“1958 ” நான் வாசித்த நாவல்,தன்னைத்தானே பழுதாக்கிய நாவலாசிரியர்! ( ஏலையா க.முருகதாசன் )

 ›  ›  › “1958 ” நான் வாசித்த நாவல்,தன்னைத்தானே பழுதாக்கிய நாவலாசிரியர்! ( ஏலையா க.முருகதாசன் )

செய்திகள்+,நூல் அறிமுகம்

“1958 ” நான் வாசித்த நாவல்,தன்னைத்தானே பழுதாக்கிய நாவலாசிரியர்! ( ஏலையா க.முருகதாசன் )

1958 என்ற பெயரில்; இலண்டனில் வாழும் பிரபல எழுத்தாளரும்,ஊடகவியலாளருமான திரு.இரவி அருணாசலம் அவர்கள் ஒரு நாவலை எழுதியிருந்தார். இந்த நாவல் கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பாக ஜேர்மனியில் தமிழ் அரங்கம் சார்பாக அறிமுகம் செய்து வைக்கப்பட்டது.
இலங்கையில் மினுவாங்கொடை என்ற பட்டினத்தில் உள்ள கல்லுலுவ கிராமத்தில் ஆசிரியராகப் பணியாற்றிய அருணாசலம் என்ற ஆசிரியர் கல்லுலுவ கிராமத்தில் சந்தித்த நிகழ்வுகள் சம்பவங்கள் அதனால் அவருக்கு ஏற்பட்ட அனுபவங்களை கதை சொல்லல் மூலம் வெளிக் கொணர்ந்த நாவலாகும்.
நாவலாசிரியர் தனக்குப் பக்கத்தில் ஒருவரை உட்கார வைத்து, தனது அனுபவங்களை உணர்வுபூர்வமாக சொல்வது போல மிகவும் இயல்பாக நாளாந்த வாழ்க்கையில் பயன்படுத்தும் சொற்களைக் கொண்டே இந்நாவலை உண்மைச் சம்பவங்களையும் இழைத்து புனைந்ததன் மூலம் வாசகனை இந்நாவல் கவர்ந்திழுக்கும் ஆற்றல் பெற்றிருக்கின்றது.
ஆசிரியர் அருணாசலத்தின் குடும்பம் மினுவாங்கொடை கல்லுலுவ கிராமத்தில், அங்குள்ள சிங்கள முஸ்லீம் சூழ்நிலைகளோடு ஐக்கியப்பட்டு வாழ்ந்த வாழ்க்கையிலிருந்து இந்நாவல் தனது பயணத்தை ஆரம்பிக்கிறது.
இந்த நாவலை எழுதிய நாவலாசிரியர் தோன்றாத் தோற்றம் கொண்டு அந்தக் குடும்பத்தோடு நாளிலும் பொழுதிலும் ஒன்றாக வாழ்ந்து, அருணாசலத்தின், அவர் மனைவியின், அவர் மகளின் ஒவ்வொரு அசைவையும்;, அந்தக் குடும்பம் நட்புக் கொண்டிருந்த சிங்கள, முஸ்லீம் குடும்பம் தொட்டு பௌத்த விகாரையின் பௌத்தகுரு வரை அவர்கள் கொண்டிருந்த பழக்கங்கள் பேச்சுவார்த்தைகள் போன்றவற்றை அதற்குரிய வியாக்கியானம் விளக்கங்களுடன் கதையை நகர்த்திச் சென்றுள்ளார்.
ஆசிரியர் அருணாசலம் சுயமரியாதை மிகுந்தவர் என்பதை அவர் பௌத்த குருவுடன் மரியாதையுடன் பழகிய போதும்,இனமான உணர்வுடன் தமிழர் பக்கமுள்ள நியாயங்களை பௌத்த குருவிற்கு விளக்க முயற்சித்தமையும்,பௌத்த குருவும் ஆசிரியர் அருணாசலம் சொல்வது நியாயமானது எனத் தெரிந்தும் என்னதான் பௌத்த குருவாக இருந்தாலும் தானும் சிங்களவனே என்பதை,தனது மறுத்துரைக்கும் தன்மையிலிருந்து வெளிப்படுத்தியிருக்கின்றார்.
பௌத்த சித்தாந்த அறத்தன்மைக்கும் சிங்கள இனமான உணர்வுக்குமிடையிலான ஒரு நெருக்குவாரத்தை இந்நாவல் சுட்டி நிற்கின்றது.
