!

அவர் பெயர் பொண்ணந்திட்டார். இதோ வருகிறார் என்னை நோக்கி. உடம்பு முழுவதும் வயிறை கொண்ட நான் எவ்வளவு நேரம் பசித்திருப்பது?

காலையில் சிறிது தண்ணி காட்டி வைக்கலை போட்டு விட்டுச் சென்றார். அதற்குப் பிறகு யாரும் பார்க்கவில்லை.

நான் பெரிதும் விரும்பும் பொன்னன்திட்டார்கூட என்னைப் பார்த்தும் பாராமல் செல்கிறார்.

எனது குரலின் பலவித வேற்றுமைகளை அறிந்ததவர் எப்போதும் என்னை பார்த்துக் கொள்பவர், வர வேண்டும்தானே?

இத்தனை வருடங்களாகச் சென்று வந்த இடங்களும் அதன் பெயர்களும் இரண்டு நாளாய் திரும்ப திரும்ப தோன்றுகிறது.

ம்மா…,ம்மா…

ஏன், என்னாச்சு? கழுத!

இதோ வந்து விட்டார்

கயிறை அவிழ்க்கறார். நாழியாகிறது. எனது பரவாதித்தனத்தைக் கட்டுப்படுத்த முடியவில்லை. நான் கயிறை இழுக்கிறேன். கயிறு மேலும் இருகிக் கொள்கிறது..

கோவத்தோடு பொண்ணந்திட்டார் என்னை முகத்தில் அடிக்கிறார்.

நான் அமைதியாக பார்த்துக்கொண்டு இருக்கிறேன். இதோ அவிழ்த்து விட்டார். எனது மிருகப்புத்தியை என்னால் கட்டுப்படுத்த முடியவில்லை பரபரவென்று இழுத்துக் கொண்டு தண்ணீர் தொட்டிக்கு ஓடி முகத்தை தொட்டியில் விட்டு நாக்கால் தூழாவினேன். புண்ணாக்கு எல்லாம் கரைந்து விட்டது.

“ஏன் இப்படி பறக்கர?” என்று கட்டு கயிறை தூக்கி என் முதுகில் போட்டு விட்டு பொண்ணந்திட்டார் சாப்பிடச் சென்று விட்டார் நான் கயிறு இருக்கும் இடத்தை மட்டும் சற்று சுருக்கிக் கொண்டு தண்ணீரை இறுத்து குடித்து விட்டு வைக்கோல் போர் மேல் உண்ணி அரிப்புக்காக கழுத்தை உரசிக் கொண்டு நாக்கால் தூழாவி ஒரு பிடி உறுவி மெல்ல ஆரம்பித்தேன்.

திரும்ப கட்டிப் போடுவதற்குள் முடிந்த அளவு வயிற்றை நோப்ப வேண்டும். அரைவயிறு நொம்புவதற்குள் வந்துவிட்டார். எப்போதும் சிறிது படுத்துக் கிடந்து விட்டு வருவார். இன்னைக்கு என்னவோ இவ்வளவு சீக்கிரம் வந்து விட்டார். நான் கயிறை இழுத்துக்கொண்டு இருந்த கொஞ்சம் வைக்கலையும் சுற்றிக்கொண்டு மேலும் வைக்கலை இழுத்து நாக்கால் சுற்றி முழுங்கினேன்.

“ஏன் கழுதை இப்படி செய்யர?”, என்றவர் கட்டுத்தரையில் இரண்டு பன்ன வைக்கலை போட்டு விட்டு என்னை கட்டிப்போட வருகிறார். நான் இருக்கும் அந்த கொஞ்சம் வைக்கலையும் சுற்றிக்கொண்டு கட்டுத்தரையில் ஒடி நிற்கிறேன்.

ஓட்டு வீட்டில் சாரம் இறக்கி கருங்கல் தூணில் கால் நட்டு கீத்து வேய்ந்து வைக்கல் இட்ட கொட்டகை அது, எட்டிய வரை கூரையை இழுத்து விட்டேன்.

பசியில் பிறகு என்ன செய்வதாம்?

இதோ கருங்கல் காலில் கட்டி விட்டு சென்று விட்டார். இனி மதியம்தான் வருவார், அது வரை கிடக்கும் வைக்கலை தின்று கொண்டு பழைய நினைவுகளை அசைபோட வேண்டியதுதான்.

எல்லாம் நேற்று நடந்தது போல் தான் இருக்கிறது குண்டலாபாடி தான்

நான் பிறந்த ஊர். ருக்குமணியம்மாதான் தன் பெண்ணுக்குப் பிறந்த நோயுற்ற பிள்ளைக்கு பாலுக்காக அனுப்பினார். ஆகா எனது தலைச்சங்கன்று, அதுதான் எவ்வளவு அழகு.

ருக்குமணியம்மாதான் சொன்னார், “ஏ கலியா இந்த கண்ணுக்குட்டிய பார்ரா, உடம்பு பூரா சிவப்பு, நெத்தியில வெள்ளை பொட்டு மாதிரி, கால்ல பாரு காப்பு மாதிரி, வெள்ளை சுழி கிழியில்லாம் அருமையா அமைஞ்சு இருக்கு. கவனமாக பார்த்து ஓட்டிப்போங்க.”.

கலியனும் ருக்குமணியம்மா பேரனுமான இந்த வீட்டுப் பையனும்தான் என்னைக் கன்றுடன் ஓட்டி வந்தனர். அது வரை திட்டு, காட்டூர் கிழக்கே நாதல்படுகை, ஐெயங்கொண்டபட்டணம், வடக்கே பெராம்பட்டு, மரத்தான் தோப்பு, மேற்கே மேலகுண்டலபாடி, தெற்கு பக்கம் கொள்ளிடம் ஆற்று நடுவின் ஆற்று திட்டுவிலும், காய்ச்ச நாளில் கிடை மாடுகளோடு ஆச்சாள்புரம் அளக்குடி என்று மேய்ச்சலுக்கு சென்று இருக்கேன்.

வட காவேரியான கொள்ளிடம் ஆற்றின் செழிப்பினால் அந்த இடங்கள் எல்லாம் மூங்கில் புல், அருகம்புல், கோரை புல், வேலக்கீரை, சாட்னை கீரை என்று செழிப்பாக இருக்கும், வயல் எல்லாம் சோளம், கம்பு, கேழ்வரகு, வாழை மற்றும் ரோஜா, முல்லை, மல்லி என்று பார்க்கவே கண் குளிர்ந்து விடும். எங்கு பார்த்தாலும் தென்னந்தோப்பும் மாந்தோப்பும் சோலையும்தான். சிறிது காலாற நடந்தாலே பசியடங்கி விடும் நினைத்தாலே நாவுருகிறது

எனக்கு வடக்கே பெராம்பட்டு தாண்டி வாய்க்கங்கரை தாண்டியதும் பயம் வந்து விட்டது அன்று. ஆனால் அதன் பிறகு ஐந்து ஆறு முறையாவது சென்று வந்து இருப்பேன். இப்போது அசை போடும்போது அதெல்லாம் என் வாழ்வின் வசந்தங்கள்.

வாய்க்கங்கரை முழுவதும் தென்னந்தோப்பு ஒரே இருட்டு அங்கேங்கே சேவல்கள் கூவிக்கொண்டு இருந்தன. பெண்கள் இரண்டரொருவர் வாசல் தெளித்துக் கொண்டும் கூட்டிக்கொண்டும் இருந்தனர்.

பெராம்பட்டில் வாய்க்கா தெரு செம்மண் கப்பித்தரை. காலில் அடிக்கடி இடறிக்கொண்டேன்.

பொழுது புலரத் தொடங்கியது. கொக்குகளும் நாரைகளும் இரண்டு புறமும் இருந்த வயலை நோக்கி பறந்து கொண்டு இருந்தன.

தெம்பாதி தாண்டியிருந்த குளத்தில், கலியன் நீரருந்திவிட்டு கரையில் இருந்த ஒதிய மரத்தில் கட்டினார். பையனை டீ குடிக்க கூப்பிட்டார் அவன் மறுத்து, என் மடியில் பார்த்துக் கொண்டு இருந்தான்.

வெளியே வந்த கலியன், :எலேய் மாப்பிள்ளை, வாடா” என்று அழைத்தான்.

7 மணிக்கெல்லாம் சிதம்பரம் வண்டிகேட் தாண்டிப்புடணும். இல்லன்னா இந்த கார்க்காரனுவகிட்ட மாட்டிக்கிட்டு சிரிப்பா சிரிக்கனும் என்று சொல்லி கயிறு அவுத்ததும் முதுகில் அடித்தார்.

