Friday, February 23, 2018

.
Breaking News

ஈழத்தமிழரின் பேசாப்பொருள் ;பெண்களின் மறுமணம்

ஈழத்தமிழரின் பேசாப்பொருள் ;பெண்களின் மறுமணம்

அவுஸ்திரேலியாவில் இருந்து கால்நூற்றாண்டுக்கும் மேலாக நண்பர் முருகபூபதி முன்னின்று நடத்தும் இலங்கை மாணவர் கல்வி நிதியம் இலங்கையில் நீடித்த போரினால் பாதிக்கப்பட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெற்றோரை அல்லது குடும்பத்தின் மூல உழைப்பாளியை இழந்த மாணவர்களுக்கு நிதி உதவியளித்து, அவர்கள் தமது கல்வியை தொடர்வதற்கு நடவடிக்கை எடுத்துள்ளது. தற்பொழுது நூற்றுக்கணக்கான மாணவர்கள் இந்நிதியத்தினால் பயனடைந்து வருகிறார்கள்.

சமீபத்தில் இந்நிதியத்தின் ஆண்டுபொதுக்;கூட்டத்தில் கலந்துகொண்டேன். நடந்த கலந்துரையாடலின்போது , போரின் வன்முறையால் விதவைகளாகிய பெண்களுக்கு மறுமணம் நடக்குமாயின் இந்த நிதியத்தின் பணிகள் தேவையற்றுவிடும் என்றும் 1971 இல் வங்காளபோரில் தமது கணவர்களை இழந்த விதவைகளை அங்குவாழும் இளைஞர்கள் மணந்துகொள்ள முன்வரவேண்டும் என்று முஜிபூர் ரஹ்மான் சொல்லியிருக்கிறார் என்றும் விதவைப்பெண்கள் விடயத்தில் அவர் பேசியதைப்போன்று எமது தலைவர்கள் யாராவது சமூக சிந்தனையோடு பேசியிருக்கிறார்களா என்றும் கேட்டேன்.

இதனைக்கேட்ட பல ஆண்கள் குழம்பிவிட்டார்கள் ஒருசிலரது முகங்கள் சிவந்து விட்டன. ஏதோ சொல்லக்கூடாத வார்த்தையை நான் சபையோர் மத்தியில் சொல்லிவிட்டது போல் பார்த்தார்கள்.

இலங்கையில் போர் முடிந்து ஒருவருடத்தின் பின்னர் 12 விதவைப்பெண்களுக்கு நானும் எனது நண்பர்களுமாக, கவிஞர் கருணாகரனின் மூலம் உதவினோம். மூன்றாவது வருட இறுதியில் எனது குடும்பத்தினரோடு சென்று கருணாகரனின் இல்லத்தில் அவர்களை சந்தித்தேன். நான் அவர்களுக்கு காசோலையை எழுதிக்கொடுத்தபோது எனது நண்பர்களும் மற்றும் எனது மனைவி மகள் ஆகியோரும் அந்தப் பெண்களுடன் பேசிக் கொண்டிருந்தார்கள்.

வெளியே வந்ததும் எனது மகள் கேட்ட கேள்வி.

‘அப்பா இவர்கள் ஏன் இன்னமும் திருமணம் செய்யவில்லை? ’

அப்பொழுது நான் அவர்களை திரும்பிப் பார்த்தேன்.

அவர்களில் மாற்றம் தெரிந்தது. போர் முடிந்த காலத்தில் நான் அவர்களைப் பார்த்தவேளையில் சோர்வுடனும்; விரக்தியுடனும் காணப்பட்டார்கள். ஆனால் மூன்றாண்டுகளில் அவர்களின் முகங்களில் மலர்ச்சி தென்பட்டது. புன்னகை பூக்க புதுக்கோலம் கொண்டிருந்தனர். காலம் அவர்களை மாற்றியிருந்தது.

மகள் கேட்ட அந்தக்கேள்வியை கடந்த ஒருவருட காலமாக நானும் என்னுள்ளே கேட்டுவருகிறேன்.

பெண் மறுமணம் செய்வதைப்பற்றி பேச விரும்பாத சமூகம் இருந்து வாழ்ந்து என்ன செய்யப்போகிறது?

சுதந்திரம் – ஈழம் எனக்கேட்டதெல்லாம் ஆண்களுக்கு மட்டும்தானா?

யாருக்குச் சுந்திரம்?

உண்மையான சுதந்திரமென்றால் என்ன?

ஒரு இலட்சம் பெண்கள் போரில் விதவைகளாகிவிட்டனர் என நீட்டி முழக்கி பேசும் தலைவர்கள் இவர்களுக்காக செய்தது என்ன?

ஐம்பது அறுபது வயதில் மனைவி இறந்தால் அல்லது பிரிந்தால் மறுமணம் செய்யும் ஆண்களைக் கொண்டது எமது சமூகம். அது தவறில்லை அதைச் செய்யவேண்டும் என்றே வலியுறுத்துவேன்.

ஆனால், அந்த உரிமையை இருபாலருக்கும் பொதுவில் வைத்தால் என்ன?

