Thursday, January 18, 2018

.
Breaking News

எமது இன விடுதலைக்கான தார்மீக காரணத்தை சர்வதேசம் ஏற்கவேண்டும்!

எமது இன விடுதலைக்கான தார்மீக காரணத்தை சர்வதேசம் ஏற்கவேண்டும்!

கேள்வி: கடந்த தேர்தல்களில் வன்னி வாழ் தமிழ் மக்கள் எழுச்சியுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கே வாக்களித்தனர். எனினும் யுத்தம் நிறைவடைந்து ஆறாண்டுகளாகின்ற போதும் இன்றும் அவலத்தில் வாழும் வன்னி மக்களின் நிலைமையில் மாற்றம் ஏற்பாடமைக்கு காரணம் என்ன?

2009ஆம் ஆண்டு நடைபெற்ற வவுனியா நகரசபைத் தேர்தல் மற்றும் யாழ் மாநகரசபை தேர்தல் என்பன யுத்தம் முடிவடைந்தவுடன் இராணுவத்தின் பிடியில், தீவிர கண்காணிப்பில், திறந்தவெளி சிறையில் உறவினர்கள்கூட பல்வேறு சோதனைகளின் மத்தியில் பார்க்கக்கூடிய நிலையில் முகாம்களுக்கு வெளியில் உள்ள தமிழ் மக்களின் மனோநிலை எவ்வாறிருக்கிறது என்பதை அளவிடுவதற்காக நடத்தப்டப்டது.

2010ஆம் ஆண்டு பொதுத்தேர்தலானது தங்களை ஆதரித்தால் மட்டுமே முட்கம்பிவேலிகளுக்குப் பின்னால் உள்ள மக்கள் மீள்குடியேறமுடியும் என்று மிரட்டப்பட்டனர். இரண்டு தேர்தல்களிலும் எமது மக்கள் மிகத் தெளிவாக உரிமைக்கான குரலாகவே தமது வாக்களிப்பைப் பயன்படுத்திக்கொண்டனர்.
வன்னி மக்களைப் பொறுத்தவரையில் அவர்கள் வீரம்செறிந்த பாரம்பரியத்தில் வந்தவர்கள். எத்தகைய இடர்வரினும் துணிச்சலுடன் முகங்கொடுப்பவர்கள். சடுதியில் ஏற்பட்ட யுத்த அழிவு பலபெண்களைக் குடும்பத்தின் தலைமைப்பொறுப்பை ஏற்கும் நிலைக்குத் தள்ளிவிட்டது. இருப்பினும் தமது துன்பங்களை ஒருபுறம் வைத்துவிட்டு, எஞ்சியிருக்கின்ற உயிர்களைக் காப்பதற்கான வாழ்க்கைப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தமிழ் மக்களின் உரிமைக்காக எழுந்த எழுச்சிமிகு போராட்டம் சர்வதேசத்தைப் பிழையாக வழிநடத்தி அவற்றின் துணையுடன் முள்ளிவாய்க்காலில் முடக்கப்பட்டது. இருப்பினும் எமது மக்கள் தமது வாக்குபலத்தால் தங்களது வேட்கை குறையவில்லை என்பதை மீண்டும் மீண்டும் நிரூபித்து வருகின்றார்கள். இதன் காரணமாகவே முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று மற்றும் புதுக்குடியிருப்புக்கான பிரதேசசபைத் தேர்தல்கள் பல்வேறு காரணங்களைக் காட்டி நடைபெறாமல் இழுத்தடிக்கப்பட்டு வருகின்றது.

கடந்த அரசாங்கம் தமிழ் மக்கள் எப்பொழுதும் தங்களுக்கு வாக்களிக்க மாட்டார்கள் என்பதைப் புரிந்துகொண்டு எமது பகுதிக்கான அபிவிருத்திப் பணிகளை மேற்கொள்ளாமல் தடுத்துவந்தது. மாகாண சபைக்கும் அதிகாரங்களை வழங்காமல், எமது மக்களைத் தொடர்ந்தும் தனது பிடியில் தனது தயவில் வைத்திருப்பதையே விரும்பியது.

