கிரகப்போர் (பாகம்: 7 ) — } காசியரின் பேரன்.

 ›  ›  › கிரகப்போர் (பாகம்: 7 ) — } காசியரின் பேரன்.

கதைகள்,செய்திகள்+

கிரகப்போர் (பாகம்: 7 ) — } காசியரின் பேரன்.

வாசகர்களின் கவனத்திற்கு
நாம் பூமியில் நின்று அண்ணாந்து பார்க்கின்ற போது நீலநிறமாக வானம் தெரிகின்றது. சூரியனைப் பகலிலும் சந்திரனையும் மின்மினிப் பூச்சிகளாய் மின்னிக் கொண்டிருக்கும் நட்சத்திரங்களை இரவிலும் பார்க்கின்றோம்.சூரியன் சந்திரன் உட்பட மிகுதி ஏழு கிரகங்களும் சூரிய குடும்பத்திற்கு உரியவை என விஞ்ஞானம் கண்டறிந்துள்ளது. நாம் அண்ணாந்து பார்க்கின்ற  நீலநிற வானத்தின் எல்லை எது என்பதை எமது அறிவு தேட முயற்சிக்கின்றது. தேடத் தேட எல்லையற்ற பிரபஞ்சமாக வெளி நீளுகிறது விரிகிறது.
இந்தப் பிரபஞ்சத்தில், மனித வர்க்கத்தின் கணித மதிப்பீடான கோடி கோடிகளுக்கும் அப்பால் எணணிறந்த எண்ணிறந்த எண்ணிக்கைகளுக்;கும் அப்பால் பல கோடி கிரகங்கள் எல்லையற்ற பிரபஞ்சத்தில் மிதந்து கொண்டிருக்கின்றன. பூமியில் வாழும் நாம், பூமி ஒரு உருண்டை போல இருப்பதால் ஒரு இடத்தில் இருந்து புறப்பட்டால் பலவாயிரம் மைல்கள் பயணப்பட்டும்கூட  புறப்பட்ட புள்ளிக்கே வந்து சேர்ந்து விடுவோம். ஆனால் பிரபஞ்சம் அப்படியற்றது.
இதுவே எம்மை திகைக்க வைக்கின்றது. எண்ணிறந்த கிரகங்களா எனச் சிலிர்க்க வைக்கின்றது. எமது அறிவு இவற்றையெல்லாம் ஆராயத் தொடங்குகிறது. விஞ்ஞானிகள் நாளுக்குநாள் கிரகங்கள் பற்றியும் அவற்றில் வாழக்கூடிய உயிரினங்கள் பற்றியும் வியத்தகு செய்திகளை வெளியிட்டு வருகின்றனர்.வெளிப்படாத உண்மைகள் பல கோடிகள் உண்டு. விஞ்ஞானிகள் கிரகங்களில் வாழும் உயிரினங்கள் பற்றிய உண்மைகளை ஏதோ ஒரு  காரணத்திற்காக மூடிமறைத்தும் வருகின்றனர்.
விஞ்ஞானிகள் போன்று சாதாரண மனிதர்களும் சமாந்தரமாகச் சிந்திக்கிறார்கள்.அறிவு என்பது கேள்விகள் ஊடாக எழுவது. தொடர் கேள்விகளால் விடைக்கான வாசல்கள் தொடராகத் திறக்கப்படுகின்றன.உலகெங்கும் வாழும் மக்களில் பல இலட்சம் மக்கள் பிரபஞ்சம்,கிரகங்கள்;, உயிரினங்கள் பற்றிச் சிந்திக்கிறார்கள் உரையாடுகிறார்கள்.
இந்தச் சிந்தனையின் வெளிப்பாடு காரணமாக நகைச்சுவை இழையோட உண்மைகளை கற்பனை இழையோட என்னால் தொடராக எழுதத் தொடங்கிய தொடர்தான் ‘கிரகப்போர’.
