தமிழரின் அடையளங்கள் துடைக்கப்படுகின்றனவா? — } சங்கர சுப்பிரமணியன்.

 ›  ›  › தமிழரின் அடையளங்கள் துடைக்கப்படுகின்றனவா? — } சங்கர சுப்பிரமணியன்.

கட்டுரைகள்,செய்திகள்+

தமிழரின் அடையளங்கள் துடைக்கப்படுகின்றனவா? — } சங்கர சுப்பிரமணியன்.

தமிழரின் அடையாளங்கள் துடைக்கப்படுகின்றனவா? என்று கேட்பதைவிட
திட்டமிட்டு துடைக்கப்படுகின்றனவா? என்று கேட்பதே பொருத்தமாய் அமையும்
என நினக்கின்றேன். இப்படி நினைப்பது ஒருமாயையா அல்லது உண்மையில்
அப்படித்தான் நிகழ்கிறதா? இந்த எண்ணம் ஏற்படதமிழரே துணைபோகிறார்களா?
என்றெல்லாம் என்னையே என்மனம் அடிக்கடி கேட்பதுண்டு.
ஒரு மொழியை வலுவிழக்கச் செய்துவிட்டால் அந்த இனத்தையே வலுவிழக்கச்
செய்து விடலாம். அல்லது ஒரு இனத்தை வலுவிழக்கச் செய்துவிட்டால் அதன்
மொழியை எளிதில் வலுவிழக்கச்செய்துவிடலாம். உதாரணத்துக்கு மராட்டிய
மாநிலத்தின் மொழி மராட்டியம். அதன் தலைநகர் மும்பை. இந்தியாவின்
முதன்மையான வியாபார நகரம். அதிலும் திரைப்பட வர்த்தகத்தின் முக்கியமான
நகரம். எந்தமொழி திரைப்படத்தில்? மராட்டியமொழி திரைப்படத்திலா? இல்லவே
இல்லை. இந்திமொழியின் திரைப்பட வர்த்தகம்தான் அங்கு கோலோச்சுகிறது.
மராட்டியமொழிப் படங்களின் தயாரிப்பும் திரையிடலும் மிகக்குறைவே. அதுவும்
இந்திக்கு அப்புறம்தான். இந்திமொழிபேசும் உத்திரப்பிரதேசத்திலோ அல்லது
சார்கண்டிலே இல்லாத அளவிற்கு இந்திதிரைப்படத்தின் கேந்திரமாக மும்பை
செயல்படுகிறது. இந்தசூழலில் மத்தியஅரசு பணிகளுக்கான மும்பையில் நடைபெற்ற
தேர்வுகளுக்கு மராட்டியர்களைவிட இந்திபேசும் பிறமாநில மக்களான பீஹாரிகள்
அதிக அளவில் கலந்துகொண்டனர். உடனே அதைஎதிர்த்து இந்திபேசும் வடஇந்திய
பீஹரிகளுக்கு இங்கு என்னவேலை என குரலெழுப்பினார்கள் மராட்டியர்கள்.
இதற்கெல்லாம் காரணம் சொந்த மண்ணில் மராட்டியம் வலுவிழந்து இந்தி
வலுபெற்றதுதான்.
இனி தமிழுக்கு வருவோம். 1967ல் திரவிட முன்னேற்ற கழகத்தால் தமிழ்மொழியை
முன்னிறுத்தி காங்கிரஸ்கட்சி தமிழ்நாட்டிலிருந்து விரட்டப்பட்டது. அதன்பின் கடந்த
ஐம்பது வருடங்களாக திரவிடக்கட்சிகள்தான் ஒன்றை விட்டால் மற்றொன்று என
மாறிமாறி ஆட்சியப்பிடித்து வருகிறது. எவ்வளவோ முயன்று இந்தியை கட்டாயமாகத்
திணிக்க முயலும் தேசியக்கட்சிகள் குட்டிக்கரணம் அடித்துப்பார்த்தும் தமிழ்நாட்டில்
ஆட்சியைப்பிடிக்க இயலவில்லை. இது இந்தியைத் திணிக்கமுயலும் தேசியக்
கட்சிகளுக்கும் மதத்தை மூலதனமாகக்கொண்டு இயங்கும் கட்சிகளுக்கும்
ஒருசவாலாகவே அமைய அந்தசவால் கௌரவப் பிரச்சனையாக உருமாறியுள்ளது.
