Thursday, June 22, 2017

.

முதல்வர் பழனிசாமி, 4 அமைச்சர்கள், தினகரன் மீது புதிய வழக்கு!

முதல்வர் பழனிசாமி, 4 அமைச்சர்கள், தினகரன் மீது புதிய வழக்கு!

சென்னை ஐகோர்ட்டில், வக்கீல் வைரக்கண்ணன் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

ஜெயலலிதா மறைவுக்கு பின்னர், சென்னை ஆர்.கே.நகர் தொகுதிக்கு கடந்த ஏப்ரல் 14-ந்தேதி இடைத்தேர்தல் நடக்க இருந்தது. இந்த தேர்தலின்போது, அ.தி.மு.க. இரண்டாக உடைந்து தேர்தலில் போட்டியிட்டது.

சசிகலா தலைமையிலான அ.தி.மு.க. அம்மா அணி சார்பில் டி.டி.வி.தினகரனும், ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அ.தி.மு.க. புரட்சித் தலைவி அம்மா அணி சார்பில் மதுசூதனனும் போட்டியிட்டனர்.

அப்போது டி.டி.வி.தினகரன் அணியை சேர்ந்தவர்கள் வாக்காளர்களுக்கு பணமும், பரிசு பொருட்களையும் வாரி வழங்கினர்.

இதைதொடர்ந்து அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் வருமான வரித் துறையினர் கடந்த ஏப்ரல் 7-ந்தேதி சோதனை நடத்தினர். அப்போது, வாக்காளர்களுக்கு பணம் கொடுத்ததற்கான ஏராளமான ஆவணங்கள் சிக்கியது.

அதில் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதற்காக ரூ.90 கோடியை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உட்பட பல அமைச்சர்களிடம் ஒப்படைக்கப்பட்டதற்கான ஆவணங்களும் இருந்தன.

இதையடுத்து ஆர்.கே.நகர் தொகுதிக்கான இடைத் தேர்தலை தள்ளிவைத்து கடந்த ஏப்ரல் 10-ந்தேதி இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.

அதேநேரம் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்து தேர்தல் மோசடியில் ஈடுபட்டவர்கள் மீது, இந்திய தேர்தல் ஆணையமோ, வருமான வரித்துறையோ நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை.

இதையடுத்து இந்திய தேர்தல் ஆணையத்துக்கு தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேள்விகள் கேட்டு விண்ணப்பம் செய்தேன். அதில், வாக்காளர்களுக்கு ஓட்டுக்காக பணம் கொடுத்த டி.டி.வி.தினகரன், முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர்கள் செங்கோட்டையன், செல்லூர் ராஜூ, தங்கமணி, விஜயபாஸ்கர் ஆகியோர் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது?

அப்படி நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், அதற்கு என்ன காரணம்? இந்த தேர்தல் மோசடி குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட திட்டம் உள்ளதா? அ.தி.மு.க. அம்மா அணியின் அங்கீகாரத்தை ரத்து செய்யும் திட்டம் உள்ளதா? என்பது உள்பட 8 கேள்விகள் கேட்டிருந்தேன்.

அதற்கு பதிலளித்த தேர்தல் ஆணையம், டி.டி.வி.தினகரன், எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் மீது வழக்குப் பதிவு செய்யவேண்டும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி, ஆர்.கே.நகர் தேர்தல் அதிகாரி ஆகியோர் புகார் செய்ய வேண்டும் என்று கடந்த ஏப்ரல் 18-ந்தேதி உத்தரவிட்டுள்ளதாக கூறியிருந்தது.

ஆனால், அவ்வாறு போலீசில் புகார் செய்ய எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல், தலைமை தேர்தல் அதிகாரியும், ஆர்.கே.நகர் தேர்தல் அதிகாரியும் அமைதியாக இருந்து வருகின்றனர்.

எனவே, தேர்தல் கமி‌ஷன் உத்தரவின்படி, டி.டி.வி.தினகரன், எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் மீது இந்த அதிகாரிகள் புகார் செய்யவேண்டும். அந்த புகாரின் அடிப்படையில் சென்னை போலீஸ் கமி‌ஷனர் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி குற்றப்பத்திரிகையை சம்பந்தப்பட்ட கோர்ட்டில் தாக்கல் செய்ய வேண்டும் என்று இந்த ஐகோர்ட்டு உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

இந்த மனு தலைமை நீதிபதி இந்திராபானர்ஜி, நீதிபதி சுந்தர் ஆகியோர் முன்பு நாளை விசாரணைக்கு வர உள்ளது.

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *