பரிதவிக்கும் கருணை இல்லப் பெண்கள்!

 ›  › பரிதவிக்கும் கருணை இல்லப் பெண்கள்!

உதவிக்கரம்

பரிதவிக்கும் கருணை இல்லப் பெண்கள்!

மழை நின்றாலும், வெள்ள பாதிப்பு நீங்காததால், மதுரவாயிலில் உள்ள கருணை இல்லத்தைச் சேர்ந்த 150 ஆதரவற்ற பெண்கள் தவித்து வருகின்றனர்.
உதவும் கரங்கள் அமைப்பின் கீழ், சென்னை மதுரவாயிலில் கடந்த 28 ஆண்டுகளாக கருணை இல்லம் இயங்கி வருகிறது. இங்கு, மனநலம் பாதிக்கப்பட்ட பெண்கள், எய்ட்ஸ் நோயாளிகள், படுத்த படுக்கையாக இருக்கும் முதியோர்கள், ஆதரவற்றோர் என மொத்தம் 150 பெண்கள் தங்கியிருந்தனர்.
கருணை இல்லத்தில் சில அறைகள் கட்டப்பட்டு அதில், 15 அல்லது 20 படுக்கைகளில் பெண்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். கடந்த 2005-ஆம் ஆண்டு பெய்த பெரு மழையில் ஏற்கெனவே கட்டப்பட்டிருந்த மூன்று அறைகள் சேதமடைந்தன. இதனால் கூடுதலாக மூன்று தனித்தனி அறைகள் கட்டப்பட்டு, அதில் பெண்கள் தங்க வைக்கப்பட்டிருந்தனர்.
இதுதவிர அலுவல்கள், சமையலறை, சாப்பாட்டு அறை அடங்கிய பிரதானக் கட்டடமும் இந்த வளாகத்தில் உள்ளது.
பரிதவிப்பு: இந்த நிலையில், இந்த ஆண்டு தீபாவளி சமயத்தில் பெய்த பெரு மழையில் இந்த மூன்று அறைகளிலும் நீர் புகுந்தது. இதன் காரணமாக, அங்கிருந்த 50-க்கும் மேற்பட்ட பெண்கள், பிரதான கட்டடத்துக்கு மாற்றப்பட்டனர். மீண்டும், கடந்த 1-ஆம் தேதி முதல் வரலாறு காணாத மழையால் பிரதானக் கட்டடத்திலும் நீர் புகுந்தது.
வெள்ள பாதிப்பு தொடர்பாக கருணை இல்லத்தில் பணியாற்றி வரும் ஆஷா கூறியதாவது:
இரவு 10 மணியிலிருந்து வெள்ளத்தின் அளவு உயர்ந்து கொண்டே சென்றது. நான், 25 பேர் கொண்ட ஓர் அறையின் பொறுப்பாளர். என்ன செய்வது, எங்கு செல்வது என்பது புரியாமல் அருகில் உள்ள குடிசைப் பகுதியை நோக்கி குரல் எழுப்பினோம். ஆனால், அங்கும் வெள்ளம் புகுந்ததால், அந்தப் பகுதி மக்களால் எங்களுக்கு உதவ முடியவில்லை. செல்லிடப்பேசி சேவையும் துண்டிக்கப்பட்டதால், வெகு சிரமத்துக்குப் பின்பே வேறு இல்லத்தில் உள்ளவர்களுக்கு தகவல் அளிக்க முடிந்தது என்றார் அவர்.
டிப்பர் லாரிகளில்: இதனைத் தொடர்ந்து, நள்ளிரவில் அங்கு வந்த சமூக சேவகர்களும், திருவேற்காடு சாந்திவனம் இல்ல பொறுப்பாளர்களும், அங்கிருந்த பெண்களை திருவேற்காட்டில் உள்ள சாந்திவனம் இல்லத்துக்கு மாற்ற முடிவு செய்தனர். ஆனால், பெரு மழை பெய்த அந்த நேரத்தில் வாகனங்கள் எதுவும் கிடைக்காததால் மண் அள்ளும் சிறிய வகை டிப்பர் லாரிகளில் படுத்த படுக்கையாக இருக்கும் பெண்கள், மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் என அனைவரும் அழைத்து செல்லப்பட்டனர்.
இது குறித்து திருவேற்காடு சாந்திவனம் இல்லத்தின் சமூக சேவகர் சுந்தரேஸ்வரன் கூறியதாவது:
மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்படும் மருந்துகள் தூக்கத்தன்மை ஏற்படுத்தக்கூடியவை. அந்த நிலையில் நோயாளிகளை லாரிகளில் ஏற்றிக் கொண்டு செல்ல மிகவும் சிரமப்பட்டோம். திருவேற்காட்டில் உள்ள சாந்திவனம் இல்லத்தில் குழந்தைகள், பெண்கள் என சுமார் 450 பேர் உள்ளனர். மிகுந்த சிரமத்துக்கு இடையே அவர்களுடன் 150 பெண்களும் இப்போது தங்க வைக்கப்பட்டுள்ளனர் என்றார்.
உதவித் தேவை: வெள்ளம் புகுந்த சமயத்தில் நோயாளிகளை மட்டுமே காப்பாற்ற முடிந்தது. நோயாளிகள் தொடர்பான கோப்புகள், அவர்களின் மருத்துவச் சிகிச்சைப் பதிவுகள் ஆகியவற்றையும் பத்திரப்படுத்த முடிந்தது. ஆனால், அங்கு இருப்பு வைக்கப்பட்டிருந்த ரூ. 4 லட்சம் மதிப்புள்ள மருந்துகள், ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள சமையல் பொருள்கள், படுக்கைகள், மெத்தைகள், பெண்களின் உடைகள் உள்ளிட்டவை அனைத்தும் வெள்ளத்தில் வீணாகிவிட்டன.
மழை நீர் வடிந்தாலும் கருணை இல்ல வளாகம் சேறும் சகதியுமாகக் காணப்படுகிறது. அவற்றில் பாம்பு, தேள் உள்ளிட்ட விஷப்பூச்சிகளும் காணப்படுவதாகத் தெரிவிக்கின்றனர். எனவே, இன்னும் ஒரு மாத காலத்துக்கு இந்த இல்லத்தைப் பயன்படுத்த முடியாத நிலை நிலவுகிறது.
இங்குள்ளவர்களுக்கு அரிசி, மருந்து, மாத்திரைகள், அணிந்து கொள்ள உடைகள், போர்வைகள் ஆகியவை தேவைப்படுகின்றன. எனவே அரசும் வசதி படைத்தவர்களும் கருணை காட்ட வேண்டும் என பொறுப்பாளர்கள் தெரிவிக்கின்றனர்.

Share this Post:
பரிதவிக்கும் கருணை இல்லப் பெண்கள்! Reviewed by on December 13, 2015 .

மழை நின்றாலும், வெள்ள பாதிப்பு நீங்காததால், மதுரவாயிலில் உள்ள கருணை இல்லத்தைச் சேர்ந்த 150 ஆதரவற்ற பெண்கள் தவித்து வருகின்றனர். உதவும் கரங்கள் அமைப்பின் கீழ், சென்னை மதுரவாயிலில் கடந்த 28 ஆண்டுகளாக கருணை இல்லம் இயங்கி வருகிறது. இங்கு, மனநலம் பாதிக்கப்பட்ட பெண்கள், எய்ட்ஸ் நோயாளிகள், படுத்த படுக்கையாக இருக்கும் முதியோர்கள், ஆதரவற்றோர் என மொத்தம் 150 பெண்கள் தங்கியிருந்தனர். கருணை இல்லத்தில் சில அறைகள் கட்டப்பட்டு அதில், 15 அல்லது 20 படுக்கைகளில் பெண்கள்

ABOUT AUTHOR /