இளைஞர்களை ஏமாற்ற முடியாது ஏமாந்தவர்கள்!

 ›  › இளைஞர்களை ஏமாற்ற முடியாது ஏமாந்தவர்கள்!

கட்டுரைகள்

இளைஞர்களை ஏமாற்ற முடியாது ஏமாந்தவர்கள்!

ஓரிரு நாட்களில் போராடி ஓய்ந்து போவார்கள் என்று எதிபார்த்தவர்களுக்கு
எதிராக ஓயாது போராடுபவர்களைப் பார்த்து மிரண்டு போயிருக்கிறார்கள்.
அலங்காநல்லூரில் ஆரம்பித்த ஒரு சிறுதீப்பொரி காட்டுத்தீ போல் சென்னைக்கு
பரவி அங்கே நிலைகொள்ளாமல் தமிழகமெங்கும் சுழன்றுசுழன்று பற்றி
எரியத்தொடங்கியது. எரியும் நெருப்பை எளிதில் மத்திய அரசு நினைத்திருந்தால்
அணைத்திருக்கமுடியும். என்ன நடந்தது? இதுவரை பார்த்த தமிழர்கள்தானே
அப்படி என்ன பெரிதாகக் கிழித்துவிடப் போகிறார்கள் என்ற எகத்தாளத்தில்
சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு நிலுவையில் இருக்கும்போது எங்களால் ஒன்றும்
செய்ய இயலாது என்று கையைவிரித்தார்கள். அதன்பின் போராட்டக்காரர்களுக்கு
கிடைத்த ஆதரவைப் பார்த்ததும் தமிழக அரசு எடுக்கும் முடிவுக்கு துணையாய்
இருந்து ஆதரவு கொடுப்பதாக ஆறுதல் கூறினார்கள். உடனே ஞானோயம் ஏற்பட்ட
தமிழக முதல்வர் கண்டிப்பாய் ஏறுதழுவல் ஒன்றிரண்டு நாட்களில் நடக்கும்
என்று உறுதிகொடுத்தார்.
அரசியல்வாதிகளின் உறுதிமொழி எத்தன்மை வாய்ந்தது என்பதை நன்குணர்ந்த
போராட்டம் நடத்துவோர் அதற்கு சற்றும் செவிசாய்க்காது போராட்டத்தைக்
கைவிடாததால் போராட்டம் தீவிரமடைந்தது. இதற்கிடையில் தமிழகத்தையும்
கடந்து ஏறுதழுவலுக்காக உலகம் முழுவதும் வாழும் தமிழரிடமிருந்து பெருத்த
ஆதரவு கிடைத்தது. இந்தியாவுக்குள்ளேயே இந்த போராட்டத்தை நீர்த்துப்போக
வைத்துவிடலாம் என்றிருந்த அரசியல்வாதிகளுக்கு இந்தியாவையும் தாண்டி
போராட்டக்காரர்களுக்கு கிடைத்த ஆதரவு அவர்களுக்கு கிலியை ஏற்படுத்தியது.
உலகம் முழுவதும் கிடைத்த ஆதரவு பெரிய விளம்பரமாகவும் பீட்டாவையே
தடைசெய்யவேண்டும் என்ற அளவுக்கு பூதாகாரமாக ஆரம்பித்ததும் மத்திய
அரசும் மாநில அரசும் இக்கட்டான சூழ்நிலைக்கு தள்ளப்பட்டன.
அதன்பின் சிறுகுழந்தைக்கு நிலாவைக்காட்டி சோறூட்டுவதுபோல் சுப்ரீம்
கோர்ட்டில் வழக்கு நிலுவையில் இருக்கும்போது ஒன்றும் செய்ய இயலாது என்று
கைவிரித்த மோடிக்கு அவசரச்சட்டம் கொண்டுவந்து மத்தியஅரசு ஒப்புதலுடன்
ஏறுதழுவலை நடத்தலாம் என்று தோன்றியது. ஆனால் அதற்கும் சுலபமாக
வழிவிடாமல் அந்த அவசரச்சட்டம் ஜனாதிபதியின் ஒப்புதலைப்பெற வேண்டும்
என்று சொல்லி ஜனாதிபதி இந்தியாவில் இல்லை என்று இழுத்தடித்தார்கள்.
பின் ஜனாதிபதி ஒப்புதலுடன் ஆளுநர் சென்னைக்கு அவசரச்சட்டத்துடன் ஓடிவந்தார்.
இதை போராட்டம் நடத்துபவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. இதுவும் ஒரு ஏமாற்று
வேலை என்பதை நன்றாகவே உணர்ந்தனர். காவிரி மற்றும் முல்லைப்பெரியாறு
பிரச்சினைகளால் பெற்ற, கற்ற பாடங்கள் இதையும் அழும் குழந்தைக்கு கொடுக்கப்படும்
மிட்டாய் போன்றதே என்று கருதினர். இப்போது அவசரச்சட்டத்தின் மூலம் ஏறுதழுவலை
