பிம்பமா உயிரோட்டமா சொல் மனமே? — சிறுகதை—}சங்கர சுப்பிரமணியன்.

 ›  ›  › பிம்பமா உயிரோட்டமா சொல் மனமே? — சிறுகதை—}சங்கர சுப்பிரமணியன்.

கதைகள்,செய்திகள்+

பிம்பமா உயிரோட்டமா சொல் மனமே? — சிறுகதை—}சங்கர சுப்பிரமணியன்.

படைப்புக்களை படைக்கும்போது ஏற்படும் சிரமங்கள் அதற்காக சிரத்தை
எடுத்துக் கொள்பவர்களுக்குத்தான் தெரியும். ஏதோ நானும் படைக்கிறேன்
என்பனவெல்லாம் படைப்பாகிடாது. கல்லெல்லாம் மாணிக்கக் கல்லாகுமா
கலையெல்லாம் கண்கள் சொல்லும் கலையாகுமா? என்ற பொருள் பொதிந்த
கண்ணதாசனின் வரிகளில் தான் எத்தனை உயிரோட்டமுள்ளது. என்று
பேசிக்கொண்டே மணியும் ராமனும் சர். முத்தையா அரங்கில் நடைபெற்றுக்
கொண்டிருந்த அந்த பிரம்மாண்டமான ஓவியக் கண்காட்சியைக் காணச்
சென்றார்கள். இதில் சிறப்பு என்னவென்றால் இது வெறும் கண்காட்சி மட்டும்
அல்ல அதில் கலந்து கொள்ளும் சிறந்த ஓவியத்துக்கு ஒரு பெருந்தொகையை
பரிசாகவும் அறிவித்திருந்தார்கள்.
கூட்டம் அரங்கில் அலைமோதியது. பல ஓவியர்கள் தங்கள் ஓவியங்களை
பார்வைக்கு வைத்திருந்தார்கள். இயற்கை காட்சிகள், மாடர்ன் ஆர்ட்ஸ் போன்ற
ஓவியங்கள், கடவுளின் படங்கள், அரசியல் தலைவர்கள் என ஏகப்பட்ட படங்கள்
அந்த அரங்கத்தை நிறைத்திருந்தன. அவற்றையெல்லாம் பார்த்துக்கொண்டே வந்த
மணி ஒரு ஓவியத்தின் அருகே வந்ததும்,
“ராமா, ராமா இங்கே கொஞ்சம் வாயேன்” என்று மிகவும் மெதுவாக அழைத்தான்.
ராமன் வேறொரு ஓவியத்தை மிகவும் சிரத்தையுடன் கவனித்துக் கொண்டிருந்தவன்
கொஞ்சம் பொறு வருகிறேன் என்று ஜாடைகாட்டியவன் சிறிதுநேரம் கழித்து மணியிடம்
சென்று என்ன எனக்கேட்டான்.
“ஏண்டா, இவ்வளவு நேரம். அப்படியென்ன அங்கே பெரிய ஓவியத்தைக் கண்டுவிட்டாய்?”
என்று மணி சீண்டவும்,
“ஆமாண்டா, நீ சொன்னாலும் சொல்லாவிட்டாலும் அது சிறந்த ஓவியம்தான்”. என்று
பதிலளித்தான்.
“அப்படி அதிலென்ன சிறப்பைக்கண்டாய்?”
“சொல்றன், கேளு. ஒரு யானையின் பிடரிமேது ஏறி அமர்ந்த சிங்கம் அந்த யானையின்
தலையில் ஓங்கி அடித்துக் கொண்டிருக்கிறது. அப்போது அச்சிங்கதின் முகத்தில் ஒரு
வெறித்தனத்தையும் வலிதாங்கமுடியா யானையின் முகத்தில் வேதனையையும் மிகவும்
தத்ரூபமாக ஓவியத்தில் காட்டியுள்ளான் ஓவியன். அதுமட்டுமா அப்போது அம்மிருகங்களின்
உடல் நிலையையும் யனையின் முன்னங்கால்கள், அதன்வால் மற்றும் சிங்கத்தின் வால் அதன்
பின்னங்கால்கள் யானியின்மீது பதிந்திருக்கும் நிலை என வெகு நேர்த்தியாக அந்த
ஓவியத்தில் காட்டப்பட்டுள்ளது. அது சரி, நீ எதற்காக என்னை அழைத்தாய்”
“அப்படியா, நானும் அந்த ஓவியத்தைப் பார்க்கிறேன். இப்ப இந்த ஓவியத்தைப் பார். இடியாப்பம்
போல் சிக்கலாக ஏதோ கிறுக்கியிருக்கிறான். அதன் அடியில் மனிதன் தலைமாதிரியும் தெரிகிறது.
ஒருவட்டத்துக்குள் ஒரு பெரிய நேர்கோடும் அதனடியில் சிறியகோடும் அதன்மேல் பகுதியில்
இருபுறமும் இரண்டு புள்ளிகளுமாகவும் தெரிகிறது. தலையை சுற்றுகிறது. ஒன்றுமே புரியல”
என்றான் மணி.
“மணி, இது மாடர்ன் ஆர்ட்ஸ். உனக்கு தலை சுற்றுகிறதல்லவா? அதுவேதான். ஒரு மனிதனின்
தலையில் ஏகப்பட்ட சிந்தனைகள் ஓடிக்கொண்டிருப்பதை ஒவியன் இதன் மூலம் தெரியப்
படுத்துகிறான். இது வெறும் கிறுக்கல்கள் போல்தான் தெரியும். ஆனால் இதன்விலை சிலசமயம்
பல லட்சங்களைத் தாண்டிவிடும்” என்று ராமன் சொன்னதும் “ஆ” என்று வாயைத் திறந்தவனின்
வாயைமூடி தான்ரசித்த அந்த ஓவியத்தினருகே அழைத்துச்சென்றான்.
எல்லோரும் ஓவியக்கண்காட்சியை ரசித்தபடியும் விமர்சனம் செய்தபடியும் நகர்ந்து கொண்டிருந்தனர்.
கொஞ்சம் கொஞ்சமாக நேரமும் செல்ல பரிசுக்கு தேர்வு செய்யப்பட்ட ஓவியத்தை தெரிவுசெய்யும்
நேரமும் வந்தது. எல்லோரும் ஆவலாக எதிர்பார்த்துக் கொண்டிருக்கையில் அந்த அறிவிப்பு
வந்தது.
இந்த ஓவியக் கண்காட்சியை காணவந்த அனைவருக்கும் நன்றி. இப்போது நீங்கள் எதிபார்த்த
அந்தநேரம் வந்துவிட்டது. தேர்வு செய்யப்பட்ட ஓவியத்தை வரைந்தவர் அலகாபாத்தைச் சேர்ந்த ஓவியர்
திரு. மாணிக்சந்த் அவர்கள். இப்போது அவர்வரைந்த ஓவியம் இதோ உங்கள் முன் என்றதும்
எல்லோரும் பார்க்கும்படியாக அந்த ஓவியம் பெரியதாக திரையில் தோன்றியதும் எல்லோருடைய
கரவொலியும் அந்த அரங்கத்தையே அதிரவைத்தது.
திரையில் ஒருதாய் தன் ஆடையைவிலக்கி தன் கைக்குழந்தைக்கு பாலூட்டிக் கொண்டிருந்தாள்.
அத்தாயின் முகத்தில் தன்குழந்தை பாலருந்துவதால் ஏற்படும் பரவசம் தெரிகிறது. அக்குழந்தையின்
முகத்திலோ பசியாறியபாங்கு வெளிப்படுகிறது. குழந்தையின் வாயோரம் சிறிதே வழியும்பால்.
இப்படி அவ்வோவியம் ஒருதாய் தன்குழந்தைக்கு பாலூட்டுவதை அப்படியே கண்முன் நிறுத்தியது.
ஒருவழியாக ஓவியக் கண்காட்சி முடிவுக்கு வந்து எல்லோரும் கலைந்துசெல்ல ராமனும் மணியும்
அரங்கைவிட்டு வெளியேறினர். மணி ஏதோ சிந்தித்தவாறு வந்துகொண்டிருந்தான். அதைக்கவனித்த
ராமன்,
“என்ன மணி, என்ன சிந்தனை?” என்று கேட்டான்.
“ஒன்றுமில்லை, ஓவியக் கண்காட்சியில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஓவியம் அதற்குண்டான தகுதியுடையது
தானா?”
“ஏன் அதிலென்ன சந்தேகம்?”images-49
“சந்தேகம்தான். எத்தனையோ மனதைக்கவரும் இயற்கைக்காட்சிகளை ஒவியமாகவரைந்து
வைத்திருந்தார்கள். அதுமட்டுமா, எத்தனையோ கடவுள் படங்கள் தெய்வீகத்தன்மையுடன் தோன்றின.
அதிலும் குழலூதும் கண்ணனின் படமும் அவனருகே நின்று அவ்வோசையை செவிமடுத்த பசுக்கள்
போன்ற ஓவியங்கள் இருக்க இந்த ஓவியத்தைப்போய் தேர்ந்தெடுத்திருக்கிறார்களே” என்றான்.
“அதென்ன இந்த ஓவியத்தைப்போய் என்று சொல்கிறாய்? எனக்கொன்றும் புரியவில்லை?”
“அந்த ஓவியம் பெண்ணை இழிவுபடுத்தும்படி ஆடையைவிலக்கி பாலூட்டுவதாக ஓவியத்தை
தீட்டியுள்ளான் ஓவியன். தேர்வு செய்பவர்களுக்கு கடவுள் படங்களின் முகத்தில் மிளிரும்
தெய்வீகத்தன்மையைக் காணமுடியவில்லையா?”
“மணி, அந்த ஓவியத்தை தேர்வு செய்தவர்கள் ரசணையற்றவர்கள் அல்ல. தெய்வீகத்தன்மை
என்கிறாயே அது எப்படி இருக்கும்? அதைப் பார்த்திருக்கின்றாயா? அல்லது யாராவது
பார்த்திருக்கிறார்களா? அப்படித்தெரியாத ஒன்றை எப்படி தேர்வுசெய்பவர்களால் ஓவியத்தில்
காணமுடியும்? அதுபோகட்டும். பெண்ணை ஓவியன் இழிவுபடுத்துவதாக சொல்கிறாய். அது தவறு.
உன் பார்வைதான் எனக்கு இழிவாகத் தெரிகிறது. உன் மனதைத்தொட்டு சொல். அதுபோன்ற ஒரு
காட்சியை நீ பார்த்ததில்லையா?’ என்றான் ராமன்.
அதற்கு “ஆம்” என்பதுபோல் மணி தலையசைத்தான்.
“நீ கண்ணில் பார்த்ததைத்தான் அந்த ஓவியன் தூரிகை கொண்டு வரைந்திருக்கிறான். அந்த தாயின்
முகத்தில் தோன்றிய பரவசத்தையும் அந்த பிஞ்சுகுழந்தையின் முகத்தில் பசியடங்கிய பாங்கும்
உன் கண்ணில் தெரியவில்லையா? அதையெல்லாம் கவனித்து அந்த ஓவியத்தை ரசிக்காமல் ஆடை
விலகியிருப்பதை மட்டும் பார்த்துவிட்டு அந்த ஓவியனை இகழாதே” என்று ராமன் சொன்னதும்
மணி தன் தவற்றையுணர்ந்தான்.
அவர்கள் வீடுநோக்கி செல்லும்போது எங்கிருந்தோ அதைத்தெளிவு செய்வதுபோல் “இருக்கும்
இடத்தைவிட்டு இல்லாதஇடம் தேடி எங்கெங்கோ அலைகிறார் ஞானத்தங்கமே, அவர் ஏதும் அறியாரடி
ஞானத்தங்கமே” என்ற பாடல் காற்றில் மிதந்துவந்து அவர்கள் காதில் விழுந்தது.
sankara20140704-300x300
-சங்கர சுப்பிரமணியன்.
Share this Post:
பிம்பமா உயிரோட்டமா சொல் மனமே? — சிறுகதை—}சங்கர சுப்பிரமணியன். Reviewed by on November 15, 2016 .

படைப்புக்களை படைக்கும்போது ஏற்படும் சிரமங்கள் அதற்காக சிரத்தை எடுத்துக் கொள்பவர்களுக்குத்தான் தெரியும். ஏதோ நானும் படைக்கிறேன் என்பனவெல்லாம் படைப்பாகிடாது. கல்லெல்லாம் மாணிக்கக் கல்லாகுமா கலையெல்லாம் கண்கள் சொல்லும் கலையாகுமா? என்ற பொருள் பொதிந்த கண்ணதாசனின் வரிகளில் தான் எத்தனை உயிரோட்டமுள்ளது. என்று பேசிக்கொண்டே மணியும் ராமனும் சர். முத்தையா அரங்கில் நடைபெற்றுக் கொண்டிருந்த அந்த பிரம்மாண்டமான ஓவியக் கண்காட்சியைக் காணச் சென்றார்கள். இதில் சிறப்பு என்னவென்றால் இது வெறும் கண்காட்சி மட்டும் அல்ல அதில் கலந்து கொள்ளும்

ABOUT AUTHOR /