நடையை எட்டு வச்சி ஒட ஆரம்பித்ததும் வயிறு நிறைய குடித்த தண்ணி தளுக் புளுக் என்று சத்தம். விரட்டாமல் விட்டு விட்டார். வேகமாக நடந்தேன். தெம்பாதி தாண்டி வடபாதி வந்ததும் இருபுறமும் வாழைத்தோட்டங்களாக இருந்தது

கலியன் ராகமாக மூக்கால் பழையபடப்பாடல்களை பாடிக்கொண்டு வந்தார். பையன் என் காலுக்கிடையில் புகுந்து கொள்ளும் கன்றை முன்னோக்கி இழுப்பதும் பிறகு விரட்டி ஒட்டுவதும் அது ஓடும்போது துரத்துவதும் நாய் குலைத்தால் நிற்பதுமாக இருந்தான். நான் பதட்டத்தில் செதும்பிக்கொண்டு கன்று பின்னால் வந்தேன்.

சிவப்புரியின் பெரிய கோயிலைக் கண்டேன். அந்தத் தெருவை தாண்டியதும் இருபுறமும் நெல் வயல்கள் பூத்தும், பூ வரும் பதத்தில் பார்த்த நிலங்களில் எல்லாம் தெரிந்தது. மனிதர்களுக்கு மட்டும் அல்ல எங்களுக்கும் பிடித்த பொன்னி, பொன்மணி நெல்கள் எனது இடுப்பு உயரம் இருக்கும் காற்றில் அதன் வாடை உணர்த்தியது. கடைமாடுகளில் இருந்தபோது போர் அடிக்கச் செல்வோம். ஐந்து முதல் பத்து மாடுகளை கழுத்தில் பிணைந்து கதிர் மேல் சுற்றி வருவர். வாயில் பெரம்புக் கூடால் மூடி கட்டி விடுவர். கெடாவெடி சுற்று முடிந்ததும் அவுத்து விடுவர். இப்போது இயந்திரத்தால் சுற்றி அடிக்கின்றனர்.

கிழக்கே சூரியனை மேகம் மறைத்து இருந்தது நாங்கள் தொடர்ந்து நடந்தோம் தண்ணீர் பந்தல் தாண்டியதும் நேராக சிதம்பரத்துக்கும் கிழக்கு நோக்கி கவரப்பட்டுக்கும் சாலை பிரிந்தது. சிதம்பரம் செல்லும் பாதையில் நடந்தோம். சாலையில் இரண்டு புறமும் பாசனத்திற்காக வாய்க்கால் தண்ணீர் நிறைந்து ஓடிக் கொண்டு இருந்தன. இருபுறமும் ஆடுதுறை நெற்பயிர் பூ விட்டிருந்தது.

கலியன் தொடர்ந்து பாடிக் கொண்டு நடந்தார். மாரியப்பா நகர் தாண்டி ராஜேந்திரன் சிலை வந்ததும் பேருந்துகள் மற்றும் வாகனங்கள் சத்ததில் மிரண்டு எதிர்ப்புறமாக இழுத்துக் கொண்டு சுற்றினேன். கலியன் என்னை அடித்து விரட்டி ஓட்ட ஆரம்பித்தார். ஒட்டமும் நடையுமாக சிதம்பரம் ரயில்வே

கேட், பாலமான் தாண்டி கீழ வீ+தி நுழைந்தோம். தேர் இரண்டு வர்ணம் ஐாலமாக ஐோடித்து இருந்தது. சாலை இருபுறமும் சில புதிய மாடி வீடுகள், ஓட்டு வீடுகள் கடைகள் இருந்தன. நான் பேருந்து சத்தத்திலும் புது வழியாக செல்வதால் பயந்தும் மிரண்டும் கழிந்து கொண்டு வந்தேன். பையன் கன்றைப் பிடித்துக்கொண்டு வர தவித்துக் கொண்டிருந்தான்.

கோபரவாசல் வந்ததும் கலியன் மேற்கு நோக்கி கும்பிட்டார்.

“ஏய். மாப்பிள்ளை கும்புடுரா,” என்றார்.

பையன் கும்புட்டதும், “யோவ் கலியா, சாயந்திரம் தேர் பார்க்க வரலாமா?”

“என்னது கலியனா? செருப்பால அடிப்பேன். எத்தனையாவது படிக்கர? உங்க அம்மாவ தூக்கி வளத்தவன்டா நானு. கலியனமல்லா? எங்க கத்துகிட்ட இதெல்லாம்? ஊருக்குப் போனதும் மாப்பிள்ளைய கேட்கறன்”

கலியனின் முதுகு தரையில் ஊரும் நத்தை போல் இருந்தது. எல்லோரும் கூப்பிடுவதுபோல் கலியனைக் கூப்பிட்ட பையனைப் பார்க்க பாவமாக இருந்தது அவனது உற்சாகம் போன இடம் தெரியவில்லை. கீழவிதி முடிந்து வடக்குவீதி வழியாக சிதம்பரத்தை விட்டு வெளியே வந்தோம்.

பள்ளிப்படை தாண்டி வண்டிகேட் வரை இருபுறமும் நெல் வயல்தான் எல்லாம் குட்டைப்பயிர்கள். வண்டிகேட் வந்ததும் பாதை இரண்டாக பிரிந்தது மேற்கே நல்ல சாலையும் வடக்கே கிளை செல்லும் சிறிய சாலையும். நாங்கள் சிறிய சாலையில் தொடர்ந்து நடந்தோம் கான்சா வாய்க்காலை (கான்சாகிப்) ஒட்டிய மரத்தில் எங்களைக் கட்டிவிட்டு அருகிலிருந்த கடையில் பசியாறி வந்தனர். கான்சா வாய்காலில் தண்ணீர் தேக்கும் திறப்பான் மூடி இருந்ததால் தண்ணீர் முழுவதும் தேங்கி இருபுறமும் கரையில் இருந்த வாய்க்காலில் நீர் ஓடிக்கொண்டு இருந்தது. வாய்க்கால்கள் மேலமூங்கிலடியும்,கீழ மூங்கிலடி நோக்கியும் நீண்டு சென்றன.இருபுறமும் பனை உயர்ந்து ஒரு நேர்க்கோடாகவும் நின்றது.

அல்லிக கொடி வெள்ளைப் பூக்களோடும்,ஆகாயத்தாமரையின் பூக்கள் நீலமாகவும் இடையில் வெள்ளையும் பழுப்புமாக வாத்துகளும், கருவண்ணத்தில் நீர்க்கோழிகள் முழ்கி எழுந்திருப்பதும் எனக்கு நாளெல்லாம் பார்த்துக் கொண்டு இருக்க தோன்றியது.

திரும்ப நடக்க ஆரம்பித்தோம். சாலையின் இருபுறமும் நெற்பயிர்களே. வயலில் ஆட்கள் தெரிந்தனர். பாதையில் ஒன்றும் இரண்டுமாக கட்டை வண்டிகள். அரிதாக டயர் வண்டிகள் சென்றன. கிள்ளை, பு.முட்லூர் செல்லும் சாலை வந்து விட்டது. திருப்பத்தில் கிள்ளையிலிருந்து வந்த பேருந்தின் சத்தத்தில் கன்று மிரண்டு பையனின் கையிலிருந்து உருவிக்கொண்டு ஒடுகிறது.

சாலையின் இருபுறமும் தூங்குமூஞ்சி மரங்கள் நிறைந்து ஏதோ தோப்பில் நுழைந்தது போல் இருந்தது

கலியன் பையனைத் திட்டுகிறார், “கொஞ்சம் கூட தெரவுசு இல்ல. ஓடுரா… புடிடா… புடிடா…”, என்கிறார்

பையன் என்னைப்போல திகைத்து விட்டு பிறகு கன்று பிடிக்க ஒடுகிறான். நான் ஆங்காரமாக, “ம்மா…” என்று குரல் எழுப்புகிறேன். கன்றும் குரல் எழுப்பிக்கொண்டு திரும்பி விரைந்து ஓடிவந்தது பையன் தடுத்துப் பிடிக்க முடியாமல் கீழே விழுந்து அடிபட்டுக் கொண்டான்.

‘மாப்பிள்ளை, பாத்துடா… பாத்துடா…”, என்றார் கலியன்.

பையன் கன்றைப் பிடித்துக்கொண்டு அடிக்கச் சென்றவன் அடிக்கவில்லை, கயிற்றைப் பிடித்துக் கொண்டான் நான் வளைந்து கன்றின் பின்புறம் நக்கி விட்டேன். பயம் தெளிந்து சிறுநீர் விட்டது.

“மாமா,” என்றான் பையன்.

“ஏண்டா?”

“அப்பாட்ட சொல்லாத நான் மாமான்னே கூப்பிடுறேன்”

“சரிடா, மாப்பிள்ளை”

“உன் முதுவு யான் மாமா இப்படி ஆச்சு?”

“அதுவா, நான் அம்மா வைத்துல இருக்கும்போது பலாப்பழம் கேட்டாங்களா, யாரும் வாங்கிக் கொடுக்கல. அந்த ஆசை அப்படியே முதுவுல வீங்கிப் போச்சாம்”

“யாரு சொன்னது?”

