Sunday, February 18, 2018

.

சுகாதாரம் எங்கே போயிற்று?

சுகாதாரம் எங்கே போயிற்று?

நண்பன் பாலா தன் சகோதரன் வெளி நாட்டிலிருந்து வந்திருப்பதகச்
சொன்னவன் வீட்டுக்கும் வரும்படி விரும்பிக் கேட்கவே மனைவி பங்கஜத்தை
அழைத்துக் கொண்டு நண்பனின் வீடு சென்றான் கோபால். அங்கே நண்பனின்
தம்பி சதீஷ் அவன் மனைவி மற்றும் இரண்டு குழைந்தகளும் வந்திருந்தனர்.
கொஞ்ச நேரம் தான் அங்கிருந்தாலும் சதீஷின் குடும்பம் நடந்து கொண்ட
விதம் வியப்பாய் இருந்தது. சிறிது நேரம் பேசியிருந்துவிட்டு சதீஷிடம்
குடும்பத்தோடு வீட்டுக்கு விருந்துக்கு வருமாறு அழைத்துவிட்டு அங்கிருந்து
கிளம்பினான்.

“ஜானு, சமையல் எல்லாம் முடிந்து விட்டதா? அவர்கள் வரும் நேரமாகி விட்டது”
என்று மனைவியிடம் கேட்டுக் கொண்டிருந்தபோதே அழைப்பு மணி அடிக்கும் சப்தம்
கேட்டது.

வேகமாய் வந்து முன் கதவைத் திறக்கவும் அங்கே சதீஷின் குடும்பம் நிற்கவே,

“வாங்க, வாங்க இப்பத்தான் பங்கஜத்துடன் சொல்லிக் கொண்டிருந்தேன். வந்து
விட்டீர்கள்” என்று அவர்களை வீட்டிற்குள் அழைத்து வந்து சோபாவில் அமர
வைத்தான்.

கொஞ்ச நேரத்தில் சாப்பாட்டு மேஜையில் சாப்பிடும் தட்டுக்களை வைத்தாள்
பங்கஜம். அப்போது சதீஷின் பன்னிரண்டு வயது மகன் பிரபு தட்டைத் திருப்பித்
திருப்பிப் பார்த்தான்.

“பிரபு என்ன அப்படிப் பார்க்க்கிறாய்?”

“டஸ்ட்” என்று உதட்டை பிதுக்கியபடியே தட்டைக் காண்பித்தான் பிரபு.

“என்னங்க, தயவு செய்து இந்தத் தட்டை கொஞ்சம் கழுவிக் கொடுக்கிறீங்களா?
அங்கே நாங்கள் ரொம்பவும் சுத்தமாய் இருப்போம். அதனால் தான் இலேசாக தட்டில்
பிபிசுக்கு இருப்பதால் இப்படி சொல்கிறான். தப்பாய் நினைத்துக் கொள்ளாதீர்கள்”
என்று பங்கஜத்திடம் சொன்னான் சதீஷ்.

அதனால் என்ன? சுத்தமாய் இருப்பது நல்லது தானே என்று சொல்லி தட்டை திரும்ப
கழுவிக் கொண்டு வைத்துவிட்டு தம்ளரில் தண்ணீரை ஊற்றினாள். அப்போது அப்பாவின்
காதில் ஏதே கிசுகிசுக்க திரும்பவும் என்ன என்று கேட்டாள் பங்கஜம். ஒன்றுமில்லை,
பாட்டில் தண்ணீர் கேட்கிறான். அண்ணா வீட்டில் கூட எங்களுக்கு மட்டும் குடிக்க
பாட்டில் தண்ணீர் தான் என்று சொன்னான். அவன் அப்படி சொல்லி முடித்ததும்,

“அப்படியா, எங்களுக்கு தெரியாதே. சரி கொஞ்ச நேரம் பொருத்துக்குங்க. இதோ கடைக்குப்
போய் பாட்டில் தண்ணீர் வாங்கி வருகிறேன்” என்று கிளம்பியவனைத் தடுத்து, “அதெல்லாம்
ஒன்றும் வேண்டாம். தண்ணீரைக் நன்றாக் கொதிக்க வைத்து எல்லோருக்கும் கொடுங்கள்
அதுபோதும்” என்று சொல்லி கடைக்குச் செல்ல எழுந்தவனைத் தடுத்து உட்கார வைத்தான்.

