தர்மத்தைக் கடைப்பிடிப்பது தப்பா? — சிறுகதை—}சங்கர சுப்பிரமணியன்.

 ›  › தர்மத்தைக் கடைப்பிடிப்பது தப்பா? — சிறுகதை—}சங்கர சுப்பிரமணியன்.

கதைகள்

தர்மத்தைக் கடைப்பிடிப்பது தப்பா? — சிறுகதை—}சங்கர சுப்பிரமணியன்.

அக்கம் பக்கத்து ஊர்களிலெல்லாம் பெருமையாகப் பேசப்பட்ட பூங்கொடி கிராமத்துக்கு
இப்படி ஒரு அவப்பெயர் வருமென்று யாரும் கனவில்கூட நினைத்தது கிடையாது. நீதி
நெறி தவறாமலும் தெய்வபக்தி மிகுந்தும் வாழும் அக்கிராமமக்களுக்கு நிகர் அக்கிராம
மக்களே என்று பெயரெடுத்தவர்கள். அப்படிப்பட்ட கிராமத்தில் வாழ்ந்த ஒரு குடும்பம்தான்
முத்தரசனினின் குடும்பம். மனைவி பர்வதம் மகள் கலையரசி மகன் திருவேங்கடம் என்று
அளவான குடும்பம். பெரியவசதி வாய்ப்பென்று ஒன்றுமில்லாவிட்டாலும் அன்றாடம்
செய்யும் கூலிவேலையில் கிடைக்கும் ஊதியத்தை வைத்து கௌரவமாக நாலுபேர்
மெச்குசும் அளவுக்கு வாழ்ந்தான் முத்தரசன்.
ஊர்க்கோடியில் நின்ற அந்தபெரிய அடர்ந்துபரந்திருந்த வேப்பமரம் சூரிய ஒளியை ஒரு
ஒற்றைரூபாய் நாணய அளவுக்குகூட தரையில் விழவிடாது நிழல் பரப்பியிருந்தது. இப்படி
ஒருஇடம் இயற்கையாய் அமைந்துவிட்டால் நிச்சயம் ஒரு அம்மன்கோவில் அங்கிருக்கும்.
அம்மன் கோவில் இல்லவிட்டால் என்ன? அம்மனுக்கும் மேலாக அவ்வூரைக் காத்துவரும்
நாட்டமை நரசிம்மமூர்த்தி அங்கு கட்டப்பட்டிருந்த திண்டில் கம்பீரமாக அமர்ந்திருக்கிறார்.
கல்லுக்குள் ஈரம் என்பதுபோல் முறுக்குமீசை சிவந்தகண் பெருத்தஉருவம் என்றிருந்தாலும்
நெற்றிநிறைய விபூதியும் நெற்றியின் மத்தியில் விபூதிப்பூச்சுக்குமேல் சந்தணப்பொட்டும்
அதன்மேல் குங்குமமென வீற்றிருந்தார். குரலோ மென்மையிலும் மென்மையாக கேட்போர்
கவரும்படி இனிமையாகவும் அதேசமயம் கண்டிப்பும் கலந்திருந்தது.
நாட்டமை முன்பாக கிராமமக்களில் பாதிக்கும்மேல் அவர்சொல்லும் நியாயத்தைக் கேட்க
அம்மரநிழலில் கூடியிருந்தனர். அங்கு ஓர் இறுக்கமான சூழ்நிலை நிலவியிருந்தது. காரணம்
ஒருதாயும் மகளும் ஒருவன்மேல் சாட்டியிருக்கும் குற்றம்தான். குற்றம் சாட்டுபவர்களோ
முத்தரசனின் மனைவியும் மகளும். இதில் வேடிக்கை என்னவென்றால் குற்றம் சாட்டப்
பட்டிருப்பவன் முத்தரசனின் மகன். கொடுமையிலும் கொடுமையாக முத்தரசன் இறந்து பத்து
நாட்களில் தாயாலும் தங்கையாலும் குற்றம் சாட்டப்பட்டு நிற்கிறான் திருவேங்கடம்.
இத்தனைக்கும் அவன் கடவுள்பக்தி மிகுந்தவன். அதிலும் இந்துமத தர்மப்படி வாழ்பவன்.
அப்படிப்பட்டவனின் மேல் பெற்றதாயும் உடன்பிறந்த தங்கையும் குற்றம்சாட்டி பஞ்சாயத்துக்கு
அழைத்திருப்பதுதான் அக்கிரம்மக்களுக்கே வினோதமாக இருந்தது.
பக்கத்திலிருந்த செம்பிலிருந்த தண்ணீரை மடக்மடக்கென்று குடித்த நாட்டாமை மேல்துண்டால்
வாயைத்துடைத்தபடியே,