“எங்கம்மாதான் சொன்னாங்க”

“ஏன் மாமா அவங்க பலாப்பழத்துக்கு ஆசப்பட்டாங்க, அவங்க ஆசப்படலன்னா உனக்கு என்ன ப் போல முதுவு இருந்து இருக்குமில்லியா?”

“இல்லடா மாப்பிள்ளை. அம்மா நான் அதேயே நினைச்சு கவலைப்படக்கூடாதுன்னு சொன்னதுடா”

“…”

“நீ நெசமுன்னு நினைச்சுட்டியா? இது புறப்பிலேயே வரதுடா“

“அப்படின்னா? “

“வயித்துல இருக்கும்போதே ஏதாவது நோயி வந்துருக்கும். இல்ல நல்ல சாப்பாடு இருந்து இருக்காது. இப்படி பல இருக்குடா. அப்புறம் செஞ்ச பாவம். அதெல்லாம் இறக்கி வைக்க முடியாத மூட்டையா சுமக்கறேன். எனக்கு வெளியே தெரியுது மத்தவங்களுக்கு தெரியல, இதெல்லாம் உனக்கு இப்ப புரியாது மாப்பிள்ளை?”

“ஏன் மாமா. உங்க அம்மா இருக்காங்களா?”

“அவங்கெல்லாம் அப்பவே செத்துட்டாங்கடா மாப்பிள்ளை”

“{கூடப்பெறந்தவங்க யாரும் இல்லையா மாமா?”

“அதுக்கு ஒரு கொறையுமில்ல. எட்டு ஆணும் ஒரு பெண்ணும் ஆக ஒம்பது பேரு நாங்க, நான் அஞ்ஜாம் பொறப்பு. எனக்கு மட்டும் தான் உடம்பு இப்படி.எல்லாம் புள்ள குட்டியோட நல்லா இருக்காங்க நான் வாணாம் என் சொத்து மட்டும் வேணுமுன்னாங்க. விட்டுட்டு வந்துட்டேன்..கூடப் பிறந்தவன் யார் வீட்டுலேயும் கால் வைக்கவோ கை நனைக்கவோ மாட்டேன்.”

“அப்ப எங்க சாப்புடுவ மாமா?”

“இப்படி சின்னச் சின்ன வேலைய செஞ்சுதான்”

“என்ன வேலை மாமா?”

“களத்தில காவ இருப்பேன், அப்படியே வைக்க காரைய கயிறு திரிச்சி பிருமனை செய்வேன், வயலுக்கு தண்ணி பாச்சுவேன். அப்புறம் சாப்பாடு எடுத்து போறது, பொம்பளைவோ ஊரு பயணம் போனா தொனைக்கு போறது. அப்புறம் ஏதாவது கைவேலைக்கு ஒரு ஒத்தாசைக்குன்னு எதாவது வேலை இருக்குண்டா

மாப்பிள்ளை. எந்த வேலையும் இல்லேன்னா கிடைக்கும்போது சாப்பிடுவேன். அதுவும் இல்லைன்னா அப்படியே இருந்துடுவேன். சும்மா சாப்பிடச் சொன்னா சாப்பிட மாட்டேன். ஏதாவது வேல சொன்னாதான் சாப்பிடுவேன். ஆனால் எனக்கு எப்பவுமே வேல இருக்குண்டா மாப்பிள்ளை”

“ஏன் மாமா, எங்க ஊட்டுலேயே இருந்துடேன்?”

“ம்ம் இருக்கேன் நேரம் ஆவுது பாரு ஒட்டு ஒட்டு“

நடந்தோம். வெள்ளாத்து தோணித்துறை வந்தது. சாலையோரம் மிகப் பெரிய ஆலமரம் அதன் விழுதுகளை ஊன்றி நின்றது. அதன் நிழலில் நின்றோம். கன்று மடியில் முட்டி பால் குடித்தது. தூரத்தில் தோணி வந்து கொண்டிருந்தது.. தோணியோட்டத்தில் எழுந்த அலையில் சிறுமீன்களும், மடவைகளும் மேலே துள்ளி விழுந்தன. தோணியோட்டி கழியை நீரின் தரையில் ஊன்றி தோளில் அணைந்து பலகையில் நடந்தார். தோணி மெல்ல மெல்ல முன்னேறி வந்தது. மீன்கள் ஆற்றில் துள்ளித் துள்ளி விழுந்து சென்றன. தோணி துறையில் அணைந்ததும் தோணியோட்டி முதலில் குதித்து கயிறை எடுத்து கொம்பில் மாட்டி விட்டு தோணியை கையால் பிடித்துக்கொண்டார். பெண்களும் ஆண்களும் இறங்கிச் சென்றனர், மிதிவண்டியில் வந்தவர்கள் இறங்கி மிதிவண்டியைத் தோளில் தூக்கி சென்றனர். வேலைக்குச் செல்பவர்கள், சிறு வியாபாரிகள், அக்கரை சென்றவர்கள் என அனைவரும் சென்றதும் கரையேறிய தோணியோட்டி கலியரைப் பார்த்ததும், “ஏ கூனு கலியா நீ எங்கடா போற? ஆளைய பார்க்க முடியல? போன வருசம் வெளங்கிப்பட்டுக்கு வைக்க ஏத்திகிட்டு போனப்ப பார்த்ததுதான், எங்கடா இருக்க?” என்று கேட்டார்.

“அது மாமா, அப்படியே தங்கச்சி வீடு எல்லாம் சுத்திட்டு ஊருக்கு போனனா? ருக்குமணியம்மா இந்த மாட்ட கொண்டி மவ ஊட்டுல உடச் சொன்னாங்க, பாலுக்காக. அவுங்க பேரன்தான் இவன்”

“இப்ப எங்க பார்த்தாலும் சிந்து மாடுவோ வந்துட்டுதே நீங்க வாங்குலையாடா?”

“தெரில மாமா இது ஊட்டு மாடு “

சரி சரி, இருரா. சனம் வரட்டும் போவோம்”

மீன் வியாபாரம் செய்யும் பெண்கள், வயல் வேலைக்குச் சென்ற பெண்கள், சில ஆண்கள் மிதி வண்டியுமாக சனங்கள் கூடியதும் தோணியோட்டி தள்ள

ஆரம்பித்தார். என்னைப் பக்கவாட்டில் கலியர் கயிற்றை விட்டு பிடித்துக் கொண்டார். கன்றைப் பையன் பிடித்து இருந்தான். அது முரண்டு பிடித்து கொண்டு இருந்தது.தோணியோட்டி தள்ளி விட்டு தோணியிலேறி கோலை ஊன்றி தள்ள ஆரம்பித்தார்.

எனக்கு நிலைக்கவில்லை. நீந்த ஆரம்பித்தேன். தண்ணீர் கிழக்கு நோக்கி இழுத்தது. கால் சோர்ந்தபோது முகத்தை மேலே வைத்து மிதக்க ஆரம்பித்து விட்டேன். தோணியோடு சேர்ந்து நானும் மிதந்தேன்.

தோணியோட்டி கலியரை, “ஏய் கலியா, ஏய் ஒரு பாட்டு பாடரா” என்றார்.

கலியர் அதுவரை பாடாத பாடல்களை உணர்ச்சிகரமாக பாடிக்கொண்டு தாளம் போட்டு வந்தார். தோணியிலிருந்தவர்கள் மெய்மறந்து இருந்தனர்.

கரையேறும்போது நான் சோர்ந்து தடுமாறினேன். கன்று பாய்ந்து வந்து மடியில் முட்டியது ஒதுக்கி விட்டு ஏறினேன். கரையோரம் ஆற்றின் ஒரம் புளிய மரம் நின்றது. தோணியோட்டி துறை காசு வாங்கி கொண்டார்.கலியர் காசை மட்டும், “வச்சுக்கிடா,” என்று திருப்பிக்கொடுத்தார்.

சரியாக இருபது நாளைக்குப் பிறகு விடிந்தும் விடியாத காலைப் பொழுதில் வெள்ளாத்து தோணித்துறைக்கு பொண்ணந்திட்டாருடன் தனியாக திரும்ப வந்தேன். கரையோட்டிய முன்பு பார்த்த அதே பெரிய புளியமரத்தின் வேரில் கட்டினார். முகத்தை வேரில் உரசினேன். கண்ணில் சுற்றிக்கொண்டு இருந்த சிறுப்பூச்சிகள் பறந்தன.

பொண்ணந்திட்டார் தோணியோட்டியைத் தேடி,” அண்ணே… அண்ணே…” என்று குரல் கொடுத்தார்.

கொட்டாயின் உள்ளேருந்து வந்த தோணியோட்டி, “ஏலே பொண்ணந்திட்டான், எங்கடா இந்தப் பக்கம்? எப்ப பார்த்தேன் உன்ன… கடைசியா இரண்டு வருசமாவது இருக்கும், என்னடா இம்மாந்தூரம் காலையிலே?” என்று கேட்டார்.

