Wednesday, September 20, 2017

.
Breaking News

அதுயாருமல்ல என் மகளே!…. } -சங்கர சுப்பிரமணியன்.

அதுயாருமல்ல என் மகளே!…. } -சங்கர சுப்பிரமணியன்.

சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா

நீ  சேலையுடுத்தி நிற்கையிலே
என் கண்களும் குளம் ஆகுதம்மா
என் தாயின் சாயலும் தோனுதம்மா
அப்பா என்று நீ அழைக்கையிலே அப்பாவென என்தாய் என்னை
அன்றழைத்த நாட்களும் கண்முன்னே
இன்றுபோல் தெரிய மனமகிழுதம்மா
இலையில் நீ சோறிடும் போதும்
இடையிடையே பரிமாறும் போதும்
என்தாய் என்னை ஊட்டிவளர்த்த
அந்த தாய்ப்பாசம் தெரியுதம்மா
சோறூட்டி வாய்துடைத்து தொட்டிலிட்டு தாலாட்டிய தாய்போல் நீயும் இன்று
உணவளித்து உபசரித்து உட்காரவைத்தாய்
சாய்வு நாற்காலியில் என்மகளே
ஆண்பிள்ளைதான் அடுத்திருந்து காப்பான் எனும்
எழுதா சட்டமொன்று இருக்கையிலே
சட்டத்தை திருத்தியுமே உன் அண்ணன்
சட்டை செய்யாது நிற்கதியாய் என்னை விட்டாலும்
நான் இருக்கேன்  அப்பா என எனக்கு நற்கதியை தந்தவளே
ஊண் இருக்க உயிர் பிரியும் அன்று
உன்மடியில் என் தலைசாயும்
தலைசாயும் அந்நாளில் தவித்திடுவேன் என்மகளே
எத்தனையோ பணிவிடைகள் நீ எனக்கு செய்திட்டாலும்
இன்னொரு முறை நீ எனக்கு தாயாக வேண்டுமம்மா
உன்வயிற்றில் கருவாய் நானும் வர வேண்டுமம்மா
மறுபிறப்பில் நம்பிக்கை இல்லாது
நான் இங்கே இருந்தாலும்
உன் பாச அரவணைப்போ என்னை
பலவாறு எண்ண வைக்குதம்மா
என்ன செய்வேன் ஏது செய்வேன்
நான் இம்மண்ணை விட்டு சென்றபின்னே
எங்கு சென்றால் உன்னைக் காண்பேன்
ஒருவேளை என்னை ஈன்றவளை எங்காவது கண்டால்
அவளிடத்தே நானும் சொல்வேன்
அம்மா நீயும் என்னை விட்டு மறைந்த பின்னே
உன் வடிவில் இன்னொரு தாயைக் கண்டேன்
என்று சொல்வேன் அவளிடத்தே
அது யாரும் அல்ல என்மகள்தான் என்றே!
-சங்கர சுப்பிரமணியன்.

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *