Thursday, January 18, 2018

.
Breaking News

கடவுளுமே பொறுக்க மாட்டார் ! … } எம் .ஜெயராமசர்மா …. மெல்பேண் ..

கடவுளுமே பொறுக்க மாட்டார் ! … }  எம் .ஜெயராமசர்மா …. மெல்பேண் ..
 கண்விழித்து கண்விழித்து காலமெல்லாம் காவல்காத்து
கடல்கடந்து உடல்வலிந்து காசுழைத்து வந்துநின்று
கண்ணுக்குள் மணியாக கருணைமழை பொழிந்துநிற்பார்
மண்மீது வரமெனவே வந்துதமைந்த பெற்றோரோ !

பெற்றோரின் கனவெல்லாம் பெற்றபிள்ளை உயர்வினிலே
கற்றவராய் நிற்கவேண்டி  கடுமுழைப்பை ஈந்துநிற்பார்
பட்டம்பெற்று பிள்ளைவந்து பக்கமதில் நிற்கையிலே
பெற்றதிலும் அவர்மனது பெரிதாக மகிழ்ந்துநிற்கும் !

ஆணென்றோ பெண்ணென்றோ அவரெண்ணி நிற்காமல்
தாம்பெற்ற பிள்ளைகளை தானுயர்த்த மனந்துணிவார்
எந்தவேலை பார்த்தாலும் எப்படியும் தம்பிள்ளை
சொந்தக்காலில் நிற்பதற்கு சுகமனைத்தும் துறந்துநிற்பார் !

பட்டினியாய் கிடந்தாலும் பலதுன்பம் பட்டாலும்
மற்றவர்கள் பேசுவதை மனமேற்றிக் கொள்ளாமல்
எப்படியும் தம்பிள்ளை ஏற்றமுற வேண்டுமென்று
தப்பாமல் கோவில்சென்று தண்டனிட்டு வேண்டிநிற்பார் !

விரதங்கள் பலவிருப்பார் வேண்டியதை விட்டிடுவார்
குலதெய்வம் தனைவேண்டி கொடுத்திடுவார் தானமெலாம்
நலமான வாழ்வுவர நாளுமவர் நினைத்திடுவார்
குலையாத உறுதியுடன் கொண்டுநிற்பார் இலட்சியங்கள் !

வேலைபெற்ற பிள்ளைக்கு விருப்பமுடன் மணஞ்செய்து
நாலுபேரும் மதிக்கும்படி நல்லபடி பார்த்திடுவார்
பேரப்பிள்ளை வந்துவிட்டால் பேரின்பம் பெற்றுநின்று
ஊர்கூட்டி விழாவெடுத்து உவகையிலே மிதந்திடுவார் !

வீடுவாங்கிக் கொடுத்திடுவார் வேறும்பல செய்தும்நிற்பார்
நாடுவிட்டு நாடுபோனால் தாமும்போய் உதவிடுவார்

                 நல்லதெல்லாம் தேடித்தேடி எல்லாமே கொடுத்திடுவார்
                 எள்ளளவும் தமைப்பற்றி எண்ணார்கள் பெற்றோர்கள் !
 
                பிள்ளைகளும் வளர்ந்து பேரும்புகழ் பெற்றுநின்று
                தம்பிள்ளை வளர்ச்சியிலே தாம்கவனம் செலுத்திடுவார்
தாம்வளர்ந்து நிற்பதற்கு தமைஈந்த பெற்றோரை
                ஓரக்கண்ணால் பார்ப்பதற்கும் ஒதுக்கிவிடார் நேரமதை !
 
               உழைத்துக் கழைத்து ஓய்வெடுக்க முடியாமல் 
               தனித்து நிற்கப் பெற்றவரை தான்விடுவார் பிள்ளைகளும்
               கனவுபலகண்டு கண்விழித்துப் பார்த்த பெற்றோர்
               உணவுகூட இல்லாமல் ஒருபக்கம் ஒதுங்கிநிற்பார் !
 
               வளர்த்தகடா மார்மீது ஏறிநின்று உதைப்பதுபோல்
               வளர்த்துவிட்ட பிள்ளைகளால் பெற்றோரும் வாடிடுவார்
                உழைத்துவிட்ட உழைப்பெல்லாம் உறுஞ்சிவிட்ட பிள்ளைகளோ
                உயர்பதவி தனிலிருந்து உல்லாசம் அனுபவிப்பார் !
 
             வயதுவந்த காரணத்தால் வாய்திறக்க முடியாமல்
             மெளனமாய் அவரிருந்து வடித்திடுவார் கண்ணீரை
             ஆளாக்கி விட்டபெற்றோர் அரவணைப்பார் யாருமின்றி
             ஆண்டவனை வேண்டிநின்று அனுதினமும் அழுதுநிற்பார் !
 
             தமைவளர்த்த பெற்றோரைத் தாம்பார்க்க முடியாமல்
             முதியோர்கள் இல்லமதை முழுமனதாய் தேர்ந்தெடுத்து
             பெற்றெடுத்துப் பேர்கொடுத்த பெற்றோரை கொண்டுசென்று
             விட்டுவிட்டு வந்துநின்று விருந்துண்டு மகிழ்ந்துநிற்பார் !
 
             மிருகக்காட்சிச் சாலைக்கு மிருகம்பார்க்கச் செல்வதுபோல்
             வேளைவரும் போதுஅவர் விருப்பமின்றி போய்வருவார்
             அன்னைதந்தை தினமதனில் அவைநடுவே பேசிநிற்பார்
             அன்னைதந்தை  நினைவைமட்டும் அவர்மனது மறந்துவிடும் !
 
             பெரும்பாலும் பிள்ளைகளால் பெற்றோர்கள் படும்துன்பம்
             பேசுகின்ற வேளையிலே பெருங்கோபம் எழுகிறது 
             அரும்பாடு பட்டவர்கள் அனாதைபோல் ஆகும்நிலை
             அடிக்கடி நடப்பதினை அனைவருமே அறியவேண்டும் !
 
             முதுமையென்னும் காலமது எல்லோர்க்கும் வந்துநிற்கும்
             இளமையது என்னாளும் எம்முடனே இருந்திடாது 
             தலைமீது எமைத்தாங்கி தம்முயிராய் எமைநினைத்த
             விலையில்லா பெற்றோரை விடுதிவிடல் முறையாமோ !
 
             விரதம் பலவிருந்து வேதனைகள் பலசுமந்து 
             உரம்போட்டு எமைவளர்த்த உத்தமராம் பெற்றோரை 
             அரம்போல அறுக்காமல் அருவருப்பாய் நோக்காமல்
             சிரந்தாழ்த்தி தொழுதெழுதால் சிறப்புடனே நாம்வாழ்வோம் !
 
             மண்மீது தெய்வமாய் வந்துநிற்கும் பெற்றோரை
             மடிமீது நாம்வைத்து வருடிவிடல் வேண்டாமா 
             கண்ணுக்குள் எமைவைத்துக் காத்துநின்ற பெற்றோரை
             கண்கலங்க விட்டுவிட்டால் கடவுளுமே பொறுக்கமாட்டார்  !
 
             பெற்றோரை அரவணைத்தால் பேரின்பம் பெற்றிடுவோம்
             கற்றதனால் ஆயபயன் பெற்றோரைப் பேணுவதே 
             நற்பயனாய் அமைந்தவரே நம்முடைய பெற்றோர்கள் 
             உற்றதுணை அவரென்றே பெற்றோரைக் காத்துநிற்போம் !
              

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *