Wednesday, November 22, 2017

.
Breaking News

விழுதல் என்பது எழுகையே நிறைவுப்பகுதி – 04

விழுதல் என்பது எழுகையே நிறைவுப்பகுதி – 04

விழுதல் என்பது எழுகையே
நிறைவுப் பகுதி 4

எழுதியவர்: நோர்வே நக்கீரா
Tileepan n.nakkiran
ஜேர்மனியின் சர்வதேச விமானநிலையம் பிராங்பேட் விமான நிலையம் மேலெழுவதும் தரையிறங்குவதுமாக பறந்து கொண்டிருக்கிறன.
விமானங்கள் பறப்பதை விட மக்கள் அதிவேகமாக அங்குமிங்குமாக ஓடுபாதையின்றி ஓடிக்கொண்டிருக்கிறார்கள். சர்வதேசவிமான நிலையம் என்பதால் உலகமே அங்கு திரண்டிருந்தது. மக்கள் காலில் சிறகு கட்டிப் பறந்து கொண்டிருக்கிறார்கள்
தன்தேவதையை, இலங்கையில் விட்டுவிட்டு வந்த தேவதையை மீண்டும் ஜேர்மனியில் காணத்துடித்துக்கொண்டிருந்தான் சீலன்.
தாயை, தாய்நாட்டை, தங்கையை, தன் இதயராணி பத்மகலாவை விட்டு கடைசியாக அவன் இலங்கையில் விமானம் ஏறும் போது கண்டகாட்சிகள் மீண்டும் மீண்டும் மனத்திரையில் காணொளிகளாகக் கோலம் போட்டுக்கொண்டிருந்தன.
தன்னையே தொலைத்து வி;டுவாள் தாய். இனியெப்போ காண்போம் என்பதுபோல் தங்கை. வரம்புடைத்து கண்ணீர் முத்துக்கள் மாலையாக அசையா அணங்காக வைத்த கண்வாங்காது காதலில் கசிந்து கொண்டிருந்த பத்மகலாவின் முகம் காட்சிப்படிமமாக அவன் கண்களில் தீட்சண்யமாகத் துலங்குகிறது.
சீலன் அழைத்துவந்து நண்பன் ஓடிவந்தான்
“சீலா! விமானம் சொன்ன நேரத்துக்கு தரையிறங்கிவிட்டது. உன் பத்மகலா வந்துவிட்டாள். தேவதை வனத்தில் சீ…சீ வானத்தில் இருந்து பூமிக்கு வந்துவிட்டது”
துள்ளியது இதயம் அதை அள்ளியது ஆசை. எப்படி அவளை எதிர்கொள்வது? எப்படி அவள் இருப்பாள்? மாறியிருப்பாளோ? முழங்கால் முட்டி தட்டி நிற்கும் நீளமான கத்தையான கூந்தலைத் தாங்காது தள்ளாடும் துடியிடை துடிக்கும் அழகைக்காணத் தவித்தான், துடித்தான்.
அடந்த கார் மேகக் கூந்தலினுள் சந்திரவதனம் காதல் கணையெறிந்து கொல்லும் காட்சிகளை இதயம் தேடுகிறது. இக்காட்சிகள் அவன் நெஞ்சில் ஓடிக்கொண்டிருந்ததால் நண்பன் சொன்னது எதுவுமே அவனுக்குக் கேட்க வில்லை.
“டேய் நான் சொன்னதேதும் கேட்டதாடா. என்ன கற்பனையோ….நிஜமாகவே அவள் வந்திட்டாளடா” திடுக்கிட்டவன் தன்னைச் சுதாரகரித்துக் கொண்டு
“எங்கேயடா வந்திட்டாளா? எங்கே… எங்கே”
“அங்கே பார் கொம்பியூட்டர் என்ன சொல்லுது என்று பார்”
கடிகாரத்தையும், கணினியையும் மாறிமாறிப்பார்த்தவன் இப்போது தான் பூமிக்கு வந்தான்.
“ஆம் பத்மகலா லாணட்பண்ணிவிட்டாள். நான்தான் இன்னும் லாண்ட் பண்ணவில்லை”
“எப்படியும் 15நிமிடத்துக்கு மேலாவது செல்லும். எயப்போட்டுக்குள்ளேயே பெரிய தேசம் சுத்திவந்து பொதிகளை கிளியர் பண்ணிவர குறைந்தது 15நிமிடமாவது செல்லுமெல்லோ”.
“ம் ம்… அந்த அளவுக்கு எனக்குப் பொறுமையில்லை மச்சி”
“என்னடா வந்தவுடனை வன்புணர்வாயோ…?”
“நீ காதலித்துப் பிரிந்திருந்துபார் அதன் வேதனையும் வலியும் தெரியும்.
“ஆமாம் எங்களுக்குக் காதல் தெரியாது….நாங்கள் காதலிச்சுக் களட்டி விட்டுவிட்டு வந்தவங்கள். உன்னைமாதிரி இல்லை”
“அதோ பாரடா அங்கே பாரடா என் பத்மகாலா”.
தூரத்தில் கண்ணாடிகள் ஊடாக அவள் வருவதைக் கண்டுவிட்டான் சீலன். காற்றில் அலைந்த அந்த நீளக்கூந்தல் அவளை அடையாளம் காட்டியது. கனடா உணவு தடிக்குச்சியாக இருந்தவளை மெருகேற்றி யிருந்தது. சினிமாத்தாரகைகள் போல் சீலனின் தேவதை கண்ணாடிகளூடாக கண்விழித்தாள்.
உதயம் இதயத்தில் எழுந்து நின்று ஆடத்தொடங்கியது. இதயம் தொண்டை வரை துள்ளியது.
“மச்சி அவசரப்படாதை நீ கண்ணாடியை உடைத்துக் கொண்டு போக ஏலாது. எல்லாம் கிளியர் பண்ணிவர ரைம் எடுக்கும். ரிலாக்ஸ் மச்சி ரிலாக்ஸ்”
நண்பன் சீலனின் ஆர்வத்துக்கு அணைபோட்டு விடுகிறான்.
ஆக்கப்பொறுத்தவன் ஆறப்பொறுக்கமாட்டான் என்பது இதைத்தானோ? மீண்டும் காதலியின் நினைவில் மூழ்கத் தொடங்கிவிட்டான்.
