‘விதி’ சிறுகதை விமர்சனம்!

 ›  › ‘விதி’ சிறுகதை விமர்சனம்!

நூல் அறிமுகம்

‘விதி’ சிறுகதை விமர்சனம்!

கனடா எழுத்தாளர் பொன் குலேந்திரனின் ‘விதி’ சிறுகதை வாசித்தேன். ‘ஒரு தீய செயலுக்கு எதிராக ஒன்று நடந்தே தீரும்’ என்கிற ஞானம் போதித்தலோடு கதை தொடங்குகிறது.
ஒரு கொலை குற்றவாளிக்கு மரணத்தண்டனை நிறைவேறாமல் ஆயுள் தண்டனையாக இழுத்தடிக்கப்படுகிறது. அவனது தந்தையார் பந்துசேனாவும் அவரது துணைவியாரும் சமுத்திரதேவி என்கிற புகையிரதத்தில் ஏறி கொழும்பிலிருந்து 98 மைலில் உள்ள பெலியத்தை நோக்கி பயணிக்கிறார்கள். அவர்களுடன் பலரும் பயணிக்கிறார்கள். அவர்கள் புகையிரதத்திற்காக சந்திப்பில் காத்திருக்கையில்தான் மகனைப் பற்றியும் அவன் அனுபவித்து வரும் தண்டனையைப் பற்றியும் பந்துசேனா சக பயணிகளுடன் பகிர்ந்துகொள்கிறார். கதை 2004 திசம்பர் 26 அன்றையத் தினத்தில் மையம் கொள்கிறது.
திடீரென்று ஓரிடத்தில் புகையிரதம் நிற்கிறது. தொலைத்தொடர்பு , மின்சாரங்கள் முற்றிலும் நிறுத்தப்படுகின்றன. கடல் உள்வாங்கி பிறகு சுனாமியாக புகையிரதத்தைத் தாக்குகிறது. அந்த சுனாமி தாக்குதலில் பந்துசேனாவின் குடும்பத்தார்கள் இறந்துவிடுகிறார்கள்.
பந்துசேனா குடும்பத்தினருடன் சேர்ந்து பயணித்த சக பயணிகள் பேசிக்கொள்கிறார்கள். ‘ மகன் செய்த குற்றத்திற்காக பாவம் ஒன்றுமறியாத பந்து சேனாவின் குடும்பத்தை விதி விட்டு வைக்கவில்லை..’ . இத்துடன் கதை முடிகிறது.
கதையின் படி இங்கு விதி என்பது ‘கடவுளின் விளையாட்டு’ என்றுதான் பொருள் கொள்ள வேண்டும். மகன் செய்த தவறுக்கு பெற்றோரை பலி வாங்குவது சரியா…? என்கிற கேள்வி இங்கு வேறு வழியில்லாமல் எழுகிறது.
தமிழக மக்கள் ஒரு தவறுக்கு எல்லை மீறிய தண்டனையைப் பெற்றுக்கொடுப்பதில் ஆர்வம் காட்டுபவர்கள். ஒரு கலப்பு மணம் திருமணத்திற்காக ஒரு ஊரைக் கொழுத்துவோம். ஒரு பெண் புகையிரதம் சந்திப்பில் கொலை செய்யப்பட்டால் அதற்காக கைது செய்யப்படுபவரை எந்த விசாரணையும் இன்றி மின்சாரத்திற்கு தின்னக் கொடுப்போம். நமது காப்பியமும் இத்தகைய பாடத்தைதானே கற்றுக்கொடுத்திருக்கிறது. கோவலன் பாண்டியன் நெடுஞ்செழியனால் கொலை செய்யப்பட்டான். நம் கண்ணகி என்ன செய்தால் பாண்டியன் நெடுஞ்செழியனைக் கொன்று, அவனது மனைவியைக் கொன்று அதுவும் போதாதென்று மதுரையையும் எரித்தாள் அல்லவா!.
கதையில் விதி மகன் செய்த குற்றத்திற்காக கடல் என்கிற விதி பெற்றோரை பலித்தீர்க்கிறது. கடவுள் இப்படியொரு பிழையைச் செய்வாரா….? என்பது இங்கு பிரதானக் கேள்வி. இக்கேள்விக்கு என் பதில் மற்றக் கடவுள் எப்படியோ தமிழ் கடவுள் இத்தகைய செயலைச் செய்வார் என்பதுதான். ஏனெனில் நம் கடவுள் நம்மால் படைக்கப்பட்டது. நாம் படைத்தக் கடவுள் நம்மை போலதான் இருப்பார்!
