மதத்தால் செய்வதை மாற்றிச் செய்தால்? — சிறுகதை—}சங்கர சுப்பிரமணியன்.

 ›  ›  › மதத்தால் செய்வதை மாற்றிச் செய்தால்? — சிறுகதை—}சங்கர சுப்பிரமணியன்.

கதைகள்,செய்திகள்+

மதத்தால் செய்வதை மாற்றிச் செய்தால்? — சிறுகதை—}சங்கர சுப்பிரமணியன்.

மும்பையில் வசித்து வரும் சிவகுரு தனது குடும்பத்துடன் நெல்லைக்கு அருகிலுள்ள
சுத்தமல்லி என்ற ஊருக்கு தனது மைத்துணன் ரகுவின் திருமணத்துக்கு வந்திருந்தான்.
திருமணம் எல்லாம் நன்றாக நடந்தது. இரண்டு  வாரம் சென்றதே தெரியவில்லை.
கடைசியாக இன்னும் சிலதினங்களில் ஊருக்கு திரும்ப வேண்டியிருந்ததால் அதற்கு
வேண்டிய ஏற்பாடுகளைச் செய்து கொண்டிருக்கையில் அங்கு வந்த ரகு,
“அத்தான் ஊருக்கு புறப்பட தயாராகி விட்டீர்களா? சொல்ல மறந்து விட்டேன். நாளை
நாம் சேரன்மாதேவியிலுள்ள அம்மன் கோவிலுக்கு போகிறோம்” என்றான்.
“அப்படியா, ஏதாவது முக்கிய காரணமா?”
“ஆமாம், அத்தான். திருமணம் நல்லபடியாக நடந்தால் அம்மனுக்கு பட்டு புடவை சாத்தி
சிறப்பு பூஜை செய்வதாக அம்மா வேண்டிக்கொண்டார்கள். அதை நிறைவேற்றத்தான்
போகிறோம்”
என்று சொன்னபடியே பக்கத்து அறைக்குள் சென்றவன் ஒரு அட்டைப் பெட்டியுடன்
வந்தான். அதைத்திறந்து அதிலிருந்த புடவையை எடுத்து சிவகுருவிடம் காண்பித்தவன்,
“எப்படி இருக்கிறது? முப்பத்தியிரண்டாயிரம் ரூபாய் இதன்விலை. நெல்லையிலேயே
மிகவும் பிரபலமான கடையில் எடுத்தது” என்றான்.
“நன்றாகத்தான் உள்ளது. ஆனால் இவ்வளவு விலைகொடுத்து. வாங்க வேண்டுமா?
கருணையே உருவான அந்த அம்மனுக்கு எத்தனையோ பட்டுப் புழுக்களை கொடூரமாகக்
கொன்று அதன் மூலம் நெய்யப்பட்ட பட்டுப்புடவையைத்தான் கொடுக்க வேண்டுமா? ஏன்
ஒரு சாதாரண நூல் புடவையை குறைந்த விலையில் எடுத்துக்கொடுத்தால் போதாதா?”
என்று கேட்டான் சிவகுரு.
“அத்தான். நீங்கள் எப்பவுமே இப்படித்தான். நாத்திகன்போல் பேசிக்கொண்டிருப்பீர்கள்”.
“என்னப்பா இது, நல்லதைச் சொன்னால் நாத்திகனா? உன் விருப்பம் அதுதான்
என்றால் நான் ஒன்றும் சொல்லவில்லை. நாளை கோவிலுக்கு போகலாம்” என்று
சொல்லிவிட்டு தன் வேலையில் கவனம் செலுத்தினான்.
மறுநாள் சேரன்மாதேவி அம்மனுக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. கோவிலில் இவர்கள்
குடும்பத்தையும் சேர்த்து இருபதுபேர் வரை இருந்தனர். பட்டுப்புடவை மிகவும் பிரமாதமாக
இருந்தது. அந்த விலையுயர்ந்த புடவையால் அம்மனின் முகத்தில் எந்த மாற்றமும் இல்லை.
கோவிலுக்கு வந்தவர்கள் அம்மனுக்கு உடுத்தப்பட்டிருந்த அந்த விலையுயர்ந்த புடவையையும்
இவர்களையும் மாறிமாறி பார்த்தார்களோ அன்றி அவர்கள் முகங்களிலும் எந்த விதமான
சலனத்தையும் காணமுடியவில்லை.
பூஜை முடிந்து வீடு திரும்பியதும் சிவகுரு ரகுவிடம் அடுத்தநாள் அருகிலுள்ள அம்மன்
கோவிலுக்கு போகலாம் என்று சொன்னான். என்ன காரணம் என்று கேட்ட ரகுவிடம் தனக்கும்
ஒரு வேண்டுதல் உள்ளது என்று பதில் சொன்னான். அதன் பிறகு தன் மனைவி நிர்மலாவை
அழைத்துக் கொண்டு ஜவுளிக்கடைக்கு சென்று மிகவும் குறைந்த விலையில் தரமான சுமார்
இருபது நூல்புடைவைகளை ரூபாய் நாலாயிரத்துக்குள் வாங்கினான். மனைவி எதற்கு
இவ்வளவு புடைவைகள் என்று கேட்டதற்கு எல்லாம் ஒரு காரணமாகத்தான் என்று சொல்லி
சமாளித்தான்.
அடுத்தநாள் அம்மன் கோவிலுக்கு குடும்பத்தோடு எல்லோரும் சென்றனர். சேரன்மதேவி அம்மன்
கோவிலைப்போல் பிரமாதமான கோவிலாக இல்லாவிட்டாலும் அதுவும் ஒரு முக்கியமான
கோவில்தான். சிவகுரு தான் கொண்டுவந்திருந்த புடவைகளில் ஒன்றை கோவில் பூஜாரியிடம்
கொடுத்து அம்மனுக்கு உடுத்தி பூஜை செய்யச் சொன்னான். பூஜை நல்லபடியாக முடிந்தது. அம்மன்
முகத்தைப் பார்த்தான். குறைந்தவிலை புடவை என்பதால் அம்மன் முகத்தில் எந்தவித மாற்றமும்
இல்லை. அப்போது கோவிலுக்கு அம்மனை வழிபட வந்திருந்தவர்களின் முகங்களிலும் எவ்வித
மாற்றதையும் காணமுடியவில்லை.
கொஞ்ச நேரம் சென்றது. கோவில்வாசலில் அமர்ந்து பிரசாதத்தை சாப்பிட்டுக் கோண்டிருந்தபோது
ஒரு வயதான அம்மையார் அங்கு வந்திருந்தார். வறுமையின் முழுச்சுவடும் அந்த அம்மாவின்
புடவையில் தெரிந்தது. சாயம்போன புடவை உடுத்தியிருந்தாள். அப்புடவையில் எத்தனையோ
கிழிசல்கள். சில கிழிசல்களை தைக்கவே முடியாத அளவுக்கு அப்புடவை நைந்து போயிருந்தது.
இதையெல்லாம் பார்த்த சிவகுரு அந்த அம்மாவை அழைத்தான்.
“அம்மா, கொஞ்சம் இங்க வரீங்களா?”
“என்ன ஐயா, என்னைத்தான் கூப்பிட்டீங்களா?”
“ஆமாம், உங்களைத்தான், இப்படி வாங்க” என்று அழைக்கவும் அந்த அம்மா வந்தாள்.
அம்மா நாங்கள் ஒரு வேண்டுதல் செய்ய இங்கு வந்திருக்கிறோம். வறுமையில் இருப்பவர்களுக்கு
புடவை கொடுப்பதுதான் அந்த வேண்டுதல். உங்களுக்கு ஒரு புடைவை கொடுத்தால் வாங்கிக்
கொள்வீர்களா எனறு கேட்டதுதான் தாமதம் அந்த அம்மா பொங்கி வந்த கண்ணீரை அடக்கமுடியாமல்
நா தழிதழுக்க கரும்பு தின்னக் கூலியா ஐயா, மாற்றாடை இல்லாமல் சிரமப்படும் எனக்கு இது
பெரிய பரிசு. கொடுங்க வாங்கிக் கொள்கிறேன் என்றாள். அவளிடம் கொண்டுவந்திருந்த புடவைகளில்
ஒன்றைக் கொடுத்த சிவகுரு,
“அம்மா எனக்கு ஒரு உதவி செய்ய முடியுமா?” என்று கேட்டான்.
“என்ன ஐயா இப்படி கேக்கிறீங்க? என் மானத்த காக்க புடவை தந்த புண்ணியவான் நீங்க. என்ன
உதவி வேணும் சொல்லுங்க”
“நல்லதும்மா, உங்களைப்போல வறுமையில் இருக்கும் பத்து பதினைந்து பேரைக் கூட்டிக்கிட்டு
வரமுடியுமா? அவங்களுக்கும் உங்களுக்கு கொடுத்ததுபோல் புடவை கொடுப்போம்” என்றான்.
“எங்கள மாதிரி ஏழைங்க இங்க நெறய இருக்காங்க, ஐயா. கொஞ்சநேரம் இருங்க. இதோ பத்து
பதினைந்து பேரை கூட்டிட்டு வாரன்” என்று வேகமாய் அங்கிருந்து சென்றாள். சுமார் அரைமணி
நேரம் சென்றது. சொன்னபடியே அந்த வயதான அம்மா ஒரு கூட்டத்தோடு வந்தாள்.
அப்போது சிவகுரு ரகுவைப் பார்த்து, “ரகு, சேரன்மாதேவி அம்மனுக்கு நீ முப்பத்தியிரண்டாயிரம்
ரூபாயில் பட்டு புடவை சாத்தியபோதும் இங்கே இந்த அம்மனுக்கு வெறும் இருநூறு ரூபாயில்
சாதா நூல்புடவையை சத்திய போதும் கண்டிராத ஒரு அற்புதத்தை இப்போது காண்பாய்” என்றான்.
“என்ன அத்தான் புதிர் போடுகிறீர்கள்?”
“புதிர் ஒன்றுமில்லை இங்கே வந்திருக்கும் அந்த ஏழைப்பெண்களுக்கு கொண்டுவந்திருக்கும்
புடைவைகளில் ஆளுக்கு ஒன்று கொடு”
சிவகுரு சொன்னபடியே ரகுவும் வந்த அப்பெண்களுக்கு புடவைகளைக் கொடுத்தான்.
அப்படி ரகு புடவைகளக் கொடுக்கும்போது அப்பெண்களின் முகத்தில் தோன்றிய மகிழ்ச்சியை
வார்த்தைகளால் கூறிட முடியாது. அதைக்கண்ணால் கண்ட ரகுவுக்கு அத்தான் சிவகுரு
சொன்னதற்கான அர்த்தம் புரிந்தது. நியாயத்தைக் கூறுபவர்களெல்லாம் நாத்திகர்கள் என்றால்
யாரும் நியாயத்தைக் கூறமுடியாது என்பதை உணர்ந்தான். அவனையும் அறியாமல் அவன்
அத்தானின் மேல் அவனுக்கு பெரிய மரியாதை ஏற்பட்டதுடன் ஏழையின் சிரிப்பில் இறைவனைக்
காணலாம் என்று சொல்லப் படுவதெல்லாம் ஏதோ சொல் அலங்காரமே என்ற தனது எண்ணம்
தவறு என்பதையும் உண்மையிலேயே கண்முன் நடந்ததிலிருந்து புரிந்து கொண்டான்.
sankara20140704-300x300
-சங்கர சுப்பிரமணியன்.
Share this Post:
மதத்தால் செய்வதை மாற்றிச் செய்தால்? — சிறுகதை—}சங்கர சுப்பிரமணியன். Reviewed by on September 25, 2016 .

மும்பையில் வசித்து வரும் சிவகுரு தனது குடும்பத்துடன் நெல்லைக்கு அருகிலுள்ள சுத்தமல்லி என்ற ஊருக்கு தனது மைத்துணன் ரகுவின் திருமணத்துக்கு வந்திருந்தான். திருமணம் எல்லாம் நன்றாக நடந்தது. இரண்டு  வாரம் சென்றதே தெரியவில்லை. கடைசியாக இன்னும் சிலதினங்களில் ஊருக்கு திரும்ப வேண்டியிருந்ததால் அதற்கு வேண்டிய ஏற்பாடுகளைச் செய்து கொண்டிருக்கையில் அங்கு வந்த ரகு, “அத்தான் ஊருக்கு புறப்பட தயாராகி விட்டீர்களா? சொல்ல மறந்து விட்டேன். நாளை நாம் சேரன்மாதேவியிலுள்ள அம்மன் கோவிலுக்கு போகிறோம்” என்றான். “அப்படியா, ஏதாவது

ABOUT AUTHOR /