இலங்கைத் தீவில் விதைக்கப்பட்டு வளர்ந்து நிற்கின்ற இனத்துவேசத்தைக் கடந்து, மதம், மொழியைக் கடந்து நாங்கள் அனைவரும் மனிதர்களே என்பதை ஆசிரியர் அருணாசலத்துடன் பழகிய சிங்களக் குடும்பமும் முஸ்லீம் குடும்பமும் அன்பு பாராட்ட முயற்சித்துள்ளமையும் குறிப்பாக ஆசிரியர் அருணாசலத்தின் மகள் மீது அவர்கள் வைத்திருந்த பாசத்தையும் நூலாசிரியர் பல இடங்களில் சுவையாக எழுதியிருக்கின்றார்.
இலங்கையில் ஏற்பாடு செய்யப்பட்ட இனக்கலவரங்கள் மீண்டும் மீண்டும் இனங்களுக்கிடையில் ஐக்கிய உணர்வைச் சிதைத்தனவே தவிர அவை ஆய்வுக்குட்படுத்தப்படவில்லை என்பதை 1958 கலவரம் நினைவூட்டுகின்றது. தொடர்ச்சியாக இனங்கலவரங்கள் ஏற்படாது தடுக்க முயற்சிக்காமை அரசிற்கு ஒரு வெட்கக் கேடான செயலாகும்.
ஆசிரியர் அருணாசலத்திற்கு கல்லுலுவக் கிராமத்தில் மதிப்பும் மரியாதையும் இருந்தாலும், ஆசிரியப் பணியைச் செய்து கொண்டே அங்கு அவரால் வாழ முடியாத பதட்டமான சூழ்நிலையை 1958 கலவரம் ஏற்படுத்த, அங்கிருந்து அவர் தனது ஊரான அளவெட்டியை நோக்கி குடும்பத்தோடு வருகிறார். கல்லுலுவக் கிராமத்தை விட்டு அளவெட்டிக்கு வரும்வரைக்கும் உள்ள சம்பவங்களை கோர்வை பிசகாமல் , கதாபாத்திரங்களின் மன உணர்வை அளந்தறிந்து சொல்லியிருப்பது வாசிக்கும் வாசகனையும் அழைத்துச் செல்வதாக இருந்தது.
ஆசிரியர் அருணாசலத்தின் குடும்பம் அளவெட்டிக் கிராமத்திற்கு வந்து சேர்ந்ததும் நாவல் வேறு ஒரு திசையை நோக்கிப் பயணமாகத் தொடங்குகிறது. ஆசிரியப் பணி இனி வேண்டாம் கமம் செய்யப் போகிறேன் என அவர் எடுத்த முடிவு சொந்தங்களை கவலை கொள்ளச் செய்தாலும் ஆசிரியர் அருணாசலத்தின் பிடிவாதத்தால் எல்லோரும் அவரின் முடிவிற்குச் சம்மதிக்கின்றனர்.
கதை சொல்லல் அளவெட்டிக் கிராமம் ,கீரிமலை என பரவிச் செல்கின்றது.கல்லுலுவக் கிராமத்தை விட்டு, அங்கிருந்து பயணமான போது பயணப்பட்ட நெடிய தெருக்கள் காட்டுப் பாதைகள், காவல் நிலையத்தில் பாதுகாப்புத் தேடுதல் என எல்லாச் சம்பவங்களையும் அதன் வாசிப்பின் உள்வாங்களினால் என்னையும் காட்சிகளைப் பார்ப்போனாக ஐக்கியப்படுத்திக் கொண்ட நான், அளவெட்டி கீரிமலை என்று கதை இன்னொரு திசையில் விசாலமாகப் பரவிப் பயணித்த போது நாவலை வாசித்து முடிக்க வேண்டும் என்ற ஆவலை எனக்குள் ஏற்படுத்தியது.
