ஜல்லிக்கட்டு: சாதி ஒழிப்பு கும்பலின் இரட்டை வேடம்!

 ›  ›  › ஜல்லிக்கட்டு: சாதி ஒழிப்பு கும்பலின் இரட்டை வேடம்!

இந்தியா,செய்திகள்+

ஜல்லிக்கட்டு: சாதி ஒழிப்பு கும்பலின் இரட்டை வேடம்!

திராவிடர் அரசியல், சாதி ஒழிப்பு அரசியல், தீவிர இடதுசாரி அரசியல் ஆகியவற்றை முன்னெடுத்த அமைப்புகள் ஜல்லிக்கட்டை தீவிரமாக எதிர்க்கின்றன. அந்த அமைப்புகளில் சில இப்போது மாற்றிப்பேசி ஜல்லிக்கட்டு ஆதரவு போலி வேடம் போடுகின்றன.

நிலப்பிரபுத்துவ கால விளையாட்டு என்றும், சாதி ஆதிக்க விளையாட்டு என்றும் தீவிரமாக எதிர்ப்பு தெரிவித்தோர் சிலர் இப்போது ஜல்லிக்கட்டுக்கு ஆதவாக இருப்பது போல காட்டிக்கொள்கின்றனர்.

மகஇகவின் இரட்டை வேடம்

“ஜல்லிக்கட்டு : தமிழர் பாரம்பரியமா ? ஆதிக்கசாதி அடையாளமா ?” என்று கடுமையாக எதிர்த்து பிரச்சாரம் செய்தது மகஇக அமைப்பு. அதன் பல வேடங்களான புதியகலாச்சாரம், மக்கள் அதிகாரம், வினவு என்கிற பெயர்களில் எதிர்ப்பை கிளப்பியது.

“ஓட்டுக் கட்சிகளும் ஊடகங்களும் ஊதிப்பெருக்குவது போல, ஜல்லிக்கட்டு என்பது ஒட்டுமொத்த தமிழர்களின் அடையாளமல்ல. தென்மாவட்ட ஆதிக்க சாதியினரின் சாதித் திமிரைப் பறைசாற்றும் ஓர் ஆதிக்கப் பண்பாட்டுச் சின்னம்தான்” என்றும், “கலாச்சாரம், பாரம்பரியம் என்ற பெயரில் இடைநிலை ஆதிக்க சாதிகளின் சாதி ஆணவத்தைப் பாதுகாக்கும் ஜல்லிக்கட்டை ஆதரிப்பது.. உழைக்கும் மக்களுக்கு ஆபத்து” – என்றும் கூறியது மகஇக.

இப்போது அதே அமைப்பினர் – டெல்லிக்கு எதிராக மல்லுக்கட்டு என்று பாடல் வெளியிட்டும், மக்கள் அதிகாரம் என்கிற பெயரில் மஞ்சுவிரட்டு நடத்த முயற்சித்தும் – இரட்டை வேட நாடகத்தை நடத்திக்கொண்டிருக்கிறார்கள்.

தி இந்துவின் இரட்டை வேடம்

ஒரு நிலபிரபுத்துவ அடையாளம் என்று சொல்லி தி இந்து நாளிதழ் ஜல்லிக்கட்டை மிகக் கடுமையாக எதிர்த்து வந்தது. ஜல்லிக்கட்டை தடை செய்தது சரிதான் என்று வாதிட்டு மிகக் கடுமையான தலையங்கங்களை எழுதியது தி இந்து நாளிதழ். A political misadventure (13.01.2016) Saying no to jallikattu, again (19.11.2016) – என்று தலையங்கம் எழுதியது தி இந்து.

ஆனால் இப்போது அதே இந்துவின் தி இந்து தமிழ் நாளிதழ் – “ஜல்லிக்கட்டு தடையை நீக்க மத்திய அரசை நெருக்குங்கள்!”  (13.01.2017) என்று தலையங்கம் எழுதியுள்ளது.

ஜல்லிக்கட்டை எதிர்க்கும் தலித், திராவிட, முற்போக்கு அமைப்புகள்

இவ்வாறு சில அமைப்புகள் நேரத்துக்கு ஏற்ப ஜல்லிக்கட்டு ஆதரவு நிலைப்பாட்டை எடுத்தாலும் – பல தலித், திராவிட, முற்போக்கு அமைப்புகள் இப்போதும் ஜல்லிக்கட்டை தீவிரமாக எதிர்க்கின்றனர். ஜல்லிக்கட்டு ஒரு ஆதிக்க சாதி அடையாளம் என்பதே அவர்கள் வாதம் ஆகும்.