கணங்கள் ஒவ்வொன்றும் கற்பனைகளாக விரிய நாடி, நாளங்கள் புடைப்பேறிச் சிலிர்க்க எப்படி… எப்படி அவளை எதிர்கொள்வது என்ற எண்ணம் மனதை ஆளத்தொடங்கியது. மீளமுடியாமல் தவித்தான். வெட்கமும் அவனை சிலவேளைகளில் வெருட்டிக் கொண்டிருந்தது.
நிமிடங்கள் 30தாண்டியும் அவளைக் காணவில்லை. பயங்கரவாதத்தடை பொலிஸ் பிரிவினர் அவளை அவளின் பொதிகளுடன் அழைத்துச் சொல்வதைத் தூரத்தே கண்டுவிடுகிறான். என்ன நடக்கிறது என்று ஒன்றுமே புரியவில்லை.
தகவல் நிலையத்துக்கு ஓடினான். அங்கே போதிய தகவல்கள் கிடைக்கவில்லை.
அவள் என்ன பயங்கரவாதியா? யாராவது பொய்த் தகவல் கொடுத்தார்;களா? அவளின் பொதிகளில் ஏதாவது துப்பாக்கி, போதைவஸ்துப் போன்றன கண்டெடுக்கப்பட்டதா? உலகம் ஒருகணம் சுற்றிச் சிதறியது. தன் தலைவிதியை நொந்து கொண்டான்.

“மச்சி யோசிக்காதை எல்லாம் நல்லபடியாகவே முடியும்” நண்பன் சீலனைத் தேற்றிக் கொண்டான்.
“என் வாழ்க்கையில் எல்லாமே கைக்கெட்டியது வாய்க்;கெட்டா நிலைதான்”.
ஏதோ தீர்மானத்துக்கு வந்தவனாக தொலைபேசியை எடுத்து பத்மகலாவின் தோழிக்கு தொடர்பு கொண்டான். அவளும் தயங்கித்தயங்கியே,
“கலோ……” என்றாள்
“நான் சீலன் கதைக்கிறன். பத்மகாலாவை பயங்கரவாத்தடைப்பிரிவு பொலிஸ் அழைத்துப் போகிறது. ஏதாவது ஏறுக்குமாறாக கொண்டு வந்தாளா? அல்லது அவளின் பொதிக்குள் சட்டவிரோதிகள் எதையாவது வைத்து விட்டார்களா? பொலிஸ் எதற்கு அவளை…..” கொட்டித்தள்ளினான்
“சீலன் இங்கே பெரிய அல்லோல கல்லோலம் நடக்குது. பத்மகாலா ஜேர்மனிக்கு வந்தது அவளின் உறவினர் எவருக்கும் தெரியாது.
அவள் கனடாவில் இருந்து முழுமையாகவே லீவ் பண்ணிவிட்டாள். டிக்கெட் போட்டது, பயணமானது எதுவுமே என்னைத் தவிர வேறு யாருக்கும் தெரியாது. அனைவரும் என்னைத் தேடிக் கொண்டிருக்கிறார்கள். என்ன நடக்குமோ தெரியவில்லை. இனி அவள் கனடாவுக்குத் திரும்பும் நோக்கம் இல்லை. செத்தாலும் கெட்டாலும் உங்களுடன் வாழ்வது என முடிவெடுக்துக் கொண்டு வந்துவிட்டாள்”
“என்ன சொல்லுறீங்கள். கலா இங்கேயே தங்கப்போகிறாளா? அவள் படித்துமுடித்த டாக்டர் படிப்பு.. தொழில்? இதற்கான தயார்படுத்தல் ஒன்றையும் நான் செய்யவில்லையே.
என் இறுதிப்பரீட்சை முடிந்துவிட்டது ஒரேயடியாக வந்து கனடாவில் செற்ரிள் ஆகிறது என்று அல்லவோ நான் யோசித்துக் கொண்டிருக்கிறன். இவள் அதற்குள் எதுக்கோ முந்தின எதுவோ ஆக….? இதைப்பற்றி பேந்து யோசிக்காலாம். எதற்காக அவளைப் பொலிஸ் கொண்டு போகிறது என்று தெரியவில்லை. ஏதாவது ஐடியா இருக்கா பிளீஸ்?”
“சிலவேளை அவளின் உறவினர்கள் எதாவது தகவல் கொடுத்திருப்பார்களோ”
“இருக்காலாம்…..ஆம் இருக்காலாம்…..ஓகே நான் உங்களுடன் பின்னர் கதைக்கிறேன்” பேசிக்கொண்டிருக்கவோ யோசிக்கவோ நேரமின்றி தொலைபேசித் தொடர்பை வெட்டினான்.
பத்மாகலாவுக்கு மீண்டும் தொலைத்தொடர்பு கொண்டான் தொலைபேசி மூடியே கிடந்தது. செய்வதறியாது துடித்தான். அவள் வந்த விமானநிறுவத்திடம் ஓடிச்சென்றான்.
நாய்குட்டிபோல் அவன் நண்பனும் தொடர்ந்தான். எள்ளுக்காய்கிறது…எண்ணெய்க்காக, ஆனால் எலிப்புழுக்கை எதற்காக….நண்பனாகச் சேர்ந்த குற்றத்துக்காக.
வுpமானநிலையத் தகவல்படி பத்மகாலா வந்து இறங்கி பொதிகளையும் பெற்றுக்கொண்டாள். பொதிகளைப் பெற்ற பின்னரும் சந்தேகப்பட்டதால் பொலிஸ் அவர்களை அழைத்துச் சென்று விசாரிக்கும் நடைமுறையும் அங்கு உண்டு என்பதை அறிந்து கொண்டான்.
மீண்டும் கலாவுக்குத் தொலைபேச எடுத்தான் தொலைபேசி திறந்திருந்தது.
“கலோ சீலனா”
“ஆமாம் என்ன நடந்தது. எதற்காக பொலிஸ் அழைத்துப்போனது. நீ என்ன பண்ணினாய். நான் தனியனாய ; என்னாலை ஒன்றும் செய்ய முடியவில்லையடி. என்ன நடக்கிறது என்று சொல்லு”
“ஒன்றுக்கும் யோசிக்காதைங்கோ. இன்னும் ஐந்து நிமிடத்திலை வெளியிலை வருவன். என்னை ஒண்டும் பண்ண இயலாது. வீ ஆ றிவ்யூயி பட் நொட் கிறிமினல். (நாங்கள் அகதிகள் தான். சட்டவிரோதிகள் அல்ல. பயப்படாதைங்கோ நான் வைக்கிறன்”
ஏன் அதைமட்டும் ஆங்கிலத்தில் சொன்னாள் என்பது புரியாத புதிராகவே இருந்தது. ஓ… பொலிசார் விளங்கிக் கொள்ளட்டும் என்பதற்காகவோ???
அதிர்ந்து போனான் இது கலாவா? இரண்டு சொல்லுக் கதைக்கவே நாலு நிமிடம் எடுக்கும் அந்தக் கலாவா இவள்? பெண்களே புதிர்தான் என்றபடி தலையைச் சொறிந்து கொள்கிறான். கனடா இவளை எப்படி எல்லாம் மாற்றிவிட்டது.
“இன்னும் ஐந்து நிமிடத்தில் வந்துவிடுவாளாம்” நண்பனிடம் கூறியபடி வெளியேறும் வாசலுக்கு வருகிறான்.
அவளுடைய பெட்டி படுக்கையுடன் கூடிய பொதிகளை பொலிஸ்காரர்களும் சேர்ந்து இழுந்து வந்தார்கள். சீலனைக் கண்டதும் அந்த தோகை மயில் சிரித்தபடி சுரிதார் சிறகில் பறக்கத் தொடங்கியது.
இருவரும் ஒருவரை ஒருவர் கட்டி அணைக்க ஓடினார்கள். ஆனால் நாலு மீற்றர் இடைவெளியில் ஏதோ எண்ணிக்கொண்டவர்கள் ஓட்டத்தை நிறுத்தி ஒருவரை ஒருவர் பார்த்தவண்ணம் நின்றனர்.
ஆம் ஐரோப்பிய வாழ்வுக்குப் பழக்கப்பட்ட காதலர்கள் கட்டிப்பிடிப்பதும் முத்தம் கொடுப்பதும் இங்கே இயற்கையானது.
இருந்தாலும் எம் தமிழ்க் கலாச்சாரம் இதயத்தில் வேரூன்றியதால் இதயக் கதவுகள் ஒருதடவை தட்டப்பட்டிருக்க வேண்டும். நாணம் நிலத்தில் கோலம்போட்டது. பாவையின் பார்வை அந்த லாசர்கண் காதலை கக்கியது. எதிர்கொள்ள முடியாதவன் தலைகுனிந்தான். மீண்டும் சுதாரித்துக் கொண்டு,
“காலா என்னை கலங்கப்பண்ணி விட்டாயடி…..” என்று ஆணின் பாணியில் கதையை எடுத்தான். அதற்கிடையில் அவளின் பொதியை இழுத்து வந்த பொலிசாரும் அருகில் வந்துவிட்டனர்.
“எல்லாவற்றையும் விபரமாக கதைக்கலாம். முதலில் வீட்டை போவம்.”
“எங்கே கனடாவுக்கா?”
“உங்களுக்கு இப்பவும் அந்த லொள்ளு போகேல்லை”
அருகே வந்த பொலிசார்ரிடம் பத்மகலா, “இவர்தான் எனது காதலன். நாங்கள் இங்கே திருமணம் செய்யப்போகிறோம்” என ஆங்கிலத்தில் சீலனை அறிமுகப்படுத்தி வைத்தாள்.
இவ்வளவு நட்புடன் பொலிசார் நடப்பதைப் பார்த்தால் இலங்கையில் ஆச்சரியமாகவே இருக்கும். பொலிசைக் கண்டாலே வயிறு கலக்கும் காலத்தில் வெளிக்கிட்டவர்கள் இவர்கள்.
”ஸ்பிறேகன்சி டொச்” (நீ டொச் கதைப்பாயா)” எனப் பொலிசார் சீலனைப் பார்த்துக் கேட்டார்கள்
“யா (ஆம்)”
பொலிஸ் டொச் மொழியில் பத்மகலாவின் பிரச்சனையை சீலனுக்கு விளங்கப் படுத்தினார்கள். தமக்கு கனடாவில் இருந்து வந்த தொலைத்தொடர்பால் நாம் பத்மகலாவை விசாரணைக்கு உட்படுத்தினோம்.
இவள் ஒரு பயங்கரவாதி என்றும் போதை வஸ்துக்களுடன் யேர்மனிக்குள் நுழைகிறாள் என்றும் அனாமதேயச் செய்திகள் கிடைத்தன.
மேலும் இவள் நாடுகடத்தப்படுகிறாள் என்றும், உளவாளி என்றும் செய்திகள் கிடைத்தன. விசாரணையில் இவை அனைத்தும் சதி என்பது தெரியவருகிறது. உங்கள் திருமணவாழ்வு நலமாக அமைய வாழ்த்துக்கள் என்று பொதிகளை சீலனிடம் ஒப்படைத்துவிட்டு கைகளைக் காட்டிவிட்டுச் சென்றனர் பொலிசார்.
திருப்பிப்பார்த்தால் நண்பனைக் காணவில்லை. இனி இவன் பாவியைத் தடவ வேணுமா? என்றபடி திருப்பிப்பார்த்தால் பதுங்கிப் பதுங்கி கள்வனைப்போல் சீலனை நோக்கி வந்து கொண்டிருந்தான்.
” கலா ஓ அவனுக்கு விசா இல்லை. கள்ளமாக வேலை செய்து கொண்டு இருக்கிறான். மனைவி பிள்ளைகளுக்கு விசா இருக்கு இவனுக்கு இல்லை. சொல்கிற பொய்யை ஒழுங்காகச் சொல்லாததால் வந்த வினை”
நண்பனை அறிமுகம் செய்து வைத்துவிட்டு பொதிளை எடுத்துக் கொண்டு வந்த வானில் ஏற்றிப் புறப்பட்டனர்.
பத்மகலா அதிகம் பேசவே இல்லை. சீலனைப் பார்த்தபடி அவன் வாகனம் செலுத்தும் அழகை இரசித்த வண்ணம் இருந்தாள். இடைக்கிடை எட்டி அவன் தோள்களில் மறந்து போய் கையைப் போட்டவள் நண்பனைப் பார்த்துவிட்டு கையை எடுத்துக் கொள்வாள்.
சிவபூசைக்குள் கரடி மாதிரியாக பாவம் நண்பன். அவனும் தன்மனைவியிடம் கள்ளக்காதலன் போலவே போய் வருகிறான். அகதி விண்ணப்பத்தில் சொல்லுற பொய்களையும் சரியாகச் சொல்லாவிட்டாள் மனைவி கள்ளக்காதலிதான்.