தமிழ்நாட்டினரை சரியாகப் புரிந்துகொள்ளாத சில வெற்றுவேட்டுக்கள் தமிழ்நாட்டினரை
சினிமாக்காரர்கள் பின்செல்கிறார்கள் என்று இழிவாகப்பேசி நையாண்டி செய்கிறார்கள்.
அதை அப்படிச் சொல்லி விடமுடியாது. காரணத்தைப் பார்ப்போம். ஆந்திராவில்
அக்காலத்தில் புரட்சிநடிகர் எம். ஜி. ஆர் அவர்களைப்போல் புகழ் பெற்றிருந்தவர்
என். டி. ஆர் அவர்கள். இன்னும் சொல்லப்போனால் எம். ஜி. ஆரைவிட கூடுதல் சிறப்பை
பெற்றவர் என்று கூடச்சொல்லலாம். ஏனெனில் இராமர் வேடங்களில் அதிகமாக
நடித்து புகழ்பெற்றதால் இராமராகவே தெலுங்கு மக்களால் போற்றப்பட்டவர். அப்படி
இருந்தும் புகழ்பெற்ற நடிகர் என்றபெயரோ அல்லது இராமாரகவே பார்க்கப்பட்ட
தன்மையோ அவரால் தொடங்கப்பட்ட தெலுங்குதேசக் கட்சியால் ஆந்திரமாநிலத்தை
தமிழ்நாட்டைப் போல் ஆட்சிசெய்ய இயலவில்லை. இந்தகோணத்தில் ஆராய்ந்தால்
தமிழ்நாட்டை ஆள திரைப்படத்துறையினருக்கு அதற்கும் மேலும் வேறுதகுதிகள்
இருந்திருக்கின்றன என்பதை பள்ளிக்கூடம் பக்கம்போகாத ஒருபாமரனும் கூட
அறிந்திருக்கையில் புத்திசாலிகளுக்கு மட்டும் புரியாமல் போனதேனோ?
இப்போது புத்திசாலிகளின் கூற்றுப்படி சினிமாக்காரர்கள் ஆட்சி புரட்சித்தலைவி
செல்வி ஜெ. ஜெயலலிதாவின் மறைவிற்குப்பின் முடிந்துபோய் விட்டது. இனி தமிழ்
மொழியையும் தமிழ்நாட்டையும் யார் எப்படி காக்கப்போகிறார்கள் என்று பார்ப்போம்.
புரட்சிதலைவியின் கடந்தகால கோட்பாடு எப்படியிருப்பினும் இலங்கத்தமிழருக்கு
தமிழீழம் தான் சரியானதீர்வு என்றுகூறி சட்டசபையில் மத்தியஅரசே அதிர்ச்சி அடையும்
வண்ணம் தீர்மானம் நிறைவேற்றியவர். மீனவர் பிரச்சினைக்கும் காவிரிப் பிரச்சினைக்கும்
இறக்கும்வரை மத்தியஅரசை எதிர்த்துக் குரல்கொடுத்தவர்.
இவர் மறைவுக்குப்பின் தமிழ் நாட்டு சூழலில் ஒருமாற்றம் தெரிகிறது. இந்தவெற்றிடதைப்
பயன்படுத்தி திரவிட முன்னேற்றக் கழகத்திற்கும் தமிழ்மொழிமேல் கொண்டபற்று
தளர்ந்திருக்கும் வேலையில் தமிழர் அடையாளத்தை கொஞ்சம் கொஞ்சமாக இழந்து
விடுவார்களோ என்ற ஐயப்பாடு நிலவுகிறது. திராவிட முன்னேற்றக் கழகத்தை நான் குறை
சொல்லவில்லை. தமிழ்நாட்டிலுள்ள டால்மியாபுரத்தை கல்லக்குடி என்று பெயர்மாற்றம்
செய்ய தண்டவாளத்தில் தலைவைத்துப் படுத்தவர்களும் சென்னைவானொலி என்ற சொல்ல
மறந்தோ அல்ல வேண்டுமென்றோ ஆகாஷவாணி என்று வானொலியினர் அறிவிப்பு
செய்ததும் கொதித்தெழுந்தவர்கள் இன்று அதைவிட பன்மடங்கு நடந்தேறிக்கொன்டு
இருக்கும்போது அதேஅளவு மொழியுணர்ச்சியை காணமுடியவில்லையே என்ற ஆதங்கமே
அன்றி வேறொன்றுமில்லை.