யுத்தம் நடைபெற்ற காலத்தில் வன்னிப் பகுதியில் இருந்தவர்களின் உண்மையான தொகையை மறைத்து குறைந்த அளவான உணவுப்பொருட்களை வழங்கி, அத்தியாவசிய மருந்துகளைக்கூட வழங்காமல் நோயின் தாக்கத்தினாலும் பட்டினியினாலும் ஏராளமானவர்கள் மரணமடையக் காரணமானவர்கள் யுத்தம் முடிவடைந்த பின்னரும் எமது மக்களை யுத்த அடிமைகளாகவே நடத்துகின்றனர்.
எமது உரிமைக்குரலை மௌனிக்கச் செய்வதற்கே இலங்கை அரசாங்கம் எமது பிரதேசத்தில் பொருளாதாரத்தை மேன்மையடையச் செய்யும் அபிவிருத்திப் பணிகளை மேற்கொள்ளாமல் தடுக்கின்றது. எமது மக்கள் முயற்சியுடையவர்கள்.

தமது காணிகளில் இறக்கிவிடப்பட்டவுடனேயே அவர்கள் தமது உடலுழைப்பைத் தொடங்கி சுயசார்ப்புப் பொருளாதாரத்தை நோக்கி முன்னேறத் தொடங்கிவிட்டனர். ஆனால், எமது மக்களின் வீடுகளை இடித்து அழித்த அரசாங்கம் அதனைக் கட்டிக்கொடுப்பதற்கு அக்கறை காட்டவில்லை. அதுமட்டுமன்றி, அனுதாபத்துடன் கட்டித்தர முன்வந்தவர்களையும் தடுப்பதிலேயே மும்முரமாய்ச் செயற்பட்டனர்.

கடந்த ஜனவரி 8ஆம் திகதிவரை இந்நாடு மகிந்தராஜபக்ச எனும் தனிமனிதரின் சர்வாதிகாரத்தின் கோரப்பிடியில் சிக்கித்தவித்தது. அவரது ஆட்சி ஒட்டுமொத்த நாட்டையும் குறிப்பாக வடக்கு-கிழக்கையும் சீரழித்து சின்னாபின்னமாக்கியது. அதுவே அந்த தனிமனிதனின் சாம்ராஜ்யத்தின் வீழ்ச்சிக்கு வழிவகுப்பதாகவும் அமைந்தது.

ஒரு சர்வாதிகார சாம்ராஜ்யம் வீழ்த்தப்பட்டிருக்கின்றது. எமது மக்களின் வாழ்வாதாரத்தைக் கட்டியெழுப்புவதற்கான முயற்சிகளில் நாம் ஈடுபடவேண்டும். இருப்பினும் எமது மக்களின் அடிப்படைத் தேவைகள் தொடர்பாக நாம் தொடர்ந்தும் குரல்கொடுத்தே வந்துள்ளோம்.

கேள்வி: அவ்வாறாயின் எதிர்காலத்தில் இம்மக்கள் சார்ந்து எவ்வாறான நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளீர்கள்?

எனது பதவிக்காலத்தில் என்னால் முடிந்தவற்றை நான் செய்து வருகின்றேன். பாதிக்கப்பட்டவர்களில் நானும் ஒருவன் என்பதால் எமது சமுதாயத்தின் விடுதலையிலேயே எனது விடுதலையும் தங்கியிருப்பதால் எனது சுயநலமும் பொதுநலமும் பிரிக்கமுடியாத அளவிற்கு பிணைக்கப்பட்டுள்ளது. எமது இனம் தலைநிமிர்ந்து சமத்துவத்துடன் இந்நாட்டில் வாழும்நாளே நான் இந்த நாட்டில் தமிழனாக பிறப்பெடுத்ததன் -எனது பிறப்பின் இரகசியத்தை வெளிப்படுத்துவதாக அமையும்.

எமது மக்களின் அனுமதியின்றி அவர்களின் காணிகளைப் பறித்தெடுத்தமை, என்ன காரணத்திற்காக சிறையில் அடைக்கப்பட்டுள்ளோம் என்பதே தெரியாமல் சிறைகளில் தமது இளமைக்காலத்தைக் கழிக்கும் அப்பாவி தமிழ் இளைஞர்கள், விசாரணை செய்யப்படாமலே சிறையில் அடைத்துவைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகள், ஒரு பொது நோக்கத்திற்காக போராடியதற்காக சிறைத்தண்டனை வழங்கப்பட்டு, இன்னமும் சிறைவாசம் அனுபவித்துக்கொண்டிருக்கும் அரசியல் கைதிகள் ஆகியோரின் விடுதலைக்காகவும், காணாமல் போகச் செய்யப்பட்டோர் தொடர்பில் விபரங்களைத் தெரிந்துகொள்வதற்கும், அவர்களை விடுவிப்பதற்கும் தொடர்ந்தும் குரல்கொடுத்து அவர்களின் விடுதலையை விரைவுபடுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.

மனிதவுரிமை மீறல்கள், போர்க்குற்றம் தொடர்பாக சர்வதேச விசாரணையை வலியுறுத்தி, உண்மையைக் கண்டறிந்து அவற்றிற்கான பரிகாரங்களைக் காண்பதுடன், எமது இனத்தின் விடுதலைக்கான தார்மீக காரணத்தைச் சர்வதேச சமூகம் ஏற்கவேண்டும் என்றும் வலியுறுத்தப்படும்.

கேள்வி: யுத்தம் நிறைவடைந்த சூழலில் முதலாவது ஜனநாயகப் போராட்டத்தை வடக்கில் நடத்தியவர் என்ற அடிப்படையில் தற்போது வரையில் தீராப்பிரச்சினைகளாக காணப்படும் அரசியல் கைதிகள் விடுதலை, மீள்குடியேற்றம், காணமல்போனோர் பிரச்சினை, இராணுவ வெளியேற்றம், பெண்கள் சிறுவர்கள் வன்முறைகளுக்கு எதிராக அவ்வாறான போராட்டத்தின் மூலம் தீர்வை வழங்க முடியும் எனக் கருதுகின்றீர்களா?

2011ஆம் ஆண்டு முதன்முதலாக காணாமல் போகச்செய்யப்பட்டோர், அரசியல் கைதிகளின் விடுதலை, காணி அபகரிப்பு போன்ற பிரச்சினைகளை முன்னிறுத்தி ஒருநாள் அடையாள உண்ணாவிரதத்தை நடத்தினோம். அன்றைய போராட்டத்தில் மக்கள் கலந்துகொள்ளவிடாமல் தடுப்பதில் இலங்கை அரசாங்கமும் இராணுவமும் பொலிஸ்துறையும் புலனாய்வுப் பிரிவினரும் கடும் முயற்சிகளை மேற்கொண்டனர். இருப்பினும் நாம் ஏ-9 வீதியை சிறிது மறித்து அவர்களின் தடைகளைத் தகர்த்தெறிந்து எமது போராட்டத்தை முன்னெடுத்திருந்தோம்.

அதனைத் தொடர்ந்து வன்னியின் பல பகுதிகளிலும் மக்கள் பங்கேற்புடன் பல்வேறு போராட்டங்களையும் முன்னெடுத்திருந்தோம். எமது மக்களின் பிரச்சினைகளை வெளிக்கொணர்வதற்கு இத்தகைய போராட்டங்கள் மிகவும் அவசியம். இதன் விளைவாகவே எமது பக்கத்தின் நியாயங்கள் வெளியுலகிற்கு தெரியவந்தது.

