கிரகப் போர்! (தொடர்கதை- 1) — } காசியரின் பேரன்.

 ›  ›  › கிரகப் போர்! (தொடர்கதை- 1) — } காசியரின் பேரன்.

கதைகள்,செய்திகள்+

கிரகப் போர்! (தொடர்கதை- 1) — } காசியரின் பேரன்.

„விடிஞ்சு பத்து மணியாச்சு இந்த மனுசன் படுத்துக் கிடக்கு, இஞ்சருங்கோ எழும்பி தேத்தண்ணி குடிச்சிட்டு போய் சந்தையிலை மரக்கறியும் மீனும் வாங்கிக் கொண்டு வாங்கோ காலைமையிலையிருந்து நாயாய்ப் பேயாய் கத்திறன் காதிலை விழுந்தால்தானே’ கணவன் பரமசாமிக்கு இடியப்பமும் சொதியும் சமைத்து வைத்துவிட்டு கிழிந்த சட்டையை தைத்தபடியே கணவன் படுத்திருந்த அறையை நோக்கி குரல் கொடுத்து எழுப்பிக் கொண்டிருந்தாள் கனகசுந்தரி. மனைவி சத்தம் போட்டுக் கொண்டிருப்பதைக் கேட்டுக் கொண்டே மறுபக்கம் திரும்பிப் படுத்த பரமசாமி „இந்த மனுசியாலை பெரிய கரைச்சல் சனி ஞாயிறுகளிலாவது நிம்மதியாக நித்திரை கொள்ள விடுதே எப்ப பார்த்தாலும் பழஞ்சீலை கிழிஞ்ச மாதிரி யொஞ்யு….யொஞ்யு என்று’ மனைவிக்கு கேட்காதவாறு முணுமுணுத்தபடி „இஞ்சரப்பா இப்ப ஏன் சத்தம் போடுறாய் கொஞ்சம் நித்திரை கொள்ள விடு’ என்றன்.
தெருவில் பெரும் ஆராவராமாகவிருக்கின்றது. தெருவில் அங்குமிங்குமாக நடந்தபடியும் சைக்கிளிலும் கார்களிலும் போவோராலும் வருவோராலும் தெரு சந்தடியாகின்றது. யன்னலால் எட்டிப் பார்த்த கனகசுந்தரி தைத்த சட்டையை அப்படியே போட்டுவிட்டு கணவனை கட்டிலிலிருந்து தள்ளிவிழுத்தாத குறையாக உசுப்பி எழுப்புகிறாள்’ இஞ்சரப்பா எழும்பிப் போய் தெருவிலை என்ன நடக்குது என்று பாருங்கோ….. ஒரு கைத்தொலைபேசியாவது இருந்திருந்தால் சாராதாவிற்காவது ரெலிபோன் பண்ணி என்ன ஆரவாரம் என்று கேட்கலாம். உங்களுக்கு வாழ்க்கைப்பட்டு என்னத்தைக் கண்டன் ஒரு ரிவி இருக்கா, வீட்டுத் தொலைபேசி இருக்கா இல்லை கைத்தொலைபேசிதான் இருக்கா, கலியாணம் செய்து இரண்டு வருசமாச்சு இதிலை எதையாவது வாங்கியிருக்கியளா’ என்ற சுந்தரியை இடைமறித்து நான் „இஞ்சை எப்ப பார்த்தாலும் கல்லுப் போட்டு குலுக்கிய குடமாகக் லொடுக்கு லொடுக்கு என்று கத்தாதை என்று ‘ நான் சொல்ல „ஓகோ இப்ப நான் கல்லுப் போட்ட குடம் மாதிரிப் போனனாக்கும் கலியாணம் செய்த புதுசிலை நான் குத்துவிளக்கு நிறைகுடம் இப்ப கல்லுப் போட்ட குடமாகிப் போனன்  எல்லாம் என்ரை தலைவிதி’ சுந்தரி சொன்னதை காதில் விழுத்தாமல் எழுந்து போய் குளித்துவிட்டு சாப்பிட்டுவிட்டு என்ன நடக்குது தெருவிலை என்று யோசித்தவாறு வெளிச் சுவரோடு சாத்தி வைச்சிருந்த சைக்கிளை எடுத்த நான்  தெருவோர வீடுகளின் முன் படலையடியில் நின்றவாறு எல்லோரும் கைத்ததொலைபேசி எண்களை விரல்களால் அமத்தியவாறு வானத்தை அண்ணாந்து தீராத கவலை முகத்துடன் பாரத்துக் கொண்டிருப்பதைப் பார்த்ததும் ஏதோ பாரதூராமாக நடந்திருக்கு போல என்று நானும் வானத்தை நல்லாத் தலையைச் சுற்றி சுற்றி அண்ணாந்து பார்த்தேன். மேகம் எதையுமே வானத்தில் காணவில்லை. பளிச்சென்று நீலநிறமாக இருந்தது.
