Friday, February 23, 2018

.
Breaking News

இணைய தொல்லைகளிலிருந்து தடுக்கும் மென்பொருளை உருவாக்கிய மாணவி திரிஷா !

தெருவோர திண்ணைகளில் ஊர்க் கதை பேசிய பலரும், இன்று தொழில்நுட்ப வளர்ச்சியால் மொத்த உலகத்தோடும் மிகச் சுலபமாக இணையத்தில் கதை பேசுகின்றனர். தொழில்நுட்ப வளர்ச்சி நமது வாழ்வை ஒருபக்கம் மேம்படுத்தினாலும், மறுபக்கம் அதை தவறான நோக்கங்களுக்காக பயன்படுத்துவோரும் பெருகிக்கொண்டேதான் வருகிறார்கள்.

உண்மையான செய்திகளை மட்டுமல்லாது, ஒரு தனிப்பட்ட மனிதனின் கருத்துக்கள் நொடிப்பொழுதில் உலகுக்கே தெரிந்துவிடுவதால் அது பல நேரங்களில், பல்வேறு விஷயங்களில் அச்சுறுத்தலாகவே முடிகிறது.

இதைத் தடுக்கும் வகையில் ஒரு மென்பொருளை அமெரிக்காவின் இலினோய்ஸ் மாநிலவாசியான இந்திய வம்சாவளியைச் சேர்ந்த திரிஷா பிரபு(15) என்கிற மாணவி தனது 13 வயதில் உருவாக்கி அதற்கான காப்புரிமையையும் பெற்றுள்ளார். ‘ரீதிங்க்’ என பெயரிடப்பட்ட இந்த மென்பொருள் படைப்பால் 2014-ம் ஆண்டின் கூகுள் அறிவியல் கண்காட்சியில் உலகளாவிய போட்டியாளர்களில் இறுதியாளாராக திரிஷா தன்னை நிலைநிறுத்திக்கொள்ள காரணமானது.

மூளை தனது செயல்பாட்டிலிருந்து எப்படி விலகிப்போகின்றது என்பது தொடர்பான ஆய்வு தொடங்குவதற்கு, எதிர்பாராத விதமாக சாலை விபத்தில், திரிஷாவின் அத்தை உயிரிழந்ததே காரணமாக இருந்தது. மூளையின் சின்ன திசைத்திருப்பல்களால்தான் விபத்து நிகழ காரணமாவதாக உணர்ந்த அவர் இந்த ஆய்வை மேற்கொண்டார்.

ஏற்கனவே மூளை செயல்பாட்டின் மீது ஆர்வம் செலுத்தி வந்த அவருக்கு, இணையதளத்தில் கேலி-கிண்டலுக்கு (bully) ஆளான பெண் தற்கொலை செய்துகொண்டது ‘ரீதிங்க்’ மென்பொருளை உருவாக்க அடித்தளமாக அமைந்தது.

இதுபோன்று விளையாட்டாக ஒருவர் அவ்வப்போது இணையங்களில் கிண்டல் செய்யப்படும்போது, அவர் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகலாம். இதைத்தடுக்கும் விதமாக, ஒருவர் மற்றொருவரை அவமதிக்கும் வகையில் கருத்துக்களை டைப் செய்து வெளியிடும் முன்னர், அந்தப் இணையப் பக்கத்திலேயே அவர்கள் இதைப் பகிர வெண்டுமா? எனச் சிந்திக்க சிறு அவகாசம் வழங்கப்படும்.

ஒருவர் தற்கொலை செய்யும் அளவுக்கும் துணியலாம், எனத் தெரிந்தும் அவ்வளவு மோசமாக நடந்துகொள்ள நாம் என்ன மிருகங்களா? சொன்ன அவச்சொல்லை திரும்பப் பெறவோ, அழிக்கவோ முடியாதுதான். அதை முன்கூட்டியே தவிர்க்கும் வாய்ப்பை திரிஷாவின் இந்த மென்பொருள் ஏற்படுத்தித்தரும்.

இந்தச் சிறப்பான யோசனையால் திரிஷா தற்போது அமெரிக்காவின் சிகாகோ மத்திய ரிசர்வ் வங்கியின், நிதி மேலாண்மை விழிப்புணர்வு தூதராகவும் நியமிக்கப்பட்டுள்ளார். இதுமட்டுமின்றி ஒபாமா தலைமையில் வெள்ளை மாளிகை அறிவியல் கண்காட்சியிலும் இந்த ஆண்டு பங்கேற்ற திரிஷாவின் படைப்பு வெகுவாகப் பாராட்டப்பட்டது. உலகளாவிய இணையதள கேலி-கிண்டல்களை தடுக்கும் விழிப்புணர்வையும் திரிஷா ஏற்படுத்திவருகிறார்.

About The Author

Related posts