வைத்தியர் வைத்திலிங்கம். …… (சிறுகதை) — } பொன் குலேந்திரன் –கனடா.

 ›  › வைத்தியர் வைத்திலிங்கம். …… (சிறுகதை) — } பொன் குலேந்திரன் –கனடா.

கதைகள்

வைத்தியர் வைத்திலிங்கம். …… (சிறுகதை) — } பொன் குலேந்திரன் –கனடா.

( அடிக்கடி எமது தேகநலம் குன்றியவுடன் நாம் முதலில் நாடுவது வைத்தியாரை. இக்கதை ஆயுர்N;வத வைத்தியர் ஒருவர் பற்றிய கதை. இக் கதை உண்மையும் சற்று கற்பனையும் கலந்தது.)

பள்ளிக்கூட விடுதலைக் காலம் ஆரம்பிக்க சில நாட்களுக்கு முன்னரே என் தாயாரிடமிருந்து “முடமாவடி வைத்திலிங்கப் பரியாரியிடம் பேதி மருந்து எடுத்து என் வயற்றுக்குள் இருக்கும் அடசல்களை முதலில் சுத்தப்படுத்த ரெடியாக இரு. அண்ணா உன்னை அவரிடம் கூட்டிக் கொண்டுப் போவார். அவருக்குத் தான் வைத்தியரை நல்லாய் தெரியும் “ என்ற எச்சரிக்கை வரும். வருடத்துக்கு இருதடவையாவது அந்த பேதியை நான் எடுத்தாக வேண்டும். அதை நான் எடுக்க மறுத்தால் கடுக்காய் போட்ட ஆமணக்கம் எண்ணையை மூக்கைப் பிடித்தபடி குடித்தாக வேண்டும். இதன் மணமே வயற்றை குமட்டும் மணம். அம்மா போட்ட கட்டளைக்கு எதிர் கட்டளை நான் போட்டாகத்தானே வேண்டு;ம். அவளுக்கு தெரியும் எனது பிடிவாதக் குணம்.

“சரி அம்மா வைத்தியரின் முகத்தைப் பார்த்து கனகாலம். நான் அவர் தரும் வயிற்றைப் பிரட்டும் சிறு கறுப்புக் குளிசையை எடுக்கிறன். வயிற்றாலை போய் முடிந்த பிறகு எனக்கு கருவாடு போட்ட இரசத்தில் சோற்றில் குழைத்து, பச்சை மிளகாயும் சின்ன வெங்காயமும் சேர்த்து நீ எனக்கு ஊட்டி விடவேணடும்;. செய்வியா? “

“உனக்கு எப்பவும் சாப்பாட்டு நினைவுதான். முதலில் பேதியை எடு. பிறகு பார்ப்பம”; என்றாள் அவள். எனக்கு கறுவாட்டு இரசம் என்றால் நல்ல விருப்பம். அம்மாவின் கையால்; சோற்றை திரணையாக உன்பது தனி ருசி. அதுவும் சின்ன வெங்காயத்தை கடித்து உன்பது போல் இருக்குமா?

வைத்திலிங்கத்தாரின் பேதி குளசையின் மணத்தை நினைத்தாலே வயிற்றை குமட்டும். அவர் எப்படி அதை தயாரிக்கிறாரோ தெரியாது. விதம் விதமான மருந்துகள் போத்தல்களில் நிறப்பி வைத்திருப்பார்.

“ பேதி மருந்து வயிற்றுக்குள் தஞ்சம் அடையும் நாளன்று தூக்கத்தில இருந்து காலை ஆறுமணிக்கே என்னை அம்மா எழுப்பிவிடுவாள். ஏதோ பரீட்சைக்குப் போவது மாதிரி பல்லை துளைக்கி, வாயை கொப்பளித்துவிட்டு வெறும் வயிற்றோடு வைத்தியரிடம் போயாக வேண்டும். மரணதண்டனைக்கு கைதியை கொண்டு போவது போல் எனக்கு இருக்கும். என் அண்ணா புன்சிரிப்போடு தயாராக இருப்பார். “

“கெதியிலை வா. நேரம் போகுது. எனக்கு வேலையிருக்கு. வைத்தியர்; பார்த்துக் கொண்டிருக்கப் போகிறார்“ என்று என்னை அவசரப்படுத்துவார். ஓரு வெலை வைத்தியருக்கும் பேதிமருந்துக்கு ஆட்களை தேடிபிடித்து கொண்டு போக அண்ணாவுக்கு கொமிஷன் ஏதும் உண்டோ என்று நான் நினைப்பதுண்டு. வைத்தியருக்கு எப்படி தெரியும் நான் வரப்போவது. அண்ணா ஏற்கனவே சொல்லியிருப்பாரோ?