70 வருடங்களுக்கு முன்னர் ஹீரோசிமாவில் அமெரிக்கா குண்டு போட்டதால் பாதிக்கப்பட்டு தோல் எரிந்த இளம் பெண்களை ஹீரோசிமா விடோஸ் எனக் கூறி ஜப்பானியரால் விலத்தி வைக்கப்பட்டார்கள்.

குண்டைப் போட்ட அமரிக்காவிலேயே பல பெண்கள் பிளாஸ்ரிக் சத்திரசிகிச்சை செய்தார்கள்.

தமிழ்ப் பெண்களது நிலைமை புரியாத ஆண் அரசியல் தலைவர்கள்தான் இப்படி இருக்கிறார்கள் என்றால் குறைந்த பட்சம் மதத்தலைவர்களாவது இதைப் பற்றிப்பேசலாம்?.

நீதிபதியாக காலம் கடத்திவிட்ட வடமாகாண முதல்வருக்குக்கூட இது புரியவில்லையா…?

தற்போது பதவிக்குப் போட்டிபோடும் சில பெண் வேட்பாளர்கள் இவர்களை தங்கள்பிள்ளைகளில் ஒருவராக நினைத்து இதைப்பற்றி பேசக்கூடாதா?

ஒரு இலட்சம் பெண்களின் வாக்குகள், குறைந்தபட்சம் இரண்டு அங்கத்தவர்களை தெரிவு செய்யும் தொகை. பெண்களுக்கு நடக்கப்போகும் தேர்தலில் போதியளவு பிரதிநிதித்துவம் கொடுக்கப்படவில்லை என்ற குரலும் பெண்கள் பக்கமிருந்து எழுந்தது.

அனந்தி ஸ்ரீதரனும் உரத்துச்சொன்னார். அதனால் தான் போட்டியிடப் போவதாகவும் தெரிவித்துவிட்டு பின்வாங்கிவிட்டார். வாழ்வாதாரம் என்பது தமிழ்த்தலைவர்களின் முக்கிய பேசுபொருளாகவும் இருக்கிறது. வாழ்வாதாரம் எவற்றில் தங்கியிருக்கிறது.

பணத்தைக்கொடுத்தால் போதும் என்ற மனப்பான்மையா…? அதற்காக புலம்பெயர்ந்தவர்கள் உதவவேண்டும் என்றும் வெளிநாடுகளுக்கு சுற்றுலாச்செல்லும் எமது தமிழ்த்தலைவர்கள் சொல்லிவருகிறார்கள். எமது தமிழ் விதவைப்பெண்களை கையேந்தும் சமூகமாகவே வாழவைத்துப்பார்க்கும் காலம் இன்னும் எத்தனைவருடகாலத்திற்கு தொடரப்போகிறது.

போர் முடிந்த தொடக்க காலத்தில் எனது குடும்பமும் எனது நண்பர்களின் குடும்பங்களும் சில விதவைப்பெண்களின் வாழ்வாதாரத்திற்கு உதவினோம். ஆனால், இந்த நிலை நீடிப்பது விமர்சனத்துக்குரியது.

பசித்தவருக்கு மீனைக்கொடுக்காதே தூண்டிலைக்கொடு என்று சொல்லப்பட்டது.

போரினால் விதவைகளான பெண்களில் குறைந்த வயதுள்ள இளம்பெண்களும் இருக்கிறார்கள். அவர்களுக்கும் எதிர்காலம் இருக்கிறது.

மறுமணத்தில் விருப்பமில்லாத பெண்களை நான் இதுவிடயத்தில் வலியுறுத்தவில்லை.

குறைந்த பட்சம் இளம்விதவைப்பெண்கள் மறுமணம் அவர்களது பொருளாதாரம் முதலானவற்றைப் பேசுபவர்கள் யாராவது இருந்தால் அவர்களுக்கு உங்கள் வாக்குகளைப் போடுங்கள்.

தலைவர் சம்பந்தன் இதுபற்றி புரியாத நிலையில் இருந்தாலும் மறறவர்கள் இதைப்பற்றி பேசலாம்தானே…?

சமூகத்தில் செய்யக் கூடிய ஆக்கபூர்வமான விடயங்களையும் செய்யவேண்டியதையும் பற்றிப் பேசுபவர்களையே அரசியலில் தெரிவு செய்யவேண்டும்.

கிடைக்காத கண்ணுக்கு தெரியாத விடயங்களை பேசுபவர்கள் மதகுருமர்கள் மட்டுமே.

சமூகம் குறித்து நன்கு புரிந்துகொண்ட நல்ல அரசியல்வாதிகளை இந்த தேர்தலில் தேர்ந்தெடுக்கவேண்டும். வெற்றுக் கோசங்களை போடுபவர்களை புறம் ஒதுக்குங்கள். இளம் விதவைகள் மறுமணம் பற்றி குறைந்த பட்சம் சமூகத்தில் விழிப்புணர்வை உருவாக்குங்கள்.

நடேசன்

About The Author

Related posts