தலித் முரசு இதழ் மிக நீண்டகாலமாக ஜல்லிக்கட்டை எதிர்த்து வந்தது. சாதி ஒழிப்பு இணையமான கீற்று இப்போதும் மிகக் கடுமையாக ஜல்லிக்கட்டை எதிர்க்கிறது. “பகுத்தறிவுக்கு ஒவ்வாத ஒரு செயல்தான் ஜல்லிக்கட்டு” என்று இப்போதும் எழுதிவருகிறார் கீற்று நந்தன் (ஜல்லிக்கட்டு மீதான பண்பாட்டு மயக்கமும், நாட்டு மாடுகள் மீதான திடீர் அக்கறையும் 02.01.2017).

அவ்வாறே, கொளத்தூர் தா. செ. மணி தலைமையிலான திராவிடர் விடுதலைக் கழகம் “ஜல்லிக்கட்டுக்காக கொதித்தெழும் அப்பாவி இளைஞர்கள்” என்கிற தலைப்பில் ஜல்லிக்கட்டை கடுமையாக எதிர்த்துள்ளது.

ஆக மொத்தத்தில் – திராவிடர் அரசியல், சாதி ஒழிப்பு அரசியல், தீவிர இடதுசாரி அரசியல் –  அமைப்புகள் ஜல்லிக்கட்டை தீவிரிமாக எதிர்க்கின்றன.

சுற்றுச்சூழலை காப்பாற்றும் ஜல்லிக்கட்டு

மொழி, பண்பாடு, சுற்றுச்சூழல் இந்த மூன்றுவிதமான பன்மயங்களுக்கும் நெருக்கமான தொடர்பு இருக்கிறது. ஒரு இடத்தில் நிலவும் இயற்கைச் சூழலும் அந்த இடத்தில் வாழும் மக்களின் பண்பாடும் ஒன்றோடு ஒன்று இணைந்திருக்கிறது. இயற்கை பண்பாட்டின் ஆதாரமாக இருக்கிறது. பண்பாடு இயற்கையை காக்கும் மனித அறிவின் ஓர் அங்கமாக இருக்கிறது.

ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு, ரேக்ளா பந்தயம் போன்ற காளை மாட்டு விளையாட்டு நிகழ்ச்சிகள் பல பாரம்பரிய மாட்டு இனங்கள் வளர்க்கப்படுவதற்கு காரணமாக உள்ளன. ஜல்லிக்கட்டில் கிராமங்கள் சார்பில் நிறுத்தப்படும் காளைகள் அதிகம். இந்த காளைகள் ஜல்லிக்கட்டுக்கு மட்டுமல்லாமல் அந்த கிராமங்களில் உள்ள மாடுகளின் இனப்பெருக்கத்துக்கு முக்கிய காரணமாக இருக்கின்றன. ஜல்லிக்கட்டு காளைகள் அழிக்கப்பட்டால் தமிழகத்தில் மாட்டு இனமே அழியும் ஆபத்து ஏற்படும்.

ஜல்லிக்கட்டில் காங்கேயம் காளைகள் புலிக்குளம் காளைகள் பிரதானமாக உள்ளன. கூடவே மலைமாடு, கும்பகோணம், உம்பலாச்சேரி ஆகிய உள்ளூர் மாட்டு இனங்கள் பயன்படுத்தப்படுகின்றன. ஜல்லிக்கட்டு இல்லா விட்டால், இந்த மாடுகளை வளர்ப்பதற்கான தேவை இல்லாமல் போய்விடும். இவற்றை வளர்ப்பதற்கான உள்ளூர் மக்களின் பிரத்தியோகமான அறிவும் அழிந்து போகும்.

எனவே, உயிரிப்பன்மயத்தையும் சுற்றுச்சூழலையும் காப்பாற்ற, ஜல்லிக்கட்டை காப்பாற்ற வேண்டும்.

