ஒரு திருடனும் அவனின் காதலியும்! (சிறுகதை ) — ஏலையா க.முருகதாசன்.

 ›  ›  › ஒரு திருடனும் அவனின் காதலியும்! (சிறுகதை ) — ஏலையா க.முருகதாசன்.

கதைகள்,செய்திகள்+

ஒரு திருடனும் அவனின் காதலியும்! (சிறுகதை ) — ஏலையா க.முருகதாசன்.

லண்டனில் உள்ள அந்த ஆஸ்பத்திரியில் தனக்குத் தெரிந்த பெண்ணொருவர் நோயுற்றிருப்பதாகவும் பார்க்கப் போகிறேன் வாங்களேன் ‘ என்றார் மைத்துனி;.இரண்டு பஸ் எடுத்து ஆஸ்பத்திரிக்குப் போய் மைத்துனியின் தோழி இருந்த அறையை நோக்கி போய்க் கொண்டிருந்த போது, பார்வையாளர் கதைப்பதற்க என்று இருந்த கூடத்தில் மைத்துனியின் தோழி இருப்பதை கண்டவுடன் மைத்துனியும் நானும் அங்கிருந்த கதிரைகளில் உட்:கார்ந்தோம்.அங்கிருந்து கோப்பி மிசினில் கோப்பி போட்டுக் கொண்டு வந்து தந்த மைத்துனி ‘இவர் எனக்கு அத்தான் முறை என்ரை ஒன்றுவிட்ட அக்காவின் கணவன்,ஜேர்மனியிலை இருக்கினம்,கலியாண வீடொன்றக்கு வந்தவை,எங்கடை வீட்டிலைதான் நிற்கினம், அக்கா வீட்டிலைதான் நிற்கிறா,அத்தானுக்கு உலாத்துறது விருப்பம்.,நான் ஆஸ்பத்திரிக்கு உங்களைப் பார்க்கப் போறன் வாறியளா எனக் கேட்டன் வந்துவிட்டார்’ என்று என்னை அந்தப் பெண்ணுக்கு அறிமுகப்படுத்தினாள் மைத்துனி. நானும்’ சொந்தக்காரர்களை, நண்பர்களைத்தான் பார்க்க வேண்டுமென்று இல்லை, யாரையும் பார்க்கலாம் எவருக்காகவும் அவர்கள் சுகம் பெற வேண்டும் என்று கடவுளைக் கும்பிடலாம்’ என்று சொல்லியவாறே கோப்பியைக் குடித்துக் கொண்டிருந்தேன். மைத்துனியின் தோழி என்னையே பார்த்துக் கொண்டிருந்தாள். அவளின் பார்வை எற்கனவே அறிமுகமானவரைப் பார்ப்பது போல இருந்தது. மைத்துனியிடம்’இவர் ராஜேஸ்வரன்தானே’எனக் கேட்க மைத்துனியும் ‘ஓமோம் இவரைத் தெரியுமா’ எனக் கேட்க, ‘தெரியுமாவா….என்னோடு ஒரே வகுப்பில் படிச்சவர்’ என்று சொல்லிக் கொண்டே எனக்கருகில் வந்து உட்கார்ந்து  என்ன ராஜேஸ் என்னைத் தெரியவில்லையா நான்தான் சந்திரகௌரி’ என அறிமுகப்படுத்தினாள்.
சந்திரகௌரியை நான் லண்டனில் சந்திப்பேனென்று கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. எனக்கு திக்கென்றது. அவளோடு படித்த காலத்தில் அவளுக்கு நான் செய்த ஒரு தவறு அடிக்கடி என் மனதைக் குழப்பிக் கொண்டேயிருந்தது.இன்று அவளை நேரில் கண்டதம் நான் செய்த தவறை அவள்  அறிந்திருப்பாளோ மறந்திருப்பாளோ எனக் குழம்பத் தொடங்கினேன். அன்றைய அவளின் முகத்தை என்னருகில் இருக்கும் அவளின் முகத்தில் தேடத் தொடங்கினேன். ‘ அப்படி என்ன என்ரை முகத்திலை தேடுகிறாய் ‘என்றவளிடம், ‘ஒன்றுமில்லை ‘ என்று சொல்லியவாறு மீண்டும் மீண்டும் அவள் முகத்தைப் பார்த்தேன். உற்றுப் பார்த்த அவளின மூக்கிற்கும் இதழுக்கும் இடையில் தெரிந்தும் தெரியாதமாதிரி மீசை போன்ற பூனைமுடி இருந்தது. அவள் படித்த காலத்தில் அது கொஞ்சம் வெளிர்சாம்பல்  நிறத்தில் இருந்தது.அதுகூட அவளுக்கு அப்பொழுது அழகாகத்தான் இருந்தது. அவளுக்குத் தெரியாமல் சக தோழர்களிடம் அவளைக் கிண்டலடிக்க அதுவே என்னையும் அவளையும் சேர்த்து வைத்து கிசுகிசுவாக பாடசாலையில் பரவியது.