அதற்கு காரணம் உண்டு. அளவெட்டி எனது அயலூர்.கீரிமலை அதைவிடப் பரிச்சயமான இடம். கேணிக் குளிப்பும் கடல் நீந்தலும் லச்சுமி ஆச்சியிடம் கடலை வாங்கிச் சாப்பிட்ட நினைவுகள் இந்நாவலின் வாசிப்போடு  இழையோடிச் சென்றன. அதுமட்டுமல்லாமல் மகாஜனக் கல்லூரிக்கருகில் ஒன்றாக அயலவர்களாக வாழ்ந்து ஒரே கிணற்றில் ஒன்றாகக் குளித்த எனது தோழி கீரிமலை பெண்கள் குளிக்கும்  கேணிக்கருகில் உள்ள ஒரு வீட்:டில்தான்  திருமணம் செய்து போனாள். கீரிமலைக்குப் போகும் சந்தர்ப்பங்களில் அங்கு போய் தேநீர் குடித்து அவளுடனும் அவள் கணவனுடனும் கதைக்காமல் வந்ததே இல்லை அத்துடன் சபாரத்தினக் குருக்களின் மகன்கள் எங்கள் நாடகங்களில் நடித்தமையாலும் அளவெட்டியிலும் கீரிமலையிலும் நாவலுக்கான சம்பவங்கள் நிலை கொண்டிருந்ததால் எனது ஆவல் அதிகமாயிற்று.
கதை வாசிப்பில் ஒன்றித்துப் போன நான் அளவெட்டிக் கிராமத்திலும் கீரிமலையிலும் எனக்குப் பழக்கமான தெருக்கள,; மனிதர்கள் இக்கதையில் இடம்பெற்றிருக்கிறார்களா எனத் தேடத் தொடங்கினேன். பினாக்கைக் குளம், சவாரி நடக்கும் பினாக்கை வெளி, துங்கப் பரியாரியார்,கீரிமலைக் கேணியில் குளிக்கப் போகும் போது சந்திக்கின்ற வாட்சர் சின்னத்துரை, குணம் கவுணாவத்தை வேள்வி,கர்ணன்,மக்கோனா  என எனக்கு நன்கு பரிச்சயமான இடங்கள் நபர்களுடன், கோதம்பமா காம்புச்சத்தகம்,கீலம் கீலமாக, கடகம்,கொட்டப்பெட்டி,,பறையறுது சக்கைப்பணிய என்ற சொற்களும் கதையை 1958க்கும் அதற்கண்மையான பிந்திய வருடங்களில் ஆசிரியர் அருணாசலத்தின் உறவுகளின்  தொடர்பாடல் நிகழ்வுகளை, உரையாடல்களைச் சொல்லிச் சென்றன.
கீரிமலைச் சிவன்கோவிலைச் சுற்றியும் கேணியைச் சுற்றியும் இக்கதை வட்டமடித்த போதுதான். நாவலாசிரியர் தங்களது குடும்பம் ஒரு குடும்பத்தின் மீத கொண்டிருந்த வன்மத்தை, பகையை வெளிக் கொணரவும் இந்நாவலைப் போர்வையாக பயன்படுத்தி தனது மோசமான சுயத்தைக் காட்டிவிட்டார் எனத் தோன்றுகின்றது.
இக்கதையை தோற்றாத் தோற்றமாக எழுதியவரின் மாமனார் அதாவது ஆசிரியர் அருணாசலத்தின் மைத்துனரின் நண்பரை அவரின் சாதிப்பெயரை இருமுறை விழித்து குரோத மனப்பான்மையுடன் எழுதியதன் மூலம் தனது எழுத்துக்குத் தானே களங்கம் கற்பித்துவிட்:டார். நாவலாசிரியரிடம் ஒரு கேள்வியை முன் வைக்கிறேன். இந்த நாவலில் வந்து போகின்ற கதாபாத்திரங்கள் எவரையும் அவர்கள் யார் யார் எனக் குறிப்பிடாத போது சிவன்கோவிலின் சுற்றுப்புறச்சூழலில் வாழ்ந்த அந்த நபரின் சாதியைச் சொல்ல வேண்டிய தேவை என்ன என்பதே.கதையை இரசித்து வாசித்துக் கொண்:டிருந்த எனக்கு இது அருவருப்பாகவே இருந்தது.மோசமான உள்நோக்கம் கொண்ட எழுத்து இது.