அடுத்தாக மத்தியஅரசு ஏறுதழுவதற்கு கொண்டுவந்திருக்கும் தடை. இந்த ஏறுதழுவுதலை
தமிழரில் சிலர் தினமும் ஒருகிலோ இறைச்சியை சாப்பிட்டுக்கொண்டே பிராணிவதை என்று
பேசித்திரிகிறார்கள். இது தமிழரின் பாரம்பரிய வீரவிளையாட்டு. எங்கோ ஓரிரு இடங்களில்
நடக்கும் அத்துமீறல்களையோ அல்ல ஒன்றிரண்டு புகைப்பட ஆதாரங்களையோ வைத்துக்
கொண்டு அரைவேக்காட்டுத்தனமாக நமது முன்னோர்கள் விட்டுச்சென்ற வழக்கங்களைக்
கொச்சைப்படுத்துவது நமது அடையாளத்தை தொலைக்க வழிசெய்வதே. ஏறுதழுவலில்
மாடுகள் துன்புறுத்தப்படுவதில்லை. மாறாக உற்சாகப்படுத்தப் படுகின்றன. இதுவரை
இவ்விளையாடில் மாடுகள் இறந்ததாக வரலாறு இல்லை. ஏறிதழுவும் வீரர்கள் பெருத்த
காயம் அடைதிருக்கிறார்கள். ஏன் மரணம்கூட அடைந்திருக்கின்றனர். வீரவிளயாட்டில்
இதெல்லாம் வாடிக்கையே.
சொல்பவன் சொன்னால் கேட்பவனுக்கு புத்தி எங்கே போயிற்று என்பதைப்போல் பீடா
என்ற அமைப்பு சொல்லிவிட்டதால் மத்தியஅரசு அதைத்தடை செய்ய வேண்டுமா? மாறக
அந்த பீடா அமைப்பிடம் உலகெங்கும் நடைபெறும் சர்க்கஸ் கம்பெனிகளைத் தடைசெய்ய
சொல்லவேண்டியதுதானே? அதுவல்ல காரணம், தமிழர்களைப்பற்றி அவர்களுக்கு எந்த
ஒரு அக்கறையும் இல்லை. தமிழர்மேல் உண்மையிலேயே அக்கறை இருந்தால் தடை
செய்யப்பட்ட கொத்துக்குண்டுகளை தமிழர்மீது வீசி இலச்சக்கணக்கானவர்களை பக்கத்து
நாட்டில் அழிக்கும்போது ஒரு மனிதாபிமான அடிப்படையில்கூட தட்டிக்கேட்காமல் கைகட்டி
பார்த்திருந்து விட்டு இப்போது மனிதர்கள் மேல்வராத இரக்கம் திடீரென்று மாட்டின் மீது
வந்ததாகக் காட்டி முதலைகண்ணீர் வடிக்க மாட்டார்கள்.
சர்க்கஸ் கம்பெனிகளில் மிருகங்களைப் பழக்கும்போது அதனுடன் கொஞ்சிக்கொண்டா
பழக்குகிறார்கள். அதை அடித்து துன்புறுத்தியே பழக்குகிறார்கள். அதைத்தடை செய்ய துப்பு
இல்லாத பீடா என்ற அமைப்பின் இந்தியக்கிளை யாருடைய தூண்டுதலாலோ பிராணிவதை
என்ற ஆயுதத்தை தமிழர்களுக்கு எதிராக திருப்பியுள்ளது. இதெல்லாம் தமிழர்களின்
அடையாளத்தை துடைத்து கொஞ்சம்கொஞ்சமாக அழிபதற்குண்டான முயற்சியே.