இத்தொடரில்  பரமசாமி, சுந்தரி என்ற தம்பதிகளை இக்கதையைக் கொண்டு செல்பவர்களாகவும் அவர்கள் ஊடாக வாசகன், அவர்கள் பார்க்கும் அத்தனையையும் பார்க்க வைப்பதே இத்தொடரின் முதன்மை நிலை. கிரகப்போர் முதல் பகுதியில், பூமியிலிருந்து அனுப்பப்பட்டு வானத்தில் மிதந்து கொண்டிருக்கும் சட்லைட்டுக்கள் அத்தனையையும் வேற்றுக்கிரக வாசிகள் செயல் இழக்கச் செய்தும் சேதப்படுத்தி விடுவது போலவும் 50.000 கோள்களுக்கு ஒரு கிரகமாக தலைமைக் கிரகமாக இருப்பதாகவும், பூமிக்குப் பொறுப்பாக இருக்கும்’மாங்கதிர்’ கிரகத்தில் வாழும் மனிதர்களே சட்லைட்டு;களைச் சேதப்படுத்த பூமியில் இருக்கும் அத்தனை கணிணிகளும்,கைத்தொலைபேசி உட்பட அனைத்துத் தொலைபேசிகளும் இயங்காத நிலை ஏற்படுகின்றது போலவும் கதை நகர்ந்து செல்கின்றது.
அதே வேளை ‘மாங்கதிர்’கிரகத்தில் இருந்து நேரடியாக  ஆங்காங்கெ சில கணிணிகளை இயக்கும் மனிதர்களால் பூமியில் உள்ள மனிதர்களின் அடவாடித்தனங்கள் கூடிக்கொண்டு வருவதால் வெகு சீக்கரத்தில் அழிக்கப்படுவீர்கள் என எச்சரிக்கப்படுகின்றனர்.
இந்தச் சூழ்நிலையில் ‘மாங்கதிர்’ கிரகத்திலிருந்து வந்த இரு பெண்கள் பரமசாமியையும் சுந்தரியையும் தங்கள் கிரகத்திற்கு அழைத்துச் செல்கின்றனர். அழைத்துச் செல்ல வரும் அந்த இரு அழகான பெண்களும் பரமசாமியின் கையையும் சந்தரியின் கையையும் தொட்டவுடன், பூமியில் வாழும் மனிதர்களுக்கு இருக்கும் பய உணர்ச்சி அவர்களுக்கு இல்லாமல் போய்விடுகிறது.
இந்த இரு பெண்களுடனும் பிரபஞ்ச வெளியில் பலவாயிரம் கோடி கிலோ மீற்றர் பயணம் செய்த பரமசாமியும் சுந்தரியும் சந்தித்த தங்குமிடங்களை இதுவரையில் வெளிவந்த கிரகப்போர் 6 வரை நீங்கள் வாசித்திருக்கலாம்.
இப்பொழுது அவர்களிருவரும் மாங்கதிர் கிரகத்தில் வாழ விருப்பம் தெரிவித்த நிலையில், அவர்களை இன்னொரு கிரகத்திற்கு அதனைப் பார்ப்பதற்காக அழைத்துச் செல்கின்றனர்.
இன்று பூமியில் உள்ள இத்தனை தொழில்நுட்ப வளர்ச்சிக்கும் கணிணியுக வளர்ச்சிக்கும் அடித்தளமாக இருப்பது கற்பனையே மனத்திரையில் வடிவமைக்கப்பட்டவையே இயற்பியல் நிஜங்களாக எம்முன் காட்சி அளிக்கின்றன.
எந்தவொரு விஞ்ஞான எடுகோள்களும் அற்ற நிலையில் எமது ஞானிகளும், சித்தர்களும், யோகிகளும் மெஞ்ஞானத்தின் கண்கொண்டு பிரபஞ்சத்தையும் கோள்களையும் ஆய்தறிந்து இருக்கிறார்கள்.
மெஞ்ஞானம் என்பது பரவி விரவி நிற்கும் அறிவின் தேடல். இது அடங்கா அறிவுப்பசி;. இனி இத்தொடர் ‘மாங்கதிர் கிரகத்தில் சாமியும் சுந்தரியும்’ என்ற தலைப்பின் கீழ் தொடரும்.
