Thursday, June 22, 2017

.

மந்திரிகளின் வீடுகள் மீது தாக்குதல்–200 வாகனங்கள் எரிப்பு குஜராத் இடஒதுக்கீடு போராட்டத்தில்!

download (2)

குஜராத் இடஒதுக்கீடு போராட்டத்தில் 6 பேர் பலியானார்கள். கலவரத்தில் மந்திரிகளின் வீடுகள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது. 200 வாகனங்கள் எரிக்கப்பட்டன. இதையடுத்து கலவரத்தை அடக்க அங்கு ராணுவம் விரைந்தது.

குஜராத்தில் பட்டேல் சமூகத்தினர் தங்களை இதர பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்கும்படி போராடி வருகின்றனர்.

இந்த போராட்டத்தை ‘பட்டேல் அனாமத் அந்தோலன் சமிதி’யின் அமைப்பாளர் ஹர்திக் பட்டேல் தலைமையேற்று நடத்தி வருகிறார். 22 வயது இளைஞரான ஹர்திக் நேற்று முன்தினம் தங்களது கோரிக்கையை வலியுறுத்தி ஆமதாபாத் நகரில் உள்ள ஜி.எம்.டி.சி. மைதானத்தில் சாகும் வரை உண்ணாவிரதம் தொடங்கினார். இதில் சுமார் 4 லட்சம் பேர் பங்கேற்றனர்.

இதே கோரிக்கைக்காக பட்டேல் சமூகத்தினர் மாநிலம் முழுவதிலும் 140 இடங்களில் பேரணி நடத்தினர்.

இந்த நிலையில் அனுமதி பெறாமல் உண்ணாவிரதம் இருந்ததாக ஹர்திக்கையும், அவருடைய ஆதரவாளர்களையும் போலீசார் கைது செய்தனர். அப்போது போலீசுக்கும், உண்ணாவிரதம் இருந்தவர்களுக்கும் இடையே பயங்கர மோதலும், கைகலப்பும் ஏற்பட்டது. நிலைமை மோசமடைந்ததால் போலீசார் தடியடி நடத்தினர்.

இதனிடையே ஹர்திக் கைதான தகவல் காட்டுத் தீ போல பரவியது. இதனால் பட்டேல் சமூகத்தினர் பெரும்பான்மையாக வசிக்கும் ஆமதாபாத், சூரத், மெஹ்சானா, ராஜ்கோட் மாவட்டங்களிலும், சவுராஷ்டிரா பகுதியிலும் பயங்கர வன்முறை வெடித்தது.

இதைத்தொடர்ந்து அடுத்த சில மணி நேரங்களில் ஹர்திக்கை போலீசார் விடுவித்தனர். எனினும் வன்முறை தணியவில்லை. 89 பஸ்கள், கார், வேன், மோட்டார் சைக்கிள்கள் உள்பட 200–க்கும் மேற்பட்ட வாகனங்கள் கலவரக்காரர்களால் தீ வைத்து கொளுத்தப்பட்டன.

இதேபோல் 10–க்கும அதிகமான போலீஸ் சோதனைச் சாவடிகள் தீக்கிரையாக்கப்பட்டன. காடி என்ற நகரில் நகராட்சி அலுவலகத்தை வன்முறை கும்பல் சூறையாடியது.

ராஜ்கோட் நகரில் மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை ராஜாங்க மந்திரி மோகன் குந்தாரியாவின் அலுவலகத்தையும் கலவரக்காரர்கள் தாக்கினர்.

மக்கள் அமைதி காக்கும்படி முதல்–மந்திரி ஆனந்தி பென் பட்டேல் வேண்டுகோள் விடுத்தார். எனினும் கலவரம் ஓயவில்லை.

இதைத்தொடர்ந்து அவர் மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங்கை தொடர்பு கொண்டு மாநிலத்தில் நிலவும் அசாதாரண சூழ்நிலை குறித்து விளக்கினார். அப்போது, மாநிலத்தில் நிலைமையை சமாளிக்க அனைத்து உதவிகளையும் மத்திய அரசு அளிக்கும் என்று ராஜ்நாத் உறுதியளித்தார்.

