Sunday, February 18, 2018

.

மதிப்பிற்குரிய திரு. டக்ளஸ் தேவானந்தா அவர்களே

மதிப்பிற்குரிய திரு. டக்ளஸ் தேவானந்தா அவர்களே

மதிப்பிற்குரிய திரு. டக்ளஸ் தேவானந்தா அவர்களே என் தாழ்மையான
வேண்டுகோள் தயவுசெய்து கோபப் படாமல் என்னிடம் உள்ள சில சந்தேகங்களுக்கு உங்களிடம் இருக்கும் தகுந்த பதிலை தர உங்களால் முடியுமா???

தங்களின் ஆரம்பகால ஆயுத போராட்ட வாழ்க்கை, அதனுள் நீங்கள் அனுபவித்த அனுபவங்கள் எல்லாமே தங்களுக்கு ஒரு அரசியல் பாதையை காட்டியுள்ளது. உங்கள் அரசியல் வழியில் தங்களின் எளிமை, மக்களை நேரடியாக,சந்திக்கும்தன்மை,
ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு எடுத்தவுடன் பதில் சொல்லும் தன்மை போன்றவை மிகவும் சிறப்பானது அதை மதிக்கிறேன், வாழ்த்துகிறேன்.

மனித உறவு என்பது வெறும் உரிமைகளை முன்னிறுத்தி ஏற்படுவதில்லை. கடமைகளை முன்னிறுத்தியே கட்டப்படுகிறது.
அரசியலைப் பற்றிய தத்துவம் முந்தியதல்ல, அரசியல் உண்மைக்கு பிந்தியதே. மனிதர்கள் முதலில் அரசியல் தத்துவங்களை தெரிந்து கொண்டு, பிறகு அவைகளை அனுசரித்தாற்போல் அரசியல் விவகாரங்களை நடத்துகிறார்கள் இல்லை.

எப்படி ஒரு வைத்தியன் பைத்தியகாரனுக்குரிய வைத்திய சாஸ்திரம் பயின்றுவிட்டு, பின் வைத்திய தொழிலை செய்கிறானோ அப்படி அவர்கள் அரசியல் செய்கிறார்கள் இல்லை. ஏதோ ஓர் அரசியல் தத்துவத்தை அனுசரித்து, சட்டங்கள் இயற்றப்படுவதில்லை, இரத்து செய்யப்படுவதுமில்லை.

அரசியல் திட்டங்கள்ஆக்கப்படுவதுமில்லை,அழிக்கப்படுவதுமில்லை எப்பொழுதுமே ஏதாவது ஒரு தத்துவம் இருந்து கொண்டுதான் இருக்கும். ஏனென்றால் மனிதன் தத்துவத்தை சிருஷ்டி செய்துகொண்டிருக்கிற பிராணி.

ஆனால் இந்த தத்துவம், ஒரு காரியம் நடந்த பிறகு அதற்குப் பொருந்துவதாகக் கண்டு பிடிக்கப்படுகிறதே தவிர அந்தக் காரியம் நடை பெறுவதற்கு முன்னர் இந்தத் தத்துவம் இருப்பதில்லை. இந்தநிலையில் இன்று தமிழர்களின் மனநிலை இடி விழுந்த வீட்டில் தீயும் பிடித்த மாதிரி நொறுங்கி, கருகிப்போயுள்ளது,

தமிழ்தேசிய கூட்டமைப்போடு நீங்கள் சேர்ந்து இயங்குவதால் எந்த வகையில் உங்கள் தகுதி குறைந்து விடுகிறது ? அதனால் எந்த வகையில் அவர்கள் தகுதி கூடிவிடுகிறது? கடந்த இருபத்தைந்து வருடமாக சிங்கள மிதவதிகளுடன் இணக்க அரசியல் நடத்தி ஆக்க பூர்வமாக சாதித்த சாதனை என்ன? எத்தனை? எங்கே?

போர் முடிந்து ஆறு வருடங்கள் முடிந்தும் இராணுவம் இன்னும் இனியும் இங்கு இருக்க வேண்டிய அவசியம்மென்ன?? அதற்காக நீங்கள் எடுத்த முயற்சி என்ன?? காணி பிரச்சனையில் நீங்கள் ஆற்றிய பலன் என்ன என்று கேட்க எனக்கு தோன்றுகிறது.

சுமார் அறுபதாயிரம் ஏக்கர் காணிகள் இராணுவத்தினரின் கையில் தான் இருக்கிறது. வெறும் அறுநூறு ஏக்கர் காணிகளை விடுவித்தால் போதுமா அதை எத்தனை கட்சிகள் உரிமை கொண்டாடுவீர்கள்??
படித்த இளைஞர்கள் வேலையில்லாமல் இருக்கிறார்களே அவர்களுக்கு எத்தனைபேருக்கு வேலை வாய்ப்பை பெற்றுக் கொடுத்தீர்கள்??