வைத்தியர் வீடு முடமாவடியில், எங்கள் வீட்டிலிருந்து, ஒருமைல் தூரத்தில் இருந்தது. ஒழுங்கைகள்யூூடாக எங்கள் இருவரதும் பயணம் ஆரம்பிக்கும். எனக்கு தனியாக

யாழ்ப்பாணத்து ஒழுங்கைகளினூடாக போவதென்றாலே பயமும் அருவருப்பும். ஒழுங்கைகளில் சனப்போக்கு வரத்து குறைவானபடியால் சனத்துக்கு மல சலம் களிக்க வசதியாக இருக்கும். அந்த நாற்றம் வயிற்றைக் குமட்டும். வைத்திலிங்கப் பரியாரியார் வீட்டுக்குப் போகும் ஒழுங்கை தெரு நாய்களின் ஆட்சியின் கீழ் இருந்தது. அதுவும் அக்கூட்டத்துக்கு தலைவன் கள்ளுக்கடை வைத்திருக்கும் கந்தனுக்கு பிரியமான “சடையன்” எனற பெயர் கொண்ட கறுவல் நாய். நல்ல உயரம். அந்நாய் குரைத்தாலே பத்து வீட்டுக்கு அப்பால் கேட்கும். எப்போதும் மற்றைய நாய்களோடு சடையன் சண்டைக்கு போக தயாராக இருப்பான். அதுவும் தனது காதலியான பக்கத்து வீட்டு பெட்டை நாய் ராணியை வேறு நாய்களோடு கண்டால் சடையனுக்கு கோபம் பொத்துக்கொண்டு வரும். தனக்கு மாத்திரம் ராணி சொந்தம் என்பது சடையனின் எண்ணம் போலும். சடையனின் தோற்றத்தில் ராணிக்கு ஒரு தனிப்பிடிப்பு.

அண்ணாவுக்கு அந்த வழி அத்துப்படி. போகிற வழியில் எனது தந்தையாருக்கு தெரிந்தவர்களைச் சந்தித்தால் “என்ன கமலன் தம்பிக்கு வைத்திலிங்கத்தாரிடம் பேதி மருந்து குடுக்க கூட்டிப் போறீரோ” . இது அவர்களின் விடுப்புக் கேள்வி. அவர்களுக்கும் அந்த குளிசையை எடுத்து மயங்கி விழும் அளவுக்கு மலம் கழித்த அனுபவம் போல.

சுமார் இருபது நிமிட நடை பயணத்தின் பின் வைத்திலிங்கத்தாரின் வீட்டை அடைந்து விடுவோம். அவர் வீட்டில் இருந்து சுமார் ஐம்பது அடி தூரத்திலேயே மருந்து வாசனை மூக்கைத் துளைக்கும். அவரை சந்திக்க முன்னர் அவரை உங்களுக்கு அறிமுகப்படுத்துவது என் கடமை அல்லவா.