ஒருவாறாக சாப்பாடு முடிந்து பேசிக் கொண்டிருந்தனர். அப்போது சதீஷ் சுத்தம் சுகாதாரம்
பற்றி பேசியவன் ஐந்து வருடங்களுக்கு மேல் வெளி நாட்டிலேயே தங்கி விட்டதால் இங்கு
வந்தால் ஒத்துக்க மாட்டேங்குது. சுத்தமான காற்று இல்லை. எங்கும் ஒரே தூசு. அதனாலேயே
ரோட்டோரக் கடைகளிலோ மட்டமான உணவகத்திலோ கூட நாங்கள் எதையும்
சாப்பிடுவதில்லை என்று கூறினான். அப்படியே ஊர்க்கதையெல்லாம் பேச நேரம் போனதே
தெரியவில்லை. கடைசியில் கிளம்பத் தயாரானார்கள். போகும்போது வரும் ஞாயிற்றுக் கிழமை
சோமேஸ்வரன் கோவிலில் பால் அபிஷேகம் செய்யப் போவதாகவும் குடும்பத்துடன் வந்து
கலந்து கொள்ளுமாறு அழைத்துவிட்டு அங்கிருந்து கிளம்பினர்.

ஞாயிற்றுக் கிழமை மாலை ஐந்து மணி. சோமேஸ்வரன் கோவில் முன்புறம் காரில் வந்து
இறங்கினர் பாலாவின் குடும்பத்தினர். அதே சமயம் கோபாலின் குடும்பத்தினரும்
வந்து சேர்ந்தனர். பாலுவின் அம்மா மகன் சதீஷின் குடும்பத்துக்காக பத்து லிட்டர் பாலில்
அபிஷேகம் செய்வதாக சதீஷ் வெளிநாடு போகுமுன் வேண்டிக் கொண்டதை இப்போது செய்யப்
போவதாக கோபாலிடம் சொல்லி கொண்டிருந்தாள் பாலாவின் அம்மா. இதை ஒட்டிய வயிற்றோடு
காட்சியளித்த பச்சைக் குழந்தையுடன் கேட்டுக் கொண்டு நின்றிருந்த பெண் பாலாவின் அம்மாவைப்
பார்த்து,

“அம்மா தாயே, கொஞ்சம் கருணை காட்டுங்க அம்மா. பத்து லிட்டர் பாலில் அபிஷேகம் பண்ணப்
போறீங்க. இந்தப் பச்சக் கொழந்தயின் வயித்த பாருங்கம்மா. இக்குழந்தைக்கு கொஞ்சம் பால் வாங்க
காசு கொடுத்து தர்மம் பண்ணுங்கம்மா” என்று கெஞ்சிக் கேட்டாள்.

“அட போம்மா. காசு வேணுமுன்னா நாலு வீட்டுல போயு வேல பாரு. பிச்ச எடுக்கதுக்கு இப்படி
ஒரு புது வழியா? நாங்க எத்தன லிட்டர் பாலில் அபிஷேகம் பண்ணினா உனக்கு என்ன?” என்று
சொல்லி விட்டு கோவிலுக்குள் சென்று விட்டனர்.

இதைக் கவனித்த கோபால் மற்றவர்கள் கோவிலுக்குள் சென்றதும் ஓடி வந்து அப்பெண்ணிடம்,

“ஏம்மா, பிள்ளைக்கு பால் வாங்கணும்னா ஏதாவது வீட்டு வேலை செய்ய வேண்டியது தானே”
என்று சொன்னவன் அப்பெண்ணிடம் கொஞ்சம் பணத்தைக் கொடுத்துவிட்டு கோவிலினுள் சென்றான்.

கோவிலில் பால் அபிஷேகம் சிறப்பாக நடந்து முடிந்தது. கோவில் கருவறையை எல்லோரும்
சுற்றி வந்தனர். அப்போதுதான் அந்த அதிசயம் நடந்தது. கோவில் கருவறையிலிருந்து வெளியே
வடிந்து கொண்டிருந்த நீரை அப்படியே கையில் ஏந்திய சதீஷ் சிறிது குடித்து கண்ணிலும்
தலையிலும் தடவிக் கொண்டான். அதுமட்டுமா? திரும்பவும் கையில் ஏந்தி குழந்தைகளுக்கும்
வாயில் கொடுத்து அவர்கள் கண்ணிலும் தலையிலும் தடவி விட்டான். இதைப் பார்த்துக் கொண்டிருந்த
கோபாலுக்கு ஒன்றும் புரியவில்லை. சுத்தம் சுகாதாரம் என்று பேசிய சதீஷா இப்படி என்று ஆச்சரியமடைந்தான்.
அவன் மனது சமாதானம் அடையாததால் அவனிடமே கேட்டு விடலாம் என்று முடிவு செய்தான்.
கோவிலை விட்டு எல்லோரும் வெளிவரவும் சதீஷிடம் அவன் கேட்க நினைத்ததைக் கேட்க சரியான
சந்தர்ப்பம் அமைந்தது.

