Friday, February 23, 2018

.
Breaking News

விடை தேடும் வினாக்கள் (02):

விடை தேடும் வினாக்கள் (02):

குடும்பமாக வாழ்ந்தால் தான் பாசம் என்றால் என்ன வென்று புரியும். பெற்றோர் மேல் பிள்ளைகளுக்கு பாசம், பிள்ளைகள் மேல் பெற்றோர் பாசம், சகோதர சகோதரி பாசம் எல்லாம் சொன்னால் தெரியாது. அதைக் குடும்பத்தோடு வாழ்ந்து அனுபவித்தால் தான் புரியும். உதாரணத்துக்கு பாசமலர் என்ற பழைய திரைப்படமொன்றில் அண்ணன் தங்கையின் உறவை அவ்வளவு அற்புதமாக சித்தரித்திருப்பார்கள். தங்கைக்காக எத்தனை எத்தனை இழப்புக்களை அந்த அண்ணன் சந்தித்திருப்பார் என்பதை அந்த படத்தைப் பார்த்திருப்பவர்களுக்கு நன்றாகவே புரியும். படத்தில் மட்டுமல்ல நிஜ வாழ்க்கையில் கூட ஒருவர் தன் தங்கை துன்பமடைந்தால் பார்த்துக் கொண்டு சும்மா இருக்க மாட்டார்.
அப்படியிருக்க தன் தங்கையை ஒருவன் மானபங்கப் படுத்திவிட்டான் என்று அறிந்த பின்னும் எந்த அண்ணனாவது கையை கட்டி கொண்டு சும்மா இருப்பானா? அதற்கு பதில் ஒன்றும் நடவடிக்கை எடுக்காமல் அவன் சும்மா இருந்தால் அவன் எல்லாம் ஒரு அண்ணனா? அப்படித்தானே நாம் நினைப்போம்.

அரசர்கள் காலத்தில் பெண்களை சிறை பிடித்தல் என்ற ஒரு வழக்கு இருந்திருக்கிறது. இதற்கு பல காரணங்கள் சொல்லப்பட்டிருக்கின்றன. ஒரு பெண்ணை விரும்பி அவளை மணக்க சில அரசர்கள் பெண்ணை சிறை பிடித்து சென்றுள்ளார்கள். ஒரு அரசனை இன்னொரு அரசன் வென்றபின் அந்தப்புற பெண்களை சிறை பிடித்து சென்றிருக்கிரார்கள். இப்படி நடந்திருப்பதால் அந்த கால கட்டத்தில் அதை பெரிய குற்றமாகக் கருதி யாரும் தூற்றியதில்லை. பாதிக்கப் பட்டவர்கள் திரும்ப போர் தொடுத்து பெண்களை சிறை மீட்டும் சென்றிருக்கிறார்கள்.

தன் தங்கையின் மூக்கை ஒருவன் அறுத்து அவமானப் படுத்தியதை அறிந்த அந்த அரசன் கொதித்தெழுந்தான். தன் தங்கையின் மூக்கறுத்து அவமானப் படுத்தியவர்களுக்கு பாடம் புகட்ட எண்ணினான். அன்றிருந்த வழக்கப்படி அவர்களது பெண்ணை சிறை பிடித்தான். அப்படி சிறைபிடித்து சென்றால் அவளை மீட்க கண்டிப்பாய் வருவார்கள், அப்படி வரும்போது நியாயத்தைப் பேசித்தீர்த்துக் கொள்ளலாம் என்பது சிறை பிடித்த அரசனின் எண்ணமாய்
இருந்திருக்கலாம் அல்லவா? ஏன் அப்படி நினைக்கத் தோன்றுகிறது என்றால் அவன் நடந்து கொண்ட விதம் அப்படி. பழிக்குப் பழி என்று அந்த அரசன் தன் தங்கையின் மூக்கறுத்தவர்களின் குடும்பத்திலுள்ள பெண்ணின் மூக்கை அறுக்கவில்லையே. மேலும் சிறைபிடித்த பெண்ணை கௌரவமாகத்தான் நடத்தியிருக்கிறான்.

இவ்வருடம் மெல்பர்னில் கேசி தமிழ் மன்றம் நடத்திய பொங்கல் விழாவில் கலந்து கொண்டேன். அப்போது சில பேச்சாளர்கள் பேசினார்கள். அதில் ஒரு அன்பர் பேசும்போது ஜெயித்தவன் அரசனானான் தோற்றவன் அரக்கனானான் என்ற பேருண்மையை உடைத்தபோது உண்மையிலேயே அதில் பொதிந்திருந்த கருத்தை உணர்ந்தேன்.

வானிலே பறக்கக்கூடிய வல்லமை படைத்தவனை வானரங்கள் வென்று விட இயலுமா? வானிலே பறக்குமளவுக்கு தொழில் நுட்பத்தை அன்றே அவன் அறிந்திருக்கக் கூடும். அதை விடுத்து அவனை மாயாவி என்றால் இன்று வேறு கிரகத்திலிருந்து வந்து போகும் ஏலியன்களும் மாயாவிகளா? நாம் வானில் பறந்து போவதை நம்மைவிட விஞ்ஞான வளர்ச்சியில் குறைந்த வேற்றுக் கிரகவாசிகள் பார்க்கக் கூடியதாக இருப்பதாக வைத்துக் கொள்வோம். அப்படியானால் அவர்கள் பார்வையில் நாமும் மாயாவிகள் தான் இல்லையா?

எந்த ஒரு வலிமை மிக்க அரசனையும் படையையும் துரோகத்தினால் வென்று விடலாம் அல்லவா? வீரபாண்டிய கட்டபொம்மனை வென்றதை எப்படி? அதே கதைதான் அந்த பெண்ணை சிறை பிடித்த அரசனுக்கும். அவனது சகோதரனை தம் பக்கம் இழுத்து அவன் மூலம் உளவு பார்த்து அந்த அரசனின் இரகசியங்களை எல்லாம் அறிந்த பின் தானே வெல்ல முடிந்தது இல்லையா? நியாயத்தைக் கூட கேட்காமல் ஒரு இனத்தை வேரோடு அழித்து அவ்வரசனைப் பற்றியும் இழிவாகப் பேசுவது அவன் அந்த இனத்தைச் சேர்ந்தவன் என்பதனாலா? இப்படி எத்தனையோ வினாக்கள் விடை தேடுகின்றன.

-சங்கர சுப்பிரமணியன்.

About The Author

Related posts