வைத்தியரை நான் முதலில் அண்ணரோடு சந்திந்தபோது அவருக்கு சுமார் அறுபது வயது இருக்கும். ஆனால் பார்தவர்கள் ஐம்பது வயதுதான் மதிப்பார்;கள். நெற்றி நிரம்பிய திருநீறும், சந்தனப்பொட்டும் அதைத் தொடர்ந்து இரு கைகளையும் திருநீறு ஆக்கிரமித்து காட்சி தரும். அடிக்கடி முருகா முருகா என்று சொல்லிக் கொள்வார். கதிரைக்கு பக்கத்தில் உள்ள மேசையில் திருப்புகழ் கம்பீரமாக காட்;சி தரும். காலையும் மாலையும் நல்லூர் கந்தனை தரிசிக்கத் தவறமாட்டார். நல்லூர் முருகன் கோவில் திருவிழாக்களில் ஒரு திருவிழா அவரது உபயம். பல காலமாக செய்து வருகிறார். அதுவும் காலை ஐந்து மணி பூசையைத் தவறவிட மாட்டார். நான்கு மணிக்கே எழும்பிவிடுவார். மீன் முட்டை, மாமிசம் சாப்பிட மாட்டார். இனிப்பு வகைகளை ஒதுக்கி வைத்துவிடுவார். அவர் வீட்டில் எல்லோரும் சைவம். புகைத்தல் கிடையாது. அவரின் தந்தையார் இறக்கும் போது வயது தொன்னூறு. பாட்டனார் இறக்கும் போது வயது எண்பத்தைந்து. பரம்பரை பரம்பரையாக நீண்ட ஆயுள் காரர்கள். பிரபல வைத்தியராக இருந்த யாழ்ப்பாண மன்னன் பரராஜசிங்கம் வழி வந்தவர் என்று அம்மா சொல்லிக் கேள்விப்பட்டிருக்கிறன்.

அண்ணருக்கு அவரின் மருத்தெண்ணை தலையில் தினமும் வைக்காவிட்டால் அவரின் தும்மலை நிற்பாட்ட முடியாது. அந்த மருத்தெண்ணையின் மணத்தோடு எப்படி ஸ்கூலுக்குப் போய் படிக்கிறாரோ தெரியாது. ஆனால் அவரது வகுப்பு வாத்தியாரும் வைத்திலிங்கத்தாரின்; எண்ணை வைப்பவர் என்பது எனக்குத் தெரியும்.

வைத்திலிங்கத்தாரின் வீடு அந்த வீதியில் பிரபமாண்டமான ஓட்டு வீடு. அந்த வீடு அவரது தகப்பனார் வைத்தியம் செய்து சம்பாதித்துக் கட்டிய வீடு. வீட்டுக்கு பின் பக்கத்தில் பெரிய வாழைத்தோட்டம். ஒரு பகுதியில் மூலிகைத்தோட்டம். அவரது

பொழுது போக்கு தோட்ட வேலை. தானே பாத்தி கட்டி மரங்களுக்கு தண்ணீர் பாய்ச்சுவார் வைத்தியர். வீட்டுக்குள் போனால் மருந்து வாசனை எங்களை ஆக்கிரமித்து கொள்ளும். முன் விராந்தையில் உள்ள பழைய சாய்மானக் கதிரையில் கையில் திருப்புகழோடு வீற்றிருப்பார் வைத்தியர். அவருக்கு தன் மகன் புண்ணியலிங்கமும் தன்னைப் போல் ஆயுர் வேத வைத்தியராக வர வேண்டும் என்பது அவர் ஆசை. ஆகவே மருந்துகளை தயாரிப்பது மகனின் பொறுப்பு. தன் ஒரே மகளை பத்தாம் வகுப்பு படிப்போடு நிறுத்திவிட்டு அரசாங்கத்தில் நல்ல பதவியில் இருக்கும் தன் தங்கை மகனுக்கு மணம் முடித்துவைத்துவிட்டார். அவர்கள் இருவரும் கொழும்பில் வாசம். வெள்ளவத்தையில் சொந்த வீடு வேறு. நல்லூர் திருவிழாவுக்கு மட்டும் ஒரு கிழமை லீவில் வந்து நின்று போகத் தவறமாட்டார்கள். இந்த விடுப்புக் கதைகள் எல்லாம் பக்கத்து வீட்டு பங்கஜப் பாட்டி என் அம்மாவுக்கு சொன்ன போது என் செவியில் விழுந்தவை..

“என்ன தம்பி கண்டு கனகாலம். அண்ணரோடு அடிக்கடி இந்தப்பக்கம் வரலாமே” என்று பரியாரி வைத்திலிங்கத்தாரின் வரவேற்பு இருக்கும். நல்ல மாம்பழ நிறம் அவர். உயரம் ஆறடி இருக்கும். இளைஞராக இருக்கும் போது அழகனாக இருந்திருப்பார். அதனால் தான் அழகான மனைவியை தேர்ந்தெடுத்திருக்கிறார். அமைதியான கூச்சமுள்ள துணைவி. அதிகம் பேசமாட்டாள். வைத்தியரின் தோற்றம் அவர் வயதைக் குறைத்து காட்டியது. ஓரு வேளை இளமையாக தோற்றமளிக்க லேகியம் ஏதும் எடுக்கிறாரோ என்னவோ. மனைவி ஒரு போதும் தன் முகத்தை வீட்டுக்கு வைத்தியம் பார்க்க வந்தவர்களிடம் காட்டமாட்டாள்;. ஒரு வேளை வைத்தியரின் கட்டளையோ என்னவோ தெரியாது. தற்செயலாக மனைவியின் அழகை பார்த்துவிட்டடு விமர்சித்தால், ஏன் பிரச்சனை என்று நினைத்தாரோ போலும். முழுநேரமும் சமையல் அறையிலும்; மருந்துகள் தயாரிக்கும் அறையிலும் தான் அவளின் சீவியம்..

வைத்தியரிடம் போனவுடன் முதலில் என் நாடியைப் பிடித்துப் பார்ப்;பார். அவர் விரல்கள் என் நரம்புகளில் வீணை வாசிக்கும். நாக்கை நீட்டச் சொல்லுவார். விழிகளை பிதுங்கச்சொல்லுவார். வயிற்றை அமர்த்தி பரிசோதனை செய்வார். கால் பாதங்களை பார்ப்பார். எக்ஸ்ரே எடுக்கிற மாதிரி முழு உடலையும் பரிசோதித்து விடுவார். பேதி குளிசை தருவதற்கு இந்த பரிசோதனை தேவையா? என்ன சொல்லப் போகிறாரோ என்ற பயம் எனக்கு. இரண்டு குளிசைகளை தந்து ,பத்தியம் இருக்கச் சொல்லாவிட்டால் சரி.

“வயிற்றிலை சரியான அடசல் கிடக்குது. இரத்த ஓட்டம் சீராக இல்லை கண்டதைக் கடையதை அம்மாவுக்கு தெரியாமல் சாப்பிடுகிறீர் போல இருக்கு. ஒரு வருஷத்துக்கு மூன்று முறையாவது பேதி மருந்து எடுக்க வேண்டும். வயிற்றிலை பிரச்சனை வந்தால் பிறகு பத்தியம் இருந்து, கசாயம் குடிக்க வேண்டிவரும்.” என்றார் வைத்தியர் சிரித்தபடி.

“எண்டை தம்பிக்கு நல்லூர் திருவிழா என்றால் நல்ல குசால். அப்பா கொடுக்கிற காசிலை கடலைக்காரிகளை விட்டு வைப்பதில்லை. இரகசியமாக கச்சான் , சிந்தாமணி, பொரி சோளம்; என்று ஒரு பிடிபிடிப்பான்.” அண்ணா என்னை பற்றி வைத்தியரிடம் ஏற்றி வைத்தார். மகனை கூப்பிட்டு ஏதோ மூன்று குளிசைகளை போத்தலில் இருந்து எடுத்து வந்து கொடுக்கும் படி சொன்னார் வைத்தியர்;.

“என்ன ஐயா. எண்டை நண்பன் மாணிக்கத்தின் தகப்பனாருக்கு இப்ப எப்படி?. ஏதோ கடுமையான வியாதியாம் எண்டு கேள்விப்பட்டனான்”. இது அண்ணரின் கேள்வி. p.

“ஒரு மாதம் கடும் பத்தியத்தோடு கசாயம் கொடுத்தனான். மாறி விட்டது நோய். சாப்பாட்டிலை கவனமாயிருக்கும் படி சொன்னேன். நீண்ட காலம் வாழ வேண்டும் என்றால் உடம்பைக் கவனித்து கொள்ள வேண்டும். இறச்சி சாப்பிடுவதை குறைக்க வேண்டும் என்று சொல்லி அனுப்பினேன்” என்றார் வைத்தியர்.

வைத்தி வைத்திலிங்கம் நாடி பிடித்து மருந்து கொடுத்தால் பிழையாக போனதில்லை. பெரிய ஆஸ்பத்தி;ரிக்கு. பல தடவை எறி இறங்கி இரத்தப் பரிசோதனைகள் செய்து நோயை மாற்றமுடியாதவர்களின் உயிர்களை வைத்திலிங்கத்தாரின் கசாயம் தான் காப்பாற்றி இருக்கிறது. யமன் கூட அவரைக்கண்டால் சற்று ஒதுங்கி நிப்;பான் என்பினம் ஊர்சனம். அவ்வளவு கைராசிக்காரர்;. காலம் சென்ற அவர் தகப்பனார் வைத்தியர் மகாலிங்கத்தைப் போல அவருக்கு கைராசியிருந்தது. அந்த வைத்தியத் தொழில் பரம்பரைத் தொழில். யாழ்ப்பாணத்தை ஒரு காலத்தில் ஆண்ட மன்னன் பரராஜசிங்கத்துக்கும் அவர் மூதாதையர் வைத்தியம் பார்த்தார்களாம். ஆதனால் கிடைத்த பல பரப்பு காணி, இராசாவின் விதீயில் இருக்கிறது. வெள்ளைக்காரன் ஆட்சியின் போது வெள்ளைக்கார மாகாண அதிபர் ஜொன்சன் கூட இவரது பூட்டனாரின் வைத்திய உதவியை நாடியதாகக் கேள்வி. இதையெல்லாம் ஊர் சனத்தின் உளரல்கள். ஒரு வேலை உண்மையாக இருக்கலாம். என் குடும்பத்துக்கு மட்டும் அவர் மேல் நல்ல மரியாதையும் நம்பிக்கையும்.

பேதி குளிசைகளை வாங்கிக் கொண்டு வீடு திரும்பினோம். நல்ல காலம், சடையன் எங்களை காணவில்லை. ராணியோடு எங்கையோ ஊர் சுத்தப் போய்விட்டான்;.

ழூழூழூழூழூழூ

“நாளைக்கு வெள்ளி. அடுத்தநாள் சனி, பிணி போக்கும். நாள். அண்டைக்கு காலை பேதி எடுக்கத் தயாராக இரு.” இது அம்மாவின் கட்டளை. தூக்குத்தண்டனைக்கு நாள் நேரமும் காலமும் குறித்தாகி விட்டது போல் எனக்கு இருந்தது. அப்படி என்ன அவசரம் அம்மாவுக்கு. ஒரு கிழமை தள்ளி பேதி மருந்தை நான் எடுக்கலாமே. ஏதோ நாள் நேரம் பார்த்து திருமணத்துக்கு குறித்தாகிவிட்டதோ? இந்தப் பேதி எடுக்கும் நாளை தள்ளிப் போட வழியில்லையா? சிந்தித்துக் கொண்டு பல் துலக்கினேன். அந்த நேரம் பார்த்து பங்கஜம் பாட்டி விழுந்தடித்துக்கொண்டு அவசரம் அவசரமாக ஓடி வந்தாள். ஏதோ தலை போற காரியம் போல் எனக்குத் தெரிந்தது.

“உருக்குமணி உருக்குமணி விஷயம் தெரியுமா உமக்கு?…”

என் அம்மாவின பெயர் ருக்மணி, அனால் பங்கஜம் பாட்டி உச்சரிக்கும் போது பெயர் உருக்குமணியாக மாறிவிடும்.

அம்மாவும், பாட்டியின் பதட்டத்தை கண்டு எதோ அவசர செய்தியாக்கும் என நினைத்தாள்.

“என்ன மாமி என்ன அப்படி பதட்டத்தோடை வாறியள்?”

“உனக்கு செய்தி தெரியுமோ? பாவம் வைத்தியர் வைத்திலிங்கம் நாக பாம்பு கடித்து இன்டைக்கு விடிய மோசம் போயிட்டார்”

“என்ன சொல்லுறியள். அவரை பாம்பு எப்படி எப்ப கடிச்சது?”

“எல்லாம் வாழைத் தோட்டத்துச் சருகுக்குள்ளை இருந்த பாம்பு செய்த வேலைதான். பழுத்திருந்த கதலிவாழைக் குலையை வெட்ட சூரியன் உதிக்க முன்னரே எழும்பி, வாழைத் தோட்டத்துக்குப் போனவராம், இன்டைக்கு, பூசைக்கு நல்லூருக்க குடுக்க

என்று. பாம்பு இருந்ததை அவர் கவனிக்க வில்லை போல. கொத்தினது நாக பாம்பு. பிறகு பேச வேணுமே.

“ஏன் விஷம் இறங்க மருந்து ஏதும் கொடுக்கவில்லையே”

“விஷம் தலைக்கு ஏறின பிறகு என்ன மருந்து கொடுத்தென்ன , இறங்கவா போகுது?… அவருக்கு காலமும் நேரமும் வந்திட்டுது. பாவம் பல உயிர்களைக் காப்பாற்றினவர். தன் உயிரை அவரால் காப்பாற்ற முடியவில்லை. இது தான் விதி”

“ ஐயோ பாவம். கொஞ்சம் பொறுங்கோ மாமி. நான் வெள்ளை சீலையை மாத்திக் கொண்டுவாறன்”. அம்மா சீலை மாற்ற அறைக்குள் போனாள்.

“பாவம் வைத்தியர் நேற்றுதான் பகிடி விட்டு என்னோடை கதைச்சவர். தம்பி கனகாலம் உயிரோடை வாழவேணுமென்டால் உடம்பை கவனித்து கொள் என்றார். இப்படியுமா அவருக்கு நடக்க வேண்டும்? அண்ணா அதிர்ச்சியில் யோசித்தபடி நின்றார். இனி யார் மருத்தெண்ணை கொடுக்கு இருக்கினம்.

“கமலன், நீயும் வா, கெதியிலை செத்தவீட்டை போயிட்டு வருவம்”. என்றாள் வெள்ளை சீலையோடு வந்த என் அம்மா.

“அம்மா அப்ப பேதி மருந்தை என்ன செய்ய”?, சமையம் பார்த்துக் கேட்கக்கூடாத நேரம். அவளைக் கேட்டேன்.

“அதுக்கு இப்ப அவசரமில்லை. குளிசையை கொண்டு போய் அலுமாரியில் வை. செத்த வீட்டை போயிட்டு வந்து சொல்லுறன்.” அம்மா அவசரம் அவசரமாக வைத்தியர் வீட்டை புறப்பட்டாள். எனக்குத் தெரியும் மரணச்சடங்குகள் முடியுமட்டும் குளிசையைப் பற்றி நான் யோசிக்க தேவையில்லை என்று.

குழந்தைப் பருவத்தில் பேதிக் குளிசை என்பது எனக்குப் பெரிய பிரச்சனை! அதனால் இழப்பின் மதிப்பை என்னால் உணர்ந்து கொள்ள முடியவில்லை. ஆனால் இன்றைய நாளில் அதை நினைக்கும் பொழுது எவ்வளவு பெறுமதியான மனிதர்கள் என்றாலும் என்றோ ஒருநாள் அவர்கள் எம்மை விட்டு பிரிவர் என்பதே இயற்கையின் நியதி.

பொன் குலேந்திரன் –கனடா. Kulendiren_HighRes

Share this Post:
வைத்தியர் வைத்திலிங்கம். …… (சிறுகதை) — } பொன் குலேந்திரன் –கனடா. Reviewed by on August 11, 2016 .

( அடிக்கடி எமது தேகநலம் குன்றியவுடன் நாம் முதலில் நாடுவது வைத்தியாரை. இக்கதை ஆயுர்N;வத வைத்தியர் ஒருவர் பற்றிய கதை. இக் கதை உண்மையும் சற்று கற்பனையும் கலந்தது.) பள்ளிக்கூட விடுதலைக் காலம் ஆரம்பிக்க சில நாட்களுக்கு முன்னரே என் தாயாரிடமிருந்து “முடமாவடி வைத்திலிங்கப் பரியாரியிடம் பேதி மருந்து எடுத்து என் வயற்றுக்குள் இருக்கும் அடசல்களை முதலில் சுத்தப்படுத்த ரெடியாக இரு. அண்ணா உன்னை அவரிடம் கூட்டிக் கொண்டுப் போவார். அவருக்குத் தான் வைத்தியரை நல்லாய் தெரியும்

ABOUT AUTHOR /