“மாடு ஓட்டிகிட்டு வந்தண்ண“

“ஏலேய் இந்த மாட்ட கலியன் ஓட்டி வந்தானாடா? என்னடா தனியா நிக்குது? என்னடா ஆச்சு?”

“அந்த கொடுமை கடவுளுக்கே அடுக்காதுண்ணன்… கலியனும் பையனும் தான் ஒட்டி வந்தானுவ. காலையில ஒரு பதினோரு மணி இருக்கும், மாமா வந்து பாருன்னு

பையன் கூப்பிடுறான்.‘உனக்குதான் தெரியுமண்ண கல் அறக்கர எனக்கு பொழுதுக்கும் பாட்டுக்கும் சரியா இருக்கமுன்னு. நான் அப்ப தான் மண்ண உட்டுட்டு சாப்பிட வந்தேன். கைய கழுவாமல் வெளியே வந்து பார்க்குறன் தாயும் புள்ளையுமா நிக்குது. அப்புறம் உலக்கை எடுத்து வரச்சொல்லி குறுக்கே போட்டுட்டு ஆலம் சுத்திட்டு தாண்டி இட்டுட்டு போயி கொட்டாயில கட்டினேன்.. பசங்க ஒடியாந்து தீனி தண்ணின்னு வச்சுதுவோ.நான் வேலை முடிச்சுட்டு கடைக்கு போயிட்டு வந்து சாப்பிட்டுட்டு படுத்தனா அவ்வளவுதான் அப்புறம் என்ன நடந்ததுன்னு தெரியல. பாதி சாமம் இருக்கும் ம்மா… ம்மா…ன்னுகெடந்து மாடு சத்தம் போடுது.’ஏய், பொண்ணந்திட்டான் ஏந்திரா, ஏந்திரா’ன்னு சத்தம். பதறி அடிச்சு எந்திரிக்கிறன்.

“தெருசனம் எல்லாம் கூடி நிக்கிது. ‘வெறிநாய்… வெறிநாய்…’ன்னு ஒரே சத்தம். கொஞ்ச நேரம் ஒன்னுமே புரியல.

“‘எங்கடா…எங்கடா’ங்கறேன்.

“யோவ் மாட்ட கடிச்சு இழுக்குது பார்யான்னு; ஒரு குரல். இருட்டுல ஒன்னும் தெரியலை”

“அய்யோயோ அப்புறம்டா?”

“வாயில்லா ஐீவன் கதறுது. தட்டியில இருந்த கழிய எடுத்துக்கிட்டு, ‘எலேய் லைட்டை போடுங்க’ன்னு கத்திக்கிட்டு கொட்ட உள்ள போயிட்டன்.

நாயி மாட்ட உட்டுட்டு கண்ணுக்குட்டிய கால்சப்பையே புடிச்சி இழுக்குது. நான் நாய அடிச்சன் வாயிலேயே. கொட்டாய் லைட்டை போட்டுட்டு பையன் பெரிய கல்ல தூக்கிட்டு ஒடியாந்தான். ‘ஏலேய் ஓடிப் போ கடிக்கப் போவுது”ன்னதும் மதில்ல ஏறிட்டான்.

தெரு சனமே கூடிப்போச்சு ஆளாளுக்கு உள்ள பூந்து கல்லாலியும் கட்டியாலையும் அடிச்சதும் உட்டுட்டு ஓடுச்சு

அசந்து படுத்திருந்த மாட்டோட உயிர் நிலையை கடிச்சு இழுத்துருக்குண்ண… முஞ்சியில்லாம் கடிச்சு காயம். முட்டுன மாட்ட மூக்கு வாயெல்லாம் சேர்த்து கடிச்சு இழுத்துருக்கு.

கண்ணுக்குட்டி கால் சப்பைலாம் காயம். எல்லா காயத்திலும் வேப்பெண்ணைய வச்சிட்டு விடியாத ஓடி மாட்டாஸ்பத்திரி கம்பவுண்டருகிட்ட சொல்லி கையோடு இட்டுட்டு வந்தன்.

அவரு உடனே குன்னூர்லேருந்து மருந்து வரவழைக்கனும் முதலாளி வரச்சொல்லுன்னு ஊசியப்போட்டுட்டு போயிட்டாரு

எழுதிக்கொடுத்ததும் ஒரு வாரத்தில வந்துடுச்சி மாட்டுக்கு வந்த மருந்து முழுசா இருக்கு,கன்னுகுட்டி வந்த மருந்து பாட்டில உடைஞ்சு ஒழுவுனதுல பாதிதான் இருந்துச்சு.

நான் இரண்டு நாளு ஆஸ்பத்திரிக்கு போனேன், அப்புறம் கலியனும் பையனும்தான் ஆஸ்பத்திரிக்கு ஓட்டிப் போயி தினமும் ஊசியப்போட்டுட்டு இருந்தானுங்க.சும்மா சொல்லக்கூடாதுண்ண அந்த டாக்டரும் கம்பவுன்டரும் மாடு கன்னையும் காப்பாத்திப்புடனுமுன்னு நல்லா கவனிச்சு பார்த்தாங்கண்ண., நான் வேலைக்குப்போயிட்டே இடையிலே தண்ணி காட்ட வைக்க போடறதுன்னு பார்த்துகிட்டன்

ஒரு வாரம் இருக்கும் மாடுமட்டும் கத்துது.ஒன்னும் புரியல.

கன்னுக்குட்டி சொணங்கி நின்னுது. மாடு மட்டும் கத்திக்கிட்டேஇருந்துச்சு.கம்பவுண்டருகிட்ட கூட்டி வந்து காட்டுனோம்.அப்புறம் தொடர்ந்து இரண்டு நாளு ஊசியப்போட்டுட்டு ஊட்டுக்கு நடக்க முடியாத வந்த கன்னுக்குட்டிய தூக்கிக்கிட்டு வந்திருக்கான் பையன். வீட்டுக்கு வந்த கொஞ்ச நாழில கண்ணுக்குட்டி தல சாஞ்சிருக்கு

பையன் தேடி வந்துட்டான் சூளைக்கு

பிறகு நான்தான் வந்து புதைச்சுட்டு நாயி நோண்டாம இருக்க முள்ள வெட்டி போட்டுட்டு பையனும் நானும் வந்தோம்.மாடு பால்கட்டி வலி தாங்காம கத்துது.

கலியன் சூழ்நிலை புரியாமல் ஒப்பாரி வக்கிறான்.

கடுப்பு வந்து ஏசினேன், அப்படியே போட்டுட்டு கோவிச்சுட்டு போயிட்டான். பால் கட்டுனதும் மாடு ரொம்ப கஷ்டப்பட்டு போச்சுண்ண

கன்னுக்குட்டி ஒரே காம்புல பால ஊட்டிட்டு இருந்துருக்குண்ண.வந்த அன்னைக்கே வெறிநாய் கடிச்சதால பால கறக்கல. கண்ணுக்குட்டிய குடிக்க வுட்டாச்சு கடைசில கண்ணுக்குட்டி செத்து போனதும் மாட்டோட ஒரு காம்பு மட்டும் அதிகமா வீங்கி போச்சுண்ண.

மஞ்ச பத்து போட்டு பார்த்தோம்,, வேற கண்ணுக்குட்டிய விட்டு விட்டு பார்த்தோம், வைக்கல கன்னுக்குட்டி மாதிரி செஞ்சு பால கறக்க பார்த்தேன் தலைச்சங்கன்னு இல்லையா,மாட்டுகிட்ட ஒத வாங்குனது மிச்சம்.

ம்மா… ம்மா… கத்தி அதுவா ஓஞ்சுது

நாய்க்கடி வைத்தியத்தோட பால் கட்டினதுக்கும் வைத்தியம் பார்த்துட்டு அங்கியே கொண்டு ஊடும்ன்னு போறேன். ஒரு மாசமா சிருப்பா சிரிச்சாச்சுண்ண.

வாயில்லா ஐிவனுக்கு இப்படியா ஒரு கஷ்டம் வரனும்! கடவுளே

ஏலேய் பொண்ணதிட்டான் அழவா இருந்துதுடா அந்த கன்னுக்குட்டி யார் கண்ணு பட்டுதோ தெரியல.மாடு புத்தியுள்ளதுடா பாரு அழுது அழுது கண்ண ஓட்டி பூச்சிய பாரு ஆத்துல கரையேறுனதும் உப்பு தண்ணிய அடிச்சி கழுவு.அதுக்கு கொடுப்பினை இல்ல”

“ஆமாண்ண “

“என்ன வாழ்க்கைடா? கல்லு தான அறுக்குற?’

“ஆமாண்ண. ருக்குமணியம்மா மருமகனுக்கு அப்படியே கொல்லை வல நீராணியம் பார்த்துகிட்டு அப்படியே கைக்கும் வாயுக்குமா ஒடுதுண்ண .”

