Wednesday, November 22, 2017

.
Breaking News

மு.க.ஸ்டாலினுக்கு 2-வது இடம்; கருணாநிதிக்கு 3-வது இடம் மீண்டும் முதல்-அமைச்சராக ஜெயலலிதாவுக்கு அதிக ஆதரவு !

மு.க.ஸ்டாலினுக்கு 2-வது இடம்; கருணாநிதிக்கு 3-வது இடம் மீண்டும் முதல்-அமைச்சராக ஜெயலலிதாவுக்கு அதிக ஆதரவு !

ஜெயலலிதா மீண்டும் முதல்-அமைச்சராக அதிக மக்கள் ஆதரவு தெரிவித்து உள்ளனர். இதில் மு.க.ஸ்டாலினுக்கு 2-வது இடமும், கருணாநிதிக்கு 3-வது இடமும் கிடைத்து இருப்பது கருத்துக்கணிப்பின் மூலம் தெரியவந்து உள்ளது.

கருத்துக்கணிப்பு

மக்கள் ஆய்வக இயக்குனர் பேராசிரியர் ச.ராஜநாயகம் வழிகாட்டுதலின்படி, தமிழகத்தின் 28 மாவட்டங்களில், 80 சட்டசபை தொகுதிகளில் கடந்த 13-ந் தேதி முதல் 26-ந் தேதி வரை பல்வேறு தரப்பு மக்களிடம் கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது. தமிழகத்தில் கட்சிகளின் செல்வாக்கு எப்படி உள்ளது? மீண்டும் முதல்-அமைச்சராக தகுதி படைத்தவர் யார்? என்பது உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து படித்தவர்கள், படிக்காதவர்கள், கூலிவேலை செய்பவர்கள், விவசாயிகள், தனியார் நிறுவன ஊழியர்கள், மாணவர்கள், அரசு ஊழியர்கள் என பல்வேறு தரப்பு மக்களின் கருத்துகளை கேட்டு அறிந்தனர்.

இந்த கருத்துக்கணிப்பின் முடிவுகளை பேராசிரியர் ச.ராஜநாயகம் நேற்று சென்னையில் வெளியிட்டார்.

கருத்துக்கணிப்பின் முக்கிய அம்சங்கள் வருமாறு:-

ஜெயலலிதாவுக்கு அதிக ஆதரவு

தகுதி, திறமை, வாய்ப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தற்போதைய முதல்-அமைச்சர் ஜெயலலிதா மீண்டும் முதல்-அமைச்சர் ஆவார் என்று அதிகம் பேர் கருத்து தெரிவித்து உள்ளனர். அதாவது ஜெயலலிதா மீண்டும் முதல்-அமைச்சர் ஆவதற்கு ஆதரவாக 31.56 சதவீதம் பேர் கருத்து தெரிவித்து உள்ளனர்.

அவரை அடுத்து 2-வது இடத்தில் தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் 2-வது இடத்தில் உள்ளார். அவருக்கு ஆதரவாக 27.98 சதவீதம் பேர் கருத்து தெரிவித்து உள்ளனர். 21.33 சதவீதம் பேரின் ஆதரவுடன் தி.மு.க. தலைவர் கருணாநிதி மூன்றாவது இடத்தில் உள்ளார்.

விஜயகாந்துக்கு 4-வது இடம்

இந்த பட்டியலில் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் 6.24 சதவீதத்துடன் 4-வது இடத்திலும், பா.ம.க. எம்.பி. டாக்டர் அன்புமணி ராமதாஸ் 2.27 சதவீதத்துடன் 5-வது இடத்திலும், ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ 1.85 சதவீதத்துடன் 6-வது இடத்திலும், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் 1.13 சதவீதத்துடன் 7-வது இடத்திலும், தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் 1.01 சதவீதத்துடன் 8-வது இடத்திலும், தமிழக பா.ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் 0.93 சதவீதத்துடன் 9-வது இடத்திலும், நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் 0.84 சதவீதத்துடன் 10-வது இடத்திலும் உள்ளனர்.

அ.தி.மு.க.வுக்கு வெற்றி வாய்ப்பு

ஜெயலலிதாவின் தற்போதைய அணுகுமுறை தொடர்ந்தால் வருகிற சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியை தக்கவைத்துக் கொள்ளும் என்று 24.7 சதவீதம் பேர் கருத்து தெரிவித்து உள்ளனர். அ.தி.மு.க.வுக்கு ஆட்சி அமைக்கும் அளவுக்கு பெரும்பான்மை கிடைக்காவிட்டாலும் தி.மு.க.வை விட அதிக இடங்களை வெல்லும் என்று 7.5 சதவீதம் பேர் கூறி உள்ளனர்.

