Friday, February 23, 2018

.
Breaking News

ஒருசெய்தி

ஒருசெய்தி

கண்ணன் வீடு ஒரே தடபுடலாக இருந்ததது.எல்லோருக்கம் சந்தோஷம் என்றால் சொல்லவே முடியாதபடி இருந்தது.வீட்டில் இருந்தவர்கள் எல்லாம் தரையிலே கால்படாதபடி பறந்துதான் திரிந்தனர் எனும் அளவுக்கு அவர்க ளின் அந்த ஆனந்தமும் அவசரமும் காணப்பட்டது.
கண்ணனின் தங்கை கலாவுக்கு வயது ஏறிக்கொண்டே வந்தது. ஆனால் எந்தக்கல்யாணங்களும் சரிவராமல் போய்க்கொண்டே வந்தது.வடிவான பிள்ளை ஆனால் கால்தான் சற்று ஊனமாக இருந்தது.பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றிருந்தாள்.அதுமட்டுமல்ல கொம்யூட்டரிலும் சரியான கெட்டிக்காரி. ஆங்கிலம் எழுதினால் அது அத்தனை சுவையாக இருக்கும். ஆங்கிலத்தில் கவிதைகள் கூட எழுதுவாள். பல பத்திரிகைகளில் அவளது ஆக்கங்கள் வெளி வந்து பல பரிசுகளையும் பெற்றுக் கொடுத்திருக்கிறது. நல்லாப் பேசுவாள். நல்லாய்ப் பாடுவாள்.
ஆங்கில ஆசிரியையாக அவளுக்கு நியமனம் கிடைத்ததும் அனைவரும் மகிழ்ந்தனர். ஆனால் அவளுக்கு மனதில் மகிழ்ச்சி யில்லை. பள்ளிக்கூடத்தில் தன்னை நொண்டி என்று மற்றவர்கள் கேலியும் கிண்டலும் செய்வாரகள் என்று மனதுக்குள்எண்ணியதால் மகிழ்ச்சி அவளிடம் வரமறுத்தது.ஆனாலும் தனது திறமையில் தன்னம்பிக்கை கொண்டகாரணத்தால் வேலைக்கு போக ஒத்துக்கொண்டாள்.
அவளின் விடாத உழைப்பால் பாடசாலையில் அவளுக்கு நல்ல மதிப்பு தானாகவே வந்துசேர்ந்தது.வயதுமுப்பது ஆனாலும் வடிவு மட்டும் குறையவி ல்லை.நல்ல மாநிறம்.எடுப்பான மூக்கு. அகன்ற பெரிய கண்கள்.பார்த்தால் இன்னெருதரம் பார்க்கத்தூண்டும் வசீகரம்.கால்மட்டும்தான்.குறை.அதை காலளவு குறை என்றுதான் கொள்ளவேண்டும்.
உப அதிபர் மனோகரனுக்கு ஐம்பது வயது. அந்தமனிசனும் படி படி எனப் படித்து பல பட்டங்களை தனது பெயரோடு சேர்த்தாரே ஒழிய காதல் கல்யாணம் என்றால் அந்தப்பக்கம் மனிசன் தலைவைத்துப் படுத்ததே அறியார்.
கலாவைப்பார்த்ததும் இவளை தனது வாழ்க்கைத்துணை ஆக்கினால் எப்படி இருக்கும் என்று எண்ணம் ஏற்பட்டது.எண்ணத்தை தள்ளிப்போடாமல் உடனடியாக செயல்படுத்தவும் ஆயத்தமானார். கலாவின் வீட்டாரிடம் நேரடியா
கவே சென்று கேட்டுவிட்டார். அவர்களுக்கு சொர்க்கமே வந்து காலடியில் விழுந்ததுபோல இருந்தது. கல்யாணம் நடக்காதா என்று ஏங்கி நின்றவர்களு க்கு இந்தச்செய்தி சர்க்கரைப் பந்தலில் தேன்மாரியாக இருந்தது.
கலாவுக்கும் மனோகரனுக்கும் கல்யாண ஏற்பாடுகளால்த்தான் கண்ணன் வீடி கலகலப்பில் மிதந்து கொண்டிருந்தது.
