Thursday, December 14, 2017

.
Breaking News

இதுதான் வாழ்க்கை!

இதுதான் வாழ்க்கை!
ஏழையாய் இருந்தாலென்ன
செல்வந்தனாய் செழித்தாலென்ன
மண்ணில் விழுந்து மடிந்தவுடன்
புதைக்கப்படுவர் அல்ல எரிக்கப்படுவர்
அறிஞராய் இருந்தாலென்ன
முட்டாளாய் வாழ்ந்தாலென்ன
ஆயுளதுவும் முடிந்து விட்டால்
எரித்திடுவர் அல்ல புதைத்திடுவர்
அழகாய் பிறந்திட்டால் என்னா
அழகற்றுத்தான் இருந்தாலென்ன
விதிமுடிந்து போய்விட்டதென்றால்
மண்ணிலிடுவர் அல்ல தீயிலிடுவர்
வெள்ளையனாய் இருந்தென்ன
கருப்பினமாய் பிறந்தாலென்னா
கண்மூடி மீழாத் துயிலுற்றால்
மண்ணுக்குள் தள்ளிடுவர் அல்ல
தீயினில் வைத்து சுட்டிடுவர்
புகழ்பெற்று சிறந்தாலென்ன
புகழின்றி வாழ்ந்தாலென்ன
வாழ்க்கை முடிந்துவிட்டால்
மண்ணுக்குள்ளே செல்ல வேண்டும்
அல்ல, தீயினில் எரிய வேண்டும்
என்னவாய் இம்மண்ணில் இருந்தாலும்
எப்படித்தான் இப்புவியில் வாழ்ந்தாலும்
எதுவுமே நமக்கில்லை
எடுத்துச் செல்ல இடமுமில்லை
இடமென்று ஒன்று இருப்பதுவாய்
இங்கே சொல்லப் படுவதெல்லாம்
எல்லாவற்றையும் இங்கேயே
விட்டுவிட்டு நாம் செல்வதால்தான்
ஆதலினால் மானிடரே
வாழும் நம் நாட்களிலே
மகிழ்ச்சியும் நிம்மதியும்
மனம் நிறைத்து வாழ்ந்திடுவீர்!
மகிழ்ச்சியும் நிம்மதியும்
அவரவர் கையினில் தான்
யாரும் கொண்டுவந்து கொடுப்பதில்லை
பஞ்சு மெத்தைதனில்
குளிரூட்டும் அறையினிலே
பக்குவமாய் போர்த்திக் கொண்டு
சொகுசாய் படுத்திருந்தாலும்
பற்பல கவலைகள் பலவிதமாய்
வந்து நிம்மதி கெடுப்பதினால்
சுகமான தூக்கம் வரவில்லை
கொளுத்தும் வெயிலினில்
அனல்காற்று வறுத்தெடுக்க
மாமரத்து நிழலதிலே
கட்டாந் தரையினிலே
மேல் துண்டை கீழ்விரித்து
கையதனை தலையணையாக்கி
கண்மூடி கவலையற்று
தூங்குகிறான் சுகமாக
இப்போது உணர்ந்திடுவீர்
இவர்களில் யார் வறியவன்?
யார்  இங்கே செல்வந்தான்?
எல்லாம் இருந்தும்
நிம்மதி இல்லையென்றால்
செல்வந்தனும் வறியவன் தான்
எதுவுமே இல்லையென்றாலும்
நிம்மதி ஒன்றுமட்டும் இருந்தால்
வறியவனும் செல்வந்தனே
ஆதலால் அறிந்திடுவீர்
எது நம்மிடம் இருந்தாலும்
எதுவுமே நம்மிடம் இல்லாவிட்டாலும்
மகிழ்ச்சியும் நிம்மதியும்
அவரவர் கையினில்தான்
ஆக்கிடுவீர் வாழ்நாளை
ஆனந்தமாக்கி மகிழ்ந்திருப்பீர்!!!
-சங்கர சுப்பிரமணியன்.

 

About The Author

Related posts