Saturday, February 24, 2018

.
Breaking News

புல்லாந்தி

புல்லாந்தி

மாலதி இளம்வயதில் இறந்ததற்கு அவளைப் பீடித்திருந்த மஞ்சள் காமாலை நோய்தான் காரணம் என ஜேர்மனியிலிருக்கும் அவளின் தங்கை எனக்குத் தெரிவித்திருந்தாள். மாலதியின் வீடும் எங்கள் வீடும் அருகருகேதான் இருந்தன. அவளின் வீட்டையும் எங்கள் வீட்டையும் சிறிய ஒழுங்கை பிரித்திருந்தது.எங்கள் வீட்டிலிருந்து தென் கிழக்கு மூலையாக அவள் வீடு இருந்தது. எங்கள் வீட்டு முற்றத்தில் நின்று பார்த்தால் மாலதியின் வீடு தெரியும். அவளின் வீட்டு விறாந்தையில் நின்று எங்கள் வீட்டை பார்க்க முடியும். அவள் அங்கிருந்து என்னைப் பார்ப்பாள். நானும் முற்றத்தில் நின்று பார்ப்பேன்.
மாலதியும் எங்கள் வீட்டுக்கு அடிக்கடி வருவாள். நாங்கள் எல்லாமாக நான்கு குடும்பங்கள் அயலவர்களாக வாழ்ந்தோம். எங்கள் நான்கு குடும்பத்தினருக்கும் ஒரு பொதுக் கிணறு உண்டு. எங்களுக்கும் இன்னும் இரண்டு குடும்பத்தினருக்கும் இன்னொரு கிணறு உண்டு. அதில் நாங்கள் பாவிப்பது குறைவு. மாலதி குடும்பத்தினர் பாவிக்கும் கிணற்றையே நாங்களும் பாவித்தோம். அந்த கிணற்றுத் தண்ணீர் நல்ல ருசியானது. குளிப்பதும், உடுப்புக்களைத் தோய்ப்பதும் அந்தக் கிணற்றில்தான். அந்தக் கிணற்றுக்கு எதிரெதிராக இரண்டு மிதியடி உண்டு. மாலதி வீட்டிற்கென இருக்கும் கிணற்றுப்பக்கமிருக்கும் மிதியடியிலேயே நானும் குளிப்பேன். சவர்க்காரம் போடும் நேரத்தில் மட்டும் „நான் சவர்க்காரம் போடப் போகிறேன் திரும்பிப் பார்க்காதையுங்கோ. குளிச்சுக் கொண்டேயிருங்கோ „என்பாள் மாலதி. தீர்த்தக்கரை என்பார்களே அப்படித்தான் அந்தக் கிணற்றடி இருக்கும். குளித்துக் கொண்டேயிருக்கும் போதே குடிப்பதற்கு தண்ணீர் கொண்டு போவதற்காக வாளி, குடத்துடன் அயல் வீட்டுக்காரர் வருவார்கள்.
உள்ளாடை மட்டுமே அணிந்து கொண்டு திரிந்த குழந்தைப் பருவம் மாறிய சின்னஞ்சிறுவர்களான வயதிலிருந்தே நானும் மாலதியும் அயலவர்களாக ஒன்றாகவே வளர்ந்தவர்களாதலால் நாங்கள் இருவரும் கதைத்துப் பேசிக் கொள்வதை யாருமே பெரிதாகக் கவனிக்கவில்லை. எங்களிருவரினதும் இரகசியமான சந்திப்புக்கள் நட்பு என்ற எல்லையைத் தாண்டிய போதுதான் நாங்களிருவரும் ஒருவரையொருவர் காதலிக்கின்றோமோ என்பதை உணரத் தொடங்கினோம். மாலதியின் பெற்றோரும், எனது பெற்றோரும் அயலவர்களும் எங்களை உற்றுப் பார்க்கத் தொடங்கினார்கள். நாங்களிருவரும் இயல்பாக பழகவில்லை எங்களிருவருக்குள்ளும் ஏதோ இருக்கின்றது என்பதை அவர்கள் அவதானிக்கத் தொடங்கினார்கள். அதை நிரூபிப்பது போல் ஒரு சம்பவமும் நடந்துவிட்டது. நான் குளித்துக் கொண்டிருக்கும் போது மாலதி குளிப்பதற்கு ஆயத்தமாக துவாயும் கையுமாக வந்திருந்தாள்.
