Friday, February 23, 2018

.
Breaking News

இறுதிச் சடங்கு:

இறுதிச் சடங்கு:

வார நாட்களில் இயந்திர கதியில் இயங்கிவரும் வாழ்க்கையிலிருந்து விடுபட்டு
வார இறுதி நாட்களிலாவது ஆறுதலாக எழுந்திருக்கலாம் என்ற எண்ணத்தில்
படுத்திருந்தான் யோகன். அதைப் புரிந்து கொள்ளாத தொலைபேசி மணி தன்
வேலையை ஒழுங்காகச் செய்து ஒலித்தது. சுவரில் மாட்டியிருந்த கடிகாரம் மணி
ஏழரையைக் காட்ட அருகிலிருந்த தொலைபேசியை எடுத்தவன்,

“ஹலோ” என்றான்.

தொலைபேசியில் வந்த செய்தியைக் கேட்டு அலறியடித்தபடியே எழுந்தவன்,

“அப்படியா! எப்போது நடந்தது இது?” என்று கேட்டு “சரி, நான் உடனே வருகிறேன்”
என்று தொலைபேசியை வைத்துவிட்டு அருகில் இன்னும் தூக்கத்தில் இருந்த மனைவி
மலர்விழியை எழுப்பினான்.

“மலர், நம் மகேந்திரன் இறந்துவிட்டானாம். இப்போதுதான் தொலைபேசியில் கதிர்
சொன்னான்” என்றான்.

“என்ன மகேந்திரன் இறந்து விட்டாரா?” என்று வியப்போடு மனைவி கேட்டதற்கு ஆம்
என்பதாக தலையாட்டினான்.

மகேந்திரன் இருபது ஆண்டுகளுக்கு முன் மலேசியாவிலிருந்து ஆஸ்திரேலியா வந்து
குடியேறியவர். சிறந்த எழுத்தாளர். அவரது படைப்புக்கள் எல்லாமே முற்போக்குச்
சிந்தனைகளைக் கொண்டதாகவும் சமூக அவலங்களை சாடுவதாகவும் இருக்கும். பேனா
பிடித்து எழுதுபவர்கள் எல்லாம் எழுத்தாளர்கள் அல்ல. அதேபோல் புத்தகங்கள் எழுதி
வெளியிடுபவர்கள் எல்லாம் எழுத்தாளர்கள் அல்ல. பணம் படைத்தவர்கள் எல்லாமே
தாங்கள் எழுதியதை புத்தகமாக வெளியிடலாம். ஆனால் அவர் எழுதிய எழுத்துக்கள்
எந்த அளவுக்கு சமூகத்தில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதைப் பொருத்தே
உலகம் அவரை எழுத்தாளனாக அங்கீகரிக்கும் என்பார்.

பார்வைக்காக மகேந்திரனின் உடல் வைக்கப் பட்டிருந்தது. பல நண்பர்கள் வந்து அஞ்சலி
செலுத்தினர். வந்தவர்களில் சிலர் கூட்டம் கூட்டமாக நின்று பேசிக்கொண்டிருந்தனர். அப்படி
பேசிக் கொண்டிருந்தவர்கள் மத்தியில் தன்னையும் இணைத்துக் கொண்ட யோகன்
அவர்கள் பேசிக் கொள்வதை செவிமடுத்தான்.

“இறுதிச் சடங்கை எப்படிச் செய்வது என்பதுதான் இப்போது பிரச்சினையாக உள்ளது” என்றார்
கூட்டத்தில் ஒருவர்.

“ஏன் அதிலென்ன பிரச்சினை? நாளை இறுதிச் சடங்கை செய்ய முடிவு செய்து அறிவித்தாகி
விட்டதல்லவா? என்றார் மற்றொருவர்.

“நாளைதான் இறுதிச் சடங்கு. அதிலொன்றும் மாற்றமில்லை. ஆனால் அந்தச் சடங்கை
மதச்சார்பற்ற முறையில் செய்ய வேண்டுமென்று அவர் உயிரோடு இருக்கும்போதே
குடும்பத்தாரிடம் சொல்லிவிட்டாராம்”

“ஏன் அப்படி?” என்று கேட்டதற்கு, “அதை இப்போது சொன்னால் நன்றாய் இருக்காது இறுதிச்
சடங்கின்போது பிரிவு உபச்சார உரையில் சொன்னால் தான் சரியாயிருக்கும்,” என்று
சொல்லி அந்தப் பேச்சுக்கு அத்தோடு முற்றுப் புள்ளி வைத்தார் பேச்சை ஆரம்பித்து வைத்தவர்.