மாங்கதிர் கிரகத்தில் சாமியும் சுந்தரியும் (பகுதி:1)
(கிரகப்போரின் அடுத்த அத்தியாயம்)
எழுதியவர்: காசியரின் பேரன்
மாங்கதிர் கிரகத்திலிருந்து புறப்பட்டுப் புதிய கிரகத்தில் காலடி வைத்ததும் அங்கிருந்த காட்சிகள் பரமசாமிக்கும் சுந்தரிக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தின.பூமியிலிருக்கின்ற மரங்களான பனை தென்னை வாழை மரங்கள் நிரையாக நின்றன.
பூமியிலிருந்து இந்த மரங்களையெல்லாம் இந்தக் கிரகத்திற்கு கொண்டு வந்தார்களாக அல்லது இங்கிருந்து பூமிக்குக்கு கொண்டு போனார்களா என அவர்கள் நினைக்கையிலேயே, அவர்களை அழைத்துச் சென்றவர்கள் இங்கிருந்துதான் பூமிக்கு இந்த மரங்கள் கொண்டு போகப்பட்டவை எனச் சொன்னார்கள்.
ஒருவர் நினைப்பதை மற்றவர்கள் அறியும் ஆற்றல் மாங்கதிர் கிரக மனிதர்களிடம் இருந்தது.பூமியின் நினைப்பு பரமசாமியிடமும் சுந்தரியிடமும் இருந்த போதிலும் மாங்கதிர் கிரகச் சூழ்நிலையும் புதிய கிரகத்தின் சூழ்நிலையும் அவர்களின் உடலுக்குப் பழக்கப்பட்டதாக இசைவாக்கம் பெற்றவிட்டது.
அந்தப் புதிய கிரகத்திலும் வீதிகள் கட்டிடங்கள் வீடுகள் என எல்லாம் இருந்தன. நடமாடிய உருவங்களைப் பார்த்ததும் அவர்களிருவரும் அதிர்ந்துவிட்டார்கள். பிள்ளையாரின் முகத் தோற்றம் கொண்ட பலர் அங்குமிங்குமாக நடமாடிக் கொண்டிருந்தார்கள். பெரிய உருவங்களாகவும் சிறிய உருவங்களாகவும் அவர்கள்  இருந்தனர்.
பரமசாமியையும் சுந்தரியையும் அழைத்துச் சென்று கொண்டிருந்த வாகனத்தின் உள்ளே இருந்த அவர்களிருவரையும் கண்ட அந்த உருவங்கள் கையசைத்தன.
பூமியில் உள்ளது போல தாரினாலோ சீமெந்தினாலோ வீதிகள் அமைக்கப்பட்டிருக்கவில்லை. அவை வேறு ஒரு பொருளால் அமைக்கப்பட்டிருந்தது. வீடுகள் யாவும் மாதுளம்பழ வர்ணத்தில்: இருந்தன.
வீடுகளைச் சுற்றி வேறு வேறு வகையான மரங்களிருந்தன.பூமியில் தம்மால் விநாயகப்பெருமான் என அழைக்கப்பட்டு வழிபடும் உருவச்சிலை இங்கு உயிரோடு நடமாடுவதைப் பார்த்த இருவரும் தவியாய் தவித்தார்கள் என்ற போதிலும் அவர்கள் நிதானத்துடனேயே இருந்தார்கள்.
பூமியைவிட்டு புறப்பட்டவுடன் பரமசாமியினதும் சுந்தரியினதும் உடலிலும் மூளையிலும் பயமின்மையையும் மாங்கதிர் கிரக மனிதர்கள் ஏற்படுத்திய போதிலும் பூமியின் நினைப்பை அவர்கள் மூளையியிலிருந்து நீக்கவே இல்லை.
அவர்கள் பிரயாணம் செய்த வாகனம் ஒரு கட்டிடத்தின முன்னால் நின்றது. கட்டிடக் கதவுகள் தானாகத் திறந்தன. வாகனம் மெதுவாக உள்ளே சென்றது.