வழமை போல் என்னிடம் வாளியை வாங்கி குளிக்காமல் கிணற்றுக்கட்டில் உட்கார்ந்திருந்தாள். “குளிக்கவில்லையா „என்று கேட்டதற்கு,“ குளிக்க வாக்கிறதற்கு சாந்தி வருவாள்“ என்று என்னை ஓரக் கண்ணால் பார்த்துச் சிரித்தவளை நான் எதுவும் கேட்கவில்லை கிணற்றில் அள்ளிக் குளிக்கக்கூடாது என்பதற்கான காரணத்தை நான் புரிந்து கொண்டிருந்தேன.; சாந்தி மாலதியின் தங்கை. நெடுநேரமாகியும் சாந்தி வரவேயில்லை. தனது தங்கை வருவாள் எனக் காத்திருந்தாள். நான் குளித்து முடித்ததும் “உனக்குப் பிரச்சினை இல்லையென்றால்; நானே தலைகுளிக்க வார்க்கிறேன்“என்றேன். மாலதி முதலில் தயங்கினாள், பிறகு தயக்கத்துடன் வந்து குனிந்தபடி முழங்கால்கள் இரண்டையும் ஊன்றி தரையில் உட்கார்ந்தாள். வாளியால் அள்ளி தலைதோய மாலதிக்கு வார்த்துக் கொண்டிருக்கும் போதே எதிர்ப்பக்கத்து குளிக்க வந்த பரமேஸை கண்சாடை காட்டி இந்தப்பக்கம் வா என்றேன், வந்தவளிடம் வாளியைக் கொடுத்து “நான் போகிறன்,மாலதிக்கு நீ தோய வார்“என்றேன். பரமேசும் அதற்கு சம்மதித்து வாளியை வாங்கியவள் என்னை ஓரக் கண்ணால் பார்த்துவிட்டு தலையைத் திருப்பி மாலதியிடம் கண்ணை மூடிக் கொண்டு பூனைகள் இரண்டு பால் குடிக்கும் கதை இந்தக் கிணத்தடியில் நடக்குது, நடக்கட்டும்…நடக்கட்டும்“ என்று அவள் சொன்னது போய்க் கொண்டிருந்த என் காதில் விழுந்தது.
ஓரிரவு எட்டரை மணியிருக்கும் நான்; அறைக்குள்ளிருந்து படித்துக் கொண்டிருந்தேன். அப்பா அடுப்படிக்குள்ளிருந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தார். அம்மா சாப்பாடு பரிமாறிக் கொண்டே „வெள்ளைக் கோழி இங்கை அடிக்கடி வருகுது, எங்கடை வெள்ளடியனும் சாடை மாடையாக கண்ணால பேசியதை நான் பார்த்தனான். இப்படியே கண்டும் காணாமல் விட்டால் ஏதாவது பிரச்சினையாகிவிடும். வெள்ளைக் கோழிப் பகுதி எங்களுக்குச் சரி வராது அயலுக்குள்ளை வீணாக மனஸ்தாபப்பட வேண்டி வரும் தம்பியின்ரை மோள் வசந்திக்கு எங்கடை வெள்ளடியனை தீர்மானித்து வைத்திருக்கிறம். தம்பி சாணைக்குறி போட்டு வச்சிக்கிறான். அதுதான் ஒரே கவலையாக இருக்குது“என்றார் அம்மா.