சீலனின் வீடு வந்துவிட்டது பொதிகள் இறக்கப்பட்டு வீட்டுக்குள் அனுப்பப்பட்டுவிட்டன. தபால்பெட்டியைத் திறந்து கடிதங்களை எடுத்து வந்தவன் கலாவை மறந்தவனாக ஒரு முக்கிய கடிதத்தை உடைத்தான்.
கலாவுக்கு ஆச்சரியமாகவே இருந்தது. என்னை விட முக்கியமான கடிதமா? என எண்ணிக் கொண்டாள்
“கலா ரீ குடிக்கிறாயா சாப்பிடுகிறாயா?”
“ஒண்டும் வேண்டாம்”
“நீ இன்னும் மாறவே இல்லை. என்ன பிளைட்டில் (விமானத்தில்) ஏதாவது சாப்பிட்டாயோ”
“ஓம்…முதலிலை உந்தக்கடிதத்தில் என்ன இருக்கு என்று சொல்லுங்கோ” சீலனின் அவசரம் அவளின் ஆர்வத்தைத் தூண்டியது.
“இது எனக்கு வந்து கடிதம். உனக்க எதற்கு”
“இன்றில் இருந்து உனக்கு எனக்கு எண்டு ஒன்றும் கிடையாது. எல்லாம் எமதே”
“இவளிட்டைக ;கேட்டால் ஒன்றும் நடக்காது மச்சி மூன்று ரீ போடு. பிட்சா ஓடர் பண்ணியிருக்கிறன் அதுவும் வந்துவிடும்”
நண்பன் தேனீர்போட சீலன் கடிதத்தை உடைத்து வாசிக்கத் தொடங்கினான். கடித்தை தூக்கி எறிந்து விட்டு மகிழ்ச்சியில் கத்திக் கொண்டு கலாவை எட்டிக் கட்டிப்பிடிக்கப் பாய்ந்தான். அவள் விலத்திக் கொண்டாள்.
“இது எல்லாம் கல்யாணத்துக்குப் பிறகு…….”
மௌனித்து நின்ற சீலனின் தலையை எட்டித் தடவி விட்டபடி
“உங்களின் மகிழ்ச்சியைக் கெடுத்துவிட்டேன் சொல்லுங்கள் அது என்ன செய்தி”
நாம தொட்டால் குற்றம் அவங்கள் தொட்டாக் குற்றமில்லையாக்கும் என்று மனதுக்குள் முணுமுணுத்துக் கொண்டான்.
“சொல்லுங்கள் சீலன். அதில் அப்படி என்ன செய்தி இருந்தது”
“நீ வந்த பலனடி நான் இறுதிப் பரீட்சையில் சித்தியடைந்துள்ளேன் வருகிற வெள்ளி பட்டமளிப்பு விழா. நீயும் என்னுடன் வரப்போகிறாய்” என்றபடி அவளின் மூக்கைப் பிடித்து ஆட்டினான்.
மகிழ்ச்சிக் களிப்பில் அவள் தானாகவே சீலனைத் தாவி அணைத்துக் கொண்டாள்;. நண்பன் மூன்று ரீயுடன் வெட்கப்பட்டபடி அவர்கள் அருகின் நின்றதைக் கண்டதும் சீலன்
“இதெல்லாம் கல்யாணத்துக்குப் பிறகு” என்றான்.
”ஓ அப்படியா” சீலனின் காதில் காற்றாக சொன்னாள்.
ரீ குடித்துக் கொண்டிருக்கும் போது பிட்சாவும் வந்தது மூவரும் ரீயையும் குடித்து பிட்சாவையும் சாப்பிட்ட பின் நண்பன் விடைபெற்றுக் கொண்டான்.
சீலன் வீட்டைச் சுற்றிக்காட்டினான். படுக்கை அறைக்கு வந்ததும்.
“இதுதான் எமது படுக்கை அறை” என்றான்
“எமதா? உமதா…எனதா?….. எல்லாம் கல்யாணத்துக்குப் பிறகுதான்”
“உனது எனது என்று எதுவும் இல்லை எல்லாமே எமது என்றாயே. உடனை மாற்றுகிறாயே விரட்டுகிறாயேடி”
“அதுவேறை இது வேறை முடியாததுக்கெல்லாம் முடிச்சுப்போடக்கூடாது”
சிரித்தபடி சீலன்
“நீ மேலை நான் கீழே”
கலாவும் சிரித்தபடி ” எல்லாம் இங்கே தலை கீழாக்கும்” என்றாள்.
“இல்லையடி கண்ணே நீ மேலை படுக்கிறாய் நான் நிலத்தில் கீழே படுக்கிறேன் என்றேன்”

“அதைத்தான் மேலை கீழை என்றீர்களோ பாவம் பால் குடிக்காத பூனை” என்றாள் கலா
“பெண்களின் வாயில் அம்பிட்டாள் சப்பித் துப்பிவிடுவார்கள்” என்றவன் பூராயம் விசாரிக்கத் தொடங்கினான்.
அன்று அவர்களுக்கு சிவராத்திரி அடுத்தநாள் சனிக்கிழமை என்பதால் பதட்டப்பட வேண்டியதில்லை.
———————————————–

நாட்கள் உருண்டது பட்டமளிப்பு விழாவுக்கு போவதற்கு முன்னர் கலாவும் சீலனும் எதைப்பற்றியோ கடுமையாகக் விவாதித்துக் கொண்டிருந்தனர்.
வாழ்க்கையின் முக்கியமான விடயங்கள் கதைக்கப்படுகின்றன என்பது மட்டும் புரியக்கூடியதாக இருக்கிறது. இறுதியில் அவள் இணங்குவது போல் தோன்றுகிறது. அவசர அவசரமாக வெளிக்கிட்டு மண்டபத்தை வந்தடைந்தனர்.
ஜேர்மன்மக்களால் நிறைந்திருந்த மண்டபம் விழாக்கோலம் பூண்டிருந்தது. சீலனின் பட்டமளிப்பு விழாவைப் பார்ப்பதற்காக வந்த நண்பர்கள், நண்பர்களின் குடும்பத்தினர் அனைவருக்குமாக இரண்டு வரிசைகள் ஒதுக்கப்பட்டிருந்தன.
