Friday, February 23, 2018

.
Breaking News

அம்மா!

அம்மா!

எத்தன காலமாச்சு அம்மாவைப் பார்த்து? சின்ன வயசிலிருந்தே அம்மான்னா கந்தனுக்கு கொள்ளை ஆசை. அவன் கேட்டதை எல்லாம் கொடுப்பாள். ஆஸ்திரேலியாவுக்கு வந்து கிட்டத்தட்ட ஐந்து வருடங்கள் ஓடிவிட்டன. இன்னும் சில தினங்களில் அம்மாவைப் பார்க்கப் போகின்றோம் என்பதை நினைத்ததும் அவன் மனது இறக்கை கட்டி பறக்க ஆரம்பித்தது. என்னென்னவோ எண்ணியபடி கட்டிலில் படுத்திருந்தபடியே கண்ணயர்ந்தான்.

மெல்பர்ன் குளிர் ஜூலை மாதத்தில் மிகவும் கடுமையாகவே இருந்தது. ஆனால் அக்குளிர் கொஞ்சம் கூட தெரியாதபடி வீடு முழுதும் இதமான சூடு பரவி இருந்தது. போர்வையை இழுத்து நன்றாக மூடியபடி விடிந்தது கூட தெரியாமல் தூங்கிக்கொண்டிருந்தான். படுக்கை அறையின் கதவை மெதுவாகத் திறந்தபடி கையில் ஆவிபறக்கும் காபியுடன் வந்த அவனது மனைவி மாதவி அதை செஸ்ட் காபினட்டில் வைத்தபடியே,

“என்னங்க, எழுந்திருங்க விடுஞ்சுட்டுது?” என்று சொல்லி அவனைத் தட்டி எழுப்பினாள்.

“என்னது, விடுஞ்சுடிச்சா? எப்ப படுத்தேன்? நேற்று இரவு கட்டிலிலே படுத்திருந்தவன் அப்படியே தூங்கிட்டேனே?” என்ற படியே எழுந்தான் கந்தன்.

“ஆமாங்க, வந்து பார்த்தேன். நல்லா தூங்கிக்கிட்டு இருந்தீங்க, அதனாலதான் எழுப்பல. இந்தாங்க இந்த காபியை குடிச்சுட்டு சீக்கிரமா குளிச்சுட்டு வாங்க. உங்கள ஏர்ப்போர்ட்டுல கொண்டுவிட கோவிந்தராஜ் அண்ணன் வந்துடுவாங்க” என்று சொல்லியபடியே காபியை எடுத்து அவன் கையில் கொடுத்து விட்டுச் சென்றாள்.

மெல்பர்ன் தல்லாமரின் விமான நிலயத்தில் நண்பன் கோவிந்தராஜிடம் விடைபெற்று சோதனைக்காக உள்ளே நுழைந்து அப்புறம் எல்லா நடைமுறைகளையும் முடித்து விமானத்தில் வந்து உட்கார்ந்ததுதான் தெரியும். எல்லாமே அனிச்ச செயல் மாதிரி சிங்கப்பூரில் இறங்கி அடுத்த விமனம் ஏறியது சென்னை விமன நிலயத்தில் இறங்கி ஸ்பைஸ்ஜெட்டில் ஏறி மதுரையில் இறங்கியது எல்லாம் எப்படி என்று எண்ணும்படியாக பதிணெட்டு மணி நேரம் போனதே தெரியாத அளவுக்கு அம்மாவின் நினைவு அவனை ஆக்கிரமித்திருந்தது.

மதுரை விமான நிலையம் பன்னாட்டு விமான நிலையமாக மாறி இருந்ததால் முன்பிருந்ததை விட மிகவும் நன்றாகவே இருந்தது. வெளியே வந்ததும்

தயாராகக் காத்திருந்த மைத்துணனின் காரில் ஏறி பெருங்குடியில் இருக்கும் மாமனார் வீட்டுக்கு சென்று சிலமணி நேரம் ஓய்வெடுத்தபின் அம்மாவைப் பார்க்க கிளம்பினான். காரில் போகலாம் என்று அவன் மைத்துணன்

வற்புறுத்தியும் கேளாமல் பேருந்தில் தான் செல்ல வேண்டும் என்ற தனது ஆசையால் பேருந்திலே பயணம் செய்து திருநெல்வேலி புதிய பேருந்து நிலையம் வந்து சேர்ந்தவன் அவனது ஊரான கரிசல்குளம் செல்லும் பேருந்து நிறுத்தத்துக்கு வந்து அங்கு நின்றிருந்த ஒருவரிடம்,

“அண்ணாச்சி கருசகொளம் பஸ்ஸு போயிட்டுதுங்களா? என்று கேட்டான்.