பழைய நினைவுகளில் மூழ்கியிருந்த எனக்கு’ ராஜேஸ் எனக்கு அடுத்த சனிக்கிழமை பிறந்த நாள். வீட்டிலைதான் செய்கிறம்.நான் நாளைக்கு ஆஸ்பத்திரியை விட்டு வீட்டுக்குப் போய்விடுவன். கட்டாயம் வா’ என்று சொல்லியவள் ‘ மைத்துனியின் பக்கம் திரும்பி ராஜேஸை மறக்காமல் கூட்டிக் கொண்டு வாருங்கள்’ எனச் சொல்லுகிறாள். அதற்கு மைத்துனியும், ‘அதுதான் உங்கடை முகத்தை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தாரே,மனுசியோட வருவார்’ கிண்டலடித்தார் மைத்துனி;.சில நிமிடங்கள் சந்திரகௌரியுடன் கதைத்துவிட்டுப் புறப்பட்டோம். அவளுக்குப் பிறந்த நாள் பரிசாக அதைத்தான் கொடுக்க வேண்டும். நான் செய்த தவறுக்குப் பிராயச்சித்தம் அதுதான் எனத் தீர்மானித்தேன்.அவளுக்கு கொடுக்க வேண்டிய பரிசுக்காக கடை கடையாக சளைக்காமல் ஏறி இறங்கினேன். இறுதியில் நான் தேடிய பொருள் கிடைத்தது. அதை அழகான பெட்டியில் வைத்து, வர்ணத்தாளில் சுற்றி  வைத்தேன்.
சந்திரகௌரியின் பிறந்த நாளுக்கான சனிக்கிழமையும் வந்தது.நான்,மனைவி மைத்துனி என மூவரும் சந்திரகௌரியின் வீட்டிலிருந்தோம். அந்த வீட்டின் கூடம் அழகாக அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. அங்கு பலர் இருந்தனர். அங்கு நின்ற நடுத்தரவயது ஆண்கள் ஒவ்வொருவரையும் என் கண்கள் நோட்டம் விட்டன’ சந்திரகௌரியின் கணவன் இவராக இருக்குமோ, அவராக இருக்குமோ எனக் கண்கள் பதிந்து பதிந்து சென்றன.அங்கிருந்த ஒரு இளம்பெண் ‘அன்ரி கேக் வெட்டலாம் வாருங்கோ’ என்று சந்திரகௌரியை அழைக்க அவளும் மேசையில் வைக்கப்பட்ட கேக்கின் மேல் இருந்த மெழுகுவர்த்தியை கொழுத்தி பின் அதனை அணைத்து கேக்கை வெட்டினாள்.உறவினர்:கள் நண்பர்கள் அவருக்கு கேக்கை ஊட்ட’ராஜேஸ் எனக்கு கேக்கை ஊட்ட விருப்பமில்லையா’ எனக் கேட்க நானும் மனைவியும் எழுந்து சென்று இருவரும் கேக்கை ஊட்டினோம், மைத்துனியும் எம்முடன் சேர்ந்து வந்து கேக்கை ஊட்டினாள்.;.எல்லாரும் பரிசளித்து முடிய நானும், தேடித் தேடி வாங்கிய அந்தப் பரிசைக் கொடுத்தேன். அவள் ஆவலுடன் பரிசைப் பிரித்துப் பார்த்தாள். வெளிப்பக்கம் மடிப்பு மடிப்பாக இருந்த அந்த மஞ்சல்நிற பென்சிலைக் கையில் எடுத்;து.’ பென்சிலா’ எனக் கேட்டு புருவத்தை உயர்த்தி சந்திரகௌரி என்னைளப் பார்த்தாள்
நான் எழுந்து அந்தப் பென்சிலுக்குப் பின்னால் உள்ள கதையைச் சொல்லத் தொடங்கினேன்.’நானும் சந்திரகௌரியும் ஒரே பாடசாலையில் ஒரே வகுப்பில் படித்தவர்கள். எட்டாம் வகுப்பில் படித்த போதுதான் நான் அந்த தவறைச் செய்தேன். அம்மா பென்சில் வாங்கித் தருவதும் தொலைப்பதுமாகவே நான் இருந்தேன். அன்றும் பென்சிலைத் தொலைத்துவிட்டேன். எழுதுவதற்கு பென்சில் இல்லை. இடைவேளை விட்டது. வழமையாக தண்ணீர் குடிப்பதற்குப்  பைப்படிக்குப் போகும் நான் அன்று போகாமல் முழிசியபடியே இருந்தேன். எல்லாரும் போய்விட்டார்கள். மெல்ல எழுந்து சந்திரகௌரி இருந்த மேசைக்கு மேல் வைத்திருந்த கொம்பாஸ் பெட்டியைத் திறந்த போது  அதற்குள் இது போன்ற மஞ்சள் பென்சில் இருந்தது.