கலாவை தமிழர்கள் அனைவருக்கும் அறிமுகப்படுத்தினான் சீலன். சீலனுடன் பல்கலைக் கழகத்தில் படித்த பெண் ஆண்கள் அனைவரும் சீலனை வாழ்த்தினார்கள். அவர்களுக்கும் தன்காதலி எதிர்கால மனைவி என்று அவளை அறிமுகப்படுத்தினான்.
ஜேர்மனியப் பெண்கள் அவளையும் கன்னத்தில் கன்னம் வைத்து கொஞ்சிய பின் கலாவின் அழகை வர்ணித்தார்கள். அவனிள் நீள் கூந்தலை தொட்டு தடவிப்பார்த்து இரசித்தார்கள். சீலன் நீ கொடுத்து வைத்தவன் என்று நேராவும் சொல்லிக் கொண்டார்கள்.
பெண்கள் கன்னத்தில் கன்னம் வைத்து கட்டியணைப்பது வாழ்த்துவது இங்கு வழமையான விடயம். அப்படி ஜேர்மனியப் பெண்கள் சீலனைக் கொஞ்சுவது பத்மகலாவின் உணர்வுகளை உரசத்தான் செய்தது.
கனடா நாட்டில் இருந்து வந்தாலும் தன் காதலன் முழுமையாகத் தனக்கே என்ற உடமை உணர்வு பொறாமையாக வெளிப்படத் தொடங்கிறது.
சீலன் அதைக் கவனித்தும் கவனிக்காதது போல் தனது காதலியை தெரிந்த அனைவருக்கும் அறிமுகப்படுத்தினான். கலாவுக்கு அது பெருமையாக இருந்தாலும் யாராவது பெண்கள் சீலனை உற்றோ, குறுகுறு என்றோ பார்க்கிறார்களா? என்பதையும் கவனித்தாள். இது பெண்களுக்கு உரிய இயற்கையான குணம் இவளை மட்டும் விட்டுவிடுமா என்ன?
இவர்களுக்கு என ஒதுக்கப்பட்ட பிரபல்யங்கள் இருக்கையில் அமர்ந்தவண்ணம் தனது பொறாமை மூட்டைகளை கொட்டத் தொடங்குகிறாள்
“அந்த வெள்ளைகாரப் பெட்டையள் எல்லாம் பாய்ந்து பாய்ந்து இறுகக்கட்டிப்பிடித்துக் கொஞ்சுதுகள் இவரும் சிரிச்சுக் கொண்டு கட்டிப்பிடிப்பாராக்கும்” பொருமிக் கொள்கிறாள்
“கலா இது மேற்குலகம் நாங்கள் கும்பிடுவது போல் இங்கே கக் பண்ணுவார்கள் கனடாவில் இருந்து வந்த உனக்கு இது கூடத் தெரியவில்லையா”
“அதுக்கு நான் ஒருத்தி காதலி பக்கத்திலை இருக்கிறன் எண்டு நீங்களாவது…”
“அடி.. நீ என்னடி சிறீலங்காவில் இருந்து வந்த பெண்கள் மாதிரி இருக்கிறாய்”
“என்ன மாதிரியானாலும் நான் சிறீலங்கா தமிழ்பெண் தான். இதை எந்தக்காலமும் மாத்த முடியாது. மாறவும் மாட்டன். இதுக்கெல்லாம் ஒரு முடிவு வரத்தானே போகுது” இரைந்து கொள்கிறாள்
விழா ஆரம்பமாகிறது. ஆட்டம் பாட்டும் கொண்டாட்டமாக மணிகள் ஓடத்தொடங்கியன. பட்டமளிக்கும் வேளை ஆரம்பமானது சீலனும் அழைக்கப்பட்டான். கறுப்புகோட்டு சூட்டுடன் அத்தனை பத்து ஜேர்மனிய மாணவர்களுடன் சீலன் சிரித்த முகத்துடன் நின்ற காட்சி பத்மகலாவை பெருமிதப்படுத்தியது.
வெள்ளை டாக்டர் உடையுடன் கழுத்தில் ரெதஸ்கோப்புடன் இருவதும் அன்று தம்மைப்பற்றிக் கண்ட கனவுகளை எண்ணிப்பார்க்கிறாள்.
சீலன் டாக்டராக வரக்கூடாது என்பதற்காக எத்தனை திட்டங்களைப் போட்டு என்னவனை இவ்வளவு நாடுகள் துரத்தி டாக்டர் எண்ணத்தை மறக்கடித்து இன்று இஞ்சினியராக்கி இருக்கிறது விதி. இதன் பின்னாலும் இறைவன் சூட்சுமம் என்னவோ?
பட்டமளிப்பு விழாக்களில் சில நிறுவனங்கள் தாமாகவே முன்வந்த திறமையாகச் சித்தியடைந்தவர்களை தெரிவு செய்து வேலை கொடுத்து உறுதிப்பத்திரமும் வழங்குவார்கள்.
சீலன் பகுதி நேரமாக வேலைசெய்யும் பி எம் டபிள்யூ கார் கொம்பனியும் வந்திருந்தது. பட்டமளிப்பு முடிந்தவுடன் அவர்கள் முன்வந்து தாம் யார் யாரை தெரிவு செய்திருக்கிறோம் என்பதை அறிவிப்பார்கள். பி எம் டபிள்யூ கொம்பனி சீலனைத் தெரிவு செய்திருந்தது.
சீலன் உரையாற்றும் நேரம் வந்தது. பத்மகலா பரபரப்பானாள். இனம் புரியாத தவிப்பு ஏக்கம் எதிர்பார்ப்பு என உணர்வுகளின் போராட்டம். அப்படி என்ன பேசப்போகிறான் இவள் எதற்காக இப்படி அரக்கப்பறக்கிறாள். சீலன் தனது உரையை நிதானமாக ஜேர்மன் மொழியில் தொடங்குகிறான்.
நான் ஈழத்தில் இருந்து வந்த ஏதிலி….அகதி. என் தாய்மண்ணில் என்னால் என்மக்களுடன் வாழமுடியாத துர்ப்பாகியசாலி. குண்டுகளுக்கும், தோட்டாக்களுக்கும் பயந்து உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு போக்கிடம் அற்று இறுதியில் நான் வந்தடைந்தது என்னைக் இருகரம் நீட்டி அழைத்த என் சின்னத்தாய் ஜேர்மனியிடந்தான்.