அனுமதிப்பார்கள். அதன்பின் வேண்டாதவர்கள் யாராவது அவசரச்சட்டத்தின்மீது
தடைவிதிக்குமாறு வழக்கு தொடர்ந்தால் அதைச்சொல்லி திரும்பவும் தடைகொண்டுவந்து
வழக்கு தொடரலாம். அந்த வழக்கு அடுத்த ஆண்டுவரை இழுத்துச் செல்லப்பட்டு
முடிவு தெரியாத பட்சத்தில் அடுத்த ஆண்டும் இதேநிலை தொடரலாம். அதனால்
இந்த அவசரச்சட்டத்தில் எந்தவித நம்பகத்தன்மையும் இல்லை என்று போராட்டம்
செய்பவர்கள் கருதுவதால் ஏறுதழுவலுக்கு நிரந்தர சட்டம் கிடைக்கும்வரை போரட்டத்தை
தொடர்வோம் என்கிறார்கள்.
இது இப்படியிருக்க, இந்த அவசரச்சட்டமே தமிழக சட்டசபையில் தீர்மானம் கொண்டு
வந்ததும் நிரந்தர சட்டமாகிவிடும் என்று சொல்லி அலங்காநல்லூரில் ஏறுதழுவலை
தொடங்கி வைக்கச் சென்றார் முதல்வர் பன்னீர் செல்வம். ஆனால் அலங்காநல்லூர்
மக்கள் நிரந்தரச் சட்டம் என்று ஒன்று வராமல் ஏறுதழுவலை நடத்தவிடமாட்டோம்
என்று முதல்வரை திருப்பி அனுப்பிவிட்டனர்.
இதைத்தொடர்ந்து இன்று ஆறாவது நாளாக மெரினா கடற்கரையில் போராட்டம்
தீவிரமடைந்து வருகிறது. இந்த போராட்டம் உலக அளவில் தமிழர்வாழ் இடங்களிலெல்லாம்
தீவிரமடைந்து வருவதுடன் பீட்டாவுக்கும் தடைவிதிக்க வேண்டும் என்ற கோரிக்கையும்
வலுத்து வருகிறது. மேலும் இப்போராட்டம் திரைபடத் துறையினரையும் அரசியல்வாதிகளையும்
பக்கத்தில் அண்டவேவிடவில்லை. தமிழக இழைஞர்களை சினிமாமோகம் பிடித்தவர்கள்,
நடிகர்களுக்கு கட்அவுட் வைத்து பால்அபிசேகம் செய்பவர்கள், பொறுப்பற்றவர்கள் என்று
விமர்சனம் செய்துவந்தவர்களுக்கு உலகமேமெச்சும் அளவுக்குநடந்து அவர்களுக்கெல்லாம்
தக்க பதிலடிகொடுத்து விட்டார்கள்.
அரசியல்வாதிகளும் திரைப்டத்துறையினரும் சேர்ந்தாலும் கூட்டமுடியாத கூட்டத்தை
மாணவர்களும் இளைஞர்களும் சேர்ந்து கூட்டியிருக்கிறார்கள். இதற்கு பொதுமக்களும்
பெருத்த ஆதரவு கொடுத்துவருகிறார்கள். ஆதலால் அவர்கள் போராட்டம் நிச்சயம்
வெற்றிபெரும் எனநம்புவோம். ஒன்றுமட்டும் உறுதி. இளைஞர்களை ஏமாற்றாலாம் என்று
நினைத்தால் அதெல்லாம் இனி நடக்காது. ஏமாற்ற நினைத்தவர்கள் ஏமாந்து போவார்கள்.
இனியும் தமிழரை ஏமாற்ற முடியாது.
-சங்கர சுப்பிரமணியன்.
Share this Post:
இளைஞர்களை ஏமாற்ற முடியாது ஏமாந்தவர்கள்! Reviewed by on January 22, 2017 .

ஓரிரு நாட்களில் போராடி ஓய்ந்து போவார்கள் என்று எதிபார்த்தவர்களுக்கு எதிராக ஓயாது போராடுபவர்களைப் பார்த்து மிரண்டு போயிருக்கிறார்கள். அலங்காநல்லூரில் ஆரம்பித்த ஒரு சிறுதீப்பொரி காட்டுத்தீ போல் சென்னைக்கு பரவி அங்கே நிலைகொள்ளாமல் தமிழகமெங்கும் சுழன்றுசுழன்று பற்றி எரியத்தொடங்கியது. எரியும் நெருப்பை எளிதில் மத்திய அரசு நினைத்திருந்தால் அணைத்திருக்கமுடியும். என்ன நடந்தது? இதுவரை பார்த்த தமிழர்கள்தானே அப்படி என்ன பெரிதாகக் கிழித்துவிடப் போகிறார்கள் என்ற எகத்தாளத்தில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு நிலுவையில் இருக்கும்போது எங்களால் ஒன்றும் செய்ய இயலாது

ABOUT AUTHOR /