குடமுழுக்கு: — சிறுகதை—}சங்கர சுப்பிரமணியன்.

 ›  ›  › குடமுழுக்கு: — சிறுகதை—}சங்கர சுப்பிரமணியன்.

கதைகள்,செய்திகள்+

குடமுழுக்கு: — சிறுகதை—}சங்கர சுப்பிரமணியன்.

கடந்த வாரம் இந்தியாவிலிருந்து வந்ததில் இருந்து சுந்தரம் தன் மகன் அசோக்கின்
போக்கில் ஒரு மாறுதலைக் கண்டான். சிட்னியில் வாழும் சுந்தரம் தனது
பதினைந்து வயது மகனை நமது பண்பாட்டை மறக்காமல் கண்ணும் கருத்துமாகப்
பார்த்துக் கொண்டான். தமிழ்ப் பள்ளியில் சேர்த்து தமிழ் கற்கவைத்ததோடு
ஆலயங்களுக்கும் தவறாது அழைத்துச் சென்று கடவுள் நம்பிகையை சிறுவயதில்
இருந்தே ஏற்படுத்தினான். இப்படிப் பார்த்து பார்த்து வளர்த்த மகனிடம் தற்பொழுது
ஏற்பட்ட மாறுதல் மனதில் சஞ்சலத்தை உண்டாக்கியது.
அவனது தவறும் இதில் இருக்கிறது. மூடிவைக்க வேண்டியதை மூடிவைக்கவேண்டும்.
மகனுக்கு எல்லாம் தெரிய வேண்டும் என்பதற்காக சொந்த ஊரான பட்டுக்கோட்டை
கோவில் குடமுழுக்கு விழாவுக்கு அழைத்துச் சென்றதுதான் மகனின் மாற்றத்துக்கு
காரணம் என்பதை அறிந்தான். அதை நோக்கி எண்ணம் நகர அங்கு நடந்தவை எல்லாம்
திரும்பவும் மனதில் திரைப்படம் போல் ஓடியது.
*****               ********                ********              ********
குடமுழுக்கு விழாவினால் கோவில் விழாக்கோலம் பூண்டிருந்தது. வேத விற்பன்னர்கள்
மந்திரம் ஓத பக்தர்கள் பரவசத்தில் திளைத்தார்கள். இதயெல்லாம் மிகவும் ஆவலாக
கவனித்த மகனைப் பார்த்து பெருமிதமடைந்தான் சுந்தரம். அவ்வப்போது மகன் கேட்ட
கேள்விகளுக்கும் விளக்கமாய்ப் பதில் சொல்லிக்கொண்டிருந்தான்.
“அப்பா, இந்த குடமுழுக்கு எதற்காக நடத்துகிறார்கள்?”
” அதுவா, கிட்டத்தட்ட நாம் புதிதாக ஒரு வீடுகட்டி குடியேறுவதற்கு முன் நடத்தும்
புதுமனை புகுவிழா போன்றது. ஆனல் இக்குடமுழக்கு பல காரணங்களுக்காக
நடத்தப் படுகிறது.”
” பல காரணங்கள் என்றால்?”
” சொல்றேன், கேளு. புதிதாக கோவில் கட்டினாலோ அல்ல சிதிலமடைந்த கோவிலில்
மராமத்து வேலை செய்தாலோ குடமுழுக்கு செய்வார்கள். இது தவிர கோலிலில்
தீட்டு ஏற்பட்டால் அதைப்போக்கி புனிதப் படுத்துவதற்காகவும் இதைச் செய்வார்கள்.
இன்னொன்றையும் சொல்கிறார்கள், ஆனால் அதுபற்றி எனக்கு சரியாகத் தெரியாது.
இருந்தாலும் சொல்கிறேன், கோவிலில் குடியிருக்கும் கடவுளுக்கு சக்தி இல்லாமல்
போகும்போது திரும்பவும் அக்கடவுளுக்கு சக்தியைக் கொடுக்கவும் இதைச்
செய்வார்களாம். இதுதான் அந்த பல காரணங்கள்”
இந்த விளக்கத்தை சுந்தரம் சொன்னதும் அசோக் தீவிரமாக யோசிக்க ஆரம்பிதவன் தன்
சந்தேகத்தை அப்பாவிடம் கேட்டான்.
“அப்பா கோவிலில் தீட்டு ஏற்படுமா? அதெப்படி?”
“கோவிலுக்குள் தாழ்த்தப் பட்ட சாதியினர் செல்லும்போது அக்கோவில் தீட்டாகிவிடுமாம்”
“நீங்க சொல்றத நம்பமுடியல்லையே அப்பா”
” உண்மையைத்தான் சொல்கிறேன். வட இந்தியாவிலுள்ள பீஹார் மாநிலத்திலுள்ள ஒரு
கோவிலுக்கு அம்மாநிலத்தின் முதலமைச்சர் சென்றார். அவர் தாழ்த்தப்பட்ட இனத்தைச்
சேர்ந்தவராம். முதலமைச்சர் என்பதால்அவரைத் தடுக்கமுடியவில்லை. ஆனால் அவர்
கோவிலுக்கு வந்து சென்றதால் கோவில் தீட்டுப் பட்டுவிட்டது என்று குடமுழுக்கு
செய்துள்ளார்கள். இது செய்தியிலும் வந்துள்ளது.”
திரும்பவும் யோசிக்க ஆரம்பித்த அசோக் தந்தையிடம் இனிமேல் தமிழ் வகுப்புக்கு போக
மாட்டேன் என்று பிடிவாதமாகக் கூறினான். தந்தை காரணம் கேட்டதற்கு அவன் சொன்ன
செய்திதான் காரணம் என்றான். அவனும் மகனிடம் தான் சொன்ன செய்திக்கும் தமிழ்
வகுப்புக்கு போகமாட்டேன் என்பதற்கும் என்ன சம்பந்தம் என்றும் ஏன் மொட்டைத் தலைக்கும்
முழங்காலுக்கும் முடிச்சு போடுகிறாய் என்றும் சற்று கடினமாகக் கேட்டான் அதற்கு அசோக்
தமிழ் வகுப்பில் தப்பு தப்பாய்ச் சொல்லித் தருகிறார்கள் என்று சொன்ன பதிலால்
திகைப்படைந்து,
“அப்படி என்ன தமிழ் வகுப்பில் உனக்கு தப்பு தப்பாய் சொல்லித் தருகிறார்கள்?” என்றான்
“சாதி இரண்டொழிய வேறில்லை என்று பிறருக்கு கொடுப்பவரை பெரியவராகவும் கொடாதவரை
இழி குலமாகவும் ஓளவைப் பிராட்டியார் சொன்னதாகவும் பிறப்பொக்கும் எல்லா
உயிர்க்கும் என்ற குறளில் பிறப்பால் எல்லோரும் சமம் என்று திருவள்ளுவர் சொல்லி
இருப்பதாகவும் சொல்லித் தருகிறார்கள். அதுமட்டுமா, போன நூற்றாண்டில் வாழ்ந்த மகாகவி
பாரதியாரும் காக்கை குருவி எங்கள் சாதி என்று பறவைகளைக் கூட வேற்றுமைப் படுத்தி
பாராமல் எங்கள் சாதி என்று படியிருப்பதாக சொல்லித் தருகிறார்கள். இதெல்லாம்
தப்பில்லையா?”
தன் மகன் இப்படிக் கேட்டதும் அதொன்றும் தப்பில்லை தமிழ் பள்ளியில் சரியாகத்தான்
சொல்லித் தருகிறார்கள் என்றான் சுந்தரம். தந்தையின் பதிலால் சமாதானமடையாத அசோக்
அப்படியனால் பீஹார் கோவிலில் குடமுழுக்கு செய்தது தப்பா? ஒன்று சரியென்றால் ஒன்று தப்பு.
இரண்டும் தப்பாகவும் இருக்க முடியாது அதேபோல் இரண்டும் சரியாகவும் இருக்க முடியாது.
ஆதலால் எது தப்பு எது சரி என்றுகேட்ட மகனின் கேள்விக்கு பதில் சொல்லமுடியாமல்
கோபத்துடன் குடமுழுக்கில் பாதியிலேயே மகனை அழைத்துக்கொண்டு வீடுவந்து சேர்ந்ததுவரை
திரைப்படமாய் ஓடி நின்றது.
*******                **********                 **********               ***********
இனிமேலும் மகனிடம் எதையும் மறைத்து பயனில்லை என்பதை உணர்ந்த சுந்தரம் அதைப்பற்றி
மனைவியிடமும் விவாதித்தபின் ஒரு முடிவுக்கு வந்தான். பள்ளியிலிருந்து வந்த மகன்
உணவருந்திவிட்டு தன்அறைக்கு செல்ல இருந்தவனைத்தடுத்து,
“அசோக், கொஞ்சம் நில். உன்னிடம் சற்று பேசவேண்டும்” என்றான்.
“சொல்லுங்க, அப்பா”
“ஊரில் நீ கேட்டதற்கு இப்போது பதில் சொல்கிறேன். நீ கேட்டதில் தவறொன்றுமில்லை. இது
போன்ற சங்கடமான சூழ்நிலை எல்லா புத்திசாலிக் குழந்தைகளின் பெற்றோருக்கும் ஏற்படவே
செய்கிறது. நேர்மையான பெற்றோர்களாய் இருந்தால் உள்ளதை உள்ளபடி சொல்வார்கள்.
நேர்மையற்றவர்கள் எதையாவது சொல்லி சமாளிப்பார்கள்”
“அப்பா, உங்கள் சங்கடம் எனக்கு புரிகிறது. உள்ளதை உள்ளபடியே சொல்லுங்கள்”
“ஓளவையும் வள்ளுவரும் பாரதியும் சொல்வதுபோல் எல்லோரும் சமமானவர்களே. மனிதன்
தான் இந்த உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்ற நஞ்சை விதைத்துவிட்டான். இறைவன் முன் எல்லோரும்
சமம் என்ற தத்துவத்தையே மறந்து ஒருமனிதன் ஆலயத்துக்குள் நுழைந்துவிட்டதால் தீட்டு என்று
குடமுழுக்கு செய்யும் அளவுக்கு தாழ்ந்து போய்விட்டான்” என்று சொல்லிமுடித்தான் சுந்தரம்.
அப்பா சொல்லி முடித்ததும் உண்மையுணர்ந்த அசோக்குக்கு அப்போதுதான் நாம் எந்தவிதமான
சிக்கலில் அகப்பட்டுக் கொண்டிருக்கிறோம் என்பது புரிந்தது. உண்மையை உரத்துக்கூறினால்
நம்மை கடவுள் நம்பிக்கையற்றவன் என்று கூறுவார்கள். உண்மையைக் கூறாவிட்டால் மனசாட்சி
நம்மைக் கொல்கிறது. இது எப்படி இருக்கிறதென்றால் பிற உயிர்களுக்கு தீங்குசெய்யாதே என்று
சொல்லிக் கொண்டே பிராணிகளை அடித்துக்கொன்று உண்பதைப்போல் இருக்கிறது என்பதை
மட்டும் உணர்ந்தான்.
-சங்கர சுப்பிரமணியன்.
Share this Post:
குடமுழுக்கு: — சிறுகதை—}சங்கர சுப்பிரமணியன். Reviewed by on December 24, 2016 .

கடந்த வாரம் இந்தியாவிலிருந்து வந்ததில் இருந்து சுந்தரம் தன் மகன் அசோக்கின் போக்கில் ஒரு மாறுதலைக் கண்டான். சிட்னியில் வாழும் சுந்தரம் தனது பதினைந்து வயது மகனை நமது பண்பாட்டை மறக்காமல் கண்ணும் கருத்துமாகப் பார்த்துக் கொண்டான். தமிழ்ப் பள்ளியில் சேர்த்து தமிழ் கற்கவைத்ததோடு ஆலயங்களுக்கும் தவறாது அழைத்துச் சென்று கடவுள் நம்பிகையை சிறுவயதில் இருந்தே ஏற்படுத்தினான். இப்படிப் பார்த்து பார்த்து வளர்த்த மகனிடம் தற்பொழுது ஏற்பட்ட மாறுதல் மனதில் சஞ்சலத்தை உண்டாக்கியது. அவனது தவறும் இதில்

ABOUT AUTHOR /