“அது என்னக்கி வந்துருக்கு சரியான நேரத்துக்கு. அரமணிக்கு முன்னாடியே வரவேண்டிய வண்டிய இன்னும் காணோம். எவன் கேக்குறான் இதெல்லாம். அதுக்குத்தான் காத்துட்டு இருக்கொம் சார்” என்று அந்த அறுபது வயது மதிக்கத்தக்க அப்பெரியவர் சொன்னார்.

அவர் சொல்லி முடிக்கவும் பேருந்து வரவும் முண்யடித்துக் கொண்டு எல்லோரும் ஏறினர். அவர்கள் எல்லாம் ஏறிமுடிந்ததும் நடேசனும் பேருந்தில் ஏறினான். பாதி இடம் காலியாகவே இருந்தது. பேருந்தில் ஏறி உட்கார்ந்தவன் அப்படியே கொஞ்ச நேரம் கண்ணை மூடினான்.

“ஏன்தா பேச்சி, நடுத்தெரு சுப்பையா மகா மேலத்தெரு கொத்தனாரு பய்யன இழுத்துட்டு ஓடிட்டாலாம்ல?” பின் சீட்டிலிருந்து ஒரு பெண் உரத்த குரலில் அக்கம் பக்கம் இருப்பவர்கள் என்ன நினைப்பார்களோ என்று கூட எண்ணிப்பார்க்காமல் கேட்கவே,

“அத ஏங்கேக்க அந்த கொடுமைய. பெத்து வளத்தவங்கள கொஞ்சமும் நினைக்காம கொழுப்பெடுத்து ஓடிட்டுதுங்க. நம்ம காலத்துல எல்லாம் இப்புடி நடுக்குமா? எல்லாம் இந்த சினுமாவப் பாத்து கெட்டுப் போகுதுங்க” கேட்டவளுக்கு கொஞ்சமும் குறையாமல் குரலை உயர்த்தபடியே பதிலளித்தாள்.

இந்த மாதிரி பேச்செல்லாம் அவன் ஊர் மண் வாசனையாக காதில் விழுந்து

கொண்டிருக்கும் போதே பேருந்து அவன் படித்த பள்ளி, மற்றும் மதுரை திரவியம் தாயுமானவர் இந்துக் கல்லூரி முதலியவற்றை தாண்டி அவனது ஊரை நெருங்கியதும் முப்பிடாதி அம்மன் கோவிலைத்தாண்டி சுடலைமாட சாமி கோவில் பின் புறமிருந்த நிறுத்தத்தில் நின்றதும் எல்லோரும் இறங்கிக் கொண்டிருந்தனர்.

அவனக்கு ஒரே படபடப்பு. இன்னும் கொஞ்ச நேரத்தில் அம்மவைப் பார்க்கப் போகிறேன் என்று நினைப்பு உந்த எல்லோரையும் முந்திக்கொண்டு இறங்கினான். கிழக்குத் தெருவில் இறங்கி நடக்க ஆரம்பித்தவனை யாரும்

சரியாக அடையாளம் கண்டு கொள்ளவில்லை. கிராம முன்சீப் வீடு, கணக்குப் பிள்ளை வீட்டையும் தாண்டி நடுத் தெருவையும் கடந்து விட்டான். இதோ காசுக்கடை முதலாளி வீட்டையும் தாண்டியாகிவிட்டது. நெருங்கி வந்ததும் அங்கே கூட்டமாக சிலர் நிற்பதைக் கண்டான். ஒருவேளை அவன் வருவதை முன் கூட்டியே தெரிந்து அவனைப் பார்க்க கூடிவிட்டார்களா? ஒருவழியாக அவர்களைக்கடந்து உள்ளே போய் அம்மாவின் முன்னே போய் நின்றான்.

அம்மாவைப் பார்த்ததும் அப்படியே சிலையாக நின்று விட்டான். அம்மாவும் அவனைப் பார்த்துக் கொண்டிருந்தாள். அவன் கண்ணிலிருந்து கண்ணீர் அவனையும் அறியாமல் கொட்டத் தொடங்கியது.

எவ்வளவு நேரம் அப்படி அம்மாவைப் பார்த்துக் கொண்டிருந்தான் என்பது அவனுக்கே தெரியவில்லை. சிறிது நேரம் சென்றதும் அவன் கையைப் பிடித்து யாரோ எதையோ கொடுக்க அதன் இளஞ்சூட்டால் திரும்ப நினைவுக்கு

வந்தவனாய் இடது கையால் கண்ணைத் துடைத்தபடி வலது கையைப் பார்த்தான். அதில் பூஜாரி கொடுத்து விட்டுப் போன அம்மாவுக்கு பூஜை செய்த சர்க்கரைப் பொங்கல் இருந்தது. ஐந்து வருடம் கழித்து வந்ததால் அம்மாவை

ஆசை தீரப் பார்த்து வணங்கி விட்டு வீடு நோக்கி நடக்க ஆரம்பித்தான்.

-சங்கர சுப்பிரமணியன்.

About The Author

Related posts