யாழ்ப்பாணம் சிவன் கோவில் மண்டபத்தில்த்தான் கல்யாணம். மாப்பிள்ளை வீடு கொக்குவில். பெண்வீடு மானிப்பாய். மணமகள் வந்து சேர்ந்துவிட்டாள் கல்யாண மண்டபத்துக்கு. மாப்பிள்ளை வீட்டாரை யாவரும் பார்த்தபடி நிற்கின்றனர். அவர்களோ வந்தபாடில்லை. கல்யாணமண்டபத் திலோ ஒரே படபடப்பு.
அப்பொழுது வேகமாக மாப்பிள்ளையின் மச்சான் மோட்டார் சைக்கிளில் வேகமாக வந்துசேர்ந்தான் எல்லாரும் அவனைப்பார்த்து என்ன — என்ன — என்று கேட்டபடி கூடிவிட்டனர். மாப்பிள்ளை வந்தகார் இன்னொருகாரோடு மோதுண்டு மாப்பிள்ளை யாழ்ப்பாணம் ஆஸ்பத்திரியில்—— என்றதும் கல்யாணமண்டபம் கதிகலங்கிவிட்டது.
ஆஸ்பத்திரிக்கு எல்லாரும் பறந்தார்கள். மாப்பிள்ளை அவசர சிகிச்சைப் பிரிவில் இருந்தார். டாக்டர் வந்து சொன்னார் மனோகரனுக்கு இரத்தம் தேவைப்படுகிறது. ஆனால் அவிரின் குறூப் இரத்தம் இங்கில்லை. ஆராவது இருந்தால் கூட்டி வாருங்கோ என்று சொல்லிவிட்டு உள்ளே போய்விட்டார். எல்லாரும் ஒருவரை ஒருவர் பார்த்தபடி உனக்குத்தெரி யுமா? ஆரும் இருக்கினமா? என்றபடியே இருந்தனர்.
இப்படி எல்லோரும் திக்கு முக்காடிக்கொண்டு இருக்கின்றபொழுது ஒருவர் அல்ல மூவர் ஓடிவந்து எங்கள் குறூப் இரத்தம் டாக்டர் கேட்டதுதான் எடுங்கே என்று பதட்டமாகச்சொல்லி நின்றார்கள். கடவுளைக்கண்டதுபோல அவர்களின் வருகை அங்கு இருந்தது.
இரத்தம் மனோகரனுக்கு ஏற்றப்பட்டது.மனோகரன் நினைவு திரும்பிய செய்தியைக் கேட்டதும் யாவரும் கடவுளே என்றனர். அப்பொழுது டாக்டர் வெளியே வந்து கேசவன் என்பவர் யார் என்று கேட்டார். அவர்கள் சொன்னா ர்கள் கலாவின் கடைசித் தம்பியென்று. அவன்தான் உங்களின் கடவுள். அவன் மட்டும் இப்படிச்செய்யாது விட்டிருந்தால் நீஙகள் யாருமே சந்தோஷப்பட முடியாமல் போயிருக்கும்.என்றார்.
ஒருவருக்கும் ஒண்ணுமே விளங்கவில்லை. அப்படி கேசவன் என்னதான் செய்திருப்பான் என்று யாவரும் யோசித்தபடி இருந்தனர். டாக்டர் சொன்னார் கேசவன் மட்டும் தனது போன்மூலம்– தெரிந்த எல்லாருக்கும் எஸ்.எம் எஸ் மூலம் இரத்தம் தேவை என்ற செய்தியை உடனே அனுப்பாது மட்டும் இருந்திருந்தால் நிலைமை வேறுமாதிரி போயிருக்கும். கேசவனின் சமயோசிதமும் அதற்காக அவன் பயன்படுத்திய விஞ்ஞான அணுகுமுறையு மேதான் மனோகரனை இப்போது காப்பாற்றி இருக்கிறது என்று ஒரு பெரிய விளக்கமே அளித்தார். கேசவன் ஒரு மூலையில் நின்று கொண்டு மீண்டும் போன்மூலம்” அத்தான் பிழைத்துவிட்டார்” என்ற செய்தியை யாவருக்கும் எஸ் எம் எஸ் செய்துகொண்டு இருந்தான்.

எம்.ஜெயராமசர்மா … மெல்பேண்

About The Author

Related posts