அடுத்ததாக மல்யுத்தம் செய்யும் வீரர்கள் ஒருவரையொருவர் கட்டிப்புரண்டு உருளும்போது
அவர்களுக்கு பஞ்சுமெத்தையில் புரள்வது போலவா இருக்கும். அப்படித்தான் இருக்குமென்று
இந்த பீடா அமைப்பு நிகைக்கிறதோ என்னவோ? குத்துச்சண்டையில் ஒருவருடன் ஒருவர்
மோதும்போது வாய், மூக்கு போன்ற இடங்களில் குத்து விழுந்து இரத்தம் பீறிட்டு கொட்டுவதால்
அதைத்தடை செய்யச்சொல்லலாம் அல்லவா? அதைச் செய்ய துப்புகிடையாது. காரணம் அது
ஒருஇனத்தின் விளயாட்டு அல்ல. மல்யுத்தமும் குத்துச்சண்டையும் தமிழரின் பாரம்பரிய
விளையாட்டாக மட்டும் இருந்திருக்குமேயானால் அதற்கு யாரோ எதையோ சொன்னார்கள்
என்பதற்காக தடைகொண்டு வந்திருப்பார்கள்.
ஒரு நாடும் இன்னொரு நாடும் கிரிக்கெட் போட்டியில் கலந்து கொள்ளும்போது இருநாட்டின்
சார்பாகவும் இருபத்தியிரண்டு கிரிக்கெட் வீரர்களே கலந்துகொள்கிறார்கள். ஆனால் ஒரு
நாட்டுக்கும் இன்னொரு நாட்டுக்கும் போர்வந்தால் கடற்படை, விமானப்படை மற்றும் தரைப்
படை என எல்லாப்படைகளும் மோதுவதால் எத்தன ஆயிரம்பேர் உயிரிழக்கிறார்கள். எத்தனை
ஆயிரம்பேர் உடல் உறுப்புக்களை இழந்து வருந்துகிறார்கள். இதெல்லாம் பீடாவுக்கு தெரியாதா?
பீடாவுக்கு ஒரு யோசணை. மிருகங்களுக்கே துன்பமடைவதாக எண்ணி துடிப்பவர்கள் போரினால்
மனிதஉயிர் மடிவதையும் உடலுறுப்புக்களை இழந்து மனிதர்கள் துன்புறுவதையும் நிறுத்த
முடியாவிட்டாலும் குறைக்கலாம் அல்லவா? மாட்டிற்காக மனங்கலங்குபவர்கள் மனிதர்களுக்காக
போரிடும் நாடுகளை தத்தம் நாடுகளிலிலிருந்து கடல்படை, விமானப்படை, மற்றும் தரைப்படையில்
இருந்து முறையே பத்து வீரர்களைத் தேர்ந்தெடுத்து அவர்களை மோதவிட்டு அதன்மூலம் வெற்றி
பெறும் நாட்டை தீர்மாணிக்கலாம் அல்லவா? இந்த மாதிரியெல்லாம் இவர்களுக்கு எண்ணத்
தோன்றாது.  இறைச்சிக்காக மாடுகளைக் கொல்லும்போது அவைகள் வதைக்கப் படுவதில்லையா?
உலகம் முழுவதும் இறைச்சிக்காக பிராணிகள் கொல்லப்படுவதை தடுத்து ஏன் குரல் கொடுப்பதில்லை?
ஒருவேளை இறைச்சியை தமிழர் மட்டும் சாப்பிட்டால் அதற்கும் பிராணிவதை என்று தடைசெய்ய
முன்வருவார்கள்.