யானை முகத்துடன் இருந்தவர்கள் வருக வருக என ஏதோ ஒரு மொழியில் அழைப்பது பரமசாமிக்கும் சுந்தரிக்கும் விளங்கியது. அந்த மொழி தமிழ் போல் இல்லை. ஆனால் அவர்களிருவருக்கும் பரிச்சயமான மொழியாக இருந்தது.
எல்லா மொழிகளையும் பேசிக் கொள்ளும் ஆற்றலை அவர்கள் இந்தப் புதிய கிரகத்தில் காலடி எடுத்து வைத்ததும் பெற்றுவிட்டார்கள்.
அவர்களை அழைத்து வந்த மாங்கதிர்க் கிரக மனிதர்கள்’ நாங்கள் எங்கள் கிரகத்திற்குப் போகிறோம் இனி இவர்கள் எல்லா இடமும் அழைத்துச் செல்வார்கள். நீங்கள் பூமிக்குத் திரும்பப் போவதில்லை எங்களுடனேயே இருக்கப் போவதாகச் சொன்னபடியால் இந்தக் கிரகத்தைவிட இன்னும் மூன்று கிரகங்களுக்கு நீங்கள் போய் வந்ததன் பின்ப நாங்கள் உங்களை அழைத்துப் போக வருவோம்’ எனச் சொல்லி மாங்கதிர் கிரக மனிதர்கள் விடைபெறுகிறார்கள்.
அவர்கள் விடைபெற்றதும் யானை முகம் கொண்டவர்களில்  இருவர் அறைபோன்று இருந்த ஒரு இ.டத்திற்கு அழைத்துச் செல்கிறார்கள். பரமசாமிக்கும் சுந்தரிக்கும் அங்கு உணவு தயாராக இ.ருக்கின்றது.
‘சாப்பிடுங்கள், சாப்பிட்ட பிறகு ஓய்வெடுங்கள். பிறகு வேறு இடங்களுக்கு அழைத்துச் சென்று காட்டுகிறோம்’ எனச் சொன்னவர்கள் தாங்கள் அணிந்திருக்கும் பொன்னிற உடைகளைப் போன்ற உடைகளை கொண்:டு வந்து கொடுக்கிறார்கள்.’மகிழ்ச்சியாக இருங்கள் எனச் சொல்லியவாறு அவர்கள் விடைபெறுகிறார்கள். பரமசாமியும் சுந்தரியும் அவர்களிடம் ஏதோ கேட்க நினைக்கையிலேயே’ நீங்கள் சாப்பிட்டுவிட்டு ஓய்வெடுங்கள் பிறகு வந்து விளங்கப்படுத்துகிறோம்’ அவர்கள் சொல்லிவிட்டுச் செல்கிறார்கள்.
சாப்பாடுகள் யாவும் ருசியாக இருந்தன. அவை எவையால் தயாரிக்கபப்பட்டன என்பதை அவர்களால் அறிய முடியவில்லை.
சாப்பிட்டவுடன் மயக்கம் வருவது போல அவர்களிருவருக்கும் நித்திரை வந்தது. அவர்கள் நித்திரையைவிட்டு எழுந்ததும் தாங்களிருவரும் சாப்பிட்ட உணவு எதிலிருந்து தயாரித்ததாக இருக்கலாம் என யோசனையில் ஆழ்ந்தனர். பொன்னிற ஆடையை அணிந்தனர்.
அவர்கள் இருந்த அறைக்கதவைத் தட்டியவர்களை ; பரமசாமியும் சுந்தரியும் வாருங்கள் என அவர்களின் மொழியிலேயே வரவேற்றார்கள்.
உள்ளே வந்த இருவரும் அவர்களுடன் கனிவாககப் பேசினர். ஒரு தட்டில் கொண்டு வந்த காய்களையும் பழங்களையும் காட்டினார்கள்.’இவற்றிலிருந்துதான் உங்களுக்:கான உணவைத் தயாரித்தோம் என்றனர்.