தீர்வைக் காணவேண்டும் என்பதற்காகவே நாம் போராட்டங்களை நடத்துகின்றோம். தீர்வு உடன் கிடைக்கவிலலை என்பதற்காக போராட்டத்தை நாம் கைவிட்டுவிடமுடியாது. உலகில் விடுதலை பெற்ற தேசிய இனங்கள் யாவும் தொடர்ச்சியான போராட்டங்களின் மூலமாகவே வெற்றியடைந்துள்ளன. எனவே எமது பிரச்சினைகள் தீரும்வரை நாம் தொடர்ந்தும் போராடத்தான் வேண்டும். அடக்குமுறைகள் நிலைத்ததாக உலகெங்கிலும் வரலாறில்லை. உரிமைப்போர்கள் தோற்றதாக உலகம் இதுவரைக் கேட்டதில்லை. எமது போராட்டமும் வெற்றியடையும். எமக்கான நியாயமான தீர்வும் விரைவில் கிட்டும்.

கேள்வி: அவ்வாறான போராட்டங்களை எதிர்காலத்தில் தொடருவீர்களா?

நிச்சயமாக. அரசாங்கம் தானாக முன்வந்து எதையும் வழங்கிவிடப்போவதில்லை. அழுத பிள்ளைதான் பால்குடிக்கும். நாம் தொடர்ந்தும் குரல்கொடுத்தால்தான் எமது உரிமைகளை நிலைநாட்ட முடியும். போராட்டத்திற்கான அவசியத்தை இல்லாமல் செய்வது அரசாங்கத்தின் கடமை. அது தனது கடமையைச் செய்யத் தவறும்போது எமக்காக நாம் போராடவேண்டியது எமது கடமையாகும். மக்கள் எம்மை அதற்காகவே தெரிவு செய்து அனுப்புகிறாரகள். நாம் அவர்களின் ஆணையை உதாசீனம் செய்ய முடியாது.

நாம் மக்களுக்காகச் சேவை செய்வது என்பது மக்கள் எமக்கிட்ட ஆணையே தவிர, எமக்கு வழங்கப்பட்ட அதிகாரம் அல்ல என்னும்; கொள்கைவழி செயல்படுபவன் நான். எனது மக்களின் விருப்பத்திற்கு மாறாக என்னால் செயல்படமுடியாது. அவர்களது ஆணையை என்னால் மீறவும் முடியாது.

கேள்வி: அரசியல் தீர்வு விடயத்தில் கூட்டமைப்பு முன்வைத்த விடயத்திற்கு முற்றுமுழுதாக தென்னிலங்கை முரண்பட்ட நிலையில் காணப்படுகின்றதே?

பிரித்தானியர் இந்நாட்டை விட்டுப் போகும் சமயத்தில் எந்த மனோநிலையில் இருந்தார்களோ அதே மனோநிலையில்தான் இன்றும் சிங்களபௌத்த இனவாத சக்திகள் இந்நாட்டில் செயற்படுகின்றனர். ஆட்கள் மாறியுள்ளனரே தவிர, அவர்களின் எண்ணங்களில் மாற்றம் வரவில்லை. ஐக்கியப்பட்ட இலங்கைக்குள் சமஷ்டி அடிப்படையில் அரசியல் தீர்வைக் காண்பதற்கு இலங்கை அரசு முன்வரவேண்டும் என்று கேட்டுள்ளோம். அதன் பொருளைக்கூட விளங்கிக்கொள்ளாமல் ஐயோ அப்பா என்று கூச்சல்போடுகின்றனர். கொடுத்து வாங்குவதல்ல சுதந்திரம் என்பதும் கேட்டுப் பெறுவதல்ல விடுதலை என்பதும் எங்கேயோ கேட்டவை. இப்பொழுது நினைவுக்கு வருகிறது.

ஆகவேதான் சர்வதேச தலையீட்டுடன் எமக்கான நிரந்தர அரசியல்தீர்வு எட்டப்பட வேண்டும் என்று நாம் தொடர்ந்தும் வலியுறுத்துகின்றோம். அரசாங்கத்துடனான எமது பேச்சுவார்த்தைகளில் சர்வதேசத்தின் மத்தியஸ்தம் இருக்க வேண்டும் என்று கேட்கின்றோம்.

நன்றி,

வீரகேசரி (தேர்தல் களம்)

About The Author

Related posts