நாம் ஜல்லிக்கட்டை தீவிரமாக ஆதரிக்கிறோம்

நாம் ஜல்லிக்கட்டை ஆதரிக்கிறோம். அதன் எல்லா நிலைகளிலும் ஆதரிக்கிறோம். ஒரு மதம் சார்ந்ததாகவோ, ஒரு இனம் சார்ந்ததாகவோ, ஒரு சாதி சார்ந்ததாகவோ – எந்த அடிப்படையில் பார்த்தாலும் ஜல்லிக்கட்டு ஆதரிக்கப்பட வேண்டியதே.

சாதி கடந்தோ, மதத்தைக் கடந்தோ – எதற்காக ஜல்லிக்கட்டை பார்க்க வேண்டும்? சாதியையோ, மதத்தையோ அடிப்படையாக வைத்து ஜல்லிக்கட்டை நடத்தினால் என்ன தவறு? முத்தரையர், மறவர், கள்ளர் போன்ற சாதியினர் இதனை தங்களது விழா என்று கொண்டாடினால், அதில் என்ன குற்றம் இருக்கிறது?

தமிழ்நாட்டின் 300 விதமான சாதிகளுக்கும் சம வாய்ப்பு அளித்து எந்த விழாவையும் நடத்த முடியாது. எனவே, சாதி கடந்து, அனைத்து தமிழர்களுக்குமான விழா என்று எதுவும் இருக்க முடியாது! (எல்லோருக்கும் பொதுவான பொங்கல் பண்டிகையைக் கூட, ஒவ்வொரு சாதியிலும் ஒவ்வொரு வகையறாவிலும் ஒவ்வொரு விதமாகத்தான் கொண்டாடுகிறார்கள்.)

திருவிழாக்கள், விளையாட்டுகள், வேளாண்மை, வியாபாரம், தொழில் என எல்லாவற்றிலும் சாதி ஏற்றத்தாழ்வுகள் நீடிக்கவே செய்கின்றன. அதற்காக ‘திருவிழாக்கள், விளையாட்டுகள், வேளாண்மை, வியாபாரம், தொழில்’ என எல்லாவற்றையும் இல்லாமல் செய்துவிட முடியாது. (தீண்டாமை, சாதி அடிமைத்தனம், மனித உரிமை மீறல்கள் எந்த இடத்தில் இருந்தாலும் – அவை களையப்பட வேண்டும்)

ஜல்லிக்கட்டு போன்ற கலாச்சார நிகழ்வுகள் ஒரு இனத்துக்காக, ஒரு சாதிக்காக, ஒரு வம்சத்துகாக, ஒரு குடும்பத்துக்காக என எந்த அளவில் நடந்தாலும் – அதனை அந்த இனத்தின், சாதியின், வம்சத்தின், குடும்பத்தின் உரிமையாக கருதி அதனை பாதுகாக்கவே வேண்டும்.

சாதிகள், இனங்கள், மதங்கள், மொழிகள், நம்பிக்கைகள் என பன்முக அடையாளங்களை அங்கீகரித்துதான் மனித சமூகம் நீடித்திருக்க முடியும். இந்த அடையாளங்களை தொலைத்துவிட்டு, மானுட சமூகம் நீடித்திருக்க வாய்ப்பே இல்லை.

“அருள்”

Share this Post:
ஜல்லிக்கட்டு: சாதி ஒழிப்பு கும்பலின் இரட்டை வேடம்! Reviewed by on January 19, 2017 .

திராவிடர் அரசியல், சாதி ஒழிப்பு அரசியல், தீவிர இடதுசாரி அரசியல் ஆகியவற்றை முன்னெடுத்த அமைப்புகள் ஜல்லிக்கட்டை தீவிரமாக எதிர்க்கின்றன. அந்த அமைப்புகளில் சில இப்போது மாற்றிப்பேசி ஜல்லிக்கட்டு ஆதரவு போலி வேடம் போடுகின்றன. நிலப்பிரபுத்துவ கால விளையாட்டு என்றும், சாதி ஆதிக்க விளையாட்டு என்றும் தீவிரமாக எதிர்ப்பு தெரிவித்தோர் சிலர் இப்போது ஜல்லிக்கட்டுக்கு ஆதவாக இருப்பது போல காட்டிக்கொள்கின்றனர். மகஇகவின் இரட்டை வேடம் “ஜல்லிக்கட்டு : தமிழர் பாரம்பரியமா ? ஆதிக்கசாதி அடையாளமா ?” என்று கடுமையாக

ABOUT AUTHOR /