என் சின்னத்தாய் முதலாம், இரண்டாம் உலகப்போர்களில் எப்படியெல்லாம் காயப்பட்டாள் என்பதை அவள் உணர்ந்திருந்ததால் என் துயரையும் அவள் புரிந்துகொண்டாள்.
என் சின்னத் தாயான ஜேர்மன் நாட்டுக்கும் இந்நாட்டு மக்களுக்கும் நான் என் உயிருள்ளவரை நன்றியுணர்வுடன் இருக்கக் கடமைப்பட்டவன்.
கரகோசம் வானைப் பிளந்தது. கண்களில் கண்ணீர் ததும்பியது. பலர் எழுந்து நின்றே கைதட்டினார்கள். சீலன் தொடர்ந்தான்………
என்னை இவ்வளவு காலமும் மெக்கானிக்காக வேலை செய்யவும், பின் என்னை நிரந்த பொறியியலாளனாக ஏற்ற பி எம் டபிள்யூ கொம்பனிக்கு என் நன்றிகளைத் தெரிவிப்பதுடன் என்னால் உங்கள் கொம்பனியில் தொடர்ந்து வேலை செய்யமுடியாத நிலையில் உள்ளேன் என்பதை மிகக் கவலையுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
சபை ஒருகணம் அமைதியானது.
வேலை எடுப்பதே எட்டாப்பழமாக உள்ளபோது கிடைத்த பெரிய வேலையையே உதறித் தள்ளுகிறானே இந்த மடைப்பயல் என்று எண்ணினார்;களோ என்னவோ? இவன் என்ன பைத்தியமா? என்று வினாவுவது போல் ஆச்சரியத்துடன் காத்திருந்தனர்.
கொம்பனி முதலாளியின் முகத்தில் ஈ கூட ஆடவில்லை. ஆச்சரியமும் வேதனையும் எதிர்பார்ப்பும் நிறைந்த முகத்துடன் அமர்ந்திருந்தார், சீலன் தொடர்ந்தான்……..
என் உடல், பொருள், ஆவி அனைத்தும் என் தாய்க்குச் சொந்தமானது. என்தாய் நாட்டுக்குச் சொந்தமானது. கற்றகல்வி, பெற்ற செல்வம், என் வியர்வை, இரத்தம் அனைத்தும் என்மண்ணைச் சேரவேண்டியது. நாம் குழந்தையாக இருந்தபோது தொட்டு நக்கியது எம் மண்ணைத்தான்.
இது இன்றும் என்னுடலில் உதிரமாக உள்ளத்தில் உணர்வுடன் உறைந்து கிடக்கிறது. இந்த ஜேர்மன் நாடு எனக்குக் கற்றுத் தந்தவற்றை நினைவுபடுத்துகிறேன்.
முதலாவது உலகயுத்தத்தில் ஜேர்மன் மீது அதியுயர் போர்க் குற்றவரி விதிக்கப்பட்டு வறுமையில் அல்லாடியபோது இவர்கள் நாட்டை விட்டு ஓடியிருந்தால் இன்று ஜேர்மன் என்ற ஒரு வல்லரசை உலகம் கண்டிருக்காது. நாம் ஜேருமனியர்கள் என்று பெருமைப்பட ஒருபிடி மண் இருந்திருக்காது. கிட்லர் என்ற ஒரு தனிமனிதனால் இரண்டாவது உலகயுத்தம் முடிந்தபின்னரும் இந்நாடு வெறுக்கப்பட்டது. இதையே நான் எனது நாட்டுடன் இணைத்துப் பார்க்கிறேன். தவறுகள் செய்யா மனிதர்களும் இல்லை சமூகங்களும் இல்லை. மீள எழுவோம்…மீண்டு வருவோம்.
என் மண், மரங்கள், நிலவு,சூரியன், ஆடு மாடு கோழி எவையுமே போருக்குப்பயந்து நாட்டை விட்டு ஓடவில்லை.
மரங்கள் கூட என் மண்ணைப் பற்றிக்கொண்டு இன்றும் நிற்கிறன. ஒரு சின்னச்செடிக்கு மண்மேல் உள்ள பற்று எமக்கு இல்லை என்றால் எப்படி?.
ஏன் மண் என்று பெருமைப்படும் நான் போருக்குப் பயந்து கோழையாக என்மக்களைப் பிரிந்து, ஏதிலியாக எத்தனை ஐரோப்பிய மண்ணில் பிச்சை எடுத்தேன்.
என்று என் மண்ணை விட்டு நீங்கினோமோ அன்றிலிருந்து நாம் அன்னியர்தான். எம்மண்ணுக்கும் அந்நியர்கள். உலக மக்களுக்கும் அன்னியர்கள். இன்று நாம் உணர்வுகளால், உள்ளத்தால், கலாசாரத்தால் எம்பிள்ளைகளிடம் இருந்தும் அன்னியப்பட்டே நிற்கிறோம்.
நான் இந்தப் பெருமேடையில் பி எம் டபியூ கொம்பனியிடம் அன்பாக வேண்டிக் கொள்வது இதுதான். எமது நாடு விவசாயநாடு. உலகத்துக்கே உணவளிக்கும் வளம்கொண்ட நாடு. அங்கே அது கண்ணி வெடிகள் விதைக்கப்பட்டு, கந்தக்காற்றால் நிரப்பப்பட்டும் கிடக்கிறது.
என் தாய் நிலம் அன்னியன் காலடியில் இறுதி மூச்சுக்காகச் சேடம் இழுத்துக் கொண்டிருக்கிறது. அவளைக் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு எமக்கு உண்டு.
எமக்கு உங்கள் கொம்பனி போன்ற பெரிய கொம்பனிகளின் உதவி தேவை. எனது திட்டப்படி மலிவான விலையில் உழவு இயந்திரங்களையும், முச்சக்கரவண்டிகளையும் அங்கேயே தயாரித்து மலிந்த விலையில் விற்பனை செய்வதுடன், மேலதிகமான தயாரிப்புகளை ஏற்றுமதி செய்யவும் விரும்புகிறேன்.
உங்கள் உதவியுடன், உங்கள் பெயரில், தொழிற்சாலைகளை நான் உருவாக்க விரும்புகிறேன். அதற்கான அனுமதியையும் உதவியையும் தந்துதவ ஆவன செய்வீர்களா?
கொம்பனி முதலாளி தனிய எழுந்து நின்று அவனை ஆமதிப்பதுபோல தன் கைகளை உயர்த்தி தட்டினார்.