காணாமல்போன குடும்பங்களின் பிள்ளைகளை எத்தனை பேரை இது வரை மீட்டுள்ளீர்கள்?, அவர்களின் கண்ணீர்வலி தெரியுமா?
நீங்கள் அதிகாரத்தில் இருக்கும் போது அதை ஏன் செய்ய முடியவில்லை? உங்கள் பதவியை தக்க வைக்கத்தானே அல்லது வேறு எதற்கு?

இதுவரை நீங்கள் ஆற்றிய பணிகளில் கிராம வளர்ச்சிக்காக பாடுபட்டதுண்டா? அதனால் பயன் பெற்றவர்கள் எங்கு என்ன செய்கிறார்கள்?
சும்மா பேருந்து விட்டால் போதுமா? அதுக்கு வீதி போட்டதாக ஏதாவது இடத்தை காட்டுங்கள் பார்க்கலாம், அது செய்தோம் இது செய்தோம் என்றால் அது உங்கள் வீட்டுப் பணமா அரசாங்கப் பணம். நீங்கள் செய்ய வேண்டிய கடமைதானே, அதுக்குத் தான் சென்ற முறை மக்கள் உங்களுக்கு வாக்களித்தார்கள்.

உங்கள் ஆட்சியில்தான் மதுக்கடைகள் புதிது புதிதாக அரங்கேற்றப் பட்டன. அதற்கு உரிமம் கொடுத்தது யார்? உங்கள் உறுப்பினர்கள் தானே. முழு இலங்கையிலும் பார்க்க இன்றைய இளைஞர்கள் குடி, புகைத்தல், கொலை, கற்பழிப்பு, விபச்சாரம் என யாழ்ப்பாணத்தில் தான் நடப்பதாகவும், அங்கிருந்து அதிக வரிப்பணம் வருவதாக ஒரு நாட்டு சிங்கள சனாதிபதி கவலையுடன்தெரிவித்துள்ளார். அது நீங்கள் கடமை ஆற்றும் பகுதியில் தானே அதிகம் நடக்கிறது.

அது மட்டுமா அதிசயம் முழு சிங்கள பிரதேசங்களிலும் கொடிய நோயான எய்ட்ஸ் இருபத்திமூன்று வீதம் இருக்க. யாழ்ப்பாணத்தில் மட்டும் இருபத்திமூன்று வீதம் வர யார் காரணம்? சற்று சிந்தித்து பார்த்து பதில் சொல்லவும் ஐயா.

என்றுமே இல்லாத அளவிற்கு சமூக சீர்கேடுகள் மனிதனால் கொஞ்சம்கூட ஜீரணிக்க முடியவில்லை. சரியான அரசியல் கொள்கையில்லாமல் உங்களால் எப்படி அரசியல் செய்ய முடிகிறது.
கரைக்கிறவன் கையால் கரைத்தால் கல்லும் கரையும் என்ற உங்கள் தலைகீழ் தத்துவத்தின் மகத்துவம் இதுதானா?

பொதுவாக யாழ்நிலப்பரப்பில் இருந்து கடல் நீர் மட்டம் நாலு மீற்றர் அழத்தில் தான் உள்ளது. இது இலங்கை அரசாங்கமே அறிவித்துள்ளது என்பதை தாங்கள் அறிந்திருப்பீர்கள் என நம்புகிறேன்.
அப்படி இருக்க நீங்கள் காங்கேசன்துறை,மாவிட்டபுரம் ,வல்வை , மணற்காடு பகுதிகளில் அதுவும் கடற்கரைக்கு மிகவும் அண்மையில் இமய மலையை மூடக்கூடிய அளவிற்கு தோண்டி மண்ணை அள்ளி விற்று பணம் சம்பாதித்தீர்கள் அது எவ்வளவு பெரிய ஆபத்து என்பது தெரியுமா உங்களுக்கு?

கடல் நீர் உள்ளே வந்து முழு யாழ்மண்ணும் இன்று உப்பு நீர் கலந்துள்ளது, குடிக்க, விவசாயம் செய்ய மக்கள் இன்றும் எவ்வளவு கஸ்ரப் படுகிறார்கள் எம் தமிழ் மக்கள், இயற்கை வளம் முழுவதுமாக தொலைந்தது. அந்தக் குழியை மூடஎங்கிருந்து மண்ணை கொண்டு வருவது ஐயா.

அதுமட்டுமா உங்கள் அதிகாரத்தை பயன் படுத்தி வன்னியில் பல நூறு வருடங்கள் பழமையான பலன் தரும் பாளை, முதிரை,வேம்பு மரங்களை அறுத்து வித்து பணம் பாத்தீர்கள். அந்த இயற்கை அன்னையை உங்களால் திருப்பி கொடுக்க முடியுமமா?
இன்று எப்படி அவர்களிடம் சென்று வாக்கு பிச்சை கேட்பீர்கள்?
மக்கள் உங்களுக்கு பாடம் புகட்ட காத்திருக்கிறார்கள் என்பதுதான் உண்மையான இயற்கை தத்துவமாகும்.