“என்னம்மா, பர்வதம், நல்லமனுசன் முத்தரசன். அவன்போய் பத்து நாள்தான் ஆவுது. அதுக்குள்ள
பெத்தமவன்மேல குற்றம்சொல்லி நியாயம் கேட்க வந்திருக்க. ஒம்பொண்ணும் நீயும்
திருவேங்கடம் மேல சாட்டும் குற்றத்த சொல்லுங்கள்” என்று கேட்டார் நாட்டாமை.
“உங்களுக்கு தெரியாதது ஒன்னுமில்லங்க. அவரு செத்து பத்து நாளுதான் ஆவுது அதுக்குள்ள
வீட்டைவிட்டு போறேன்னு சொல்றான். ஏமுன்னு கேட்டா விவரத்த சொல்லாம அது அப்படித்தான்
என்கிறான். நீங்களாவது கொஞ்சம் புத்தி சொல்லுங்க, ஐயா” என்று கவலையோடு சொன்னாள்.
அவள் சொல்வதைகேட்டு திகைப்படைந்த நாட்டாமை திருவேங்கடத்திடம் காரணம் கேட்க அதற்கு
அவனோ ஐயா நான் வீட்டைவிட்டுத்தான் போறேன்னு சொன்னேனே தவிர அவர்களை காப்பாற்ற
மாட்டேன் என்று சொல்லவில்லை. வீட்டிலிருந்தால் நான் அம்மாவையும் தங்கையையும் எப்படிப்
பார்த்துக்கொள்வேனோ அதேபோல் பார்த்துக்கொள்வேன் என்றான். அதற்கு நாட்டாமை,
“அதை நீ வீட்டிலிருந்தபடியே செய்யலாமே? ஏன் வீட்டுக்கு வெளியிலிருந்து செய்கிறேன் என்கிறாய்?”
“………………………………………………….”
“மௌனமாய் இருந்தால் எப்படி? ஏதாவது சொல்”
“நான் இந்துமதப்படி வாழவிரும்புகிறேன். அதனால்தான்………” என்று இழுத்தான்.
“இந்துமதப்படி வாழ்வதற்கும் வீட்டைவிட்டு வெளியில் இருப்பதற்கும் என்ன சம்பந்தம்?” என்று
குழம்பியபடி கேட்டார்.
“ஐயா, நான் பெயருக்கு இந்துவாக வெளியே நடிக்கவிரும்பவில்லை. உண்மையிலேயே இந்துவாக
வாழவிரும்புகிறேன்”
“உண்மையான இந்துவாக வாழவிரும்புகிறாயா? குழப்புகிறாயே”
“குழம்பவேண்டாம் ஐயா, மனுதர்மப்படி வாழ்பவனே உண்மையான இந்து. மனுதர்மம் என்னசொல்கிறது
தெரியுமா? புத்திசாலிகள் அம்மா, அக்கா, தங்கை மற்றும் மகளோடு தனித்திருப்பதை தவிர்க்க வேண்டும்.
உடலின் இச்சை மிகவும் பலம்வாய்ந்ததென்பதால் அது உணர்சியைத் தூண்டும் என்கிறது மனுதர்மம்.
அப்பா இருந்தவரை பரவாயில்லை. இப்போ அதுசாத்தியப்படாது” என்றான்.
“என்னடா சொன்னாய் நாயே. தாய்க்கும் தாரத்துக்கும் வித்தியாசம் தெரியாதா நாயாடா நீ. உன் அக்கா
தங்கை தனித்திருந்தால் அவர்கள்மேல் உனக்கு ஆசைவருமா. எந்தக் கொம்பன் என்ன சொன்னாலும்
அதை அப்படியே ஏற்றுவிடுவாயா? ஏன் நம்முப்பாட்டன் “எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும்
அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு” என்று சொன்னது உன்மண்டையில் ஏறவில்லையா?”
என்று திருவேங்கடத்தை நோக்கி கத்தினார் நாட்டாமை.
“……………………………………………………”
“அட மடையா! அதே மனுதர்மம் சொல்கிறதே சிறுபற்கள் கொண்ட பெண்ணைத்தான் திருமணம் செய்ய
வேண்டும் என்று. அப்படியானால் பெரியபற்களை கொண்ட பெண்களை யார் திருமணம் செய்வது?
பெரியபற்களைக் கொண்ட பெண்களைப்பற்றி அந்த மனுதர்மம் என்னதான் சொல்லவருகிறது என்பதை