அவரைத் தொடர்ந்து அனைவரும் எழுத்து நின்று கைகளைத் தட்டினார்கள். சீலன் பத்மகாலாவை அடிக்கடி பார்த்துக்கொண்டே பேசிக்கொண்டிருந்தான். அவள் கண்கலங்கி பூரித்துப்போய் இருந்தாள். கைக்குட்டை கண்ணீர் குட்டையானது.
நான் எனது நெடுநாள் காதலியும் என் எதிர்கால மனைவியுமான டாக்டர் பத்மகலாவை மேடைக்கு அழைக்கிறேன்.
என்றபடி தமிழில் அவளை வருமாறு அழைத்தாள். அவளும் தன்னை அழகாக அலங்கரித்து சொர்க்கத்துத் தேவதைபோல் மேடைநோக்கிப் பறந்து கொண்டிருந்தாள். மேடையில் நிற்கும் போது சோடிப் பொருத்தும் பிரமாதமாகவே இருந்தது.
எம்மிருவருடைய கனவும், கற்பனையும் டாக்டராகி எம்மக்களைப் காத்து, உதவவேண்டும் என்றே எண்ணினோம். விதி என்னை விரட்டி விரட்டி பொறியிலாளன் ஆக்கியது.
இந்த மேடையில் என் சின்னம்மா நிலத்தில் என் ஜேர்மனியச் சகோதரங்களின் முன்னிலையில் எனது காதலியான என் பத்மகலாவை என் மனைவியா வரிந்து நாம் மோதிரத்தை மாற்றிக் கொள்கிறோம்.
அவர்கள் மோதிரத்தை மாற்றும்போது சபை எழுந்து நின்ற வாழ்த்தியது. சிலர் யேர்மனிய தேசியகீதத்தை பாடுவது கேட்கிறது.
ஆம் ஒருதேசிய உணர்வு இன்னொரு தேசியத்தைத் தட்டி எழுப்புகிறது. பத்மகலா தாவிப் பாய்ந்து கட்டியணைத்து அவன் கன்னங்களின் முத்தமாரி பொழிந்தாள். ஆம்…அந்தத் தமிழ் தந்த நாணம் எங்கே போனது? முத்தங்களை ஏற்றுக்கொண்டவன் மெதுவாக அவள் காதுகளில் ” இதுகள் எல்லாம் கல்யாணத்துக்குப் பிறகு” என்றான்.
அவள் அவன் காதில் கடித்து ஜேர்மன் பெட்டைகள் கட்டிப்பிடித்துக் கொஞ்சினால் மட்டும் ஏற்றுக் கொள்வீர்களோ என்று காதுள் கிசுகிசுத்தாள்.
சீலன் தற்போது தன் துணைவியின் கரங்களைப் பற்றியபடி மீண்டும் பேச ஆரம்பித்தான். திரைகடலோயும் திரவியம் தேடு என்றார்கள் நாம் திரவியம் மட்டுமல்ல கல்விச் சொல்வத்தையும் பெற்று அறிவு வளங்களை எம்நாட்டுக்குக் கொண்டு செல்கிறோம்.
நான் வெறும் டாக்டராக படித்து முடித்திருந்தால் மற்றைய டாக்கர்கள் போல் யாரோ ஒருவருக்குக் கீழ் வேலை செய்பவனாக இருப்பேன்.
ஆனால் நான் என்மக்களுக்கு வேலை வாய்பையும், வாழ்வாதாரத்தையும், சுயதொழிலையும் கொடுக்க விரும்புகிறேன். சுயதொழிலுக்கு ஊக்குவிக்க விளைகிறேன்.
என்மக்களை தன் காலில் தன்னிறைவுடன் நிற்கும் மனிதர்களாக்க விரும்புகிறேன். இந்தப்பலத்தையும் மனவுறுதியையும் தந்தது நான் அடிபட்டு மிதிபட்டு எழுந்த இந்த அகதி வாழ்க்கைதான்.
நாம் ஏதிலிகள் அல்ல உலகிற்கே முதன் முதலில் நாகரீகத்தைக் கற்றுத்தந்தவர்கள். மானத்தை மறைக்க பருத்தி பயிரிட்டு நூல் நூற்று ஆடை பின்னியவர்கள். முதன் முதலில் மரவுரி களைந்தவர்களும் தமிழர்களே என்பதை இங்கே அடக்கத்துடன் சொல்வதில் பெருமை கொள்கிறேன்.
எனது என்மனைவியின் அறிவும் எம்மக்களுக்கே பயன்படும். அங்கே மருத்துவ நிலையங்களை நிறுவி எம்மக்களுக்கு இலவசமாக அல்லது மிகக் குறைந்த செலவில் வைத்தியம் செய்ய விரும்புகிறோம்.
அன்று முள்ளிவாய்க்கால் இறுதிப்போரில் நாடு நாடாக, ஊர் ஊராக, குருதியும் கண்ணீருமாக தெருத் தெருவாகக் கத்தினோம் எங்களைக் காப்பாற்றுங்கள், எம்மக்களை மீட்டுத்தாருங்கள் என்று.
எமது குரல்கள் எந்த ஐரோப்பிய, அமெரிக்க ஏன் ….? உலகநாடுகளின் செவிப்பறைகளைத் தட்டவே இல்லை. நாம் நல்லவர்களாக இருந்தால் மட்டும் போதாது வல்லவர்களாக, எமது மூதாதையரின் மரபணுக்களை உயிர்ப்பித்து திறமைசாலிகளாக, கல்வி கேள்விகளில் வல்லவர்களாக, பொருளாதார நிறைவுள்ளவர்களாக நாம் நிமிரும் போது எங்கள் சிணுங்கல்கள் கூட உலகின் செவிப்பறைகளில் வெடித்துச் சிதறும்.
நான் வல்வவர்களாக நிமிரும் வரை எனது எமது போராட்டம் தொடரும். இதுவும் ஒரு தன்நிறைவுப் போரே. எமது குரல்கள் நாளை ஓங்கி ஒலிக்கும். எமக்கு என் சின்னம்மா தேசத்தின், என் ஜேர்மனியச் சகோதரர்களின் உதவியும், ஆசியும், வாழ்த்துக்களுடனும் நாம் நிமிர்வோம்.
எதிர்வரும் புதன்கிழமை நான் என் சின்னம்மா மண்ணில் என்காதலியைப் பதிவுத் திருமணம் செய்தபின், வரும் வெள்ளியன்று காலை 10மணிக்கு நாடு திருப்புகிறோம்.