அது முழுப் பென்சில். அதை எடுத்துக் கொண்டு எனது இடத்திற்கு வந்த நான் அதன் கால்பகுதியை முறித்து முக்கால்பகுதிப் பென்சிலாக்கினேன். பிளேட்டால் சீவினேன். பல இடங்களில் பற்களால் கடித்து நசுக்கினேன்.இடைவேளை முடிந்து மீண்டும் வகுப்பு ஆரம்பமாகியது. தமிழ் புத்தகத்தில் உள்ள ஒரு பந்தியை சுருக்கி எழுதச் சொன்னார தமிழ் அசிரியர்;.நான் சந்திகௌரியைக் கடைக்கண்ணால் பார்த்தேன். கொம்பாஸ் பெட்டியைத் திறந்த அவள் பென்சிலைக் காணாது திகைத்தாள்.அவளின்: கண்கள் கலங்கத் தொடங்கியது.’சேர் பென்சிலைக் காணவில்லை சேர்…’ என விம்மினாள்.இந்தப் பூனையும் பால் குடிக்குமா என்பது போல நான் தலையைக் குனிந்து கொண்டிருந்தேன். நான் பாடசாலையை விட்டுப் பல வருடங்களாகிவிட்டன. பாடசாலையை நினைக்கும் போதும் எட்டாம் வகுப்பை நினைக்கும் போதும் நான் செய்த திருட்டும் சந்திரகௌரியும் அடிக்கடி நினைவில் வரும். சந்திரகௌரியை நான் லண்டனில் சந்திப்பேன் என்று கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. இன்று பிராயச்சித்தம் செய்துள்ளேன், கௌரி என்னை மன்னித்துவிடு’ என்றேன்.
வேகமாக வந்த சந்திரகௌரி என்னை இறுக்கி அணைத்தாள். அவள் கண்கள் கலங்கியது. நானும் அழுதுவிட்டேன்.மனைவியை திரும்பிப் பார்த்தேன். அவள் மெதுவாகச் சிரித்தபடி இருந்தாள். நனைந்த கைகளில் பொத்திப் பிடித்தபடி இருந்த கடதாசியை எனது சட்:டைப் பைக்குள் வைத்தவாறே ‘வீட்டுக்குப் போய் எடுத்துப் பார்’ என்று என் காதுக்கு மட்டும் கேட்குமாறு கிசுகிசுத்தாள். வீட்டுக்கு வந்த நான் குளியலறையில் வைத்து அந்த கடதாசியை எடுத்து வாசித்தேன். கடதாசி கசங்கியிருந்தது  ,அதில்’ ராஜேஸ் நான் உன்னைக் காதலிக்கிறேன். பலமுறை கடிதங்கள் எழுதி பயத்தில் கிழத்தெறிந்திருக்கிறேன். ஆனால் இதை கிழித்தெறியமாட்டேன். உன்னை இனி எப்ப சந்திப்பேனோ தெரியாது. பல ஆண்டுகளுக்குப் பிறகாவது  எங்கேயாவது சந்தித்தால் இக்கடிதத்தை தருவேன்.சந்திரகௌரி எனக் கையெழுத்திட்டு 6.5.66 எனத் திகதியிட்டிருந்தாள். கடிதத்தை கிழித்து குப்பைக் கூடைக்குள் கவலையுடன் போட்டேன்.
கூடத்தில் இருந்த மைத்துனியிடம் கேட்டேன்’ சந்திரகௌரி கல்யாணம் செய்யவில்லையா’என்று. இல்லை என்றாள் மைத்துனி
Share this Post:
ஒரு திருடனும் அவனின் காதலியும்! (சிறுகதை ) — ஏலையா க.முருகதாசன். Reviewed by on December 9, 2016 .

லண்டனில் உள்ள அந்த ஆஸ்பத்திரியில் தனக்குத் தெரிந்த பெண்ணொருவர் நோயுற்றிருப்பதாகவும் பார்க்கப் போகிறேன் வாங்களேன் ‘ என்றார் மைத்துனி;.இரண்டு பஸ் எடுத்து ஆஸ்பத்திரிக்குப் போய் மைத்துனியின் தோழி இருந்த அறையை நோக்கி போய்க் கொண்டிருந்த போது, பார்வையாளர் கதைப்பதற்க என்று இருந்த கூடத்தில் மைத்துனியின் தோழி இருப்பதை கண்டவுடன் மைத்துனியும் நானும் அங்கிருந்த கதிரைகளில் உட்:கார்ந்தோம்.அங்கிருந்து கோப்பி மிசினில் கோப்பி போட்டுக் கொண்டு வந்து தந்த மைத்துனி ‘இவர் எனக்கு அத்தான் முறை என்ரை ஒன்றுவிட்ட அக்காவின்

ABOUT AUTHOR /