“காசி சம்பாதிக்க ஆயிரம் வழியிருந்தாலும் உழைச்சு பொழைக்கறதுதான்டா நல்லது பொண்ணதிட்டான் சரி அவுத்துட்டு வா அரும்பு எடுக்கற சனம் வந்துட்டுது போவும். நானும் நாப்பது வருசமா தள்றேன்.நம்ம காலத்தில பாலம் வராது போல இருக்கு”

“அதான் எம்ஐிஆர் படுத்தே ஐெயிச்சு இருக்காருல்ல வந்துடும்.”

“ஆமாண்ண, இத உட்டுட்டு எந்த வேலைக்கு போவ?”.

“அட போடா போக்கத்தவனா நானும் எவ்வளவு நாள்தான் இந்த கரைக்கும் அந்த கரைக்குமா செக்குமாடு மாதிரி சுத்துறது.ஒரு இடம் போ முடியல ஒரு நாளு கிழமை கிடையாது என்னைக்கு கோல கீழப்போடுவேன்னு தெரியல அது கட்டைல போற அன்னைக்கு தான் நடக்குமாட்ற்றுக்கு”

“ஏண்ண அப்படி சொல்ற?”

“அட நீ வேற முந்தா நாளு என்னாச்சு தெரியுமா?”

“எண்ணாச்சுண்ண?”

“பதினோரு மணிக்கு அக்கரையில இருந்து வடக்க தீத்தாம்பாளையம் துறைக்கு தள்ளனும் கூட்டமும் இல்லை இந்த அரும்பு எடுக்கற நாலு விடக்குட்டிவ தோணில ஏறிக்கிட்டு நான் தள்ரேன் நான் தள்ரேன்னு ஒரே போட்டி சரி தள்ளுங்கடின்னு சொல்லிப்புட்டு அவுளுவ வாய புடுங்கிட்டு வெத்தலை போட்டேன்.

தோணி பாதை மாறிப்போச்சு. “ஏய் எங்கடி தள்றிங்க, மேற்கே தள்ளுங்கடி”ன்னு சொல்லிகிட்டே பார்க்கிறேன். தோணியத் தள்ளுனவ கோல உளையில சொருவி தள்ளியிருக்கா. உளையில மாட்டுன கோல உருவ முடியாம உட்டுட்டா. தோணி காத்துல போவுது”

“அய்யய்யோ அப்புறம்?”

“குதிச்சு நீஞ்சிப் போயி முழுவி கோல எடுக்கறதுக்குல்ல மே மூச்சு வாங்குது.தோணி எங்கையோ நான் எங்கையா இருக்கேன் மிதந்தும் நீஞ்சும் வந்து தோணிய புடிக்கறதுகுள்ள தோணி கரை ஒதுங்கிடுச்சு.தோணிய புடிக்கறன் சிரிக்கறாலுவ. “போங்கடி மாடுவள பொழப்ப கெடுக்க பாத்திங்களடி”ன்னு சொல்லிட்டு தோணிய தொறைக்கு கொண்டு வந்தேன்.

“நீஞ்ச முடியாதவன் தோணியோட்ட கூடாதுறா பொண்ணந்திட்டான்

“சரி எல்லாம் காசிய போடுங்க, ஏய் பொண்ணந்திட்டான் ஒனக்கு மட்டும் கொடு மாட்டுக்கு வாணாம்.

“ஏய் எறங்கிப் போறவன் கிழக்கால போவதா மேற்கால போ ஆளி கிடக்கு கால பார்த்து வை. தெரியாதவன் காலை தீத்தி பார்த்து போ”.

கரையேறியதும் விரைந்து நடக்க ஆரம்பித்தோம்.தோணியோட்டியும் பொண்ணந்திட்டாரும் வெறிநாயைப்பற்றி பேசும்போது என் இயலாமை நினைத்து அழுதேன். காய்ச்சல் நாளில் வயலில் முளையை மிக ஆழமாக அடித்து கட்டிப் போடுவர் இரவில் முளையோடு பிடிங்கி இரவு முழுவதும் மேய்வேன். இங்கு வரும்போது புது தலை கயிறு மாத்தி அதுவும் கருங்கல்லில் கட்டி விட்டனர். நாய் வரும்போது நாயின் வீச்சம் சிறிதும் இல்லை அழுகிய மாட்டின் வாடைதான் அடித்தது சுதாரித்து எழுப்புவதற்குள் உயிர்நிலையை கவ்வி விட்டது வலி தாங்காமல் அடிவயிற்றிலிருந்து கத்திக்கொண்டு உதைத்ததும் விழுந்து எழுந்து வந்து முகத்தை கவ்வியது.

வலுவோடு முட்டினேன் சரியாக வாட்டமில்லை, புது மூக்காணாங்கயிறு கொண்டு பிணைந்து கட்டி இருந்தனர்.

மறுமுறை வலுவாக நாயை முட்டி விட்டேன் கன்றின் அருகே சென்று விழுந்தது எழுந்த உடன் கன்றைக் கடிக்க ஆரம்பித்து விட்டது பொண்ணந்திட்டார் வந்து விட்டார் என்னாலேதான் நாய் கன்றைக் கடித்தது போக்கு காட்டத் தெரியாமல் அவசரப்பட்டு விட்டேன். பொண்ணந்திட்டார் மட்டும் வராமல் இருந்தால் அப்போதே கன்றைக் கொன்று இருக்கும்.

நாங்கள் திரும்பியது அதே பாதைதான்

பொண்ணந்திட்டாருக்கு புரிந்து விட்டது. நான் வீட்டு நினைப்பில் செல்கிறேன் என்று. என்னை அடிக்கவோ விரட்டவோ இல்லை. சரியாக பதினோரு மணிக்கு குண்டலாபாடி சென்று விட்டோம். கட்டுத்தரையை கண்டதும் அறியாமல் குரல் “ம்மா…” என்று எழுப்பி விட்டேன்.

ருக்குமணியம்மா சத்தம் கேட்டு வந்துவிட்டார்.

பொண்ணந்திட்டாரை, “வாங்க,” என்று விட்டு என்னிடம் வந்தார்.

“அய்யோ என் கண்ணே பட்டுடூதுங்க” என்றார்.

“இல்லம்மா அந்த நாயி வந்து இப்படி செய்யும்னு யார் கண்டா? கன்னுக்குட்டி செத்ததும் மாடு ரொம்ப கஷ்டப்பட்டு போச்சுமா. எல்லாம் விதி தான்”

“நீங்க கை கால் கழுவிட்டு வாங்க சாப்புடலாம்”

“சாப்புட்டு நான் கிளம்பறேன்மா வேல கிடக்கு“

“என் பொண்ணுகிட்ட கவலைப்பட வேணாம்னு சொல்லுங்க பேரப்பசங்கள பார்த்துக்கங்க”

“அதுக்கென்னம்மா… அதெல்லாம் நாங்க பார்த்துக்கிறோம். மாட்ட கொஞ்சம் நாளைக்கு கவனமா பாருங்க”

“பாலகிருஷ்ணன் இருக்கான் பார்த்துப்பான்”

பாலகிருஷ்ணன் என்னை மறுநாள் வல்லம்படுகை மாட்டாஸ்பத்திரி கொண்டு சென்றார். மருத்துவர் சில ஊசிகளைப்போட்டு, ஒரு வாரம் பத்து நாளில் ஈ்த்து அடித்து விடும். காலையில் வெறும் வயிற்றில் கொண்டு வா, என்றார். அதுபோலவே சென்றாம்.

காவடியில் அணைந்து இரும்பு குழாய்களை விட்டுவிட்டு கையில் ரப்பர் உறையை மாட்டி என் உயிர்நிலையில் கண்ணாடி குழாயை செருகி அழுத்தி விட்டு செயற்கை முறையில் கருத்தரிக்க வைத்தார்.

முதல் கன்றை தவற விட்டதால் அதன் நினைப்பிலேயே இருந்ததால் இரண்டு கண்ணிலும் நீர் அறியாமலே வந்து கொண்டு இருந்தது.பாலகிருஷ்ணன் என்னை வயலில் வேலை செய்யும்போது கைமேய்ச்சலில் வைத்திருந்தார். உடல் மாற்றமானதும் மீண்டு விட்டேன்

இம்முறை காளைக்கன்றை ஈன்ற நான் பரங்கிப்பேட்டைக்கு திரும்ப கொண்டு வந்து விடப்பட்டேன். அதிலிருந்து அங்கும் இங்குமாகதான். பரங்கிப்பேட்டை என்றால் மேய்ச்சலுக்கு கஷ்டம்தான். மழைநாள் தொடங்கி பங்குனி வரை கட்டுத்தரைதான். வயிற்றுக்கு வெறும் வைக்கலும் புண்ணாக்கு தவிடும்தான் புல்லுக்காக ஏக்கம் புடித்துவிடும்.

சித்திரை முதல் மேய்ந்து வர ஊர் மாட்டுடன் விடுவர்.