தமிழரின் நதிநீர் உரிமை பறிக்கப்பட்டு தமிழனோடு தொன்றுதொட்டு வந்த வேளாண்மை அழிக்கப்பட்டு
விட்டது. நைல்நதி பலநாடுகளின் வழியாகப் பாய்ந்தோடினாலும் நாடுகளுக்கிடையே நீர்ப்பங்கீட்டில்
தகராறோ குழப்பமோ இல்லை. ஆனால் ஒரே நாடான இந்தியாவில் காவிரி நீரைப்பகிர்வதில்
மாநிலங்களுகிடையில் தமிழனின் உரிமை பறிக்கப்படுகிறது. இப்போது தமிழரின் பாரம்பரிய
விளையாட்டான ஏறுதழுவலையும் துடைத்து அழிக்கப்பார்க்கிறார்கள். அடுத்தது தமிழரின் உடையில்
கைவைப்பார்கள். இப்போதே நமது தமிழரே தமிழர்உடை அணிகிறோம் என்று வேட்டியையும்
குர்தாவையும் அணிந்து ஊரை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள். தமிழர் உடை என்றால் பருத்தியில்
காமராஜர் அணிந்திருந்தாரே அதுதான் உண்மையில் தமிழர் உடை. அதைவிட்டு ஆறுஅங்குல
சரிகைக்கரையுடன் பட்டுவேட்டியும் வடஇந்திய குர்தாவையும் அணிந்துகொண்டு தமிழர் பாரம்பரிய
உடை என்று நம் அடையாளத்தை இழந்து கொண்டிருக்கிறோம்.
ஏறுதழுவலுக்கு எதிரான தடை நீக்கப்பட்டு திரும்பவும் தமிழரின் பாரம்பரிய விளயாட்டின் உரிமையை
பெறவேண்டும். தமிழரின் நதிநீர் உரிமையைப் போராடி பெறவேண்டும். தமிழ்மொழியின் மேல்
பிறமொழியை ஆதிக்கம் செலுத்தவைத்து நம்மொழியின் பெருமையை இழந்துவிடக்கூடாது. தமிழர்
பாரம்பரிய உடை என்று  எதையெதையோ எல்லாம் உடுத்தி அதன் பெருமையையும் அழித்துவிடக்கூடாது.
தமிழரின் பாட்டன் திருவள்ளுவனை முன்னிறுத்தி தைத்திருநாளை தமிழர் புத்தாண்டாகக் கொண்டாட
வேண்டும். இவற்றிலெல்லாம் கவனம் செலுத்தாமல் வெறுமனே தமிழ் தமிழ் என்று மட்டுமே கதைத்துக்
கொண்டிருந்தால் நிச்சயம் தமிழரின் அடையாளங்கள் துடைத்து அழிக்கப்பட்டுவிடும். ஆனால் அதற்கு
தமிழர் இடங்கொடுக்கமட்டார்கள் என நம்புவோம். அதை இன்று உலகம் முழுவதும் ஏறுதழுவலுக்காக
தமிழர் குரலெழுப்பி போராட்டம் நடத்துவதிலிருந்து அறியலாம்.
“பொங்கு தமிழருக்கு இன்னல் விளைத்தால் சங்காரம் நிசமென்று சங்கே முழங்கு” என்ற பாரதிதாசனின் வரிகள்
பொய்த்திடாது என்பதை இன்று ஏறுதழுவலுக்கு தடைவிதித்திருப்பதை எதிர்த்து உலகம் தழுவிய தமிழரின்
போராட்டம் பறைசாற்றுகிறது.
-சங்கர சுப்பிரமணியன்.
Share this Post:
தமிழரின் அடையளங்கள் துடைக்கப்படுகின்றனவா? — } சங்கர சுப்பிரமணியன். Reviewed by on January 19, 2017 .

தமிழரின் அடையாளங்கள் துடைக்கப்படுகின்றனவா? என்று கேட்பதைவிட திட்டமிட்டு துடைக்கப்படுகின்றனவா? என்று கேட்பதே பொருத்தமாய் அமையும் என நினக்கின்றேன். இப்படி நினைப்பது ஒருமாயையா அல்லது உண்மையில் அப்படித்தான் நிகழ்கிறதா? இந்த எண்ணம் ஏற்படதமிழரே துணைபோகிறார்களா? என்றெல்லாம் என்னையே என்மனம் அடிக்கடி கேட்பதுண்டு. ஒரு மொழியை வலுவிழக்கச் செய்துவிட்டால் அந்த இனத்தையே வலுவிழக்கச் செய்து விடலாம். அல்லது ஒரு இனத்தை வலுவிழக்கச் செய்துவிட்டால் அதன் மொழியை எளிதில் வலுவிழக்கச்செய்துவிடலாம். உதாரணத்துக்கு மராட்டிய மாநிலத்தின் மொழி மராட்டியம். அதன் தலைநகர் மும்பை.

ABOUT AUTHOR /