இதையடுத்து அதிரடிப்படை, எல்லை பாதுகாப்பு படை, சிறப்பு அதிரப்படை வீரர்கள் என 5 ஆயிரம் துணை ராணுவ வீரர்கள் உடனடியாக குஜராத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.

மேலும் ஆமதாபாத், சூரத், மெஹ்சானா, வதோதரா, ராஜ்கோட் ஆகிய மாவட்டங்களில் 18 ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டனர். கலவரம் தீவிரம் அடைந்ததால் இந்த மாவட்டங்களில் 17 இடங்களில் ஊரடங்கு உத்தரவும் பிறப்பிக்கப்பட்டது.

ஆமதாபாத் நகரில் 9 பகுதிகளிலும், சூரத்தில் ககடோரா, சர்தானா மற்றும் வடக்கு மெஹ்சானாவில் உஞ்சா, விஸ்நகர் ஆகிய நகரங்களிலும் ஊரடங்கு உத்தரவு உடனடியாக அமல்படுத்தப்பட்டது. போலீசார் தீவிர ரோந்து வந்தனர்.

இந்த நிலையில் போலீசாரின் தாக்குதலை கண்டித்து நேற்று மாநிலம் தழுவிய முழு அடைப்புக்கு ஹர்திக் அழைப்பு விடுத்து இருந்தார். இதனால் ஆமதாபாத், சூரத், மெஹ்சானா மாவட்டங்களில் நேற்று பள்ளி, கல்லூரிகள், கடைகள், வங்கிகள் மூடப்பட்டன. பஸ்களும் இயக்கப்படவில்லை.

வதந்திகள் பரவுவதை தடுக்கும் விதமாக இணையதள மற்றும் செல்போன் சேவைகள் தற்காலிகமாக முடக்கப்பட்டன.

சவுராஷ்டிரா பகுதியின் ராஜ்கோட், ஜாம்நகர், பாவ்நகர், போர்பந்தர் ஆகிய மாவட்டங்களில் முழு அடைப்பால் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியது. சூரத் நகரில் வைர மற்றும் ஜவுளி நிறுவனங்கள் மூடப்பட்டன.

குஜராத் உள்துறை மந்திரி ரஜ்னி பட்டேல், சுகாதார மந்திரி நிதின் பட்டேல் ஆகியோருடைய வீடுகளை வன்முறையாளர்கள் கல்வீசி தாக்குதல் நடத்தினர். ரஜ்னி பட்டேல் வீட்டை தீ வைத்து கொளுத்தவும் முயற்சி நடந்தது.

பா.ஜனதா எம்.எல்.ஏ. ஜெயஸ்ரீ கடுமையாக தாக்கப்பட்டார். ராஜ்கோட் போலீஸ் சூப்பிரண்டு (ஊரகம்) ககன்தீப் காம்பீர் கலவரக்காரர்கள் நடத்திய கல்வீச்சில் படுகாயம் அடைந்தார்.

ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்த நிலையிலும் ஆமதாபாத், சூரத், மெஹ்சானா மாவட்டங்களின் பல பகுதிகளில் ஆங்காங்கே வன்முறைச் சம்பவங்கள் நேற்றும் அரங்கேறின. முக்கிய இடங்களில் ஆர்ப்பாட்டக்காரர்கள் ரெயில் மறியலிலும் ஈடுபட்டனர். தண்டவாளங்களில் தீவைத்த பொருட்களையும் வீசினர். 2 ஏ.டி.எம். மையங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன.

சூரத் நகரில் மாநகராட்சிக்கு சொந்தமான 2 பண்டக சாலைகளை ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் திரண்டு சென்று தீ வைத்து கொளுத்தினர். சில அரசு அலுவலகங்களும் எரிக்கப்பட்டன. ஏராளமான கார், மோட்டார் சைக்கிள்களும் தீ வைத்து கொளுத்தப்பட்டன.

பதான் நகரில் போலீசாரால் கலவரக்காரர்களை கட்டுப்படுத்த முடியவில்லை. பல இடங்களில் போலீசாருக்கும், வன்முறையாளர்களுக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. இதனால் கலவரக்காரர்களை கண்டதும் கூட போலீசாருக்கு உத்தரவும் பிறப்பிக்கப்பட்டது.