கோழிகள் இரண்டு கண்ணால் பேசுவதின் அர்த்தத்தை கண்டறியககூடிய திறமைசாலியா அம்மா என்று நினைத்த எனக்கு, தம்பியின்ரை மோள் வசந்தி என்று அம்மா சொன்னதைக் கேட்டதும், வெள்ளடியன் என்பது என்னைத்தான் என்பதையும்,வெள்ளைக் கோழி என்பது மாலதியைத்;தான் என்பதையும் நான் புரிந்து கொண்டேன். கிணற்றடியில் மாலதிக்கு குளிக்க வார்த்த செய்தி மெல்ல மெல்ல அயலுக்குள் பரவி அம்மாவின் காதுக்கும் எட்டிவிட்டது. ஒரு நாள் அம்மா“நீ இனிமேல் அந்தக் கிணற்றடிக்கு குளிக்கப் போக வேண்டாம், குமர்ப்பிள்ளைகள் குளிக்கிற இடத்திலை இளந்தாரி நீ ஒன்றாய்க் குளிப்பது பார்க்கிறவைக்கு நல்லாய் இருக்காது, இனிமேல் கிழக்குக் கிணத்தில் குளி“என்றார். கிழக்கு கிணறு என்பது எங்களுக்கும் பங்கான இன்னொரு கிணறு. அது எங்கள் வீட்டிற்கு கிழக்குப் பக்கத்திலிருந்ததால் கிழக்குக் கிணறு என்று பெயர் வந்துவிட்டது. அம்மா சொன்னதும் எனக்கு கொஞ்சம் கவலையாகத்தான் இருந்தது. ஆனால் நான் அதனைக் காட்டிக் கொள்ளவில்லை. நான் மாலதியின் வீட்டுக் கிணற்றில் குளிக்கவில்லையே தவிர எங்கள் சந்திப்பு தொடர்ந்து கொண்டேதான் இருந்தது.
எங்கள் பள்ளிக்கூடம் எங்கள் வீட்டுக்கு பக்கத்திலேயே இருந்ததால் பள்ளிக்கூடத்தைச் சென்றடையும் ஒழுங்கையில் அருகருகே நடந்து கதைத்துக் கொண்டே போவோம். நான் எனது வீட்டு முற்றத்தை கடக்கும் போதே மாலதி அவளின் வடக்குப்புற விறாந்தையில் நின்று நான் வருவதைக் கண்டதும் விறாந்தையை விட்டிறங்கி மெல்ல நடக்கத் தொடங்குவாள். எப்பொழுதும் அவளின் முற்றத்தைக் கடந்தே பள்ளிக்கூடம் போவேன். தனக்கும் எனக்கும் எவ்வித சம்பந்மும் இல்லை என்பது போல் எனக்கு முன்னால் போய்க் கொண்டிருப்பாள். இது முற்றத்தைக் கடக்கும் வரைதான். அவள் ஒழுங்கையில் காலடி எடுத்து வைத்ததும் மெதுவாக நடக்கத் தொடங்க நானும் வேகமாக நடந்து அவளருகில் சென்று விடுவேன். இருவரின் தோள்களும் ஒட்டாத குறையாக அருகருகாக கதைத்தபடியே நடப்போம்.
நட்பாக இருந்ததை காதலாக எரிய விட்டவர்கள் மாலதியின் பள்ளிக்கூடத் தோழிகளும், எங்கள் அயல் வீட்டைச் சேர்ந்த பரமேசுந்தான். மத்தியானம் சாப்பிட்டுவிட்டு பள்ளிக்கூடம் போகும் நானும் மாலதியும் தண்ணீர் குடிப்பதற்காக தண்ணீர் பைப்படிக்கு போவது வழக்கம். இப்படித்தான் ஒரு நாள் நானும் மாலதியும் பைப்பில் தண்ணீர் குடித்துக் கொண்டிருந்தோம், நான் குனிந்து தண்ணீர் குடிக்கும் போது அவளின் தோழிகள் என்மீது தண்ணீர் தெளித்துவிட்டு“ஏண்டி மாலதி கிணத்தடியில் குளிக்க வார்த்ததற்கு, இங்கை அவருக்கு குளிக்க வார்க்கிறியா, அது சரி புல்லாந்திப் பழத்துச் சாற்றைப் பூசி இப்பொழுதும் குளிக்கிறனியா, இல்லாட்டி அவர் பூசிவிட்டால்தான் குளிப்பியா எனக் கேட்க நான் திகைத்துப் போய்விட்டேன்.
மாலதிக்கு நான் குளிக்க வார்த்ததும், மிகச்சிறிய வயதில் நானும் மாலதியும் புல்லாந்திப் பழத்தைப் பிடுங்கி உடம்பின் எல்லாப் பக்கமும் ஒருவருக்கொருவர் பூசினதையும் அதைப் பார்த்த மாலதியின் அம்மாவும் என்னுடைய அம்மாவும் அடி அடி அடித்தபடி கிணற்றடியில் வைத்து சிரித்தபடியே குளிக்க வார்த்ததும் எனக்கு ஞாபகம் இருந்தது. அந்த விசயம் எப்படியோ மாலதியின் தோழிகளுக்குத் தெரிந்துவிட்டது.