நூலாசிரியரின் இந்த நிலையை ஜேர்மனியில் ஒரு அரசியல்வாதிக்கு ஏற்பட்ட நிலையாகவே கருதகிறேன். பல ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சம்பவம் இது.எஸ்பிடி கட்சியின் அரசியல் ஆளுமைமிக்க அரசியல்வாதியாகவும் அதன் தலைவராகவும் இருந்தவர் எல்கோம். அடுத்த அதிபர் அவர்தான் என்றிருந்த வேளை கூட்டமொன்றில் விரும்பத்தகாத சொல்லைச் சொன்னார் என்ற காரணத்தால் கண்டனங்கள் கிளம்ப கட்சியைவிட்டு தானாகவே விலகினார். அதையொட்டி சொன்ராக் பிளாற் என்ற பத்திரிகையில் ஒரு கேலிச்சித்திரம் வெளியிடப்பட்டிருந்தது. அதில் அவர் தனது ஆளுமையால் மலைகளாக நின்ற தடைகளைப்  பாய்ந்து பாய்ந்து கடந்து வந்து கடைசியில் ஒரு சிறிய குறினிக் கல்லில் தடுக்கி விழுவது போல் இடம்பெற்றிருந்தது. நூலாசிரியரும் அந்த நிலையைத்தான் அடைந்திருக்கிறார்.
அந்த நபரின் மனைவியின் கால் ஊனத்தை கொச்சைத்தனமாக வர்ணித்து எழுத்தில் இன்னொருவர் சொல்வது போல சொல்ல வைத்து, அந்த நபரும் மனைவியும் கலவியின் உச்சகட்டத்தை அடைந்த போது மேற்கொள்னப்பட்ட சபதம் என்பதை வாசிக்கும் வாசகனின் கவனத்திற்கு உட்படுத்தி அந்தக் குடும்பத்தை அவமானப்படுத்தி மகிழ்வடைவதில் திருப்தி காண்கிறாரா?
அந்த நபருடனான தமது குடும்பத்தின் பகையை வஞ்சம் தீர்ப்பது போல தனது எழுத்தைப் பயன்படுத்தியதன் மூலம் தன் எழுத்தை தானே மாசு படுத்தியுள்ளார்.
இந்த நாவல் உண்மைச் சம்பவங்ளை அடியொற்றி ஆங்காங்கே கற்பனை என்ற வர்ணம் தீட்டப்பட்ட நாவல்தான்.நாவலாசிரியர் இது கற்பனைக் கதை என்றும் சொல்லலாம் உண்மைக் கதையென்றும சொல்லலாம்;. ஆனால் கதையின் போக்கு உண்மைக் கதையென்பதையே நிலைநிறுத்தி நிற்கின்றது.
ஜேர்மனியில் நடைபெற்ற அறிமுக விழாவில் இந்நூலிற்கான அறிமுகவுரையைச் செய்த இருவரில் ஒருவர்கூட தவறைச் சுட்டிக்காட்டாமல் விட்டது ஏன் என்று தெரியவில்லை. ஒருவேளை முழுமையாக இந்நூலை அவர்களிருவருமே வாசிக்காமல் விட்டிருக்கலாம்,அல்லது நூலாசிரியர் கோபித்துவிடுவாரோ என்றுகூட இருக்கலாம்.
ஒரு நல்ல எழுத்தாளரான நூலாசிரியர் தானாகவே ஒரு குடம்பாலில் ஒரு துளி விசத்தைக் கலந்துவிட்டார்
ஏலையா க.முருகதாசன்.
Share this Post:
“1958 ” நான் வாசித்த நாவல்,தன்னைத்தானே பழுதாக்கிய நாவலாசிரியர்! ( ஏலையா க.முருகதாசன் ) Reviewed by on January 21, 2017 .

1958 என்ற பெயரில்; இலண்டனில் வாழும் பிரபல எழுத்தாளரும்,ஊடகவியலாளருமான திரு.இரவி அருணாசலம் அவர்கள் ஒரு நாவலை எழுதியிருந்தார். இந்த நாவல் கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பாக ஜேர்மனியில் தமிழ் அரங்கம் சார்பாக அறிமுகம் செய்து வைக்கப்பட்டது. இலங்கையில் மினுவாங்கொடை என்ற பட்டினத்தில் உள்ள கல்லுலுவ கிராமத்தில் ஆசிரியராகப் பணியாற்றிய அருணாசலம் என்ற ஆசிரியர் கல்லுலுவ கிராமத்தில் சந்தித்த நிகழ்வுகள் சம்பவங்கள் அதனால் அவருக்கு ஏற்பட்ட அனுபவங்களை கதை சொல்லல் மூலம் வெளிக் கொணர்ந்த நாவலாகும். நாவலாசிரியர் தனக்குப்

ABOUT AUTHOR /