இந்த வன்முறை சம்பவங்களின்போது பல்வேறு இடங்களில் போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 6 பேர் பலியானார்கள். எனினும் துப்பாக்கி சூட்டில் 3 பேர் மட்டுமே இறந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

கலவரப்பகுதிகளில் மக்களிடையே நம்பிக்கை ஏற்படுத்தும் விதமாக ஆமதாபாத், சூரத், வதோதரா, ராஜ்கோட், மெஹ்சானா ஆகிய மாவட்டங்களில் ராணுவத்தினரின் கொடி அணிவகுப்பு நேற்று நடத்தப்பட்டது.

மோடி வேண்டுகோள்
கலவரம் தொடர்பாக பிரதமர் மோடி நேற்று வீடியோவில் பேசிய காட்சி குஜராத்தில் ஒளிபரப்பு செய்யப்பட்டது.

அதில் அவர், ‘‘எந்த பிரச்சினைக்கும் வன்முறை தீர்வு ஆகாது. அனைத்துக்கும் பேச்சுவார்த்தை மூலமே தீர்வுகாண வேண்டும். எனவே மக்கள் அனைவரும் அமைதி, ஒற்றுமை காத்திட வேண்டும். ஜனநாயகத்துக்கு ஊறுவிளைவிக்கும் விதமாக எதையும் செய்து விடவேண்டாம்’’ என்று கேட்டுக்கொண்டார்.

நேற்று, பட்டேல் அனாமத் அந்தோலன் சமிதி அமைப்பாளர் ஹர்திக் கூறும்போது, ‘‘நடந்த வன்முறை சம்பவங்களுக்கு போலீசாரே காரணம். நான் ஆட்சேபகரமாக எதையும் கூறவில்லை. ஒருவர் தாக்கப்பட்டாலும் கூட அதற்கான விளைவை மாநில அரசும், போலீசும் சந்திக்க நேரும். அறவழியிலான எங்களது போராட்டம் தொடரும். தேவைப்பட்டால் எங்களது கோரிக்கைக்காக முழு அடைப்பையும், உண்ணாவிரதத்தையும் அனைத்து பகுதிகளிலும் தீவிரப்படுத்துவோம்’’ என்று குறிப்பிட்டார்.

யார் இந்த ஹர்திக் பட்டேல்?
2 மாதங்களுக்கு முன்பு குஜராத்தில் ஹர்திக் பட்டேல் என்றால் யார்? என்று கேட்பார்கள். ஆனால் இன்றோ குஜராத் மட்டுமின்றி இந்த பெயர் நாடு முழுவதும் பரபரப்பாக பேசப்படும் பெயராகி விட்டது.

பட்டேல் சமூகத்தினரை இதர பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க வலியுறுத்தும் போராட்டங்களை முன்நின்று நடத்தியதாலும், நேற்று முன்தினம் முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்து அதை வெற்றிகரமாக நடத்தி விட்டதாலும் ஹர்திக் புகழ் பட்டேல் சமூகத்தினரிடையே கடந்த இரண்டே நாட்களில் உச்சத்துக்கு சென்று விட்டது.

ஹர்திக் ஆமதாபாத் அருகேயுள்ள விரம்காம் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர். சாதாரண குடும்பத்தைச் சேர்ந்த இவர் ஆமதாபாத் சகஜனாந்த் கல்லூரியில் பி.காம் படிப்பை 50 சதவீதத்துக்கும் குறைவான மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றார். படிப்பை முடித்ததும், தனது தந்தைக்கு உதவியாக அவர் நடத்தி வந்த நீர்மூழ்கி மோட்டார் பம்புகள் விற்பனை கடையில் சிறிது காலம் வேலை பார்த்து வந்தார்.

இளைஞர்கள் மூலம் பட்டேல் சமூகத்துக்காக குரல் கொடுத்து வந்தார். கடந்த 17-ந் தேதி பரோடா நகரில் பட்டேல் சமூக இளைஞர்கள் பேரணி ஹர்திக் தலைமையில் நடந்தது. இதில் 5 லட்சம் பேர் கலந்துகொண்டனர்.

இன்று குஜராத்தில் பட்டேல் சமூகத்தின் மிகப்பெரிய தலைவராக ஹர்திக் உருவெடுத்துவிட்டார். இத்தனைக்கும் இவருக்கு வயது 22 தான்.

About The Author

Related posts