ஒரு நாள் பள்ளிக்கூடம் போகும் போது மாலதியிடம் „புல்லாந்திப் பழ விசயத்தையம், குளிக்க வார்த்த விசயத்தையும் நீயா சொன்னனி“என்றேன்.
„இல்லை நான் சொல்லேலை, பரமேசுதான் சொல்லியிருக்க வேணும், அவளைத் துருவித் துருவிக் கேட்டாளவை அவள்தான் சொல்லியிருக்க வேண்டும் “என்றாள்.
நான் பள்ளிக்கூடப் படிப்பை நிறுத்தும் வரை „குளிக்க வார்த்த விசயத்தையும், புல்லாந்திப் பழ விசயத்தையும் சொல்லிச் சொல்லி மாலதியின் தோழிகள் கிண்டலடிக்காத நாட்களே இல்லை. ஒரு நாள் மாலதியின் வகுப்பிற்கு தாவரவியல் ஆசிரியர் குப்பைமேனிப் படத்தை கரும்பலகையில் வரைந்து படிப்பித்துக் கொண்டிருந்த போது, அவளின் தோழி“சேர் புல்லாந்திச் செடி குப்பைமேனிப் பூண்டு வகுப்பைச் சேர்ந்ததா“என்றாள். அதற்கு ஆசிரியர் இல்லை என்று சொன்னதையும் தான் புல்லாந்திப்பழச் செடியைப் பற்றிக் கேட்டவளை திரும்பிப் பார்த்ததையும், கிண்டலடிக்கும் தோழிகள் நமட்டுச் சிரிப்புடன் தன்னைப் பார்த்ததையும் ஒரு நாள் மாலதி சொல்லிச் சிரித்தாள்.
நான் பல்கலைக் கழகத்திற்கு தேர்வு செய்யப்பட்டதை அறிந்த சந்தோசப்பட்ட மாலதி அழத் தொடங்கினாள்.
„அழாதை மாலதி, நான் அடிக்கடி வந்து போவன்தானே, நீயும் கடிதம் எழுது, நானும் எழுதுவன், பயப்படாதை எங்கள் காதல் நிறைவேறும் என்னை நம்பு“ என்றவுடன் , அவள் என்னிடம் „உங்களுக்கு உங்கள் மாமன் மகளைச் சாணைக்குறி போட்டு வச்சிருக்கினமாமே அதையும் மீறி எப்படி நடக்கும்“என்றவளுக்கு என்னால் தெளிவாகப் பதில் சொல்ல முடியவில்லை.
„ச்சே ச்சே அப்படியெல்லாம் நடக்காது, அது ஒரு பிரச்சினையே இல்லை, என்னை நம்பு, என்னை நம்பு….“என்று அவளின் கைகளின் மேல் கையை வைத்து சத்தியம் செய்தேன். ஆனால் அவளின் அழுகையை மட்டும் அவளால் நிறுத்த முடியவில்லை. நான் கொழும்பு பல்கலைக்கழகத்திற்கு தெரிவு செய்யப்பட்டிருந்தேன்.அங்கு போவதற்கு இன்னும் சில நாட்கள் இருந்தன. அம்மாவின் மூத்த சகோதரி குடும்பத்துடன் பல ஆண்டுகளாக கொழும்பில் இருப்பதால் நான் அங்கேயே தங்கிப் படிப்பதற்கு அப்பாவும் அம்மாவும் ஏற்பாடுகளைச் செய்திருந்தனர்.
கொழும்புக்கு போவதற்கு முதல் நாள் மாலதி என்னைச் சந்தித்தாள். பழைய சிரிப்போ முகமலர்hச்சியோ அவளிடம் இல்லை. கைகளில் வெள்ளைத்தாளில் சுற்றி எதையோ வைத்திருந்தாள். கண்கள் கலங்கிய நிலையில், தனது கையில் வைத்திருந்த மடித்த தாளை என்னிடம் தந்தவாறே „என்னைக் கைவிட மாட்டீர்கள்தானே“என்றாள் தலையைக் குனிந்தபடியே. கண்களில் வழிந்த கண்ணீரைத் துடைத்து அவள் கையை அசைத்தபோது அவளின் சூடான கண்ணீர்த்துளிகள் என் முகத்தில் பட்டன. அவளால் அதிகம் பேச முடியவில்லை. அழுகையைத் தவிர அவளிடம் எதுவுமே இல்லை.