ரோட்டிலே சென்று இரயில்வே பாதைக்கு முன் இருக்கும் இலுப்பை தோப்பில் கிடக்கும் பழுப்புகளை பொறுக்கி கொண்டு இருக்கும்போது ரயில் வந்து கவனத்தை ஈர்க்கும். பயந்து கொண்டு பாதுகாப்பாய் நிற்பேன். ரயில் சென்றதும் கால் அன்னிச்சையாக தண்டவாளங்களை தாண்டிக் கொண்டு மேற்கே நஞ்சை வெளிக்குச் செல்லும், மற்ற மாடுகள் வேலிக்கருவையில் நுழைந்து மிகுந்த

தூரம் செல்லும் நான் பிரிந்து திரும்பி கரம்பை மேய்ந்து கொண்டு பச்சையைத் தேடுவேன்.

பாப்பான்குளம் வழியாக ஓடையில் புகுந்து மானம்பாடி புஞ்சை வெளியில் மேய்வேன்..பச்சை தெரிந்தால் முதலில் வேலியில் இருக்கும் காட்டவரையும், பாலக்கொடியும் மேய்வேன். யாரும் இல்லை என்றால் வேலியைத் தாண்டி உள்ளே நுழைந்து இருக்கும் செடிகொடிகள் வாழை எல்லாம் குருத்தோடு தின்றுவிட்டு வருவேன்.

சமயத்தில் எக்குத்தப்பாக மாட்டி கொண்டு அடிவாங்குவதும் உண்டு ஆனால் புடி கொடுக்க மாட்டேன். ஒடையில் கரம்பை மேய்ந்து கொண்டு இருக்கும் போது அருகாமை வயலில் இருந்த பச்சையை பார்த்ததும் ஆவலில் வேலியை தாண்டி விட்டேன் உள்ளே நுழைந்தபிறகுதான் ஆட்கள் களையெடுப்பதை பார்த்தேன் அப்படியே பாய்ந்து வெளியேறி ஒட ஆரம்பித்ததும் மேற்கே ரயில் ரோடு தாண்டி நஞ்சை வெளிப்பக்கம் ஓடி விடலாம் என ஒடப் பார்த்தால் சோழன் விரைவு வண்டி வரும் நேரம். அசந்தர்ப்பமாகி விட்டால் வம்பாகப் போய் விடும். முதலில் ஒரு முறை அது மாதிரியாக வேண்டியது என்னையோத்த ஒரு பசுதான் தண்டவாளத்தில் நின்ற என்னை ரயில் வருவதைப் பார்த்து முட்டித் தள்ளி கொண்டு வெளியே பாய்ந்தது. நானும் கூட அப்படி செய்வதுண்டு. ரயில் வருவதை தரை அதிர்வை வைத்தே கண்டுகொள்வேன்.

மானம்பாடி ஆட்கள் தொடர்ந்து மேற்கேயிருந்தும், தெற்கு புறமாகவும் துரத்தினர். நான் கிழக்குப் புறமாக திரும்பி வேலியைத் தாண்டி வண்ணான்ஒடை வழியாக புகுந்து மண்டபம் வந்து பொண்ணந்திட்டார் கல்வாயில் வேலை செய்து கொண்டு இருந்ததை பார்த்தவுடன் அவரிடம் ஓடி விட்டேன்.

ஆட்கள் பொண்ணந்திட்டாரிடம், கம்பை மேய்ந்து விட்டது கட்டி போடுங்க, என்று சொல்லி திட்டிவிட்டு சென்றனர்.

கட்டிப்போடப்பட்டேன்.

பிறகு சில நாட்கள் சென்றுவிட்டபோது மேய்ச்சலுக்குக்காக மணியங்கால் வாய்க்காலில் இறங்கி கோணமணியங்கால் தாண்டி மாடோட்டிப்பள்ளம் வரை இருந்த வேலிக்கருவையில் காயும் கோவக்கோடியும் தின்று கொண்டு இருந்தேன். கருவைக்கு கீழே வலாட்டி குருவிகள் இரண்டு அமர்ந்து மேய்ந்தன.

தாகமாக இருந்தது குறவன் குளம் செல்லலாம் என காட்டை விட்டு புஞ்சையில் இறங்கி கிழக்கே இருந்த குளத்திற்கு சென்றேன். எருமைகள் இறங்கி உ ழப்பியதில் அருந்த முடியாத அளவுக்கு ஆகியிருந்தது. தாகத்தோடு திரும்பும்போது தூரத்தில் பச்சையை பார்த்ததும் ஆவலைக் கட்டுப்படுத்த முடியாமல் அதை நோக்கிச் சென்று உள்ளே புகுந்து விட்டேன். சோளப்பயிர் இரண்டு கடி தான் வயலுக்கு சொந்தககாரர் குளத்தில் இருந்து தெருத்துகிறார் வயிறு நிறைந்து இருந்ததால் என்னால் ஒட முடியவில்லை.

தாழங்காட்டில் புகுந்து கருவைக்காட்டு மத்தியில் சென்று நின்று கொண்டேன் சுற்றி முள்காடுகள் அவர் பெயர் கருத்தாப்புள்ளை.

கருத்தாப்புள்ளைய எனக்குத் தெரியும் மாடுகளை வாங்கி அடிமாட்டுக்கு கொண்டு செல்பவர். “நீ எப்படி போற, நான் பாக்குறேன்,” என்று அமர்ந்து விட்டார். கருவையில் மறைந்து நின்று கொண்டேன். “என்னைக்கு இருந்தாலும் நான்தான் உனக்கு எமன்,” என்று சொன்னார். இருட்டிய பிறகு அங்கிருந்து கிளம்பி நடந்தேன்.

பொண்ணந்திட்டாரும் பையனும் வரும் வாடை காற்றில் அடித்துக் கொண்டு இருந்தது. இருவரும் என்னைத் தேடி கை லைட்டோடு வந்து எதிரில் வந்தவரிடம் அடையாளம் சொல்லி விசாரிக்கின்றனர்

“நல்ல சுத்த சிவப்பு பசுமாடுங்க. முகத்திலே கருப்பு மறை இருக்கும். தெக்குவெளி மாடுங்க கட்டுல அகப்படாது எவனாவது காலமான காலத்திலே அடிமாட்டுக்கு ராத்திரி புடிச்சுட்டான்னா என்ன பண்றது? இரண்டு மணி நேரமா அலையறோம் கிடைக்கல”

“நான் பாக்குலிங்கள ‘

பேச்சுக் குரலைக்கேட்டு ஆவலாய் அடக்க முடியாமல் மிடறு முழுங்கி விட்டேன்.சத்தம் கேட்டு பையன் கைலைட்டின் ஒளியை கருவை மேல் அடித்தான். நான் வெளியே வந்தேன்.

“கழுத இங்கே தான் நிக்கிறிய? ஏலேய் பெரியவனப் புடிச்சு கட்டித் தள்ளு இது கட்டுப்படாது இனி” என்றார் பொண்ணந்திட்டார்.

“யோவ் பொண்ணந்திட்டார,” என்று கருத்தாப்புள்ளை வந்து விட்டார். எங்கோ என்னைப்பிடிக்க மறைந்து இருக்கிறார். நல்ல வேளை பொண்ணந்திட்டார் வந்து விட்டார்.

“யான் சோளத்த புகுந்து அழிச்சிட்டு கருவைக்காட்டுல புந்துட்டுதுயா. இனி அவுத்து உடாதிங்க”.

“சரிடா கட்டி போடறன்”

“ஏன் மாமா? ஏற்கனவே ஒரு மாடு நிக்குது தினீக்கு என்ன பண்றது”

“சரிதான்டா. சாதி மாடு பால் கறக்கும்னு வாங்கி தீனி போட முடியல, தீனிய குறைச்சா பாலு குறைஞ்சுடுது. கொஞ்சம் மழையோ காத்தோ அடிச்சா காயாலா பார்க்கதான் சரியா இருக்கு. இப்பயே பாதி உடைஞ்சு போச்சு அது. அப்பாட்ட ஊட்டு மாடு மட்டும் போதும்னு சொல்லு”

“இல்ல மாமா நீ விவரமா சொல்லு. அவுங்க இந்த சிவப்பவிட அது தான் ரொம்ப உசத்தின்னு நினைக்கிறாங்க”

“சரிடா கட்டி போடு ரெண்டு நாள் சென்னு அவுத்து விடும். “

“ஏன் மாமா இந்த சிவப்பு ஒரு கிடேறிக்கூட போட மாட்டுது?”