கடந்த இருபத்தைந்து வருடமாக சிங்கள இராணுவத்தினருடன் இணக்க அழிவை நடத்தி எத்தனை பெண்களின் தாலி அறுக்கப்பட்டது. உங்கள் உறுப்பினர்கள் தான் அதற்கு முழுப்பொறுப்பும் கூறவேண்டும். கடந்தகாலத்தில் போர் நடந்த போது சங்கானை முருகமூர்த்தி கோயிலில் சுமார் இருநூறுக்கும் அதிகமான காயப்பட்ட புலிப் போராளிகள் தங்கி இருந்த நேரத்தில் உங்கள் உறுப்பினர்கள், இராணுவத்தின் உதவியுடன் கோயிலோடு தரை மட்டம் ஆக்கப்பட்டது. இதை யாராலும் மறக்கத்தான் முடியுமா ஐயா

ஊரடங்கு நேரத்தில் எத்தனை தமிழ் இளைஞர்களின் வாழ்வு பறிக்கப்பட்டது உங்கள் உறுபினர்களால். யாழ், கொழும்பு மக்கள் போக்குவரத்து தடைபட்ட நேரத்தில் பயண சீட்டுகள் பெற்று கொடுத்து ஒருவருக்கு ஐம்பதாயிரம் வரை பணம் எடுத்துக்கொண்டதும்,உங்களின் அதிகாரத்தை பயன் படுத்தி அரசாங்க உத்தியோகம் பெற்றுக்கொடுத்து ஒருவருக்கு பத்து லட்சம் வரை கறந்த கொள்ளையை மக்கள் இன்னும் மறக்கவில்லை ஐயா.

கடந்த வருடம் மகிந்த ராஜபக்சவை யாழ்ப்பாணத்திற்கு அழைத்து நாவற்குழியில் இருநுறு சிங்கள குடும்பங்களை குடியேற்றி, அவர்களுக்கு காணி உரிமை பத்திரமும் பெற்றுக்கொடுத்ததை இங்கு சொல்ல கடமைப்பட்டுள்ளேன். இது எவ்வளவு பெரிய தமிழ் தேசிய துரோகம், கொடுமை என்பதை மக்கள் உணரவேண்டும்.

கொலை, கொள்ளை செய்து இனியும், இன்னும் ,இங்கு என்ன அரசியல் தீர்வை பெற்றுக் கொடுக்க போகிறீர்கள். நடந்தவை நடந்ததாக இருக்கட்டும் தாங்கள் கொஞ்சமும் தயக்கம் காட்டாமல் தமிழர்களின் ஆன்மாவான தமிழ்தேசிய கூட்டமைப்புடன் இணைந்து பணியாற்றி மக்கள் மனங்களில் நீங்கள் இடம் பிடிக்க வேண்டும் என்பதே என் அவா.

இதற்கு பிறகும் அரசியல் செய்ய முயற்சி எடுப்பீர்களாக இருந்தால்
அது பழைய புண்ணில் இருந்து வடியும் நீரைக்குடிக்கும் ஈ க்களுக்கு சமமானவர் என்பது என் கருத்தாகும்.

எப்போதுமே நினைவு படுத்தினால் தான் காயம் வலிக்கும் என்பதை நாம் நன்கு உணர்வேன். எனவே வானத்தில் இருந்து ஒரு நட்சத்திரம் உதிர்ந்தாலும், மரத்தில் இருந்து ஒரு பூ உதிர்ந்தாலும் எம் தமிழ் சமுதாயத்தில் இழப்பு இழப்புத்தான் என்பதை யாரும் மறந்துவிட்டு பேசுவது தமிழர்களுக்கு அழகல்ல.

இன்று நெஞ்சு உடைந்த எம் இனத்திற்கு நெலுச்சோறு போடுவதா அல்லது குத்துப்பட்டு வந்த தமிழர்களுக்கு கோழிச்சோறு போடுவதா என்று நீங்கள் தான் இறுதி முடிவு எடுக்க வேண்டும். அதை விடுத்து நான் சதுரமான முட்டை தான் சாப்பிடுவேன் என்று அடம் பிடிப்பீர்களாக இருந்தால்

மனிதன் எழுவான் மக்கள் போராடுவார்கள்.

என் மனதில் சரி என்று பட்டதை சொல்லியுள்ளேன். அப்படியே எல்லாவற்றையும் நம்பி விடாதிர்கள், அதாவது ஏற்றுக்கொள்ளாதீர்கள் உங்கள் அறிவுக்கும்,அனுபவத்திற்கும் சரியென்று பட்டால் மடுமே ஏற்றுக்கொள்ளுங்கள் இலையேல் அப்படியே தள்ளிவிடுங்கள்.

நன்றி
புதுக்குடியிருப்பில் இருந்து
ஏ.புத்திமான்

About The Author

Related posts