“சதீஷ் உங்களை நினைத்தால் எனக்கு வேடிக்கையாய் இருக்கிறது” என்றான் கோபால்.

“என்னங்க சொல்றீங்க. நீங்க சொல்றது எனக்கு ஒன்னும் புரியல”

“இல்ல. இங்க சுத்தம் சுகாதாரம் இல்ல. அதனால்தான் வெளியில் எங்கும் தண்ணீர் குடிப்பதில்லை.
அப்படிக் குடித்தாலும் பாட்டில் தண்ணீர் தான் என்று சொன்னீர்கள் இல்லையா? அதை ஒழுங்கா
கடைப் பிடிக்கிறீங்களா?”

“ஆமாம். அதிலென்ன சந்தேகம் உங்களுக்கு”

“ஆனால் எனக்கு ஒன்றும் அப்படித் தெரியவில்லையே?”

“எதை வைத்து அப்படிச் சொல்றீங்க?”

“இன்று நீங்கள் கோவிலில் நடந்து கொண்டதை வைத்துத்தான் சொல்கிறேன்”

“அப்படி என்ன நடந்து கொண்டேன்?”

“சுத்தம் சுகாதாரம் என்று பேசும் நீங்கள் கோவில் கறுவறையிலிருந்து வெளிவரும் நீரைக் கையில்
ஏந்திக் குடித்ததோடு மட்டுமல்லாமல் கண்ணிலும் தலையிலும் ஒற்றிக் கொண்டீர்கள். அத்தோடு
உங்கள் குழந்தைகள் வாயிலும் கொடுத்து கண்ணிலும் தலையிலும் தடவி விட்டீர்கள். இல்லையா?”
அதைத்தான் சொல்கிறேன் என்றான் கோபால்.

இதை சிறிதும் எதிர் பாராத சதீஷின் முகம் மாறியதுடன் அவனிடம் இருந்து எந்த வித பதிலுமில்லாமல்
அமைதியாக இருந்ததினால் கோபாலே பேச்சைத் தொடர்ந்தான்.

“உங்களுக்குத் தெரியாததை நான் சொல்லவில்லை. கோவில் கறுவறையில் இருந்து வெளிவரும் நீர்
அசுத்தம் இல்லையா? சரி அதையெல்லாம் விடுங்கள் அதுவரும் துவாரம் சுத்தமாக இருக்குமா?
அத்துவாரத்தில் எத்தனை புழு பூச்சிகள் மற்றும் நச்சுக் கிருமிகள் எல்லாம் இருக்கும். இந்த நீரைப்
பற்றி ஒன்றும் அலட்டிக் கொள்ளாத நீங்கள் வெளியில் தண்ணீர் குடிப்பதிலும் சாப்பிடுவதிலும் சுத்தத்தையும்
சுகாதரத்தையும் எதிர்பார்க்கிறீர்களே என்பதுதான் வியப்பாக உள்ளது” என்று சொல்லி முடித்தான்.

கொஞ்ச நேரம் அமைதியாய் இருந்த சதீஷ் மெதுவாக பேச்சைத் தொடங்கினான், “நீங்கள் சொல்வது முழுக்க
முழுக்க சரிதான். சில சமயங்களில் உண்மை நம் கண்களை மறைத்து விடுகிறது. கண்மூடித்தனமாய் எல்லோரும்
செய்கிறார்கள் என்பதால் நாமும் செய்கிறோம். அதே சமயம் உண்மை சொல்பவர்களைக்கூட வேறுவிதக்
கண்ணோட்டத்துடன் தான் பார்க்கிறோம். இனி நான் என்னை மாற்றிக் கொள்கிறேன்” என்று சொன்னதும்
என் மனதும் ஏதோ இலேசானதைப் போல் உணர்ந்தேன்.

-சங்கர சுப்பிரமணியன்.

About The Author

Related posts