“ஆமாண்டா ஆஸ்பத்திரியில ஊசி போட்ட எங்க போடும். அப்பல்லாம் மாடு பால் மறத்துச்சின்னா அடையாளம் வச்சிகிட்டு கடையமாடுங்கற கும்பல் மாட்டுல ஊடுவாங்க மாடு மூணு மாசத்துக்குள்ள பலம் பட்டுடும் போய் பார்த்து ஒட்டி வந்து ஊட்ல வளப்பாங்க. எப்ப டிராக்டர் வந்ததோ கெடாவடி போச்சு, கெடாவடி போனதும் கடையமாடுவ போச்சு அப்புறம் சாதி சிந்து ஜெர்சி மாடுவ வந்ததும் நாட்டு மாடுவப்போச்சு”

“ஆமாம் மாமா பார்த்து இருக்கேன். இந்த 2001 தேர்தல்ல யாரு மாமா ஜெயிப்பா?”

“யாரு ஐெயிச்சு என்னடா ஆவப்போவுது? நாம வேலைக்குப்போனத்தான் சாப்பிடலாம். ஓட்டு போடுங்க வெள்ளாத்துல பாலம் கட்டறோம்னு சொல்றாங்க பார்ப்போம்“

பையன்தான் இப்ப வளர்ந்து பெரியவனாயிட்டான்.

பெரியவன் இல்லாமல் மேலும் பிள்ளைகளும் பெண்களும் உண்டு வீட்டில்.

பொண்ணந்திட்டார்க்கு பிள்ளைகள் இல்லை. எதிர் வீட்டில் இருக்கும் இந்த பெரியவனும் அவன் கூடப் பிறந்தவர்களும்தான் அவருக்கு எல்லாம். கூலி வேலையும் விவசாய வேலையும் பார்த்துக் கொண்டு அந்த வீட்டின் சுக துக்கங்களில் பங்கெடுப்பார்.பசங்கள், ‘மாமா… மாமா… அத்தை…” என்று அவர்கள் பின்னாடியே நிற்பர்.

ஏன் நானும் தான் சின்ன குரல் கொடுத்தால் போதும் வந்து விடுவார்.

வீட்டில் கட்டிக் கிடக்கும்போது வீட்டினர் யாரைக் கண்டாலும் சின்ன செதும்பல் இல்லை என்றால் ‘ம்மா…” என்று ஒரு சத்தம் எனக்கு தண்ணியோ வைக்கலோ போட்டு விடுவர்.ஒரு நாள் சாமம் இருக்கும் படுக்காமல் நின்று கொண்டு இருந்தேன்.நாகம் ஒன்று சீறிக் கொண்டு வந்ததை பார்த்ததும் அடிவயிற்றிலிருந்து “ம்மா…”என்று கத்தி விட்டேன் அதிர்ச்சியில்.

நாகம் கொட்டகையிலிருந்த கோழிக்கூட்டில் புகுந்து விட்டது மறுபடியும் “ம்மா…” என்று கத்தியதும் கூட்டிலிருந்த கோழிகளும் கராம் புரா என்று கத்தியதும் “ஏலேய் பெரியவன, மாடு கோழில்லாம் கத்துது, லைட்டை போடு கைலைட்டை எடுத்து வா பார்ப்போம்“ என்றார் பொண்ணந்திட்டார்.

இருவரையும் உள்ளே செல்ல விடாமல் வழியை மறித்துக்கொண்டும் கயிறை இழுத்துக்கொண்டும் நின்றேன்.

“ஏன் கழுதை இப்படி பண்ற?” என்று என்னை அடித்தார்.

கோழிகள் திரும்பவும் சத்தமிட்டதும் பெரியவன் லைட்டை கூண்டு மேல் அடித்தான். நாகம் பலகை சந்து வழியாக கீழே இறங்கி வளைந்து படுத்துக் கொண்டது. நான் வேகமாக செதும்பிக்கொண்டு பெருமூச்சு விட்டதும் பெரியவன் கீழே அமர்ந்து கைலைட்டின் ஒளியைக் கூட்டின் தரையில் அடித்ததும் பாம்பு தெரிந்தது.

“மாமா பாம்பு மாமா”

“ஏலேய் சரியான உருவமா’ இருக்குடா கட்டைய எடு ஏலேய் இருரா சுலுக்கி எடுத்துக்கிட்டு வரேன், ராத்திரி நேரம் அடிச்சிவிட்டுட கூடாது.”

இருவரும் கட்டையும் சுலுக்கியோடும் வருவதற்குள் பாம்பு சுவற்றில் நுழைந்து அருகே இருந்த பெருச்சாளி வலையில் நுழைந்து விட்டது.

இருவரும் கொட்டகை, கோழிக்கூண்டு, தோட்டம் எல்லாம் தேடினர். பாம்பு அவர்கள் கண்ணுக்கு தெரியவில்லை.

பொண்ணந்திட்டார் விடிவதற்க்குள் பாம்பு புடிக்கும் இருளரைக் கொண்டு வந்து விட்டார். இருளர் குனிந்து மூக்கால் வாடைபிடித்து கோழிக்கூண்டில் இருந்து இரண்டு இறந்து போன கோழியை எடுத்துப் போட்டு விட்டு தொடர்ந்து வாடை பிடித்து எலிவலை சென்று நின்று பாம்பு அதில் உள்ளதாகக் கூறி மண்வெட்டியால் மேல் மண்ணை எடுத்தார..

பாம்பு தலையை மடக்கி ஒரு கொக்கி போல் படுத்து இருந்தது லாகவமாக கழுத்தைப்பிடித்து இருளர் தூக்கி சென்றார். அவர் மேல் பச்சிலை வீச்சம் அடித்தது.

பொண்ணந்திட்டார் பெரியவனிடம், “ஏலேய் வாயி தாண்டா இல்லை சிவப்புக்கு ராத்திரி பேசிச்சிடா,” என்றார்.

“ஆமாம் மாமா”

மிடறு விழுங்கிக் கொண்டேன்.

வெயிலில் வெளியேயும் மழை அடித்தால் கொட்டகை உள்ளும் படுப்பேன். பசங்கள் எல்லாம் வளர்ந்து வெளியே படிக்கச் சென்று விட்டனர்.

பொண்ணந்திட்டார் போல் எனக்கும் உடம்பு ஒடுங்க ஆரம்பித்தது

அம்முறை ஒரு காளைக் கன்றை ஈன்றேன். எனக்குத் தெரியாது. அதுதான் கடைசி கன்று என்று. நச்சுக் கொடி போட முடியவில்லை. முக்கிக்கொண்டும் திணறிக்கொண்டும் இருந்தேன். பெரியவனும் பொண்ணந்திட்டாரும் மூங்கில் தழையும் இலுப்பைத் தழையும் போட்டனர்.எனது வலி யாருக்கும் புரியவில்லை

பெண்கள் பார்த்து விட்டு, “பொண்ணந்திட்டாரே, மாடு உருப்புக்கொடிப்போட கஷ்டப்படுது கம்பௌண்டரையோ மருத்துவரையோ கொண்டு வாங்க,” என்றனர். பெரியவன் ஓடி மருத்துவரைக் கொண்டு வந்தான்.

அவர் வந்ததும் கழுத்தைத் தடவி ஒரு ஊசியை அடித்து வலி மருந்தை போட்டார். பிடிக்கச்சொல்லி உயிர் நிலையில் கையை விட்டு நச்சுக்கொடியை இரண்டு முறையாக எடுத்துப் போட்டு விட்டு, “ மாடு தெம்பு கொறைஞ்சு போச்சு வித்துடுங்க,” என்றார் மருத்துவர்.

வலியோடு இருந்த எனக்கு மேலும் வேதனை கொடுத்தார்

“இருக்கட்டும் சார் வீட்டு மாடு இது. வேற வைத்தியம் இருந்தா சொல்லுங்க சார்,” என்றார் பொண்ணந்திட்டார்.

“மூன்று நாளக்கு பனைவெல்லம் கருஞ்சீரகம் இடிச்சு உண்டை புடிச்சு போடுங்க நல்ல வயிறார தீனி எடுத்து தெம்பாயிடும்.”

என் உள் உறுப்புகள் எல்லாம் வலியெடுத்தன, எப்போதும் தீனி என்றால் வரும் பரவாதித்தனமும் ஆவலும் இல்லாமல் இருந்தேன். வெல்லத்தோடுகூடிய மருந்தை எடுத்ததும் பசியெடுக்க ஆரம்பித்து விட்டது. பிறகு இரண்டோரு நாளில் நலமாகி விட்டேன்.

நோயென்றே படுத்தது கிடையாது, மற்ற சாதி மாடுகளான சீமை மாடு எல்லாம் எப்போதும் கயலா கரப்புதான் எனக்கு அது போல் எப்போதும் வந்ததில்லை. தெம்பு குறைந்ததால் இம்முறை சிறிது உடல் ஆட்டம் கண்டது.

 

ஒரு குறையில்லாமல் கவனித்தனர்.

பொங்கல் வந்துவிட்டால் காலையிலே பாப்பான்குளமோ, ஓடையிலோ கொண்டு சென்று தண்ணீரில் இறக்கப் பார்ப்பர். இறங்க சண்டித்தனம் பண்ணுவேன்.