அவள் மடித்துத் தந்த தாளைப் பிரித்தேன்.அதற்குள் புல்லாந்திச் செடி இலைகள் இருந்தன. அந்தத் தாளில் புல்லாந்திப்பழத்தின் நீல மையால் „என்றும் உங்கள் மாலதி “என்று எழுதியிருந்தாள். அவள் என்மீது கொண்ட ஆழமான காதலை அவள் உணர்த்திய விதத்தால் அவள் கைகளை இறுகப் பற்றினேன். ஏக்கத்துடன் பார்த்தாள்.
படிப்பு ஒரு புறமும் மாலதியின் நினைவு ஒரு புறமுமாக நான் எந்தத் தீர்மானத்தையோ முடிவையோ எடுக்க முடியாமல் குழம்பிப் போயிருந்தேன். என்னுடைய பல்கலைக்கழக முகவரிக்கே கடிதங்களை போடுமாறு மாலதிக்கு எழுதியிருந்தேன். ஆறு மாதங்கள் வரையும் அவளின் கடிதங்கள் கிழமைக்கு ஒன்றாக வந்தன. ஆறமாதங்களின் பின் சனி ஞாயிறு தினத்தையடுத்த திங்கட்கிழமை போயா தினம் ஆகையால் மூன்று தினங்கள் விடுமுறை. பெரியம்மாவிடம் சொல்லிவிட்டு வெள்ளிக்கிழமை பஸ்ஸில் புறப்பட்டு அடுத்த நாள் காலை வீட்டை அடைந்துந்துவிட்டேன். நான் போய்ச் சேர்ந்த சில நிமிடங்களில் மாலதி வீட்டுக்கு வந்துவிட்டாள். அம்மா அவள் வந்ததை விரும்பவில்லையென்றாலும் அம்மா எதையுமே காட்டிக் கொள்ளாமலிருந்தார்.எனது படிப்பு, கொழும்பு வாழ்க்கை என்பவற்றைப் பற்றிப் பொதுவாகவே கேட்டாள்.
மாலதி பேசிக் கொண்டிருக்கும் போதே கேற்றைத் திறந்து கொண்டு வசந்தி வருவதைக் கண்டதும் நான் திகைத்துவிட்டேன். மாலதி நெற்றியைச் சுருக்கி என்னைக் கேள்விக்குறியோடு பார்த்தாள். அவள் பார்த்த பார்வை „வசந்தியை வரச் சொல்லி நீயா சொன்னனி என்பது போலவும், நீ வருவது பற்றி அவளுக்கு எப்படி தெரியும் என்பது போலவும் கேள்விக் கொக்கியாய் மாலதியின் கண்கள் என்னை நோக்கியிருந்தன“அம்மா வசந்தியைக் கண்டதும், „வா பிள்ளை வசந்தி………வா வசந்தி”வாய் நிறைய பல்லாகவும் முகம் நிறைய சந்தோசமாயும் கூப்பிட்டது கொஞ்சம் மிகையாகத்தான் இருந்தது. மாலதிக்காகத்தான் அம்மா இப்படி ஆரவாரமாக நடக்கிறார் என்பது எனக்குப் புரிந்தது.வசந்தியைக் கண்டதும் மாலதி“நான் வாறன்“என்று சொல்லிவிடடுப் போய்விட்டாள். மாலதி போனதும், „என்ன?…நீங்கள் வாறது அவளுக்கு எப்படித் தெரியும்?………..கடிதம் போட்டிட்டா வந்ததனீங்கள்“ என்றாள் சந்தேகத்துடன். அப்படி ஒன்றுமில்லை…..மாலதி அயல்வீட்டுக்காரி சும்மா வந்து பார்த்திட்டுப் போயிருக்கிறாள். நீயே அவ்வளவு தூரத்திலிருந்து வந்திருக்கிறாய்.நான் வந்ததை கேள்விப்பட்டு வந்திருக்கிறாள் அவ்வளவுதான்“ என்றேன்.
கொழும்புக்கு போய் இரண்டு மாதங்களின் பின் ஒரு நாள் பெரியம்மா, „உனக்கு ஒரு கடிதம் வந்திருக்கு என்று சொல்லி நீட்டினார். கடிதத்தை வாங்கிய நான் கடித உறையின் மறுபக்கத்தைப் பார்த்தேன் அனுப்பியவர் பெயர் இல்லை. யாராக இருக்கும் ஒரு வேளை மாலதியின் கடிதமோ, அவள் பெரியம்மாவின் விலாசத்திற்கு அனுப்ப மாட்டாளே…..யாராக இருக்கும் என்ற குழப்பத்துடன் கடித உறையை அவசரம் அவசரமாக கிழித்து மடித்திருந்த கடிதத்தை எடுத்து விரித்தவுடன் சிறிது திகைப்பாகவிருந்தது.மாலதிதான் அந்தக் கடிதத்தை எழுதியிருந்தாள்.

அன்பின் தேவன்,
இதுதான் நான் உங்களுக்கு எழுதும் கடைசிக் கடிதம். எனக்குக் கல்யாணம் நடக்கப் போகின்றது. அப்பாவும் அம்மாவும் அதற்கான முடிவை எடுத்தவிட்டார்கள். எனது தயக்கத்தைப் புரிந்து கொண்டு அவர்கள் சொன்ன காரணத்தை என்னால் முழுமையாக மறுக்க முடியவில்லை. என்னதான் நாங்கள் அயலவர்களாக இருந்தாலும், நாங்கள் இருவரும் கல்யாணம் செய்து கொள்வது என்பது சாத்தியப்படாது என்பதை அவர்கள் சொன்ன காரணத்திலிருந்து என்னால் புரிந்து கொள்ள முடிகின்றது. எங்கள் இருவர் பற்றிய இரகசியங்களை வைத்து அயலவர்கள் இரகசியமாக நடக்குமா நடக்காதா எனக் கதைத்து முடித்துவிட்டார்கள். ஆனால் உங்களோடு பழகிய நாட்களும் அதன் நினைவுகளும் எனது உடல் எரிந்து சாம்பலாகும் போதுதான் அழியும். உங்களுக்கு முற்றிலும் பொருத்தமான அழகான மாமன் மகள் வசந்தியைக் கல்யாணம் செய்யுங்கள்.
மாலதி

எனக்கும் வசந்திக்கும் கல்யாணம் நடந்து முடிந்து பல ஆண்டுகளின் பின்னர், மாலதி இறந்த செய்தியறிந்திருந்தேன். சில மாதங்களின் பின் இலங்கைக்கு என் மனைவியுடன் சென்ற பொழுது புதுக்குடியிருப்புக்கு மாலதியின் வீட்டுக்கு எனது மனைவியுடன் போயிருந்தேன். நாங்கள் சென்ற பொழுது மாலதியின் கணவனும் அவரின் பிள்ளைகளில் ஒரு பெண்பிள்ளையுமே வீட்டிலிருந்தார்கள்.நீண்ட பல ஆண்டுகளுக்குப் பின் எங்களிருவரையம் கண்ட மகிழ்ச்சியில் முகம்மலர மாலதியின் கணவர் வரவேற்றார். மாலதியின் படத்திற்கு சந்தனப் பொட்டு வைத்து மாலை போட்டு சுவரில் மாட்டியிருந்தார்கள். அந்தப் படத்தில் அவள் என்னை நோக்கி „சுகமாக இருக்கிறீர்களா“ என்று கேட்பது போல் இருந்ததுதேநீர் போடுவதற்காக மகளை அழைத்த போது நான் திடுக்குற்று விட்டேன். அவர் மகளை, புல்லாந்தி என்றே அழைத்தார். இது என்ன பெயர் என்பது போல் என்னைக் காட்டிக் கொள்ளாமல் அவரைப் பார்த்தேன். எனது பார்வையைப் புரிந்து கொண்டு, புல்லாந்தி என்ற பெயரை மாலதிதான் அடம்பிடித்து வைத்தாள் என்று மாலதியின் கணவர் சொன்னார்.என் மனைவி என்னை ஓரக் கண்ணால் பார்த்தாளே தவிர எதையுமே காட்டிக் கொள்ளவில்லை.அங்கிருந்து புறப்பட்டு ஜேர்மனிக்கு வந்ததன் பின்பும் வசந்தி, புல்லாந்தி என்ற பெயர்பற்றி இன்றுவரை எதுவுமே கேட்கவில்லை.

ஏலையா க.முருகதாசன்

About The Author

Related posts