அவர்களிருந்த அந்த மண்டபம் இதுதானா சொர்க்கலோகம் என வியக்குமளவிற்:கு அழகாக இருந்தது.அந்த மண்டபத்திற்குள்ளேயே பல கருவிகள் இருந்தன. அவர்களை அழைத்துச் சென்ற இருவரும் பத்திரிகைகள் இருந்த இடத்தைக் காட்டியதும் பரமசாமியும் சுந்தரியும் அதிர்ச்சியடைந்தார்கள்.
தங்கள் நகரத்திலிருந்து வந்த தமிழப் பத்திரிகையைப் பார்த்ததும் அவர்களிருவருக்கும் தூக்கிவாரிப் போட்டதற்குக் காரணம் அதில் இருந்த செய்திதான்.
செய்தி இதுதான், ‘மணல்காடு வீதியில் குடியிருந்த பரமசாமியையும் சுந்தரியையும் இரண்டு நாட்களாகக் காணவில்லை. இரண்டு நாட்களுக்கு முன்பு வேற்றக்கிரகவாசிகளால் கணிணிகளை இயங்காமல் செய்தமைக்கும் இவர்களிருவரும் காணமல் போனதற்கும் சம்பந்தமிருக்கலாம் என சந்தேகம் இருப்பதாகவும்..அதற்குப் பின்னர் ஆகாயத்திலிருந்து பூமிக்கு இறங்கிய தொலைக்காட்சி கணிணி கார்ட்டுகள் என்பவற்றின் சூத்திரதாரிகளான வேற்றுக்கிரக வாசிகளே இவர்களையும் கடத்தியிருக்கலாம் என சந்தேகப்படுவதாகவும்’அந்தப் பத்திரிகைச் செய்தியில் இருந்தது.
தங்களைப் பற்றிய செய்தியைவிட பல கோடி கிலோமீற்றர்களுக்கப்பால் இருக்கும் இவர்களிடம் எப்படி இப்பத்திரிகை கிடைத்தது என்பதே அவர்களுக்கு வியப்பாக இருந்தது. தமிழ்ப் பத்திரிகை மட்டுமல்ல எல்லா பத்திரிகைகளும் அங்கு இருந்தன.
இவர்களின் சந்தேகத்தைப் புரிந்து கொண்ட யானை முகத்தவர்கள்’ கணிணியை மனிதர்கள் பயன்படுத்தும் முன்னர், நாங்கள் பூமிக்குச் சென்று எல்லா நாட்டுப் பத்திரிகைகளையும் ஒவ்வொரு நாளும் எடுத்து வந்தோம். இப்பொழுது பத்திரிகை அடிப்பவர்களின் கணிணிக்குள் சென்று அவர்கள் பத்திரிகைகளை அச்சடிக்கத் தொடங்குமுன்பே இங்கு எங்கள் கிரகங்களில் பத்திரிகைகளை அச்சடித்துவிடுவோம் என அவர்கள் சொல்லச் சொல்ல இவர்களால் நம்பமுடியவில்லை.
முற்றுமுழுதாக பரமசாமி,சுந்தரி ஆகிய இருவரினதும் உடலில் உள்ள மூளையின் நுண்பிரிவுகள் வேற்றக்கிரக வாசிகளின் தன்மைக்கேற்பதாக மாற்றப்படவில்லை. பூமியிலிருந்து பெறப்பட்ட மூலப்பொருட்களாலான வேதியப் பொருட்களுக்கேற்பவே அவர்களின் உடல் இருந்தது.ஆனால் மனிதர்களுக்கு உரிய  பயத்தை மட்டும் அவர்களின் மூளைச் செயல்பாடுகளிலிருந்து நீக்கியிருந்தார்கள்.
பத்திரிகைகள் இருந்த இடத்திலிருந்து ஒரு மண்:டபத்திற்கு அவர்களை அழைத்தச் சென்றார்கள். யானை முகத்தைக் கொண்ட பலர் இருந்தார்கள்.