எல்லாம் சிந்தித்துபார்க்கமாட்டாயா?” என்று ஆவேசமடைந்தார்.
அவர் அப்படி எரிந்து விழுந்ததும் அப்படியே ஆடிப்போய்விட்டான் திருவேங்கடம். பஞ்சாயத்துக்கு
வந்திருந்தவர்களும் அதிர்ச்சியடைந்தார்கள். இப்படியெல்லாமா சொல்கிறது இந்துமதத்துக்கு
முதுகெலும்பாக இருக்கும் மனுதர்மம் என்று ஒருவருக்கொருவர் சொல்லி ஆச்சரியமடைந்தார்கள்.
இப்படியே எல்லோரும் பேசத்தொடங்கியதால் அந்தஇடம் சந்தைபோல் சலசலப்பாக மாறத்தொடங்கியது.
இதையறிந்த நாட்டாமை எல்லோரையும் சத்தம்போடாமல் அமைதியாய் இருக்கச்சொல்லிவிட்டு
பேசத்தொடங்கினார்.
“திருவேங்கடம், நமக்கு என்று ஒருபாரம்பரியமும் பண்பாடும் இருக்கிறது. அந்தபண்பாடும் பாரம்பரியமும்
கெடும்படி யாரோ எதையோ உளறியதைக்கேட்டு பின்பற்றினால் நம்தாய், அக்கா, தங்கை, மற்றும் மகள் என்ற
உறவையே கொச்சையாக்கிவிடும். நீ தாய்க்கு தலைமகன் என்ற உணர்வில் நின்று உன் கடமையைச்செய்.
இதுதான் இப்பஞ்சாயத்தில் நாட்டாமையின் தீர்ப்பு. எல்லோரும் கலைந்து போகலாம்” என்று தன் தீர்ப்பைக்
கூறியபடியே எழுந்தார்.
திருவேங்கடத்துக்கும் நாட்டாமை சொன்னதில் இருந்த நீதி புரிந்தது. மனுநீதி என்று சொல்லபடும்
மனுதர்மத்தின் அபத்தமும் புரிந்தது. ஆதலால் அவர் சொன்ன தீர்ப்பை ஏற்றுக்கொள்வதுபோல்
தலையசைத்தான்.
கலைந்து செல்லும் மக்கள் நட்டாமையை புகழ்ந்தபடியே சென்றார்கள். என்னதான் நெற்றிநிறைய
விபூதிபட்டையை தீட்டியிருந்தாலும் மனுதர்மத்தைப்பற்றி திருவேங்கடம் சொன்னதும் அவருக்கு வந்த
கோபத்தைபார்த்தீர்களா? மூடவழக்கத்தை அவர் சாடியதைப் பார்த்தீர்களா? இப்படி இன்னும் எத்தனையோ
அருவருக்கத்தக்க பழக்கவழக்கங்கள் இந்துமதத்தில் இருக்கத்தான் செய்கிறது. என்னசெய்வது இங்கே
எல்லோரும் நாட்டாமைபோல் இருக்கிறார்களா என்ன? என்றவர்கள் நாட்டாமை நல்லதீர்ப்பைத்தான்
வழங்கினார் என்று பாராட்டியபடியே நடந்தனர்.
-சங்கர சுப்பிரமணியன்.
Share this Post:
தர்மத்தைக் கடைப்பிடிப்பது தப்பா? — சிறுகதை—}சங்கர சுப்பிரமணியன். Reviewed by on January 3, 2017 .

அக்கம் பக்கத்து ஊர்களிலெல்லாம் பெருமையாகப் பேசப்பட்ட பூங்கொடி கிராமத்துக்கு இப்படி ஒரு அவப்பெயர் வருமென்று யாரும் கனவில்கூட நினைத்தது கிடையாது. நீதி நெறி தவறாமலும் தெய்வபக்தி மிகுந்தும் வாழும் அக்கிராமமக்களுக்கு நிகர் அக்கிராம மக்களே என்று பெயரெடுத்தவர்கள். அப்படிப்பட்ட கிராமத்தில் வாழ்ந்த ஒரு குடும்பம்தான் முத்தரசனினின் குடும்பம். மனைவி பர்வதம் மகள் கலையரசி மகன் திருவேங்கடம் என்று அளவான குடும்பம். பெரியவசதி வாய்ப்பென்று ஒன்றுமில்லாவிட்டாலும் அன்றாடம் செய்யும் கூலிவேலையில் கிடைக்கும் ஊதியத்தை வைத்து கௌரவமாக நாலுபேர் மெச்குசும்

ABOUT AUTHOR /