எனக்கு பரமசாமி என்று பெயரென்றாலும் ஊருக்குள்ளை எனக்கு பிபிசி, சிஎன்என், சாமிசன்னதம் என்ற செல்லப் பெயர்கள் உண்டு. என்னுடைய கொள்ளுப்பேரன் ஓடிய றலி சைக்கிளை இவ்வளவு காலமும் கவனமாக நான் பாதுகாத்து இங்கும் அதிலைதான் ஓடிக் கொண்டிருக்கிறன்.ஊரிலிருந்து இங்கை அந்தச் சைக்கிளை நான் பார்சலில் எடுக்கப்பட்டபாடு ஒரு சைக்கிள் கடையையே வைச்சுக்கக்கூடிய  பாடு.
சைக்கிள் செயினுக்கு எண்ணைவிட்டால் வீண் செலவென்று எண்ணையும் விடுறதில்லை.அதாலை என்ரை சைக்கிள் தெருவிலை இறங்கிவிட்டதென்றால் செயினின் கர்ர்ர்ர்றாபுர்ர்ர்றாச்  சத்தத்தால் ஊருக்கே  தெரிந்துவிடும் சாமி புறப்பட்டுவிட்டார் என்று. வாலைச்சுருட்டிக் கொண்டு தன்பாட்டிற்கு படுத்திருக்கும் நாய்கள் என்ரை வாகனச் சத்தத்தால் மிரண்டு ஏதோ தங்களுக்கு பிரச்சினை வரப் போகுதுதெண்டு என்னைத் துரத்த என்ரை சைக்கிள் ஓடினால்தானே நான் வேகமாக ஓட. ஐசக்கிளை இறங்கி நாய்களை திரத்திப் போட்டு நான் போக எனக்கு கேட்காது என்ற நினைப்பில் சாமி சைக்கிளில் சன்னதமாட வெளிக்கிட்டடிட்டு என்று சிலரும் அங்கை பார் பிபிசி வருது என்று சொன்னவனும் சிஎன்என் வருது என்று சொன்னவனும்  அவர்களுக்கு கிட்டப் போனதும் வணக்கம் பரமண்ணை எப்படி இருக்கிறியள் என்று பிபிசி என்று சொன்னவனும் சாமியண்னை „இப்பத்தான் உங்களை நினைச்சம் நீங்கள் வந்திட்டியள்’ என்று சொல்ல நானும் எழுச்சிமலையானே எல்லாம் உன்ரை திருவிளையாடல் என்றபடி சைக்கிளை உருட்டிக் கொண்டு நடக்கிறன்.
எல்லாற்றை கையிலும் கைத்தொலைபேசி இருக்கு ஆனால் எல்லாற்றை முகத்திலையும் ஒரே சோகம்.சிலர் இலக்கங்களை அமத்துவதும் மேலே அண்ணாந்து வானத்தைப் பார்த்தபடி இருக்க எனக்கு மனம் கேட்கவில்லை, ஒரு ஆளுக்கு கிட்டப் போய்’ ஏன் எல்லாரும் சோகமயமாய் இருக்கிறியள் ஒருத்தற்றை முகத்திலையும் சிரிப்பைக் காணலை, யாராவது முக்கிய தலைவர் போயிட்டாரோ இல்லாட்டி யாராவது நடிகர் நடிகைகள் அவுட்டோ’ என்று கேட்டன். அந்தாள் என்னை முறைச்சுப் பார்த்திட்டு „தலைவர் கிலைவர் செத்தால் எங்களுக்கென்ன நடிகர் கிடிகர் நடிகை கிடிகை செத்தால் எங்களுக்கென்ன அதைவிடப் பாரதூரமான பிரச்சினை அதுதான் கவலை’என அந்தாள் சொல்ல,’ தம்பி அப்பிடி என்னப்பு பிரச்சினை என்றேன்’ அவரோ „அதெல்லாம் உங்களுக்குப் புரியாது இது இன்ரநெற் சமாச்சாரம் „ எனச் சொல்ல,’வெறும்புளி தனைத் திண்று வீணாக நாக்கெரிந்து வரும் பயன் எதுவும் இல்லை’என்று அப்பர் சொன்னது நினைவுக்கு வர அவரிட்டை கேட்டு நடக்கப் போகிற காரியம் எதுவும் இல்லை என்றபடி சைக்கிளை உருட்டிக் கொண்டு சந்திக்கு போனன்.
சந்தியிலை ஒரே சனம். கோப்பிக்கடைக்கு உள்ளேயும் வெளியேயும் ஒரே சனம். இன்ரநெற் கடைக்கு உள்ளேயும் வெளியேயும் சனம். ஆள் மாறி ஆள் „என்னவாம் ஏதாவது தகவல் கிடைச்சுதா’ எனக் கேட்க’ ச்சா ஒன்றுமில்லையடா மச்சான்’ என்று பொடியள் சொல்ல’ என்ன வாழ்க்கையடா இது இன்ரநெற் வேலை செய்யுதில்லை பேஸ்புக்கில்லை ருவிற்றர் இல்லை நிம்மதியே போய்விட்டுது எங்கையாவது ஆத்திலை குளத்திலை விழுந்தோ இல்லாட்டி எக்ஸ்பிரஸ் றெயினிலை விழுந்தோ செத்துப் போகலாம்’ என்று பொடியள் சோகமாகச் சொல்ல நான் உண்மையிலை திகைச்சுப் போயிட்டன். தற்கொலை செய்யுமளவிற்கு இன்ரநெற் அப்பிடி ஒரு பிரச்சினையோ என்று நினைச்சபடி பொடியளை ஒரு நோட்டம் விட்டன் பெரும்பாலும் எல்லாற்றை விரலிலும் சிகரட். ஊதித்தள்ளிக் கொண்டேயிருந்தார்கள். அடிக்கொரு தரம் „என்ன வாழ்க்கையடா இது தண்ணி சாப்பாடு வீடில்லாமல் கூட இருக்கலாம்……என்ன வாழ்க்கை இது’ என்று புலம்பிக் கொண்டேயிருந்தார்கள். இந்தச் சோகத்திலையும் பொடியளுக்குள் யாரோ ஒருத்தன் „அண்ணை பிபிசி அண்ணை இன்றைக்கு சாமி சன்னதமாடலையோ’ எனச் சொன்னது கேட்டுது குரல் வந்த திசையைப் பார்த்தேன் யாரென்று தெரியேலை.
கோப்பிக் கடைக்குள் நுழைஞ்சன். கோப்பி குடிச்ச சிலரும் மேசையில் தலையை வைச்சு அழுதபடி பலரும் இருந்தனர். வழமையாக அந்தக் கோப்பிக் கடை கலகலவென்று ஒரே கொண்டடாட்டமாக இருக்கும். பொம்பிளைப் பிள்ளையள் அடிக்கடி மூக்கையும் கண்ணையும் துடைச்சபடி இருந்தனர். மேசையில் கைத்தொலைபேசிகள்  சத்தம் போடாமல் செத்துப் போய்க் கிடந்தன. எனக்கு இந்தப் பிள்ளைகள் அழுதுபடி இருந்தது பொறுக்கேலை கிட்டப் போய ஒரு ஒரு பிள்ளையிட்டை,
„பிள்ளை ஏனம்மா அழுறாய்’ என்றன், அந்தப் பிள்ளை தலையைத் தூக்கிப் பார்த்திட்டு திரும்பி மேசையிலை தலையை வச்சி படுத்திட்டு எனக்கோ மனம் பொறுக்கவில்லை. எல்லாரையும் சுற்றுமுற்றும் பாரத்தன் எல்லாரும் கோப்பி கோப்பியாய்க் குடிச்சபடி மேலே பார்த்தபடி இருந்தனர். எனக்கு மனம் பொறுக்கேலை அந்தப் பிள்ளையிட்டை „இஞ்சரம்மா அழாமல் என்ன நடந்தது எண்டு சொல்லன் ஆரெண்டாலும் பொடியள் கிடியள் சேட்டை கீட்டை விட்டவையோ’ என்று கேட்க அந்தப் பிள்ளை „அப்படி நடந்தாலும்கூட பரவாயில்லை அங்கிள் அதைவிட இது பெரிய கொடுமை’ என்று சொன்ன அந்தப்பிள்ளை „அங்கிள் உங்கடை வீட்டிலை றேடியா ரிவி ரெலிபோன் மொபைல் ஏதாவது இருக்கா’ என்று கேட்க நான் ஒன்றுமே இல்லையென்றேன் „இவையெல்லாம் இல்லாமல் ஒரு வாழ்க்கையா’ என்று என்னைப் பார்த்துச் சொல்ல „நான் தலைசுத்தாத குறையா திகைச்சுப் போய் பக்கத்து கதிரையில் தில்லையில் கூத்தனே தெண்பாண்டி நாட்டானே இந்தப் பூமிக்கு என்னு வந்தது’ என்றபடி உட்கார்ந்தேன்.
கோப்பிக்கடைக்கு எதிரே கொஞ்சம் வடக்குப் பக்கமாகத்தான் என்ரை மனுசியின்ரை பள்ளித் தோழி சாராதாவின் வீடிருக்கு. இண்டைக்கு மனுசிக்கு சொல்ல நல்ல புதினம் கிடைச்சிட்டுது என்று நினைச்சுக் கொண்டு கோப்பிக்கடையை விட்டு வெளியே வந்தன் திடீரென்று சாராதாவின் வீட்டிலிருந்து’ஐயையோ ஐயையோ நான் இனி என்ன செய்வேன் என் வாழ்க்கையே முடிஞ்சு போச்சுது. கண்கெட்ட கடவுளுக்கு கண்ணே இல்லையா „என்று அலறல் சாராதாவின் வீட்டிலிருந்து வர சாராதாவின் வீட்டுக்கு நான் ஓட என்னோடு பொடியள் சிலரும் ஓடிவந்தனர். வீட்டுக்குள் போன நான் அங்கை கண்ட காட்சியைப் பார்த்து திகைச்சுப் போட்டன்.(தொடரும்)
Share this Post:
கிரகப் போர்! (தொடர்கதை- 1) — } காசியரின் பேரன். Reviewed by on December 11, 2016 .

„விடிஞ்சு பத்து மணியாச்சு இந்த மனுசன் படுத்துக் கிடக்கு, இஞ்சருங்கோ எழும்பி தேத்தண்ணி குடிச்சிட்டு போய் சந்தையிலை மரக்கறியும் மீனும் வாங்கிக் கொண்டு வாங்கோ காலைமையிலையிருந்து நாயாய்ப் பேயாய் கத்திறன் காதிலை விழுந்தால்தானே’ கணவன் பரமசாமிக்கு இடியப்பமும் சொதியும் சமைத்து வைத்துவிட்டு கிழிந்த சட்டையை தைத்தபடியே கணவன் படுத்திருந்த அறையை நோக்கி குரல் கொடுத்து எழுப்பிக் கொண்டிருந்தாள் கனகசுந்தரி. மனைவி சத்தம் போட்டுக் கொண்டிருப்பதைக் கேட்டுக் கொண்டே மறுபக்கம் திரும்பிப் படுத்த பரமசாமி „இந்த மனுசியாலை பெரிய

ABOUT AUTHOR /