பொண்ணந்திட்டார், “ச்சி கழுத இறங்கு,” என்று ஒரு தட்டு தட்டுவார்

பசங்கள் அதற்குள் தண்ணிய வாரி மேலே அடிப்பர், சில்லிப்பில் தோலை சிலிர்த்து கொண்டு மெதுவாக இறக்கி நீந்துவேன். கொம்பை பிடித்து முகத்தை தண்ணீரில் அழுத்தி நனைத்து விட்டு வைக்கலைக் கொண்டு இருபுறமும் நின்று தேய்த்து கழுவிவிட்டு கட்டுத்தரைக்கு கொண்டு வருவர்.

மாலையில் கோவிலில் படைத்துவிட்டு பெரிய தாம்பாளத்தில் தேங்காய், பழம், பொங்கச் சோறு, கருக்கா மாலை,வன்னி ஆவாரங்கொத்து, மா, வேம்பு கலந்து கட்டிய ஒரு மாலை, தக்கமாலை என்று மூன்று விதமான மாலைகள்

இருக்கும் கட்டுத்தரைக்கு வந்ததும் எனக்கும் கன்றுத்கும் தூபம் காட்டி பிறகு ஏற்றி கும்பிடுவர். மாலையை கட்டுவதற்குள் பிய்த்து தின்ன பார்ப்பேன்

பசங்க என் தலை கயிறைப் பிடித்து கொண்டு விரட்டுவர். ஒரு வட்டம் ஓடி வருவேன். வழியில் சாதி மாடுகள் நடக்க முடியாமல் நகருவதை பார்ப்பேன், குழந்தையும் பெண்களும் பொங்கலோ பொங்கல் என்று கத்திக்கொண்டு கட்டை வண்டிகளிலும் டயர் வண்டிகளிலும் அமர்ந்து செல்வார்கள் உழவர்கள் காளைகளை ஏரில் பூட்டி ஒரு சுற்று உழுதுவிட்டு விடுவர். எங்கும் பொங்கலோ பொங்கல் என்று சத்தம் நிறைந்து கேட்கும்.

“ம்மா…” சின்னதாக ஒரு சத்தம் எழுப்பினால் பொதும், “ம்ம் பசிக்குதா வரன் வரன்,” என்று சொல்லுவர்

வீட்டுப் பெண்களை பார்த்து விட்டேன் என்றால் தலையை கீழே தாழ்த்தி ஆட்டுவேன். நான் கொடுக்கும் சத்தமும் சிறிது கமறலாக பரிதாபம் கலந்து இருக்கும்.

‘ஏன் தண்ணி வேணுமா/ இரு இரு வரேன்”

உடன் தண்ணி வந்து விடும்,கொசுறாக புண்ணாக்கு கையிலிருந்து வரும்

கடைசி கன்றை ஈன்ற அந்த வருடம் மழை பொய்த்து விவசாயம் இல்லை

தெற்கு வெளியும் வடக்கு வெளியும் பயிரோடு காய்ந்தது.

ஏதோ கரம்பையும் இலை தழைகளை மேய்ந்து காய்ச்சல் நாளை ஒட்டினொம். மழை நாளில் எங்கிருந்தோ வைக்கோல் வாங்கி வந்து விட்டனர், அது தீர்ந்ததும் வண்டியில் வரும் வைக்கோல் கத்தையும் வாங்கி போட ஆரம்பித்தனர்.

கடும் மழை நாளில் அதுவும் இல்லை. தட்டுப்பாடு ஆகியதும் பசங்களுடன் பொண்ணந்திட்டாரும் மரைமுல்லை மரத்தின் கிளைகளின் தழைகளை வெட்டிப் போட்டனர்.அந்த காய்ச்சலில் சுத்தமாக ஒடுங்கி விட்டேன்.

பெரியவனும் வெளியே வேலைக்கு என்றும் பையன்கள் படிக்க என்றும் சென்று விட்டனர். எங்களை கவனிக்க யாரும் இல்லை

இரண்டு நாளாய் வீட்டினர் யாரும் இல்லை. ஏதோ பிரச்சினையில் சிக்கி ஓடிக்கொண்டு இருந்தனர். யாருக்கும் எங்கள் நினைப்பு வில்லை

நான் எழுப்பும் குரல் எனக்கே அர்த்தமில்லாமல் கேட்டது.பொண்ணந்திட்டார் இருந்தால் பார்க்காமல் இருக்க மாட்டார். போரில் ஒரு மாதம் வரும் அளவு வைக்கோல் இருக்கிறது தொட்டி நிறைய நீர் நிறைந்து இருக்கிறது குரல் கேட்டு அவுத்து விட யாருக்கும் மனமில்லை. பார்த்துக் கொண்டே செல்கின்றனர்.

நான் கடைசியாக ஈன்ற கன்று என் கண் எதிரே கீழே தலைகுத்தி விழுந்தது. என் கண்ணில் நீர் வற்றி இருந்தது செதும்பிக்கொண்டு நின்றேன்.

பொண்ணந்திட்டார் தான் பார்த்து விட்டு, “அய்யோ மோசம் போயிட்டோம,” என்று தலையை பிடித்துக் கொண்டு எனக்கு தண்ணீர் வைத்தார் உயிர் வந்தது.

வீட்டு பெரியவர் வந்து பார்த்து விட்டு, “அய்யோ என்ன இப்படி ஆயிட்டுது கடவுளே மனுசால் எல்லாம் எப்படி மாறிட்டாங்களே, அக்கம்பக்கம் யாருக்குமா இதோட சத்தம் கேட்கல.,” என்று கதறினார்.

கன்றை தூக்கி சென்றனர்.

வீட்டுக்காரர் பொண்ணந்திட்டாரிடம், “நமக்கே இப்ப முடியல நான் கருத்தாப்புள்ளைய வர சொல்லி இருக்கேன். சிவப்ப கொடுத்துடும் இல்லைன்னா அதுவும் பட்டினில போயிடும்,” என்றார்.

‘அதெல்லாம் முடிஞ்சவரைக்கும் பார்க்கலாம் இருக்கட்டும்,” என்றார் பொண்ணந்திட்டார். “அதுவும் மனுசால் மாதிரி ஒரு ஆத்மா தான கிடக்கெட்டுமே”

“இல்ல இல்ல நான் வர சொல்லி இருக்கேன்,” என்றதும் பொண்ணந்திட்டார், “ஏங்க சிவப்பு பேசுங்க அத போயி கொடுக்க போறிங்களா நான் பார்க்க மாட்டேனா?” என்று கேட்டார்.

“அய்யோ அப்படி இல்லை பொண்ணந்திட்டார, ஒரு நாள் இப்ப கிடந்த கண்ணுக்குட்டி மாதிரி கிடந்தா என்ன செய்யறது? அப்புறம் உங்க இஷ்டம்”

மாலை கருத்தாப்பிள்ளை ஆளோடு வந்ததும் பொண்ணந்திட்டார் பார்த்து திட்டி , “மாட்ட கொண்டு போயிடலாம்னு நினைச்சு இந்த பக்கம் கிக்கம் வந்திடாத, நான் மனுசனா இருக்க மாட்டேன்,” என்றார்.

“வீட்டுக்காரர் சொன்னதால வந்தேன் இல்லன்னா நான் ஏன் வரன்?” என்று கருத்தாப்புள்ளை சொல்லி விட்டு சென்றார்.

இரண்டு நாள் சென்றதும் காலையிலே ஒரு பெரியவர் வந்து, “ஏங்க மாடு குடுக்கறன்னு சொன்னிங்கலாமா.?” என்று கேட்டார்.

“ஆமாம்,” என்ற வீட்டுக்காரர், “பொண்ணந்திட்டார பொண்ணந்திட்டார…” என்று அவரைக்கூப்பிட்டதும் பொண்ணந்திட்டார் வந்தார்.

“மாடு வாங்க வந்துருக்காப்பல. விலைய சொல்லுங்க”

“விலை கிடக்கெட்டும் வளக்க தான வாங்குறிங்க?”

“ஆமாங்க”

“என்னா ஊரு?”

“நமக்கு புவனகிரி பக்கம்ங்க”

“சரி நீயே ஏதாவது போட்டு கொடு நல்லா பாத்துக்குங்க,” என்றார் வீட்டுக்காரர். பொண்ணந்திட்டாரை, கயிறை மாற்றிக் கொடு, என்றதும் அவர் மறுத்துச் சென்று விட்டார். பெரியவர் வீட்டுக்காரரிடமிருந்து கயிறை வாங்கி என்னை ஓட்டிக்கொண்டு வெளியில் வந்தார்.

கட்டுத்தரையை தாண்டியதும் சந்தில் நின்ற கருத்தாப்பிள்ளையை பார்த்தேன்.

“ம்மா…” என்று கத்தினேன்

வழக்கம் போல என் குரல் யாருக்கும் புரியவில்லை குரல் புரிந்த யாரும் அருகிலும் இல்லை

——

முற்றும்.,

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *