அழுவதா சிரிப்பதா! அழுதுகொண்டே சிரிப்பதா?

 ›  › அழுவதா சிரிப்பதா! அழுதுகொண்டே சிரிப்பதா?

கதைகள்

அழுவதா சிரிப்பதா! அழுதுகொண்டே சிரிப்பதா?

பழைய மகாபலிபுரம் வீதியில் அமைந்திருந்த அந்த சிற்பக்கூடத்திலிருந்து இடைவிடாது
பல உளிகளின் ஓசை ஒலித்துக்கொண்டிருந்தது. அதன் உரிமையாளர் சதாசிவம் அக்கூடத்தின்
சிறிய அறையொன்றில் அமர்ந்து கணக்குவழக்குகளை சரிபார்த்தவண்ணம் இருந்தார்.
அப்போது அவர்முன்னிருந்த சிறிய தொலைக்காட்சிப் பெட்டியிலிருந்து வந்தசெய்தி அவர்
கவனத்தைத்திருப்ப தலையைத்தூக்கி தொலைக்காட்சிப் பெட்டியைப்பார்த்தார்.
“தமிழ்நாட்டைச் சேர்ந்த சண்முகசுந்தரம் என்ற இரணுவஅதிகாரியின் சிறந்த உக்தியால்
பாகிஸ்தான் எல்லையில் நடைபெறவிருந்த பெரிய ஆக்கிரமிப்பு தடுக்கப்பட்டதுடன்
எதிரியின் இரணுவத்துக்கு பெருத்த சேதமும் எற்படுத்தியது” என்ற செய்தியை வாசித்துக்
கொண்டிருந்தார் அறிவிப்பாளர்.
அச்சமயம் சதா, சதா என்று அழைத்துக்கொண்டே அவரது நண்பர் திருநாவுக்கரசு அங்கே
வரவும்,
“வாப்பா திரு வா, பார்தாயா என்மகன் செய்த சாதனையை” என்று அவரை வரவேற்றபடியே
தொலைக்காட்சியில் தான்பார்த்ததை நண்பரிடம் விளக்கினார்.
“அதைச்சொல்லி உன்னைப் பாராட்டலாம் என்றே ஒடோடிவந்தேன். நேற்று பின்னிரவுச்
செய்தியிலேயே சொல்லிவிட்டார்கள்.”
திருநாவுக்கரசு மிகவும் பண்பான நண்பர். கடந்த பத்து ஆண்டுகளாக அவர்களுக்குள்
உண்டான நட்பில் சிறுமனக்கசப்பு கூட ஏற்பட்டு விரிசலடையவில்லை. அவரவர் சொந்த
முயற்சியில் வாழ்க்கையில் முன்னேறுவதையே பொறுக்கமுடியாது பொறாமையால்
புழுங்கிடும் மனிதர்களிடையே இப்படியும் ஒருநண்பர் கிடைத்திருப்பது மிகவும் அபூர்வமே.
நண்பரின் பாராட்டுதலும் மகனின் சாதனையும் இணைந்து சதாவின் கண்களில் ஆனந்தக்
கண்ணீரை வரவழைத்தது. அந்த மகிழ்ச்சியில் அவர் சிற்பக்கூடத்தில் பணிபுரிந்த சிற்பியை
அழைத்து இனிப்பு வாங்கி வரச்சொன்னார்.
சிறிது நேரத்தில் இனிப்புடன் வந்தான் சிற்பி. அந்த இனிப்பை எல்லோருக்கும் வழங்கி
அத்துடன் இன்னொரு இனிப்பான செய்தியையும் சொன்னார். அந்த செய்தி வேறொன்றும்
இல்லை. அவர்கள் அனைவருக்கும் அன்று விடுமுறை என்பதுதான். சிற்பிகள் அனைவரும்
மிகவும் மகிழ்ச்சியுடன் வீடுசென்றனர். அவர்கள் சென்றபின் திருநாவுக்கரசு நண்பரைப்பார்த்து,
“சதா நான் உன்னைப் பாராட்டத்தான் வந்தேன். அத்தோடு இன்னொன்றையும் சொல்லவே
வந்தேன்” என்றார்.
“என்ன அது”
“சொல்றேன். அடுத்த வாரம் உறவினர் வீட்டு திருமணம் ஒன்றிற்காக அம்பாசமுத்திரம் செல்கிறேன்.
இப்போது குற்றாலத்தில் சீசன் ஆரம்பித்துவிட்டது. நீ ரெம்பநாளாய் குற்றாலம் போகலாம் என்று
சொல்லிக்கொண்டிருந்தாய் அல்லவா? வாயேன் போய்வரலாம்”
“சரி. இது நல்லசந்தர்ப்பம் தான். உன் உறவினர் வீட்டுத்திருமணத்தோடு குற்றாலமும் போய்வரலாம்.
அம்பாசமுத்திரத்துக்கு பக்கம்தானே குற்றலம். அத்தோடு எனக்கு தாமிரபரணிக்கரையில் அமைந்துள்ள
பாப்பாங்குளம் என்ற அழகிய கிராமத்துக்கும் போகனும்” என்றார் சதசிவம்.
சிலநாட்களில் நண்பர்கள் இருவரும் அம்பாசமுத்திரம் வந்தனர். திருமணம் சிறப்பக நடந்தது. அதன்பின்
உறவினர்களிடம் விடைபெற்றுக்கொண்டு குற்றாலம் வந்து அருவியில் நீராடி மகிழ்ந்தனர்.
மரங்களில் குரங்குகள் தாவி விளயாடிக்கொண்டிருந்தன. மனிதர்கள் சற்று எமாந்திருந்தால் போதும்
அவர்கள் கையிலிருக்கும் பழங்கள் போன்றவற்றை பிடுங்கிக்கொண்டு குரங்குகள் ஓடிவிடும். மனிதர்களைப்
போலவே குரங்குகளும் மற்றவர்களின் பொருட்களை அபகரித்துச்செல்வது வியப்பாக இருக்கிறது.
மந்திசிந்து கனிகளுக்கு வான்கவிகள் கெஞ்சும் என்று திரிகூடராசப்பக் கவிராயர் பாடியது இன்று
முற்றிலும் மாறியுள்ளது.
அடுத்த கட்டமாக பாப்பாங்குளம் சென்றனர். அமைதியாக ஓடிக்கொண்டிருந்தது வற்றாத தாமிரபரணி.
அதன் கரையோரங்களில் பசுமையான் நெல்வயல்கள். நெல்வயல்களின் ஊடே வெள்ளைபூக்கள்
பூத்தாற்போல் கொக்குகள் இரைதேடிக் கொண்டிருந்தன. அவற்றையெல்லம் பார்த்து ரசித்தபடியே
அதன்கரையில் அமைந்திருந்த முருகப்பெருமானின் கோவிலுக்குள் நுழைந்தனர்.
கோவிலில் தமிழ்க் கடவுளாம் வெற்றிவேலவன் வீற்றிருந்தார். ஆனால் சதாசிவத்தின் மனக்குதிரையோ
பதினைந்து வருடங்கள் பின்னோக்கி ஓடிச்சென்று நின்றது.
அந்த கோவிலில் அக்கம்பக்கத்து ஊர்களில் இருந்தெல்லாம் வந்தமக்களால் கூட்டம் அலைமோதியது.
அக்கோவிலின் மூலவிக்ரகத்தை செதுக்கிய சிற்பியென்பதால் சென்னையிலிருந்து வரவழைத்து அவருக்கு
மாலை மரியாதையென சிறப்பு கௌரவங்கள் எல்லாம் வழங்கினர். எல்லோரும் அவரை மதிப்பும்
மரியாதையுடன் பார்ப்பது அவருக்கு மிகவும் பெருமிதமாக இருந்தது. பின்னோக்கி சென்ற குதிரை
மறுபடியும் முன்னோக்கி வந்து நின்றது.
கோவிலில் ஐந்தாறுபேர் இருந்தனர். கோவில் பூஜாரி வெற்றிவேலவனுக்கு தீபாராதணை செய்த தட்டுடன்
சதாவிடமும் திருநாவுக்கரசிடமும் வந்தார். இருவரும் தீபாராதணையை கண்ணில் ஒற்றிக்கொண்டனர்.
சதாவின் கண்களில் தாரைதாரையாக கண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. நண்பனின் கண்ணில் ஓடிய
கண்ணீரைக்கண்டு,
“போதும் சதா. எவ்வளவு நாட்கள்தான் சண்முகத்தின் சாதனையை எண்ணி ஆனந்தக்கண்ணீர் வடித்துக்
கொண்டிருப்பாய்?” என்று சொல்லி கண்ணீரைத் துடத்துவிட்டார் திரு.
கோவிலிலிருந்து வெளி வந்தவர்கள் திருநெல்வேலி செல்ல மெயின்ரோட்டைநோக்கி நடந்தனர்.
மெயின்ரோட்டை அடைந்ததும் திருநெல்வேலி செல்லும் பஸ்வரவும் அதிலேறி அமர்ந்தனர்.  பஸ்நகரவும்
சிறிது நேரத்திலேயே திரு களைப்பின் அசதியில் கண்களைமூடி உறங்கத்தொடங்கினார். பதினைந்து
ஆண்டுகளுக்குமுன் நடந்ததெல்லாம் சதாவுக்கு அப்போது நினைவுக்கு வந்தன.
ஆனைமலை அடிவாரத்தில் தேடித்தேடி எடுத்துவந்த கல்லை ஒரு நல்லநாளில் பூஜைபோட்டு பெரியஉளி
கொண்டு செதுக்க ஆரம்பித்தார் சதா. மிகையாய் இருந்த கல்லின் பெரும்பகுதியை அகற்றியதும் நடுத்தர
உளிகொண்டு சிலைக்கு ஓரளவு உருவம் கொடுத்தார். பின் சிற்றுளி கொண்டு மிகவும் சிரத்தையுடன்
தன் நெற்றிவியர்வை சிலையில் விழுவதுகூடத் தெரியாமல் அரும்பாடுபட்டு செதுக்கி வெற்றிவேலவனுக்கு
உயிரோட்டத்தையும் தந்தார். அப்படி அவர் அச்சிலையை வடிக்கும்போது வெற்றிவேலவனின் உடலில்
அவரின் கைபடாத இடமே இல்லையென்று சொல்லலாம். ஆனால் இன்றென்ன நிலை. அந்த சிலைக்கு
எந்தவிதமும் சம்பந்தமும் இல்லாதவர் பூஜாரி என்றபெயரில் அதன் அருகிலேயே இருக்கிறார். அபிசேகம் செய்யும்
போது அவர் வடித்த வெற்றிவேலவனின் அங்கமெல்லாம் தொடுகிறார். அந்த வெற்றிவேலவனை தொட்டு
செதுக்கி உருக்கொடுத்து உயிரோட்டமும் கொடுத்த அவரால் அருகிலும் செல்லமுடியாது தொட்டுதழுவிடவும்
முடியாது. இதை எண்ணித்தான் அவர்படைத்த வெற்றிவேலவனை நினைத்து அழுதார். நண்பர் திருவோ
அவர் மகன் சண்முகத்தை நினைத்து வெற்றிவேலவன் முன் ஆனந்தக்கண்ணீர் வடித்ததாக எண்ணுகிறார்.
அவர் படைப்பில் உருவானவை இரண்டு. ஒன்று அவரின்மகன் சண்முகசுந்தரம். அவன் நாட்டைக்காக்கிறான். அவன்
செய்யும் பெருமை மிகவும் செயல்களால் அவர் கண்ணில் ஆனந்தக்கண்ணீர் சுரக்கிறது. இன்னொன்று அவர்
வடித்த வெற்றிவேலவன். இவனும் நாட்டிலுள்ள மக்களைக்காக்கிறான். ஆனால் அவன் யாரிடமும் எதுவும்
சொல்லவில்லை. ஆனால் அவனைப்படைத்த அவரால் அவன் அருகிலும் செல்லமுடியாது. அவனைத்தொட்டு
தழுவவும் முடியாது. திரும்பவும் அவர்கண்களில் காண்களிலிருந்து கண்ணீர் வடிந்து உருண்டோட ஜன்னல்
வழியே வந்த குளிந்தகாற்று முகத்தில் பட்டு தாலாட்டா அப்படியே தூ(க்)கத்தில் ஆழ்ந்தார்.
-சங்கர சுப்பிரமணியன்.
Share this Post:
அழுவதா சிரிப்பதா! அழுதுகொண்டே சிரிப்பதா? Reviewed by on February 11, 2017 .

பழைய மகாபலிபுரம் வீதியில் அமைந்திருந்த அந்த சிற்பக்கூடத்திலிருந்து இடைவிடாது பல உளிகளின் ஓசை ஒலித்துக்கொண்டிருந்தது. அதன் உரிமையாளர் சதாசிவம் அக்கூடத்தின் சிறிய அறையொன்றில் அமர்ந்து கணக்குவழக்குகளை சரிபார்த்தவண்ணம் இருந்தார். அப்போது அவர்முன்னிருந்த சிறிய தொலைக்காட்சிப் பெட்டியிலிருந்து வந்தசெய்தி அவர் கவனத்தைத்திருப்ப தலையைத்தூக்கி தொலைக்காட்சிப் பெட்டியைப்பார்த்தார். “தமிழ்நாட்டைச் சேர்ந்த சண்முகசுந்தரம் என்ற இரணுவஅதிகாரியின் சிறந்த உக்தியால் பாகிஸ்தான் எல்லையில் நடைபெறவிருந்த பெரிய ஆக்கிரமிப்பு தடுக்கப்பட்டதுடன் எதிரியின் இரணுவத்துக்கு பெருத்த சேதமும் எற்படுத்தியது” என்ற செய்தியை வாசித்துக் கொண்டிருந்தார் அறிவிப்பாளர்.

ABOUT AUTHOR /