அ.தி.மு.க.வுக்கும், தி.மு.க.வுக்கும் கடும் போட்டி நிலவும் என்றும், கூட்டணியின் பலத்தை பொறுத்து முடிவு அமையும் என்றும் 26.2 சதவீதம் பேரும், தி.மு.க.வுக்கு ஆட்சி அமைக்கும் அளவுக்கு பெரும்பான்மை கிடைக்காவிட்டாலும் அ.தி.மு.க.வை விட அதிக இடங்களை வெல்லும் என்று 22.6 சதவீதம் பேரும் கருத்து தெரிவித்து இருக்கிறார்கள்.

பெருவாரியான இடங்களை வென்று தி.மு.க. ஆட்சியை பிடிக்கும் என்று 8.3 சதவீதம் பேர் கூறி உள்ளனர்.

கூட்டணி வாய்ப்பு

சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க.-பா.ஜனதா கூட்டணி ஏற்பட வாய்ப்பு இருப்பதாக 37 சதவீதம் பேரும், அதற்கான சாத்தியம் இருப்பதை மறுக்க முடியாது என்று 23.1 சதவீதம் பேரும், அந்த கட்சிகள் கொஞ்சம் நெருங்கி வருவதைப்போல் தெரிவதாக 9 சதவீதம் பேரும், கூட்டணி வாய்ப்பு கொஞ்சம் கூட கிடையாது என்று 13.9 சதவீதம் பேரும் கருத்துக்கணிப்பின் போது தெரிவித்து இருக்கிறார்கள்.

அரசியல் கட்சிகள் அணி மாறுவது அரசியலில் சகஜம் என்றும், அதை பெரிதாக எடுத்துக் கொள்ளக்கூடாது என்றும் 58.1 சதவீதம் பேர் கூறி உள்ளனர்.

கூட்டணி கட்சிகளின் அணுகுமுறைகளில் முரண்பாடுகள் வரும் போது அணி மாறுவது தவிர்க்க முடியாதது ஆகிவிடுகிறது என்று 17.4 சதவீதம் பேரும், வெற்றி பெறுவது மட்டுமே அக்கட்சிகளின் நோக்கம், கொள்கைகளை பற்றி அக்கறை இல்லை என்று 12.8 சதவீதம் பேரும், அடிக்கடி அணிமாறும் கட்சிகளை தடை செய்வது நல்லது என்று 8.2 சதவீதம் பேரும் கருத்து தெரிவித்து இருக்கிறார்கள்.

மாற்றுக்கட்சிகள் கிடையாது

தமிழகத்தில் அ.தி.மு.க., தி.மு.க.வுக்கு மாற்றுக்கட்சிகள் கிடையாது என்று 53.4 சதவீதம் பேர் கூறி இருக்கிறார்கள். தே.மு.தி.க. தலைமையில் ஆட்சி அமைக்கும் சாத்தியம் இருப்பதாக 12.2 சதவீதம் பேரும், பா.ம.க. தலைமையில் ஆட்சி அமைக்கும் சாத்தியம் இருப்பதாக 11.9 சதவீதம் பேரும், பா.ஜ.க. தலைமையில் ஆட்சி அமைக்கும் சாத்தியம் இருப்பதாக 1.4 சதவீதம் பேரும், காங்கிரஸ் தலைமையில் ஆட்சி அமைக்கும் சாத்தியம் இருப்பதாக 1.1 சதவீதம் பேரும் கூறி இருக்கிறார்கள்.

இதர கட்சிகள் ஒன்றிணைந்தால் ஆட்சி அமைக்கலாம் என்று 4 சதவீதம் பேரும், தமிழ் அமைப்புகள் அனைத்தும் ஒன்றிணைந்தால் ஆட்சி அமைக்கலாம் என்று 3.5 சதவீதம் பேரும் கூறி இருக்கிறார்கள்.

பிரச்சினைகளை தீர்க்கும் கட்சி என்ற வகையில் அ.தி.மு.க.வுக்கு ஆதரவாக 23.9 சதவீதம் பேரும், தி.மு.க.வுக்கு ஆதரவாக 19.3 சதவீதம் பேரும், தே.மு.தி.க.வுக்கு ஆதரவாக 4.6 சதவீதம் பேரும், பா.ம.க.வுக்கு ஆதரவாக 2.4 சதவீதம் பேரும், பா.ஜ.க.வுக்கு ஆதரவாக 1.9 சதவீதம் பேரும் கருத்து தெரிவித்து இருக்கிறார்கள். எந்த கட்சியும் பிரச்சினைகளை தீர்க்கப்போவது இல்லை என்று 26.6 சதவீதம் பேர் கூறி உள்ளனர்.

யாருக்கு ஓட்டு?

தற்போதைய அரசியல் சூழ்நிலையில் எந்த கட்சிக்கு வாக்கு அளிப்பீர்கள் என்று கேட்டதற்கு கட்சிகளுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்தவர்களின் சதவீதம் வருமாறு:-

அ.தி.மு.க. -34.1

தி.மு.க. -32.6

தே.மு.தி.க.-4

பா.ம.க. -3

பா.ஜ.க. -2.9

காங்கிரஸ் -1.6

கருத்து இல்லை-12.8

யாருக்கும் இல்லை (நோட்டா)-3.2

விலையில்லா மிக்சி, கிரைண்டர் திட்டத்துக்கு அமோக வரவேற்பு

அ.தி.மு.க. அரசு செயல்படுத்தி வரும் நலத்திட்டங்களில் விலையில்லா மின்விசிறி, மிக்சி, கிரைண்டர் ஆகிய திட்டங்களுக்கு மக்களிடையே அமோக வரவேற்பு உள்ளது. அந்த வகையில், மக்களால் பெரிதும் வரவேற்கப்படும் முதல் 5 திட்டங்கள் (சதவீதத்தில்) வருமாறு:-

விலையில்லா மின்விசிறி, மிக்சி, கிரைண்டர்-89

திருமண உதவித்தொகை-73.6

மாணவர்களுக்கு மடிக்கணினி-72.8

முதியோர் உதவித்தொகை-69.7

அம்மா உணவகம் -56.2

முக்கிய பிரச்சினைகள்

தமிழக அளவில் முக்கிய பிரச்சினையாக குடி பிரச்சினை இருப்பதாக 41.7 சதவீதம் பேர் கருத்து தெரிவித்து உள்ளனர்.

அரசுத்துறைகளில் லஞ்சம், ஊழல் பிரச்சினை 15.9 சதவீதத்துடன் 2-வது இடத்திலும், குடிதண்ணீர் பிரச்சினை 12.5 சதவீதத்துடன் 3-வது இடத்திலும், வேலையில்லா திண்டாட்டம் 8.4 சதவீதத்துடன் 4-வது இடத்திலும், பணப்புழக்கம் இல்லை என்ற பிரச்சினை 7.5 சதவீதத்துடன் 5-வது இடத்திலும் உள்ளது.

9 மாவட்டங்களில் சமபலம்

* மாவட்ட ரீதியாக, சென்னையில் அ.தி.மு.க.வை விட சற்று அதிக ஆதரவு பெற்ற கட்சியாக தி.மு.க. விளங்குகிறது.

* 9 மாவட்டங்களில் இரு கட்சிகளும் சம பலத்துடன் உள்ளன. மற்ற மாவட்டங்களில் அ.தி.மு.க. முன்னிலை வகிக்கிறது.

* கல்வி ரீதியாக பார்த்தால், கல்லூரி, தொழில் கல்வி கற்றோரிடையே தி.மு.க.வுக்கு ஆதரவு அதிகம். பிற தரப்பினர் அனைவரிடையேயும் அ.தி.மு.க.வுக்கு அதிக ஆதரவு உள்ளது.

* சாதி ரீதியாக, பிற்படுத்தப்பட்ட வகுப்பினரிடையே அதிக செல்வாக்குடன் தி.மு.க. விளங்குகிறது. தாழ்த்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், பிற சாதியினர் ஆகிய அனைத்து வகுப்பினரிடையேயும் அ.தி.மு.க. செல்வாக்கு பெற்று உள்ளது.

* 20 வயதுக்கு குறைவான இளைஞர்களிடையே தி.மு.க.வுக்கு சற்று அதிக வரவேற்பு உள்ளது. மற்ற அனைத்து வயதுப்பிரிவினரும் அ.தி.மு.க.வுக்கு முதலிடம் வழங்குகின்றனர்.

* ஆண்கள் மத்தியில் அ.தி.மு.க.வை விட சிறிதளவு அதிகமாக தி.மு.க.வுக்கு ஆதரவு உள்ளது. ஆனால் பெண்களின் ஏகோபித்த ஆதரவு அ.தி.மு.க.வுக்கு உள்ளது.

* இஸ்லாமியர்களின் வாக்கு தி.மு.க.வுக்கு அதிகம் செல்கிறது. இந்துக்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் அ.தி.மு.க.வை அதிகமாக ஆதரிக்கின்றனர்.

மேற்கண்ட விவரங்கள் கருத்துக் கணிப்பில் தெரியவந்து உள்ளன.images (5)

About The Author

Related posts