எமது திருமணம் எம் தாய் மண்ணில், என் தாய் முன்பாக நடைபெறும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரியப்படுத்திக் கொண்டு என்னுரையை முடிக்கிறேன்.
அன்றைய விழாவின் கதாநாயகனாக சீலனே இருந்தான். அன்று சீலனைப்பற்றி பேச்சுக்களே அதிகமாக இருந்தது. தமிழர்கள் பலர் ஏன் தம்பி இப்படி ஒரு முடிவை எடுத்தீர்கள்? என்றும் விசனப்பட்டுக் கொண்டனர்.
——————————————–
வெள்ளிக்கிழமை சீலன் பத்மகலா இருவதும் நாட்டுக்குப் பயணமாகிறார்கள் அவர்களை அனுப்ப சீலனின் நண்பர்கள், பாடசாலை மாணவர்கள், பேராசிரியர்கள் கூடிவிட்டார்கள். பிஎம்டபிளயூ நிறுவனத்து முதலாளி சீலனை அழைத்து
“நான் எனது பெரிய தலைமையகத்துடன் கதைத்து உனக்குத் தேவையான பொருள்கள் பணம், அனைத்து உதவிகளையும் எமது கொம்பனியூடாகச் செய்துள்ளேன்.
நீ எத்தனை நிறுவனத்தையும் அங்கே நிறுவி நடத்தும் பொறுப்பையும் உன்னிடம் ஒப்படைக்கிறோம். நான் முதலிடும் பணமானது மூன்றாம் உலக நாடுகளுக்கு வழங்கும் உதவி நிதியாகக் கருதுகிறோம்.
அவற்றை நாம் திருப்பி எதிர்பார்க்கவில்லை. ஆனால் நீ எமது நிறுவனத்தின் நிரந்தர தலைமைப் பொறியலாளன் என்பதை எழுத்து மூலமாக உறுதி செய்யவேண்டும்.”
சீலனும் தலையசைத்துக் கொண்டான். பத்திரங்கள் கைச்சாத்திடப்பட்டு கைமாறிக்கொண்டன. பறப்புக்கான நேரம் சரியாக இருந்தது.
அனைவரிடமும் விடைபெற்றுக் கொண்டு பத்மகலாவின் கைகளைப் பிடித்துக்கொண்டு ஒருவருக்கு ஒருவர் துணையாக விமானத்தை நோக்கி நடக்கிறார்கள்.
கருவுற்ற நட்பின் கண்கள் கலங்கி நின்றன. விமானத்தினுள் காலடி எடுத்து வைப்பதற்கு முன்னர் ஜேர்மன் மண்ணை தொட்டு கண்களில் ஒற்றிக் கொள்கிறான். அவனது மனம்
“எனக்கு அடைக்கலம் தந்து போற்றிக் காத்தவளே உன்னை நான் என்று நேசிக்கிறேன்.” என்றது
பரந்து விரிந்து நிற்கும் அந்த பிரமாண்டமான பிராங்பேட் விமான நிலையம் வெறிச்சோடிக்கிடந்தது போல் இருந்தது.
என்னை இவ்வளவுகாலமும் வைத்துக் காத்து கல்விமானாக்கிய என் தாயே நான் மீண்டும் உன்னை மடியை மிதிப்பேனா? தெரியாது. நான் எங்கு வாழ்ந்தாலும் நானும் உன்பிள்ளைதான்” என்று மனம் துடித்துக் கொள்கிறது.
விமானத்தில் காலடி எழுத்து வைக்கும் போது கூட அந்த ஜேர்மன் மண்ணையும் விமான நிலையத்தையும் திரும்பத் திரும்பப் பார்க்கிறான். நன்றி கண்களால் உப்பு உவர்ப்புடன் வழிந்து கொண்டிருந்தது.
எம் நாட்டுச் சிட்டுக்கள் இரண்டு சோடியாக அலுமீனியப் பறவையின் வயிற்றினுள் புகுந்து பதுங்கிக் கொண்டன.
புலம்பெயர் தமிழர்களின் மனங்களில் ஓடி, உதைத்து எழுந்தது விமானம் அண்டவெளியில், நாம் அண்ணாந்து பார்க்கும் உயரத்தில், எம் கண்ணுக்கெட்டா தூரத்தில், பறக்கத் தொடங்கி விட்டனர்;. புலத்துத்தமிழர்;களாகிய நாம் நிலத்தில் நின்றபடி அகதிகள், அன்னியர்கள், வந்தேறிகள், நிலமற்றவர்;கள், ஏதிலியாக வந்தவர்கள் என்ற அடையாளப் பெயருடன் அவர்களை அண்ணாந்தே பார்க்கிறோம்.
எங்கள் கண்ணுக்கெட்டாத் தூரம் வரை, எங்கள் கண்களில் இருந்து வானத்தில் விமானம் மறைந்து கொள்கிறது. தம் ஆத்மாவில் இருந்து ஒருபகுதி பிரிந்துபோன உணர்வுகளுடன், தூக்கிய கைகளை இறக்காது, வைத்த கண்வாங்காது சீலனும் பத்மகலாவும் பறந்தபாதையிலே வழியனுப்பவந்த நண்பர்களுடன் நாங்களும்….!!!
சுபம்
கதை நிறைவாகியது
இக்கதை கடந்த ஒருவருடமாக வெளிவந்தது. இதுவரை இக்கதையை திறம்பட செயற்படுத்த உதவியவர்கள் மற்றும் கதை ஆசிரியர்கள் மற்றும் இணையத்தள ஆசிரியர்கள் அனைவருக்கமான நன்றியறிதல்களை நிர்வாக இணைப்பாளரும்இ நிர்வாக பெறுப்பாளரும் திரும்பிப் பார்கின்றோம் என்ற ஒரு குறிப்பின் மூலம் உங்களுடன் நன்றியறிதலையும் அனுபவங்களையும் உங்களுடன் பகிர்ந்து கொள்ளவிருக்கின்றோம் அதையும் வரும் வாரங்களில் பாருங்கள்.
நன்றி
அன்புடன் உங்கள்
தமிழ் எழுத்தாளர் இணைய அகம்
நிர்வாக இணைப்பாளர் இநிர்வாக பொறுப்பாளர்.
திரு.ஏலையா முருகதாசன் இ பண்ணாகம் திரு.இக.கிருஷ்ணமூர்த்தி

About The Author

Related posts