பொதுவாக தமிழர்களுக்கென்று (நமக்கு) ஒரு பொதுப்புத்தி இருக்கிறது. நம் பார்வையின் படி முன்னால் முதல்வர்  கலைஞரை நாம் எத்தகைய அறிவு ஜீவியாகப் பார்க்கிறோமோ அப்படியாகத்தான் அவர் பெற்ற மக்கட்களையும் பார்ப்போம். ஜெயலலிதாவிற்கு பிறகு அவரது அண்ணன் மகளை ஜெயலலிதாவாகவே பார்ப்பதைப்போல. சந்தன மரம் கடத்தல் வீரப்பன் இந்திய அரசின் முன் ஒரு குற்றவாளி. என்றால் அதே பார்வையில்தான் அவரது மகளையும் பார்க்கிறோம் இல்லையா! ஆனால் தாய்வேறு பிள்ளை வேறாகத்தான் பார்க்க வேண்டும். தந்தை, தாய் மீது ஒரு புகழாரம் சூட்டப்பட்டால் அது அவரது பேரப்பிள்ளை வரைக்கும் கொண்டு போய் அதை சேர்த்துவிடுவோம். அதையே குற்றமாக சுமத்தப்பட்டால் அவரது முன் பின் மூதாதையர்களும் குற்றவாளிகளே! இது தமிழர்களுக்கு மட்டுமே இருக்கின்ற ஒரு புரியாத பொதுப் புத்தி. தமிழகத்தில் தோன்றும் ஒவ்வொரு கட்சியும் வாரிசு அரசியலைத் தூக்கி நிற்கவும், தொடரவும் இதுதான் காரணம். அப்படியாகத்தான் நாம் அரசியலை வைத்திருக்கிறோம். கடவுளையும் படைத்திருக்கிறோம். நூலைப் போலதானே சேலை. நம்மைப்போலதான் நம் கடவுள்.
மகன் செய்த தவறுக்கு பெற்றோர்களை வதைக்கும் வேலையை எந்தவொரு கடவுளும் செய்யமாட்டார். ஆனால் தமிழர்களுக்கான கடவுள் அதை செய்வார். ஏனெனில் தமிழர்கள் பார்வையில் தந்தை அதிபுத்திசாலி என்றால் குடும்பமே புத்திசாலிதான். மகன் குற்றவாளி என்றால் பெற்றோரும் குற்றவாளியே!
அந்த வகையில் மகன் செய்த குற்றத்திற்கு பெற்றோரை வதைப்பது குற்றமல்ல. விதி என்கிற கதை தமிழ் சிறுகதையில் ஒரு புது விதியை எழுதிச்செல்கிறது. கதை எதையோ சொல்லவந்து யாரையோ எச்சரிக்கிறது. புரிய வேண்டியவர்களுக்கு புரிந்தால் நல்லதுதானே…!
– அண்டனூர் சுரா
Share this Post:
‘விதி’ சிறுகதை விமர்சனம்! Reviewed by on January 23, 2017 .

கனடா எழுத்தாளர் பொன் குலேந்திரனின் ‘விதி’ சிறுகதை வாசித்தேன். ‘ஒரு தீய செயலுக்கு எதிராக ஒன்று நடந்தே தீரும்’ என்கிற ஞானம் போதித்தலோடு கதை தொடங்குகிறது. ஒரு கொலை குற்றவாளிக்கு மரணத்தண்டனை நிறைவேறாமல் ஆயுள் தண்டனையாக இழுத்தடிக்கப்படுகிறது. அவனது தந்தையார் பந்துசேனாவும் அவரது துணைவியாரும் சமுத்திரதேவி என்கிற புகையிரதத்தில் ஏறி கொழும்பிலிருந்து 98 மைலில் உள்ள பெலியத்தை நோக்கி பயணிக்கிறார்கள். அவர்களுடன் பலரும் பயணிக்கிறார்கள். அவர்கள் புகையிரதத்திற்காக சந்திப்பில் காத்திருக்கையில்தான் மகனைப் பற்றியும் அவன் அனுபவித்து வரும்

ABOUT AUTHOR /