மறுநாள் இறுதி அஞ்சலிக்காக ஸ்பிரிங்க்வேல் மயானத்தில் ஏற்பாடு செய்திருந்தார்கள். அவரது
உடல் சவப்பெட்டியில் வைத்து மூடப்பட்டு அதன்மேல் பூக்களால் அலங்காரம் செய்யப் பட்டிருந்தது.
அப்போது அவரது நெருங்கிய நண்பர்களில் ஒருவர் பிரிவு உபச்சார உரையைவாசிக்க ஆரம்பித்தார்.

“நமது நண்பர் மகேந்திரனைப் பற்றி எல்லோருக்குமே நன்றாகத் தெரியும். முற்போக்குச் சிந்தனையும்
சமூக அவலங்கலைச் சாடும் குணமும் கொண்டவர். பெற்றோருக்கு ஆண் பிள்ளைகள்தான் கொள்ளி
போட வேண்டும் என்று எவன் கண்டுபிடித்தான் என்பார். இந்த ஒரு வழக்கத்தால் பெண் பிள்ளைகளை
மட்டும் பெற்றவர்கள் மனது என்ன பாடுபடும் என்பார். ஏன் பெண் பிள்ளைகள் கொள்ளி போட்டால்
இறந்தவரின் பிணம் வேகாதா என்று கேட்பார். அதை விடுவோம், குழந்தைகள் இல்லாதோர் மனம்
என்ன பாடுபடும் என்பதைப் பற்றியாவது அறிவார்களா என்றெல்லாம் விவாதிப்பார். இந்தப் பழக்கத்தை
ஏற்றுக் கொள்ளாத இவர் தனக்கு ஆண் பிள்ளைகள் இருந்தும் கொள்ளி போடக் கூடாது என்று
சொல்லி விட்டார், மேலும் மதச் சார்பற்ற முறையில்தான் எனது இறுதிச் சடங்கு செய்யப்பட வேண்டும்
என்றும் சொல்வார். அதற்காக அவர் என்னிடம் சொன்ன காரணம் நாம் எவருமே நினைத்துப்
பார்க்காதது.” என்று சொன்னவர் திரும்பவும் தன் உரையைத் தொடர்ந்தார்.

“ஈழ இறுதிப் போரில் ஆயிரக் கணக்கில் நம் மக்கள் கொல்லப் பட்டார்கள். சிறுவர்கள், பெரியவர்கள்
ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என்று கும்பல் கும்பலாய் மடிந்து கிடந்த நம் மக்களின் பிரேதங்களை
பெரிய பள்ளமாகத் தோண்டி பிராணிகளைப் போல் புல்டோசர்களால் தள்ளி மூடினார்கள். அப்போது
அவர்களுக்கெல்லாம் யார் கொள்ளி போட்டார்கள்? அங்கு எந்த மதச்சடங்கு பின்பற்றப் பட்டது? என்று
கேட்டார். அத்தகைய நெஞ்சை உருக்கும் காட்சிகளைக் கண்ட பின்னும் தன்மானத்துடன் வாழமுடியாமல்
நம் இனம் அங்கு தவித்துக் கொண்டிருக்கும்போது இங்கு மட்டும் நம் உடலுக்கு ஆண் பிள்ளைகள்
கொள்ளி போடவேண்டும், மதச் சடங்குகள் நடத்தப்பட வேண்டும் என்று எந்த தமிழனாவது நினைக்கலாமா?
என்பார். ஆதலால் மடிந்த என் மக்களுக்கு கிடைக்காத மரியாதையும் சடங்குகளும் எனது இறுதிச்
சடங்கின் போதும் வேண்டாம் என்று சொன்னவர் இன்று நம்மிடம் இல்லை. இயற்கை தந்த உடலை
இயற்கை கொண்டு போகிறது என்ற அவர் கருத்துக்கு மதிப்பு கொடுத்து அவருக்கு விடை கொடுப்போம்,”
என்று தன் உரையை முடித்தார்.

அவர் தன் உரையை முடிக்கவும் மேடையில் வைக்கப் பட்டிருந்த மகேந்திரனின் உடலைத் தாங்கிய பெட்டி
மேடையினுள் கொஞ்சம் கொஞ்சமாக இறங்கிக் கொண்டிருக்க அங்கு அமைதியாய் நின்று
கொண்டிருந்தவர்களின் உள்ளத்தில் அவர் உயர்ந்து கொண்டிருந்ததை அவர்களின் கண்களில் இருந்து
வழிந்தோடிய கண்ணீர் சொல்லாமல் சொல்லிற்று.

-சங்கர சுப்பிரமணியன்.

About The Author

Related posts