பரமசாமியையும் சுந்தரியையும் எல்லோரும் கைதட்டி வரவேற்றார்கள். அப்பொழுது ஒரு யானை முகத்தவர் எழுந்து’ நீங்கள் இருவரும் இருக்கும் கிரகத்திற்கு நாங்கள் வைத்த பெயர்’செம்பவளம்’. பூமியில் உள்ள மனிதர்களின் கணக்கில் பலவாயிரம் வருடங்களுக்கு முன் எம்மில் பலர் பூமிக்கு வந்து அவர்களுக்கு ஆற்றலைக் கொடுத்திருக்கிறோம்.அதில் ஒன்றுதான் ஒருவர் நினைப்பதை மற்றவர் உணர்ந்து கொள்ளும் சக்தியைக் கொடுத்தோம். ஆனால் நீங்கள் அதனைத் தவறான வழிக்குப் பயன்படுத்தினீர்கள். நாங்கள் பூமிக்கு வந்த போது எம்மை கண்டுகொண்ட ஞானிகள் எம்மிடமிருந்த ஆற்றலைக் கொண்டு எம்மைக் கடவுளாக வணங்கினர், அது இன்றும் தொடர்கின்றது.நீங்கள் இருவரும் எங்கள் அயல்கிரகமான மாங்கதிர் கிரகத்திலேயே வாழப் போவதால் இன்னும் பல விடயங்களை அறிந்து கொள்வீர்கள். இப்பொழுது இந்தத் திரையைப் பாருங்கள் என அவர்களில் ஒருவர் சொன்னதும்,பூமியில் உள்றள விமானத் தளங்கள் யாவும் தெரியத் தொடங்கின. அங்கிருந்து புறப்படும் விமானங்கள, விமானத்தளத்தில் வந்திறங்கும் விமானங்கள் என எல்லாம் அந்தத் திரையில் தெரியத் தொடங்கின.
கனடாவை நோக்கி பறந்து கொண்டிருந்த பிரித்தானிய பிரிட்டிஸ் எயர்வேஸ் விமானத்தை மிக மிக அருகில் அந்தத் திரை காட்டியது. விநாடிப் பொழுதிற்குள் விமானத்தின் உள்பகுதி தெரியத் தொடங்கியது.
பயணிகளில் சிலர் நித்திரையிலிருந்தனர்,சிலர் ஐபாட்டைப் பார்த்துக் கொண்டிருந்தனர் இன்னும் பலர் அருகிலிருப்பவர்களுடன் உரையாடிக் கொண்டிருந்தனர். அந்த விமானத்திற்குள் நான்கு தமிழர்களும் இருந்தார்கள்.அந்தத் தமிழரில் ஒருவர் சுந்தரியின் மாமன் முறையானவர். அவரைப் பார்த்ததும் சந்தரி?
(தொடரும்)
Share this Post:
கிரகப்போர் (பாகம்: 7 ) — } காசியரின் பேரன். Reviewed by on February 10, 2017 .

வாசகர்களின் கவனத்திற்கு நாம் பூமியில் நின்று அண்ணாந்து பார்க்கின்ற போது நீலநிறமாக வானம் தெரிகின்றது. சூரியனைப் பகலிலும் சந்திரனையும் மின்மினிப் பூச்சிகளாய் மின்னிக் கொண்டிருக்கும் நட்சத்திரங்களை இரவிலும் பார்க்கின்றோம்.சூரியன் சந்திரன் உட்பட மிகுதி ஏழு கிரகங்களும் சூரிய குடும்பத்திற்கு உரியவை என விஞ்ஞானம் கண்டறிந்துள்ளது. நாம் அண்ணாந்து பார்க்கின்ற  நீலநிற வானத்தின் எல்லை எது என்பதை எமது அறிவு தேட முயற்சிக்கின்றது. தேடத் தேட எல்லையற்ற பிரபஞ்சமாக வெளி நீளுகிறது விரிகிறது. இந்தப் பிரபஞ்சத்தில், மனித வர்க்கத்தின்

ABOUT AUTHOR /